Tuesday, March 12, 2024

இலண்டன் நூலகத்தில் குளக்கோட்டன் கட்டளைகள் ( ஓலைச்சுவடிகள்)

 

இலங்கையில் உள்ள சிவாலயங்களில் திருக்கோணேச்சரம் நீண்ட, தொடர்ச்சியான தலபுராண வரலாற்றைக் கொண்ட சிவத்தலமாகும். வாயு புராணம், திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் தேவாரப் பதிகம், அப்பரும், சுந்தரரும் திருக்கோணேச்சரம் தொடர்பில் குறிப்பிட்டுள்ள தேவாரப் பாடல்கள், பெரிய புராணம் போன்றவற்றில் திருக்கோணேச்சரத்தின் தலச் சிறப்பு விரிவாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பத்தாம் நூற்றாண்டில் மச்சகேஸ்வரம் என்ற பெயராலும் அழைக்கப்பட்ட திருக்கோணேச்சரம் தேசத்துக் கோயிலாக முன்னைய காலங்களில் சிறப்பித்துக் கொண்டாடப்பட்டது என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

திருக்கோணேச்சரத்தின் தலபுராணத்தை விரிவாகச் சொல்லும் இரு நூல்கள் உள்ளன. அவையாவன ஸ்ரீதஷிண கைலாச புராணம், திரிகோணாசல புராணம் என்பனவாகும். இது தவிர பெரிய வளமைப் பத்ததி, கோணேசர் கல்வெட்டு, கோணமலை அந்தாதி, குளக்கோட்டன் கம்ப சாஸ்திரம், திருக்கோணாசல வைபவம் போன்ற நூல்களும் திருக்கோணேச்சரத்தின் வரலாற்றையும், வளமைகளையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.ஓலைச்சுவடி வடிவில் இருந்த இவ்வரிய நூல்கள் கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரால் அச்சுருவாக்கம் செய்யப்பட்டிருந்தது. எனினும் பெரிய வளமைப் பத்ததி, குளக்கோட்டன் கம்ப சாஸ்திரம் ஆகிய நூல்கள் ஓலைச்சுவடி வடிவில் எமக்கு இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே திருக்கோணேச்சரத்தின் அறியப்படாத வரலாற்றைத் தேடி நீண்ட காலமாக எனது பயணம் அமைந்திருந்தது.


ஓலைச்சுவடிகளின் பின்னாலான எனது தேடலின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது திரு கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களுடைய பாதுகாப்பிலிருந்த ஓலைச்சுவடிகளைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்ததுதான். இவை அனைத்தும் திரு வே அகிலேசபிள்ளை அவர்களுடைய சேகரங்களாக இருந்து வம்ச வழியாகத் திரு ஸ்ரீதரனுக்கு கிடைத்தவை. நண்பன் சுரேன்குமாரின்  அறிமுகத்தால் திரு ஸ்ரீதரன் அவர்களிடமிருந்த ஓலைச்சுவடிகளை பரிசோதிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவற்றில் இரண்டு ஓலைச்சுவடி கட்டுக்கள் திருக்கோணேச்சரத்துடன் தொடர்பு பட்டவை. திரிகோணமலை அந்தாதி, திருக்கோண நாதர் மும்மணிமாலை என்பன அவையாகும்.

திரிகோணமலை அந்தாதி திருக்கோணேசர் மேல் பாடப்பட்ட அந்தாதி நூலாகும். திருகோணமலை சிதம்பரநாதர் சுப்பிரமணீயனார் என்னும் புலவரின் புதல்வரும் ஆறுமுக முதலியார் என்று அழைக்கப்பட்டவருமான புலவர் சு. ஆறுமுகம் என்பவரால் 1886 ஆம் ஆண்டளவில் இந்நூல் பாடி முடிக்கப்பட்டது. திரிகோணமலை அந்தாதி 1990 இல் இந்து கலாச்சார அமைச்சினால் பதிப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 92 ஓலைச்சுவடிகள் அடங்கிய திரிகோணமலை அந்தாதி நூலக நிறுவனத்தினால் சுவடியாக்கம் செய்யப்பட்டு தற்பொழுது யாவரும் வாசிக்கும் வண்ணம் இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இது போலவே திரு.கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் பாதுகாப்பிலிருந்த 240 ஓலைச்சுவடிகள் அடங்கிய திருக்கோண நாதர் மும்மணிமாலை என்ற ஓலைச்சுவடிகளின் தொகுதியும் முழுமையாகச் சுவடியாக்கம் செய்யப்பட்டு நூலகத் திட்டத்தில் இலவசமாக தரவிறக்கி வாசிக்கக் கூடியவாறு இருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

ஓலைச்சுவடிகளைத் தேடிய பயணத்தில் கிடைத்த இன்னுமொரு அரிய பொக்கிஷம் கோணேசர் கல்வெட்டு என்னும் ஓலைச்சுவடிகள் ஆகும். திருக்கோணேச்சர ஆலயப் பரிபாலன சபையின் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அந்த ஓலைச்சுவடிகளை பார்க்கும் பாக்கியம் கடந்த வருட நடுப்பகுதியில் எனக்குக் கிடைத்தது. கோணேசர் கல்வெட்டு என்கின்ற வரலாற்று நூல் திருகோணமலையைச் சேர்ந்த கவிராஜவரோதயன் அவர்களால் 17ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இது பாடல்களையும், உரை நடை பகுதிகளையும் கொண்டமைந்திருக்கிறது. 





திருக்கோணேச்சர ஆலய பரிபாலன சபையின் அலுவலகத்தில் இருந்து ஓலைச்சுவடிகள் கிடைக்கப்பெற்ற சமகாலத்தில் பருத்தித்துறையில் இருந்து கோணேசர் கல்வெட்டைப் பதிவு செய்த இன்னொரு ஓலைச்சுவடி கிடைக்கப்பெற்றது. சதாவதானம் நா.கதிரைவேற்பிள்ளை ஆவணக் காப்பகத்தினை நிறுவி செயற்பட்டுவரும் திரு சிவகடாட்சம் செந்தூரன் அவர்களிடமிருந்து மேற்கூறிய கோணேசர் கல்வெட்டு ஓலைச்சுவடி எண்ணிம வடிவில் கிடைக்கப்பெற்றது. திருகோணமலை வரலாற்றைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்து வரும் கலாநிதி கனகசபாபதி சரவணபவன் அவர்களின் விரைவில் வெளிவரவிருக்கும் நூலான ‘கவிராஜவரோதயனின் கோணேசர் கல்வெட்டும், குளக்கோட்டன் சித்திரமும்’ என்ற நூலில் மேற்கூறிய ஓலைச்சுவடிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.




 குளக்கோட்டன் கட்டளைகள்

Wellcome Collection என்பது  183 Euston Rd., London NW1 2BE, இங்கிலாந்தில் உள்ள ஓர் இலவச அருங்காட்சியகத்துடன் கூடிய நூலகமாகும். இங்கு மருத்துவம், வாழ்க்கை மற்றும் கலை ஆகியவற்றுடன் தொடர்புடைய கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 550,000 பார்வையாளர்களை ஈர்க்கின்ற இந்த அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வரும் குளக்கோட்டன் தொடர்புடைய ஓர் ஓலைச்சுவடி பற்றி மிக அண்மையில் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.


2022 இன் நடுப்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற செ. குணசிங்கம் அவர்களுடைய தொடர்பு நண்பன் தம்பிராசா கோணேஸ்வரன் மூலம் கிடைக்கப்பெற்றது. 1970 களில் திருகோணமலையில் இடம்பெற்ற பல வரலாற்று ஆய்வுகளில் பேராசிரியர் செ. குணசிங்கம் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர் சாம்பல் தீவு நா. தம்பிராசா ஐயா அவர்கள். திருக்கோணேச்சரம் தொடர்பில் மிகப் பரந்த அளவிலான ஆய்வினைச் செய்து அதனை நூலாக வெளியிட்டிருந்த பேராசிரியர் செ. குணசிங்கம்  அவர்களிடம் இருக்கும் வரலாற்று மூலங்களைச் சுவடியாக்கம் செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆவல் கொண்டிருந்தேன். இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்திச் சுவடியாக்கம் செய்து இணையவெளியில் வழங்கி வரும் நூலகத் திட்டத்தின் இயக்குனர் சபையின் உறுப்பினர் மருத்துவர் க. சுகுமார் அவர்களுடனான தொடர்பு அதற்கான சாத்தியத்தை உருவாக்கித் தந்தது.

ஆர்வத்தோடு அப்பணியின் ஆரம்பக் கட்ட வேலைகளில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர் க. சுகுமார் உடனுக்குடன் தனக்குக் கிடைக்கும் தகவல்களை என்னுடன் பகிர்ந்திருந்தார். அவற்றில் முக்கியமானது CATALOGUE OF TAMIL MANUSCRIPTS IN THE LIBRARY OF THE WELLCOME INSTITUTE FOR THE HISTORY OF MEDICINE என்ற அறிக்கை. 1990 ஆம் ஆண்டு Library of the Wellcome Institute இல் இருந்த பனை ஓலைகளில் எழுதப்பட்ட 54 ஓலைச்சுவடிக் கட்டுக்கள் பேராசிரியர் செ. குணசிங்கம் அவர்களால் பெயரிடப்பட்டு அட்டவணைப்படுத்தப்பட்டதை அவ்வறிக்கை விரிவாகச் செல்கிறது. 1910 ஆம் ஆண்டிற்கும் 1926 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் Sir Henry Wellcome அவர்களால் பணிக்கமர்த்தப்பட்ட Dr Paira Mall  அவர்களால் பெற்றுக்கொள்ளப்பட்ட ஓலைச்சுவடிகள் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை எங்கிருந்து பெறப்பட்டவை என்பது பற்றிய விபரங்கள் பதிவுகளில் குறிக்கப்பட்டவில்லை. திகதியிடப்படாத 52 ஓலைகள் கொண்டடங்கிய இந்த ஓலைச்சுவடிக்கு குளக்கோட்டன் கட்டளைகள் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. 1990 ஆம் ஆண்டு அதனைப் பரிசோதித்த பேராசிரியர் செ. குணசிங்கம் அவர்களின் குறிப்புக் கீழ்வருமாறு அமைந்திருக்கிறது.

Kulakkottan Kattalaikal (orders of Kulakkottan)

Undated; 25.4 x 3 cm; 52 ff (ff 49-52 blank); some leaves have been fragmented; for the most part inscribed on both sides; legible; incomplete. Kulakkottan Kattalaikal (orders of Kulakkottan): Kulakkottan was a Saiva prince originally from the Chola country in South India who played an important role in establishing the vanni chieftaincies in eastern Sri Lanka (Trincomalee District), after renovating the local historical Hindu temple Koneswaram. Though a precise view of the identity and chronology of Kulakkottan is not possible, his activities can be ascribed to a period somewhere between the end of the Chola rule in Sri Lanka (the second half of the eleventh century) and the emergence of a Tamil Kingdom in northern Sri Lanka (thirteenth century A.D.). The manuscript relates various arrangements made by Kulakkottan with different chieftains and temple servants to maintain the religious services at the Koneswaram temple. The text also refers to some administrative titles such as vannipam, mutali, pararasasekaram, sekarasasekaram, etc. This manuscript is a useful addition to the already available sources on Kulakkottan and his activities in relation to the Koneswaram temple.

திகதியிடப்படாத 25.4 cm நீளம் 3 cm அகலம் உடைய இரண்டு பக்கமும் எழுதப்பட்ட சிதைவடைந்த 52 ஓலைச்சுவடிகள் இவை. திருக்கோணேச்சர ஆலயத்தில் பணிக்கு அமர்த்தப்பட்ட ஆலயத் தொழும்பாளர்கள் தொடர்பில் குளக்கோட்டு மன்னன் செய்த ஏற்பாடுகளை இந்த ஏடுகள் விவரிப்பதாக அவர் பதிவு செய்திருக்கிறார். இது தவிர வன்னிபம், முதலி, பரராசசேகரம், சேகராசசேகரம் ஆகியோர் பற்றியும் இந்த ஏட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. முழுமையான ஓலைச்சுவடிகளைப் பார்த்தால் மட்டுமே இவை குளக்கோட்டன் கட்டளைகள் என்ற புதிய நூலா அல்லது ஏற்கனவே உள்ள கோணேசர் கல்வெட்டின் இன்னொரு வடிவமா என்பதை உறுதிப்படுத்த முடியும்.  ஐரோப்பிய மண்ணில் கிடைக்கப்பெற்ற குளக்கோட்டன் கட்டளைகள் என்ற இந்த ஓலைச்சுவடிகள் இதுபோன்ற திருக்கோணேச்சர ஆலய வரலாற்று மூலங்கள் பல்வேறு அருங்காட்சியகங்களிலும், நூலகங்களிலும் முழுமையாக வாசிக்கப்படாமல் இருக்கக்கூடும் என்ற செய்தியை நமக்குத் தருகிறது. இந்தத் தேடல் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் எனது தந்தை கலாபூஷணம் வே தங்கராசா, விருபா குமரேசன் அண்ணா மற்றும் நண்பன் சற்குணம் சத்யதேவன் ஆகியோருக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்.

ஆர்வமும், வாய்ப்பும் உள்ள நண்பர்கள்,  சமூக ஆர்வலர்கள், சமய அமைப்புகள், திருக்கோணேச்சர ஆலயம் என்பன இங்கிலாந்தில் உள்ள இந்த அருங்காட்சியகத்துடன் தொடர்புகளை மேற்கொண்டு 'குளக்கோட்டன் கட்டளைகள்' ஓலைச்சுவடிகளின் முக்கியத்துவம் தொடர்பில் விரிவாக  உரையாடி அவற்றினை மீளவும் திருக்கோணேச்சரத்திற்கு கொண்டுவர முயற்சிக்கலாம். தமிழகத்துக்குச் சொந்தமான பல்வேறு ஆலயச் சிற்பங்கள் பல வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் இருந்து மீளவும் கொண்டுவரப்பட்டதை இதற்கு முன்னுதாரணமாகக் கொள்ளலாம்.

நூறு வருடங்களுக்கு முன்னர் எமது கைவிட்டுப்போன திருக்கோணேச்சரத்துக்குரிய அருஞ்செல்வம்  "குளக்கோட்டன் கட்டளைகள்" ஓலைச்சுவடிகள் மீளக் கிடைப்பது ஆர்வமுள்ள தாயக, புலம்பெயர் உறவுகளின் கைகளில் உள்ளது. 

குளக்கோட்டன் கட்டளைகள் ஓலைச்சுவடிகள் போன்று பல்வேறு தேசங்களில் அருங்காட்சியகங்கள், நூலகங்கள் என்பவற்றில் உள்ள திருக்கோணேச்சரம் தொடர்பான வரலாற்று மூலங்களை எவ்வாறு இனம் கண்டு அடையாளப்படுத்தப் போகிறோம் என்பது நம் முன் உள்ள முக்கிய கேள்வியாகும். 

ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், சுதேச, காலனித்துவ ஆவணங்கள், ஆலயத்தின் புராதன சிலைகள் என்பனவற்றை இனம் காண்பதும் அவற்றைத் தொகுத்துத் திருக்கோணேச்சர ஆலயத்தின் வரலாற்றின் விடுபட்ட பகுதிகளை விஞ்ஞான ஆதாரங்களோடு நிரப்புவது ஆலய வரலாற்றில் ஆர்வம் கொண்டுள்ளவர்களின் கடமையாகிறது.



நட்புடன் ஜீவன்.

tjeevaraj78@gmail.com 




இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. உங்கள் அயராத தேடலுக்கு இவ் ஓலைச்சுவடிகளிலுள்ள தகவல்கள் கட்டாயம் கிடைக்கும். குறைந்தது அவ்வோலைச்சுவடிகளின் பிரதியாக்கத்திற்கு முயற்சிக்கலாம். எங்கள் இலண்டன் பழைய மாணவர் சங்கம் இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பது எங்கள் ஆவா.

    ReplyDelete
  2. சிறப்பான முயற்ச்சி, கேட்பதற்கு வியப்பும் மகிழ்ச்சியும் தருகின்ற செய்தியாகும். மிக விரைவில் குறித்த ஓலைச்சுவடிகளை சென்று பார்க்க வேண்டுமென்கிற ஆவல் மேலிடுகிறது தகவலுக்கு மிகமிக நன்றி

    ReplyDelete