Wednesday, September 13, 2023

கந்தளாய்க் குளக்கட்டுக் காவியம்


மழை வேண்டிப் பிராத்தனைகள் செய்யும் வழமைகள் உலகின் தொன்மையான வழிபாட்டு முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பல்வேறு இன, மத, சமுகக் குழுக்களால்  இவ்வழிபாடு பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்தில் இரு பிரிவுகளாக அமைந்த வழிபாடுகள் காலங்காலமாக நடைபெற்று வருகின்றன. அவை

1. ஆகம வழிபாடு  (பெரும்தெய்வ வழிபாடு) - கோயிலில் நடைபெறும் நித்திய பூசை, அபிஷேகம், திருவிழா போன்றவை

2.  கிராமிய வழிபாடு (சிறுதெய்வ வழிபாடு) - கந்தளாய்க் குள மகா வேள்வி, தம்பலகாமம் நாயன்மார் திடலில் நடைபெறும் மடை வைபவம் ,கள்ளிமேடு ஆலையடியில் நடைபெறும் பத்தினித் தேவி விழா , சிப்பித்திடலில் நடைபெறும் அண்ணமார் வேள்வி, வல்லிக்கண்ணருக்கு மடை, மாகாமத்தில் இடம்பெறும் மூர்க்காம்பிகா விழா போன்ற வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் திறந்த வெளிச் சுற்று ஆராதனைகள்.

சிறுதெய்வ வழிபாடுகளின் முக்கிய பண்பு அவை பிராமணரால் பூசை பண்ணப்படாதவை என்பதாகும். “கட்டாடியார்” என அழைக்கப்படும் பூசகர்களால் இவ்வழிபாடு நெறிப்படுத்தப்படுகிறது. இங்கு கட்டாடியார் பல்வேறு சாதியினரைச் சேர்ந்தவராக இருப்பார். சிறு தெய்வங்களுக்குரிய கிரியை முறைகள் வேறு. அவை சடங்கு என்று அழைக்கப்படுகிறது. இச்சடங்கு ஆகமம் சாராத பத்ததி வழிபாட்டு முறையில் அமையப்பெற்றவை. நாள்தோறும் ஆறு காலப் பூசை அவற்றிற்கு நடைபெறாது. அவற்றிற்குரிய விழாக்களும், பூசை முறைகளும் பெருந்தெய்வ முறைகளிலிருந்தும் வேறானவை.

விமானம்,கோபுரம்,உள்மண்டபம்,வெளிமண்டபம் போன்ற ஆலய அமைப்புக்களோ வேத, ஆகம நெறி முறைகளுக்கு அமைந்த பூசைமுறைகளோ சிறுதெய்வங்களுக்கு இல்லை. ஓரிரு நாட்கள் முதல் மாதக்கணக்கில் வழிபாடு நடத்தும் முறையைச் சிறுதெய்வ வணங்க முறையிலேதான் காண முடியும். இந்த வகையில் கந்தளாய்க் குளத்து மகா வேள்வி மழை வேண்டிப் பிராத்தனை செய்யும் கிராமிய வழிபாட்டு முறையின் கீழ் விவசாயிகளையும் , மந்தை வளர்ப்பாளர்களையும் , ஊர்ப் பொதுமக்களையும் ஒன்றிணைக்கும் நிகழ்வாக இருக்கிறது.இச்சடங்கு முறை பல்வேறுபட்ட கிராமிய வழிபாட்டு முறைகளின் ஒருங்கிணைப்பாகவும் காணப்படுகிறது. வதனமார் வழிபாடு, திருக்குளத்து காவல்தெய்வ வழிபாடு , நாராயண வழிபாடு என்பனவற்றை இது உள்ளடக்கி இருக்கிறது.

கந்தளாய் குளக்கட்டின் பிரதான கதவுக்கு அருகில் உள்ள சோலையில் 61 ஆண்டுகளின் பின்னர் இவ்வேள்வி 2017 ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1951 , 1956 ஆண்டுகளில்  கந்தளாய்க் குளத்து மகா வேள்வி நடந்ததை நம் முன்னோர்கள் அங்குள்ள கற்பாறையில் கல்வெட்டுக்களாக பொறித்திருக்கின்றார்கள்.

திருக்குள சடங்கை நடாத்தும் கட்டாடியார் என்றழைக்கப்படும் பூசாரி சம்பூர் பகுதியைச் சேர்ந்தவர். குளக்கரையில் கிடைத்த கல்வெட்டுகளின் படி 1951 இல் ந.கணபதிப்பிள்ளை கட்டாடி அவர்களும் , 1956 இல் காத்தமுத்து சித்திரவேல்  கட்டாடி அவர்களும் இச்சடங்கினை நடத்தி இருக்கிறார்கள். சித்திரவேல் பூசாரியின் மருமகனான நடராசா பூலோகராசா 2017 ஆம் ஆண்டில் வேள்வியைத் தலைமையேற்று நடத்தியிருந்தார்.

கந்தளாய் நீர்த்தேக்கத்தை நிறைக்கும் ‘பொட்டியனாற்று’ ஓரம் உள்ள ‘கால்நாட்டு மண்டபம்’ என்னும் இடத்தில் மேள தாள சீர்களுடன் ‘கன்னிக்கால்’ நட்டு பல கொட்டகைகள் அமைத்து நாராயண மூர்த்திக்கும், இலட்சுமி தேவிக்கும் திருமண வைபவமாகப் நடைபெறும் மாபெரும் அருவ வழிபாடாக இது விளங்குகிறது. கங்காணம், தானத்தார், வரிப்பத்து, அடப்பன்மார்கள், கட்டாடியார், இணைக்கட்டாடியார் ,மறிகாறர் பன்னிருவர், மற்றும் ஆதிகோணநாயகர் கோயிலில் வயல் மானியம் பெறும் பெரும்பாலான தொழும்பாளர்கள் இவ்விழாவில் ஊழியம் புரிவர்.

இலட்சுமி நாராயணனின் திருமணத்திற்கு வருகை தருமாறு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டில் தம்பலகாமம் வயல்வெளிகளுக்கு நீர் பாயும் மதகருகேயுள்ள ‘ராஜகளரி’ என்னும் இடத்தில் உறைவதாக நம்பப்படும் கண்ணபிரானின் பிரிய மைத்துனர்களாகிய பாண்டவர்களுக்கு வெற்றிலை வைத்து அழைக்கும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெறும்.

நாராயண மூர்த்தியின் திருமணத்திற்கு அட்டதிக்குப் பாலகர்கள், பிரம்மா, சரஸ்வதிதேவி மற்றும் தேவ மாதர்கள்,மங்கலர்கள்,பாண்டவர்கள் மற்றும் அமரர்கள் அரூபிகளாக வநதிருப்பர் என்பது ஐதீகம். பல வாரங்களாகத் தொடர்ந்து நடைபெறும் இம்மண விழாவில் பலவிதமான கிரிகைகள் நடைபெறும்.ஒவ்வொரு நாளும் இரவு பகலாக வரும் நூற்றுக் கணக்கான ஆண்,பெண்களுக்கு கொட்டகைக்குள் வரிசையாக விரிக்கப்பட்டிருக்கும் வெள்ளையில் பந்தி பந்தியாக இருக்க வைத்து கல்யாணச் சாப்பாடு வழங்கப்படும்.

அமரர்களான மங்கலர் நூற்றியொருவரின் பிரதிநிதிகளாகக் கடமையாற்றும் மறிகாரர் என்னும் பன்னிருவர் அவர்களின் குருவான கட்டாடியார் தலைமையில் ஒவ்வொருநாளும் நடைபெறும் பூசையில் வைக்கப்பட்டிருக்கும் ஆயுதப்பெட்டகத்திற்கு பூசை வழிபாடுகள் செய்து பெட்டகத்திலுள்ள ஆயுதங்கள் சிலவற்றைப் பயபக்தியுடன் தமது குருவாகிய கட்டாடியார் மூலம் பெற்றுக் கொண்டு குழுமாடு பிடிக்கும் ஆயுதங்களோடு மேள வாத்தியங்கள் முழங்க காட்டுக்குச் செல்வார்கள்.

குழுமாடுகள் பிடிபட்டவுடன் இரவில் நடைபெறும் பொங்கல் விழாவுடன் வேள்வியை நிறைவு செய்வார்கள். இந்த இறுதிநாள் விழாவுக்கு திருகோணமலை மாவட்டத்தின் சகல பகுதிகளில் இருந்தும் ஆண், பெண்,இளைஞர் யுவதிகள் என்று பல்லாயிரக் கணக்கானோர் வந்து கூடுவார்கள். மறிகாரர்கள் தலைக்கொன்றாக பன்னிரெண்டு பானைகள் இருபக்கமும் வரிசையாக வைத்துப் பொங்குவார்கள். இவர்களின் குருவாகிய கட்டாடியார் ஒரு பெரிய பானையில் பொங்குவர்.

நீர் குறைந்து கந்தளாய்க்குளம் வற்றிக் காணப்படும் காலத்தில் குளத்தை நிறைக்க இந்த மகா வேள்வி செய்யப்படுகிறது. எங்கும் தீப அலங்காரங்களாக ஜொலிக்கும் இவ்விடத்தில் கருங்குன்றுகள் போன்ற குழுமாடுகள் பார்க்கவே பீதியை ஏற்படுத்தக் கூடியவைகளாக சீறிச் சினந்தவைகளாக வரிசையாக மரங்களில் ‘வெழுக்கயிறுகளால்’ பிணைக்கப்பட்டு அகங்காரத்துடன் மரங்களைச் சுற்றிச் சுற்றி வரும்.

எண்ணிப் பன்னிரெண்டாயிரம் எண்ணாமல் பன்னிரெண்டாயிரம் வெற்றிலை, பாக்கு, பழம்,பூ ஆகியவற்றை மடையில் வைப்பது மரபு. குளக்கோட்டு மன்னன் கந்தளாய்க் குளத்தைக் கட்டிய பின்னர் மகா விஸ்ணுவின் ஆணைப்படி அக்குளத்திற்குக் காவலாக விநாயகர், காளமாமுனி, புலத்தியர், மங்கலர், வீரபத்திரர், வதனமர், வைரவர், அண்ணமார், ஐயனார், பூதகணங்கள், கன்னிமார், பத்தினி, காளி போன்ற தெய்வங்களை காவலாக வைத்ததாகவும் இக் காவல் தெய்வங்களுக்கு ஒரு வருடத்தில் மடையும் மறு வருடத்தில் வேள்வியும் செய்யும் படியும் குளக்கோட்டன் பணித்திருந்தான் என்பதும் ஐதீகம். உருவ அருவ வழிபாடுகள் தவறாமல் செய்யப்படின், துன்பம் அற்று மக்கள் எல்லாம் சுகமாக வாழ்வர் என்றும் சொன்ன விதிகள் தவறி ஏனோ தானோ என்ற வகையில் நடந்தால் வேளாண்மை விளைவழிந்து மக்கள் துன்பமுற்றுச் சோர்வார்கள் எனவும் கோணேசர் கல்வெட்டுப் பாடல் ஒன்று எச்சரிக்கை செய்கிறது.

“அன்ன அரன் பூசைவிதி அபிஸேகம் விழாமுதல் அழகாய்ச் செய்தால்

மின்னுநிறை விளக்கேற்றிக் கிராமதேவதை பூசை விளங்கச் செய்தால்

இன்னலின்றி மக்களெல்லாம் மிகு நிதி சந்ததிகளுடன் இனிதுவாழ்வார்

சொன்ன இந்த முறை தவறில் விளைவழிந்து துன்பமுற்றுச் சோருமாக்கள்.”

இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க கந்தளாய்க் குள வேள்வி 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற சமயம் அங்கு பாடப்பட்ட கந்தளாய்க் குளக்கட்டுக் காவியம் மனதை கவர்வதாக இருந்தது. அக்காவியத்தின் மூல வடிவம் எட்டு வடிவிலும், வாய் மொழியாகவும் பேணப்பட்டு வருவதை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பமாக அது அமைந்தது.

கந்தளாய் குளக்கட்டு காவியம் தொடர்பாக தேடிக் கொண்டிருந்த பொழுது 1939 ஆம் ஆண்டு நாவலர் அச்சுகூட அதிபர் திரு. வைத்தியலிங்கம் அவர்களால் பதிப்பிக்கப்பட்டிருந்த கந்தளாய் குளக்கட்டு காவியத்தினை காணும் வாய்ப்புப் பெற்றேன். பூநகரி நல்லூரைச் சேர்ந்த திரு நாகலிங்கம் அவர்களால் வழங்கப்பட்ட செல்லரித்த ஓலைச்சுவடிகளிலிருந்து இந்தக் குளக்கட்டு காவியம் பதிப்பிக்கப்பட்டதாக அந் நூல்முகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. எட்டு வரிகளைக் கொண்ட 18 பாடல்கள் அடங்கிய காவியத் தொகுதியில் ஏட்டுப்பிரதிகள் செல்லரித்துப் போனதன் காரணமாக சில பாடல்கள் முழுமை அடையாமல் இருக்கின்றது. அச்சுப் பதிப்பாக வெளிவந்த கந்தளாய்க் குளக்கட்டு காவியத்தின் விடுபட்டுப்போன பாடல்களை ஏட்டுப் பிரதிகளில் இருந்தும், வாய்மொழி ஞாபகங்களில் இருந்தும் மீளுருவாக்கம் செய்து பதிவு செய்ய வேண்டும் என்பதே என்னுடைய பேராசை. அதற்கான முயற்சிகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. 1939 ஆம் ஆண்டு நாவலர் அச்சுகூட அதிபர் திரு. வைத்தியலிங்கம் அவர்களால் பதிப்பிக்கப்பட்டிருந்த கந்தளாய் குளக்கட்டு காவியப் பாடல்கள் இவை.


கந்தளாய்க் குளக்கட்டுக் காவியம்


வாசமிகு மேவுகந் தளாய்க்குளத் தன்னில்

வாழுமங் கலநாய னர்தமக் கினிய

நேசமுட னேசிந்து இசைபாட வேதான்

நினைவிலே நின்றுவிளை யாடவா வேணும்

பூசனை புரியுங் கயமுகவனை வென்ற

பூரணக் கரிமுக வாரணத் தவனே

வேதனை நகைத்தருளு மேனி மெல்லியரே

வெண்டா மரைத்திருவே வேத நாயகியே. 01.

&&&&&&&

சுருதிமுறை தவறாத மனுநீதி கண்டன்

சோழனுத வுங்குமாh சோழவெங் காளன்

பரிதிகுல மன்னன் குளங்கோட் டிராமன்

பண்டுபூ தப்படையைக் கொண்டே தான்

கருதரிய கல்லும் மணலும் சமப்பித்துக்

கடலும் மலையும் போலவே குளங்கட்டி

வருஷமிகு சென்னல் விழையப் பன்னிரண்டு

மாதமும் புனல்பாய மதகு செய்தனரே. 02.

&&&&&&&

செய்தபின் கோணமலை நாதருக் கென்று

சிலையுமெழு திக்குளக் கட்டினில் நிறுத்தி 

துய்யபுகழ் மேவுமங் கலநாய மாரும்

துணையான புத்திரர்கள் வதனமார் தனையும் 

வையக மதிக்கவரு நீலா சோனையும்

வரிசைபெறு தெய்வரா சாக்கள னைவோரும்

கயிடவனை வென்றபத் தினிகன்னி மாரும்

காவலாய் நில்லென்று சட்டளை புரிந்தார். 03

&&&&&&&

கட்டளை புரிந்தபின் கைலாய நாதர்

கருணையா லேகந்த ளாய்க் குளந் தன்னில்

இட்டமுட னேதிங்கள் மும்மாரி பெய்ய

தேசமெங் குஞ்செந்நெ லாகவே விழைய

அட்டதிக் கும்புகழ் கோணநா தரசன்

அந்தியி லன்பாக மழையழைத் திட வேண்டி

பட்டுடனே சந்தனக் கட்டையொரு வரிசில்

பாங்காகவே சோனை மாரி பொழிவித்தார். 04.

(பரிதி குல மன்னன் என்பது பரிதிகுழி மன்னனென ஏட்டுப் பிரதியிலுண்டு.)

&&&&&&&

மாரிபொழி வித்துலகில் வருணனருள் செய்ய 

மங்கலா தேவர் தன் மனமகிழ்ற் தருளி

சீரிய மிகுத்த தம் பலகாம நாட்டில்

செல்வந் தழைத்திடத் தீவினை யகற்ற

நாரிய ருடன்புதல்வ ரன்னை சுற்றங்களும் 

நயமாகவே யிருந் துலகுதனில் வாழ்க

வீரிய மிகுத்தமங் கலதேவ ரென்றும்

வீறாக வேவீற் றிருந்தருனி னாரே. 05.

&&&&&&&

வீற்றிருந் தேதூதர் வீரவா னாகிய

பணிக்கமா வதனரைப் பார்த்து மனமகிழ்வுடன்

++++++++++++++++++++++++++++++++++++++++++++

++++++++++++++++++++++++++++++++++++++++++++

++++++++++++++++++++++++++++++++++++++++++++

++++++++++++++++++++++++++++++++++++++++++++

++++++++++++++++++++++++++++++++++++++++++++

++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஆதிநா ராயணன் றன்னருளி னலே

அங்கனம் தாகவே அயோதித மாநகரில் 06.

&&&&&&&

தாதுசெறி மங்கலவ ராகப் பிறந்து 

சக்கரம் சிலைகுழல் தன்னையும் வாங்கி 

நீதிசேர் மானிடர்கள் தீவிணைக ளைந்தே

நீடுழி காலமும் நின்று பூசை கொள்ளச் 

சேதுநக ராளவரு செங்கண்மால் கையால்

செகதலம் மதிக்கவரம் வாங்கி வந்தனரே. 07.

&&&&&&&

வந் தபின் தென்னிலங்கைக் கெழுந் தருளி 

வாகுடைய வெள்ளைக் கடாவதின் பின்னே

சந்தனச் சோலைசெறி கந்தளாய் கவடாலை

வாகான கோமாரி வதனவெளி நாவலூர் 

இந்தக் குளப்பதிகள் பதினாறு கோணத்தில்

எள்ளாமென் ணெயும்போல ஏகமாய் நிற்கும் 

மந்திரகிரி போலவே எங்குமாய் நிற்கின்ற

மங்கல நாயமார் பாத மறவேனே. 08.

&&&&&&&

பாரமத யானைகள் குழுமாடுகள் பிடிக்கும்

பணிக்க மாரும் பகையில் வதனமாரும்

வீரமொடு பட்டயங் கட்டாரி சொட்டைவில்

லம்புடன் வெழுகயிறு கோடாலியும் 

தாரைவா ளீட்டி போல தொங்கனி வல்லயம்

தக்க குலிசம் மழுவேல் சூலமொடு

சோவிவை கொண்டுவரு வல்ல புத்திரரும்

சேனைபடை யுங்கவர் வீசி வந்தனரே. 09.

&&&&&&&

வீசுபுகழ் மேவுகலை வேதப் பிராமணரும்

வேணுமென் றேகொண்டு மேலான பெரியோரும் 

தேசிகர்கள் யானைபரி தேர்களை நடாத்த 

சென்றிரு மருங்குமே சேவித்து நிற்ப்

++++++++++++++++++++++++++++++++++++++++++++

++++++++++++++++++++++++++++++++++++++++++++

++++++++++++++++++++++++++++++++++++++++++++

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++ 10.

&&&&&&&

சாலிநெல் லுக்குத்தி யமுதுண் டாக்குவோரும்

சருவா பரணம் சுமந்து வருவோரும்

மேலிடு சட்டையும் கரம்பாய் தலையணை

மெத்தை கம்பிளி புற்பாய் இரத்தினக் கம்பளமும்

++++++++++++++++++++++++++++++++++++++++++++

++++++++++++++++++++++++++++++++++++++++++++

ூ    மார்பிலிடு பட்டாடை பணியாடை கொண்டு

வருமன்னவரும் வந்தாலவட்டம் வீசினரே. 11.

&&&&&&&

ஆலவட்டப்பணி மாறுமங் கையரும்

அஞ்சுவகை யாலாத்தி யேந்து மங்கையரும்

கோலவட் டப்பணி குங்குமக் கொங்கைமார்

குலத்தி லதிமான் விலாதி யம்மையுமே 

நீலவட் டப்பணிக் கயல்விழிப் பெண்களும்

நேசமுட னேவந்து சேவத்து நிற்க

++++++++++++++++++++++++++++++++++++++++++++

++++++++++++++++++++++++++++++++++++++++++++ 12.

&&&&&&&

அன்புடைய ஐவருக் காசளிப் பித்தோன்

அகில முழுதாள்கின்ற அச்சுதானந்தன்

வன்புடைய கலியுகந் தனில் மனிதர் வாழ

வரம்வாங்கி வந்தகந் தளாய்க்குள மதனில்

++++++++++++++++++++++++++++++++++++++++++++

++++++++++++++++++++++++++++++++++++++++++++

பின்பு முகிலைக் கொண்டு திங்கள் மும்மாரி

பெய்வித்த சேதியிப் போது கண்டோமே. 13.

&&&&&&&

கண்டுமுன் முனிவர்பல வரச புத்திரர்கள்

வதனமார் நூற்றொரு பேரும்

அண்டர்புகழ் +++++++++++++++  ராசாக்கள் முதலாய்

ஒ       ூ    ஒ  கட்டளை தப்பாம லெப்போதும்

++++++++++++++++++++++++++++++++++++++++++++

++++++++++++++++++++++++++++++++++++++++++++

++++++++++++++++++++++++++++++++++++++++++++

++++++++++++++++++++++++++++++++++++++++++++ 14.

&&&&&&&

++++++++++++++++++++++++++++++++++++++++++++

++++++++++++++++++++++++++++++++++++++++++++

++++++++++++++++++++++++++++++++++++++++++++

++++++++++++++++++++++++++++++++++++++++++++

++++++++++++++++++++++++++++++++++++++++++++

++++++++++++++++++++++++++++++++++++++++++++

சென்றுதென் னிலங்கா புரிவளர் திருக்குளக்

கட்டினில் நேசமுடனே யகலா திருந்தனரே. 15.

&&&&&&&

இருந்து செங்கோல் முறை தனையருள் செய்து

எழில்பெருகு தம்பைநகர் விளைய அகமலிய 

பொருந்து கற்பூர வாலாத்தி நவகன்னி

பூவையர்கள் கற்புநெறி புனிதமாய் வளர

தெரிந்து செண்பக மிருவாட்சி யோடு

சீரான அல்லிசெந் தாமரைக ளோங்கி

சொரியுதே தேனாறு கந்தளைப் பதியினில்

சுரபி முக்ககிகளுஞ் சூழ நின்றதுவே. 16.

&&&&&&&

சூழவே கந்தளைப் பதியை வலமாகச் 

சொகுசுடைய கன்னலொடு செந்நெல் நற்கமுகின்

பாளைவாய் பீறியே யளியின மிரங்கப்

பலதிக்கும் வரால் கெண்டை பாய்ந்து விளையாட

வேழமொடு மானியம் மேதிகொடு முதலாய் 

விளையாடியே நல்ல மேற்பணிக்க மாரும்

கேழுடனே கந்தளைப் பதியிலெப் போதும்

மாமுகனு மங்கலரும் வாழ்ந்திருந் தனரே. 17.

&&&&&&&

வாழிகுளக் கோட்டரசு மகராசன் வாழி

மலரயனுக் கெட்டாத மலர்ப்பாதம் வாழி

ஆழிதிரு முகில்வண்ண னைவரும் வாழி

அருந்தண லுதித்துவச்த வம்மையும் வாழி

காழியொடு நவகோடி கன்னியரும் வாழி

கருணைபுரி நரசிங்கத் தம்பிரான் வாழி

நாழுமேபல திக்குங் காவலாய் நிற்கும்

நன்மையுள முனிவர்கள் நற்பதம் வாழி. 18.

&&&&&&&

(+++++++++++++++ - செல்லரித்த ஓலைச்சுவடி )

கலாபூசணம் வே.தங்கராசா








இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. அருமையான தகவல். இதனை முழுமையாக..ஆய்வு செய்ய வேண்டும். அருமை இவ்வளவு

    ReplyDelete