கொரோனா கால வைத்தியசாலை
நடைமுறைகள் ஒரு போர்க்கால நிலவரம்போல் காணப்பட்டது. தினமும் அதிகரித்துவரும்
நோயாளிகளின் எண்ணிக்கை கொரோனா சிகிச்சைக்காக போராடும் மருத்துவத் துறையினரை
ஓய்வில்லாமல் உழைக்கவைத்துக்கொண்டிருந்தது. நாடே கொரோனா அச்சத்தில்
உறைந்திருந்ததினால் வீதிகளில் மருத்துவத் துறையினரையும், அத்தியாவசிய சேவைகள் புரியும் அலுவலர்களையும், காவல் துறையினரையும் தவிர்த்து மிக அரிதாகவே சாமானியர்கள்
நடமாடிக் கொண்டிருந்தார்கள்.
விசாகன் துடிப்பான இளைஞன். அவன்
அரசு மருத்துவமனையில் வேலைக்கு வந்து சில வருடங்கள்தான் ஆகிறது. சிற்றூழியரான அவன்
கொடுத்த வேலையை சிறப்பாக செய்ய கூடியவன் என்ற பெயரை வேலையில் இணைந்து கொண்ட சிறிது
காலத்திற்குள்ளேயே பெற்றுக்கொண்டவன். அதனால் புதிதாகக் கொரோனா விடுதி
உருவாக்கப்பட்டபோது அங்கு அவனை பணிக்கமர்த்திக் கொண்டார்கள்.