Wednesday, August 02, 2023

மரக் குதிரை - (ஆதினி பகுதி 10)


காதைக் கூர்மையாக்கிக் கொண்ட குருவும், சிஷ்யையும் பறையொலி நெருங்கி வருவதைப் புரிந்து கொண்டனர். கந்தளாய்க் குள வேள்விக்காக மாடு பிடிக்கச் சென்ற மறிகாரர்கள்தான் ஊர் திரும்பி வருகிறார்கள் என்பதை உணர்த்துவதாக அந்தப் பறையொலி இருந்தது. தனது தந்தை கேசவன் வீடு திரும்பி வருகிறான் என்ற ஆனந்தம் ஆதினியின் முகம் முழுக்க மகிழ்ச்சி ரேகைகளைப் படரச் செய்தது. அதற்கு மாறாக அறிவாட்டியின் முகத்தில் சிந்தனை ரேகைகள் படரத் தொடங்கின.

அப்பா வரப் போகிறார் பாட்டி. என்ன யோசனை உங்களுக்கு ? என்று உற்சாகத்தோடு கேட்டாள் ஆதினி.

வழக்கமாக மழை வாறத்துக்கு முதலில மறிகாரர்கள் வந்து வேள்வியில கலந்திடுவாங்க இந்த முறை எல்லாம் மாறி நடக்குது அதுதான் யோசிக்கிறன் என்றாள் அறிவாட்டி. அறிவாட்டியின் பேச்சை ஆதினி காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. ஆனந்தமாக மழை வேண்டி ஆடிப் பாடியதற்கு மாறாக உடனடியாக மழையை நிறுத்தச் சொல்லி கண் மூடி  தன் கண்ணபெருமானிடம் கெஞ்சி மன்றாடிக் கொண்டிருந்தாள். தனது வேண்டுதல் உடனடியாக கண்ணபிரானிடம் சென்றடைந்து விட்டது என்பதற்கு அறிகுறியாக மழை சிறிது சிறிதாக குறையத் தொடங்கியிருக்கிறது என நினைத்து ஆதினி பூரிப்படைந்தாள்.

ஊருக்குள்ள வந்ததும் அப்பாவ எங்க முதல்ல பார்க்கலாம் பாட்டி என்று ஆர்வத்துடன் கேட்டாள் ஆதினி.

காட்டுல இருந்து உயிராபத்து ஏதும் இல்லாம திரும்பி வந்ததற்காக இடைச்சேரி வதனமார் திடலிலதான் எல்லோரும் ஒன்று கூடுவாங்க. அங்கு இருக்கிற வதனமார் சாமிக்கு படையல் வச்சு நன்றி தெரிவிப்பாங்க. இந்த மாலை பட்ட நேரத்தில நீ அவ்வளவு தூரம் போகேலாது கொஞ்சம் பொறுமையா இரு என்றாள் சிரித்தவாறே அறிவாட்டி.

 ஆர்வத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த ஆதினி மழை தூறலாக மாறியதும் அறிவாட்டியை வற்புறுத்தி இழுத்துக் கொண்டு தெருவில் நடக்க ஆரம்பித்தாள். அவர்கள் எதிர்பார்த்தது போல மழையும், மழை வேண்டி மாடு பிடிக்க காட்டுக்குள் போன மறிகாரர்கள் திரும்பி வருவதும் ஊர் முழுக்க ஒரு புது  உற்சாகத்தை உருவாக்கி இருந்தது. தெருவெல்லாம் கூடி இருந்தவர்களின் முகங்களில் அவை தெளிவாகத் தெரிந்தது.

பாருங்க பாட்டி ஊரே சந்தோசமா இருக்குது. நீங்க மட்டும்தான் யோசிச்சிட்டு வாறீங்க என்றாள் ஆதினி. அதற்குப் பதிலளிக்க அறிவாட்டி முற்பட்ட சமயம் பாட்டி சேதி தெரியுமா ? என்று கூவியபடி அவர்களை நோக்கி ஓடி வந்தாள் பத்மாவதி. ஓடி வந்த வேகத்தில் மூச்சிரைத்த பத்மாவதி ஆதினியைப் பார்த்தபடி மௌனமாக நின்றாள். என்ன பத்மா நீ ஓடிவந்த வேகத்தப் பார்த்து ஏதோ பெரிய சேதி சொல்லப்போறா எண்டு நினைச்சன். வாயடைச்சுப்போய் நிக்கிற ? என்று அறிவாட்டி கேட்டாள்.

மறிகாறர் ஒருத்தர் காட்டில யானை துரத்தி விழுந்திட்டாராம். அதுதான் காட்டில இருந்து அவங்க வரத் தாமதமானதாம் என்று இழுத்துபடி சொன்னாள் பத்மாவதி. யாரக்கா விழுந்தது என்று அதிர்ச்சியாகிக் கேட்டாள் ஆதினி. அதுதான் மகள் தெரியல. மறிகாரர் வந்தாத்தான் தெரியும் என்றபடி ஆதினியின் தலையை வருடிவிட்டாள் பத்மாவதி. காயம் கடுமையானதா என்று வினாவினாள் அறிவாட்டி. ஆமாம் பாட்டி கந்தளாய் வீரசோழன் ஆதுரர் சாலையில வைத்து மருத்துவம் பார்க்கிறார்களாம் என்றாள் பத்மாவதி. அப்ப நான் நினைச்சது சரி என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் அறிவாட்டி. 

இத்தனை விபரமாக காட்டில் மறிகாரர் விழுந்த விடயம் தெரிந்திருக்கும் பத்மாவதிக்கு எப்படி அவர் யார் என்பது தெரியாமல் போனது என்ற கேள்வி ஆதினியின் மனதிற்குள் எழுந்தது. எனினும் பெரியவர்களின் உரையாடலுக்குள் குறுக்கிட்டு அதைக் கேட்பதற்கு அவளுக்கு தயக்கமாக இருந்தது. மறிகாரர் ஒன்பது நாட்களுக்கு முன்னமே குழுமாடு பிடித்து விட்டார்களாம். ஆனால் காயப்பட்டவரைக் கொண்டுவந்து சேர்க்கத் தாமதமானதால் நேற்று மாலைதான் கந்தளாய் வந்து சேர்ந்தார்களாம்இரவுப் பூசையில் தலைக்கொரு பானை வைத்து கட்டாடியார் தலைமையில் வேள்வியை நிறைவு செய்தார்களாம் என்று பத்மாவதி தான் அறிந்தவற்றை அறிவாட்டியிடம் விபரமாகச் சொல்லிக் கொண்டு வந்தாள்.

ஆதுரர் சாலையில் வைத்து மருத்துவம் பார்க்கிறார்கள் என்பதால் ஏதோ சிக்கலான விடயமாகத்தான் இருக்கும் என்பதை ஆதினி புரிந்து கொண்டாள். அவள் மனதில் இனம் புரியாத ஏதோ ஒரு பதட்டம் உருவாகியிருந்தது. என்னதான் அனுபவசாலி என்றாலும் கேசவனின் வயதும், உடல்நிலையும் காட்டுப் பயணத்திற்கு உகந்ததல்ல என்ற எண்ணம் ஆதினிக்கு ஆரம்பம் முதலே இருந்தது. அத்துடன் கேசவன் பயணப்பட முடிவு செய்த நாளில் இருந்து வெளியில் யாரிடமும் சொல்லிப் புரியவைக்க முடியாத ஒருவித பயம் அடிக்கடி அவள் மனதில் எழுந்து உடலை உறைய வைத்தது ஆதினிக்கு மீளமீள ஞாபகத்திற்கு வந்து போனது. தன் தந்தை காட்டுக்குச் செல்லக்கூடாது என்பதற்காக அவள் மேற்கொண்ட கடின முயற்சியெல்லாம் பயனின்றிப்போய் கேசவன் காடு சென்றதன் பின் அன்று தோன்றிய மனப்பயம் ஆதினி மனதில் நிரந்தரமாகக் குடியிருந்து விட்டது. 

வீரசோழன் ஆதுரர் சாலை விடயத்தைக் கேட்டபின் ஆதினியின் நடையில் ஏற்பட்ட தடுமாற்றத்தைக் கண்டு ஆதினியின் மனநிலையை அறிவாட்டி புரிந்துகொண்டாள். அறிவாட்டியின் ஆறுதல்படுத்தும் வார்தைகளைக் கேட்டவாறே ஆதினி ஊரில் மக்கள் கூடிநின்ற பகுதியை வந்தடைந்தாள். பத்மாவதி இடையில் ஏதோ அவசர வேலையாக தன் வீட்டுக்குச் சென்றுவிட்டிருந்தாள். 

பரந்து விரிந்து கிளைபரப்பியிருந்த புளியமரத்தின் கீழ் மழை நின்ற மாலைநேரத்து இருள் படர்வதை ஆங்காங்கே ஏற்றப்பட்டிருந்த தீப்பந்தங்கள் தடுத்துக்கொண்டிருந்தன. முன்னம் எங்கோ இருந்து உருட்டிவரப்பட்டிருந்த பெரிய மரக்குற்றிமேல் ஊர்த்தலைவர்கள் மூவர் அமர்ந்திருந்தனர். கூட்டத்தில் அறிவாட்டிக்குக் கிடைத்த வரவேற்பால் இலுகுவாக ஆதினியால் முன்வரிசைக்கு வந்து சேர முடிந்தது. கந்தளாய் வேள்வியில் இருந்து சேதி கொண்டு வந்திருந்த வாசுதேவன் மாமா சொல்வதை ஊர்த்தலைவர்களும், கூடியிருந்த கூட்டமும் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருந்தது. வாசுதேவன் மாமா நல்ல கதைசொல்லி. ஆதினி மட்டுமல்ல அவருக்குச் சொந்தமில்லாத அனைவரும் அவரை வாசுதேவன் மாமா என்றுதான் அழைப்பார்கள். ஓய்வு நேரங்களில் குழந்தைகளுக்கு கதை சொல்வது அவருடைய பொழுதுபோக்கு. அன்று கந்தளாயில் இருந்து ஊருக்கு அவர்தான் தகவல் கொண்டு வந்திருந்தார். அடுத்த நாள் காலை கந்தளாயிலிருந்து வரவிருக்கும் மறிகாரர்களை வரவேற்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதற்கான கூட்டம் அது என்பதை இடையிடையே பேசிய ஊர்த் தலைவர்களின் வார்த்தைகளில் இருந்து ஆதினி புரிந்துகொண்டாள். 

குழுமாடு பிடிக்கச் சென்ற மறிகாரர்கள் காட்டில் செய்த வீர தீரச் செயல்களை தன் கண்ணால் நேரில் கண்டவர்போல் வாசுதேவன் மாமா சொல்லிக் கொண்டிருந்தார்.  ஆதினிக்கு அதிலெல்லாம் கவனம் செல்லவில்லை. மனம் முழுக்க ஒரே குழப்பமாக இருந்தது. அப்போதுதான் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு உயிரற்ற பொருள்மீது ஆதினியின் முழுக் கவனமும் குவியலாயிற்று. 



கைக்கு அடக்கமாகச் செய்யப்பட்ட மரக் குதிரையது. ஊர்த் தலைவர்களின் வலது பக்கத்தில் ஒரு சிறு வெள்ளைத் துணிமேல் வைக்கப்பட்டிருந்தது. குதிரைக்கு அருகில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீபத்தின் வெளிச்சம் அந்தச் சிறிய மரக் குதிரையைத் தெளிவாகப் பார்க்க உதவியது. மரத்தால் செய்யப்பட்ட அந்த குதிரையின் மீது ஏதோ ஒரு இலைச்சாறோ அல்லது எண்ணையோ தடவப்பட்டிருக்க வேண்டும். தீப்பந்த ஒளியைத் தெறிக்க விட்டு பார்ப்பவர் மனதை இலகுவாக கவரத்தக்கதாக இருந்தது அது. வாசுதேவன் மாமாவின் குரலுக்கு கூட்டமே கட்டுப்பட்டுக் கிடந்ததால் அந்தக் குதிரையை இரசித்துப் பார்க்கும் பாக்கியம் ஆதினிக்கு முழுமையாக கிடைத்தது. அது அவள் மனதில் எழுந்து அந்தரப்படுத்திக் கொண்டிருந்த ஒரு வித இனம் புரியாத பயத்தை மறைத்து  ஆறுதல் தருவதாக இருந்தது. 

சிறுவயதில் இது போன்ற மரச் சிற்பம் ஒன்றைச் செய்து தருமாறு கேசவனிடம் கேட்டு அடம்பிடித்தது ஆதினியின் ஞாபகத்துக்கு வந்தது. கேசவனின் தாய் அவனது மூன்றாவது வயதில் இறந்து போயிருக்கிறார். அதைத் தொடர்ந்து வந்த சில வருடங்களில் கேசவனின் தந்தை மறுமணம் புரிந்து கொண்டார் .பெற்றோரின் ஆதரவு இல்லாது தனது பாட்டன் தயவில் வளர்ந்து வந்த கேசவன் சிறுவயதிலேயே கம்மாளச் சேரிக்கு கூலி வேலை செய்வதற்காகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பன்னிரு வருடங்கள் கம்மாளச் சேரியில் வேலை செய்த அனுபவம் பற்றி ஒரு முறை ஆதினியிடம் கேசவன் விரிவாகச் சொல்லியிருந்தான். மரத்தால் செய்யப்பட்ட விலங்குச் சிற்பங்கள் பற்றி அவன் சிலாகித்துச் சொல்லி வந்த போது தன் வாழ்வில் நேரில் கண்டிராத குதிரைச் சிற்பம் ஒன்றைச் செய்து தருமாறு ஆதினி அவனிடம் வேண்டிக் கொண்டாள். ஆனால் துரதிஷ்டவசமாக அது சாத்தியப்படாமலேயே போய்விட்டிருந்தது. பலமுறை சித்திரமாக குதிரையைக் கண்ட போதும் சிற்பமாக பார்க்கும் பாக்கியம் ஆதினிக்கு இப்போதுதான் வாய்த்திருக்கிறது. 

இம்முறை பெரிய வதனமாராக காட்டிற்குச் சென்ற கேசவனைப் பற்றி வாசுதேவன் மாமா சொல்லத் தொடங்கியபோதுதான் அவர் பக்கம் ஆதினியின் கவனம் திரும்பியது. அதற்கு முன் நடந்த கந்தளாய் வேள்விகளில் அவன் செய்த வீர தீரச் செயல்களைச் சொல்லி ஆதினியின் மனதில் பெருமித உணர்வை உணரச் செய்தார் வாசுதேவன் மாமா. இம்முறை காட்டில் நடந்தவற்றைச் சொல்ல வாசுதேவன் மாமா எத்தணித்த சமயம் அறிவாட்டிப் பாட்டி பலமாகச் செருமினாள். அப்போதுதான் அவளைக் கண்டு கொண்ட வாசுதேவன் மாமா அறிவாட்டிப் பாட்டியை பார்த்துப் புன்னகைத்தவாறே கைகளால் வணக்கம் வைத்தார். அறிவாட்டியின் அருகில் நின்ற ஆதினியைக் கூர்ந்து பார்க்க அவர் கண்கள் தவறவில்லை. 

மழை வேண்டிய பூசையில் நாட்டு நன்மைக்காக அர்ப்பணிப்புடன் பாடுபட்ட கேசவன் அவரது ஆசை மகளுக்கு கொடுத்தனுப்பிய பரிசுப் பொருளை வழங்க இருப்பதாக வாசுதேவன் மாமா அறிவித்தார். ஊர்த் தலைவர்கள் எழுந்து நின்றனர். வெள்ளைத் துணிமேல் வைக்கப்பட்டிருந்த மரக் குதிரைச் சிற்பத்தை அவர்களில் ஒருவர் கையில் ஏந்தி இருந்தார். அறிவாட்டியும், அருகில் இருந்த ஊரவர்களும் உந்தித்தள்ள ஆதினி பயபக்தியுடன் தான் ஆசைப்பட்ட அந்த மரக்குதிரைச் சிற்பத்தைப் பெற்றுக் கொண்டாள். சிறு வயதில் தான் ஆசைப்பட்ட மரச் சிற்பத்தை தானே நேரில் கொண்டு வந்து தராமல் ஏன் தன் தந்தை வாசுதேவன் மாமாவிடம் கொடுத்து அனுப்பினார் என்ற கேள்வி ஆதினியின் மனதை குடைந்து கொண்டே இருந்தது.

 

தொடரும்......

 

  நட்புடன் ஜீவன்.

tjeevaraj78@gmail.com

நன்றி   -  2023  ஆடி  தாய்வீடு இதழ்

ஆழி மழைக்கண்ணா!  -    (ஆதினி  பகுதி 9)

நரபலி   -    (ஆதினி  பகுதி 8)

வைராவியர் குலமகள்  (பூமகள்)  -  (ஆதினி  பகுதி 7)

அறிவாட்டி  (ஆதினி  பகுதி 6)

பெரிய வதனமார்    (ஆதினி  பகுதி 5)

எல்லைக்கல்  -    (ஆதினி  பகுதி 4)

வாசுதேவ வாய்க்கால்  -        (ஆதினி  பகுதி 3)

இடையர்கல்  -    (ஆதினி  பகுதி 2)

பிடிவாதக்காரி  -   ( ஆதினி  பகுதி 1 )

 

 

 

 

 

 

  

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment