நெருங்கி வரும் மகளிர் தின
நிகழ்வில் உரையாற்றுதலின் பொருட்டு திருகோணமலை மண் சார்ந்த வரலாற்று தகவல் ஏதும்
தந்துதவ முடியுமா ? என்று தங்கை கேட்டிருந்தார். குளக்கோட்டனையும் , கோணேசரையும் தேடித் திரிபவனுக்குத் திருகோணமலை மகளிர் வரலாறு
பற்றி என்ன தெரியும் என்று மண்டையைச் சொறிந்து கொண்டேன்.
இலக்கிய உலகில் பலரும் செய்யத் துணியாத ஒரு விடயத்தை ஆர்ப்பாட்டம்
இல்லாமல் தனது குறுநாவலில் வாழ்த்துப்பா மூலம் செய்திருப்பார் தமிழ்மணி ந.
பாலேஸ்வரி அம்மையார் அவர்கள். 1992 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தத்தை விடு தூது என்ற அவரது
குறுநாவலில் அந்த வாழ்த்துப்பா இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் நூலகத் திட்டத்தில்
உள்ள அந்த நாவலை PDF வடிவில் இலவசமாக தரவிறக்கி வாசித்துப் பார்க்கலாம்.
எனவே இந்த விடயத்தை வைத்து உரைக்கான மூலத்தை உருவாக்கலாம் என்ற எண்ணத்தில்
கைபேசியில் இருக்கும் சேமிப்புக் கிடங்கில் PDF வடிவில் இருந்த அந்த நாவலைத் தேடி
எடுத்தேன்.
நாவலின் பக்கங்களைப் புரட்ட
எத்தணித்தவேளை தவறுதலாக கைபட்டு நாவல் மேலும் கீழும் ஆக ஓடி ஒரு பக்கத்தில் வந்து
நின்றது. அது பேராசிரியர் செ. யோகராசா அவர்களால் அந் நாவலுக்கு எழுதப்பட்டிருந்த
மதிப்புரையின் ஒரு பகுதி. உங்களை மீறிய சக்தி மேல் எப்போதாவது உங்களுக்கு நம்பிக்கை வந்திருக்கிறதா ? ஆனால் அது
எனக்கு பலமுறை நடந்திருக்கிறது. அந்தப் பந்தியில் இருந்த விடயத்தை அப்படியே கீழே
பகிர்ந்திருக்கிறேன்.
இன்னொரு
முக்கிய விடயமும் இவ்விடத்தில் எனக்கு நினைவுக்கு வருகின்றது. பெண்
விடுதலை பற்றிய சிந்தனை நீண்டகாலமாகத் திருக்கோணமலை மண்ணிலே சுவறி வந்துள்ளது என்பதே அதுவாகும். எமது
இலக்கியச் சகோதரர் இருவரதும் உறவினரான திருமதி. தையல்நாயகி சுப்பிரமணியம்
என்பவர் 'திருக்கோணமலை மாதர் ஐக்கிய
சங்கம்'
என ஒன்றினை ஏறத்தாழ இருபதுகள் அளவில் நிறுவி, அதன் காரியதரிசியாக விளங்கி பெண்கள் முன்னேற்றம்
தொடர்பாக,
பல இடர்கள் மத்தியிலும் நற்பணிகள் புரிந்துவந்துள்ளார்.
'மாதர் மதி மாலிகை' (1927) என்றொரு பெண்கள் சஞ்சிகையையும் ஆரம்பித்து தொடர்ந்து சிலவாண்டுகள்
வெளியிட்டுவந்துள்ளார். இத்தகைய பணிகளின் அறுவடையினை - எதிரொலியினை - ந. பா.
வின் முயற்சிகளிலும் இன்று இனங்காணமுடிகின்றது: தத்தைவிடு தூதிலும்
கண்டுகொள்ளமுடிகின்றது.
இந்தப் பந்தியை வாசித்ததும் ஆஹா
நூறாண்டுகளுக்கு முன்னால் திருமலை மண்ணில் பெண்கள் மகளிர் சங்கம் அமைத்து
செயற்பட்டதோடு மட்டுமில்லாமல், சஞ்சிகையும்
வெளியிட்டு இருக்கிறார்களே என்ற ஆச்சரியம் உருவானது. வழக்கம் போல அப்போது எத்தனை
மணி என்றும் பார்க்காமல் தி.த. சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் தொடர்பில் அதிக
தேடல்களை மேற்கொண்டுவரும் நண்பன் சற்குணம் சத்தியதேவனுக்கு தொலைபேசி அழைப்பு
எடுத்தேன். விபரம் சொன்னதும், ஓம் அண்ணா 'மாதர் மதி மாலிகை' சஞ்சிகையின் முன்னட்டைப் படம் என்னிடம் இருக்கிறது. அது பேராசிரியர் செ.
யோகராசா அவர்கள் தந்ததுதான் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் என்று
எதிர்முனையிலிருந்து பதில் வந்தது.
அழைப்பெடுத்து சில நொடிகளில்
எனது whatsapp
இலக்கத்திற்கு வந்து இறங்கியது 1927 ஆம் ஆண்டு
வெளியிடப்பட்ட சஞ்சிகையின் முகப்பு. ஆர்வத்தோடு எனக்குக் கிடைத்த அந்த மூன்று வரி
குறிப்பையும் ('திருக்கோணமலை மாதர் ஐக்கிய சங்கம்' , திருமதி. தையல்நாயகி சுப்பிரமணியம் , 'மாதர் மதி மாலிகை' (1927) ) , படத்தையும் தங்கைக்கு அனுப்பி வைத்தேன். அடுத்த சில நிமிடங்களில்
எதிர்முனையில் இருந்து ஆச்சரியத்துடன் கூடிய அழைப்பு வந்தது. எம்முடைய மண்ணைச்
சேர்ந்த பெண்கள் நூறுவருடங்களுக்கு முன் எவ்வளவு முன்னேற்றகரமான பாதையில் சமுகத்தை
வழிநடத்திச் சென்றிருக்கிறார்கள் என்று தொடங்கி யாரோ முகம் தெரியாத சாதனையாளர்களை
மகளிர் தினத்தில் அறிமுகப்படுத்துவதை விட நாம் இன்று நடந்து திரியும் அதே பிரதேசத்தில்
பிறந்து வளர்ந்து சாதித்த இவர்களைப் போன்றவர்களைத் தேடி அறிவதுதான் இன்றைய தேவை.
அவர்கள் சாதித்தவற்றிலிருந்து நாம் தொடர்ந்து செல்கிறோமா அல்லது பின்தங்கி
இருக்கிறோமா என்பதை ஒப்பு நோக்கி எதிர்காலத்தை இன்றைய பெண்கள் தீர்மானிக்க
வேண்டும் என்று நீண்ட நேரமாக உரையற்றிக் கொண்டிருந்தார் எதிர்முனையில் இருந்த
சகோதரி.
நடக்கவிருக்கும் கூட்டத்திற்கு
திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மகளிர் ஒன்று கூடுவதால் இந்த
விடயத்தை உரையில் சொல்லி நூறு வருடங்களுக்கு முன் இயங்கிய மாதர் சங்கம் தொடர்பிலும், அவர்களுடைய செயற்பாடுகள் தொடர்பிலும் அறிவதற்கான முயற்சியை
மேற்கொள்வதுதான் தன்னுடைய உரையின் சாராம்சமாக இருக்கும் என்று அவர் சொல்லி
முடித்தார். தான் பேச வேண்டியவற்றை அவ்வளவு நேரமாக ஒத்திகை பார்த்திருக்கிறார்
அவர் என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது. நேரத்தை பார்த்தேன் 32 நிமிடங்கள்
கடந்திருந்தது. நல்ல காலம் மூன்று வரிச் செய்தியை அனுப்பியது என்று மனதுக்குள்
நினைத்துக் கொண்டேன்.
ஆர்வமுள்ள நண்பர்கள்
தேடிப்பாருங்கள். நூறு வருடங்களுக்கு முன்னால் திருகோணமலை மண்ணில்
இயங்கிய அந்த மாதர் சங்கம் , அவர்களுடைய செயற்பாடுகள், சஞ்சிகை போன்றவற்றின்
மேலதிக விடயங்களை அறிந்து கொண்டீர்களானால் என்னுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்களைப்போலவே அவற்றை அறிந்து கொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன்.
நட்புடன் ஜீவன்.
tjeevaraj78@gmail.com
திருகோணமலை இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர்
திரு சி. தண்டாயுதபாணி அவர்களிடமிருந்து கிடைத்த தகவல்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....
No comments:
Post a Comment