Tuesday, March 07, 2023

1846 இல் சிவன் கோயில் சொத்துக்கள் பற்றிய விபரம் - pdf ஓலைச்சுவடிகள்


திருகோணமலை நகரப் பகுதியில் புகழ்பெற்ற விசுவநாத சுவாமி சிவன் கோயில் தொடர்புடைய வளமைப் பத்ததி எனும் ஓலைச்சுவடி அண்மையில் வாசிக்க கிடைத்தது. இது வே. அகிலேசபிள்ளை அவர்களின் ஓலைச்சுவடிகள் திரட்டிலிருந்து திரு.கணேசலிங்கம் ஸ்ரீதரன்  அவர்களுக்கு ஊடாக எமது பார்வைக்கு கிடைத்திருந்தது.

திருகோணமலை சிவன் கோயில் தொடர்பான பல்வேறு முக்கிய அம்சங்களை பதிவு செய்திருக்கும் இந்த ஓலைச்சுவடி கோயிலின் 1846 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரிய அசையும், அசைவற்ற சொத்துக்களின் விபரங்களை விரிவாகப் பதிவு செய்திருக்கிறது.

ஆலயங்களுக்கு சொந்தமான அசையும், அசைவற்ற சொத்துக்களை மிகத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கும் இவ்வாறான வளமைப் பத்ததிகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அவை கொண்டிருந்த விரிவான சொத்துக்கள் பற்றிய பதிவுதான் காரணம் என ஊகிக்கலாம்.


திருக்கோணாத மலையில் சைவ சமய பிரபல்யமாக விளங்கும் விசுவநாத சுவாமி கோயில் வளமைப் பத்ததி. 

ஓலைச்சுவடிகளில் எழுதும்போது சொற்களுக்கு இடையே இடைவெளி விடப்படுவது இல்லை. எனவே வாசிக்கும் நாம்தான் அவற்றை சொற்பிரித்து வாசிக்க வேண்டும். அதேவேளை எழுத்துக்களுக்கு குற்று வைக்கப்படுவதும் இல்லை. தேவையான எழுத்துக்களுக்கு குற்றிட்டு வாசிக்க வேண்டியதாக இருக்கும். சுமார் 177 ஆண்டுகளுக்கு முந்தியதான இவ்வோலை ஓரளவு வாசிக்கக்கூடிய விதத்தில் அமையப் பெற்றிருப்பதால் ஓலைச்சுவடிகளுக்கு முழுமையான விளக்கங்கள் இப்பதிவில் வழங்கப்படவில்லை. உதாரணமாக


திருக்கோணாத மலையில் சைவ சமய பிரபல்யமாக விளங்கும் விசுவநாத சுவாமி கோயில் வளமைப் பத்ததி.

என்ற  உள்ளடக்கம் பற்றிய விவரிப்பு

திருககோணாதமலையிலசைவசமயபிரபலயமாகவிளஙகுமவிசுவநாதசுவாமிகோயிலவளமைபபதததி.

என்று ஓலைச்சுவடியில் எழுதப்பட்டிருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கும். நீங்களும் நேரங்கிடைக்கையில் அவற்றை மீள வாசிப்பதனூடாக இலகுவாக அதன் பொருளை விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்குமென நம்புகின்றேன்.

வளமைப் பத்ததி

ஆலயப் பராபரிப்பு பற்றிய விபரங்கள், திருவிழாக்கள், பூசைகள் தொடர்புடைய ஒழுங்கு முறைகள், ஆலய தொழும்பாளர்களின் கடமைகள், ஆலயத்திற்குரிய அசையும், அசைவற்ற சொத்துக்களின் விவரங்கள் மற்றும் ஏனைய வளமைகள் தொடர்பாக பதிவு செய்திருக்கும் ஓலைச்சுவடிகள் வளமைப் பத்ததி என்று அழைக்கப்பட்டது.

வளமைப் பத்ததி  என்று சொல்லப்படுகின்ற இந்த ஓலைச்சுவடியில் இருக்கும் ஆலயத்தின் சொத்து விபரங்கள் மட்டுமே இப்பதிவில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலதிக விபரங்களை அறிய ஆவல் உள்ளோர் பதிவின் முடிவில் குறிக்கப்பட்டிருக்கும் சுட்டியின் ஊடாக முழு ஓலைச்சுவடிகளையும் இலவசமாகத் தரவிறக்கி வாசிக்க முடியும்.

சொத்துக்களின் விவரங்கள் தமிழ் எண் முறைப்படி ஓலைச்சுவடிகளில் குறிக்கப்பட்டுள்ளது என்பதனை கவனத்தில் கொள்க. எனினும் சில குறியீடுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

= 1     ௨ = 2    = 3   ௪ = 4    = 5    = 6    = 7   = 8   = 9    0 = 0


 திருக்கோணாத மலையின் சைவ சமய பிரபல்யமாக விளங்கும் விசுவநாத சுவாமி கோயிலின் அசையும் அசையா சொத்துக்களின் விபரம்


 ஆலய வளாகத்தின் எல்லைகள், காணியின் விபரம், தென்னந்தோட்டம், குளம், மடம், வீதிகள் போன்ற அசையா சொத்துக்களின் விபரங்கள்



 பொன் நகைகளின் விபரங்கள்


வெள்ளி நகைகளின் விபரங்கள்




 வெண்கல நகைகளின் விபரங்கள்


நித்திய பூசைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் பற்றிய விபரம்



ஆலயத்தில் பூசை நடக்க வேண்டிய காலங்கள்



 ஆலய பராபரிப்பும், நடைமுறைகளும்

ஆலய பராபரிப்புக்காரர்கள் தொடர்பான விவரங்கள், ஆலய நிர்வாகம் தொடர்பாக அவர்களுக்குரிய கடமைகள், திருவிழாக் காலங்களில் பின்பற்ற வேண்டிய வளமைகள் போன்ற பல்வேறு நிர்வாக தகவல்கள் அடங்கிய ஏடுகள் இவை. இவற்றில் இந்நடைமுறைகளை தொடர்ச்சியாக குறைவின்றி நடத்த பராபரிப்புக்காரர்கள் ஒப்புக்கொண்டிருப்பதையும் அதற்குச் சாட்சியாக கையெழுத்து வைத்தவர்களையும் அறியக்கூடியதாக இருக்கிறது.











திருகோணமலை விசுவநாத சுவாமி சிவன் கோயில் 


1. முதற்கட்டம் சுவடியாக்கம்

இவ்வாலயம் தொடர்பாக 177 ஆண்டுகளுக்கு முன்னால் 1846 இல் எழுதப்பட்ட ஆலயத்தின் வழமைகள் உள்ளடங்கிய ஏட்டுப் பிரதியின் சுவடியாக்கம் பணி நிறைவு பெற்றிருக்கிறது. தற்பொழுது இவ்வோலைச்சுவடிகளை உலகின் பல்வேறு பாகங்களில் உள்ளவர்களும் வாசித்து அறியும் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

2. இரண்டாம் கட்டம் -  நூலுருவாக்கம்

இவ்வேலைச்சுவடிகளை சாதாரண மக்கள் இலகுவில் வாசித்து புரிந்து கொள்வது கடினமாகும். எனவே ஓலைச்சுடிகளை வாசிப்பதிலும், தமிழிலும் புலமை பெற்றவர்கள் மூலமாக இவை முறையாக பதிவு செய்யப்பட்டு, நூலுருவாக்கி ஆலய அடியவர்களுக்கு வழங்கப்படுதல் அவசியமான பணியாகும்.

3.  மூன்றாம் கட்டம் -  விழிப்புணர்வு

நீண்ட காலம் வெளி உலகம் அறியப்படாமல் இருந்த இவ்வாலய ஓலைச்சுவடிகள் போலவே இன்னும் பல அரிய வரலாற்று பொக்கிஷங்கள் எம்மத்தியில் முறையாக பதிவு செய்யப்படாமல் அழிந்து கொண்டிருக்கின்றது.  அவை தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலம் ஆலய வளமைகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதோடு எமது வரலாற்றில் நிரப்பப்படாமல் இருக்கும் பல பக்கங்களை பூர்த்தி செய்வதற்கு இவ்வகையான முயற்சிகள் உதவும் என நம்புகின்றேன்.

திருக்கோணாத மலையில் சைவ சமய பிரபல்யமாக விளங்கும் விசுவநாத சுவாமி கோயில் வளமைப் பத்ததியினை முறையாகப் பதிவு செய்ய வேண்டியது எம் அனைவரதும் கடமையாகும்.  அதிலும் குறிப்பாக சிவன் கோயில் ஆலய பரிபாலன சபை, ஆலய அடியவர்கள் விரைவாக ஒன்றிணைந்து நிறைவேற்ற வேண்டிய முக்கிய பணியாகும்.


நன்றி நவிலல்


திரு.கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் பாதுகாப்பில் இருந்த   வே. அகிலேசபிள்ளை அவர்களின் ஓலைச்சுவடிகள்  நூலகத்திட்ட  உறுப்பினர்களால் இலத்திரனியல் ஆவணமாகப் பதிவு செய்யப்பட்டு திரு.கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களிடம் 27.06.2020 இல் மீளக் கையளிக்கப்பட்டிருந்தது. இவ்வரிய முயற்சிக்கு உறுதுணையாக இருந்த நண்பன் சுரேன்குமார் மற்றும் நூலக நிறுவன உறுப்பினர்கள் அனைவரும் நன்றிக்குரியவர்கள்.

இந்த ஓலைச்சுவடிச் சேகரிப்பில் இருந்த திருக்கோணாத மலையில் சைவ சமய பிரபல்யமாக விளங்கும் விசுவநாத சுவாமி கோயில் வளமைப் பத்ததி தற்போது நூலக நிறுவனத்தினர் PDF வடிவில் பதிவேற்றி உலகிலுள்ள அனைவரதும் பார்வைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். 

52 ஓலைச்சுவடிகள் அடங்கிய  திருக்கோணாத மலையில் சைவ சமய பிரபல்யமாக விளங்கும் விசுவநாத சுவாமி கோயில் வளமைப் பத்ததி தற்பொழுது யாவரும் வாசிக்கும் வண்ணம்  PDF வடிவில் நூலகத் திட்டத்தில் கிடைக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள படத்தின் மேல் சுட்டுவதன் மூலம் திருக்கோணாத மலையில் சைவ சமய பிரபல்யமாக விளங்கும் விசுவநாத சுவாமி கோயில் வளமைப் பத்ததியினை வாசிக்கலாம்.




நட்புடன் ஜீவன்.
tjeevaraj78@gmail.com



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment