Tuesday, February 28, 2023

அறிவாட்டி (ஆதினி பகுதி 6)


வீட்டு வாசலின் களிமண் சுவரில் தலை சாய்த்தபடி கோமதி அமர்ந்திருந்த நிலையைப் பார்த்தபோதே ஆதினிக்கு புரிந்து விட்டிருந்தது.  தனது தந்தை காடு செல்ல முடிவெடுத்துவிட்டார். இனி அவரைத் தடுக்க முடியாது. இருந்தாலும் உள்மனதில் ஏதோவொன்று வழமைக்கு மாறாக  உறுத்திக் கொண்டிருந்தது. அன்றுதான் அதிசயமாக அந்தக்காட்சியை ஆதினி பார்க்கிறாள். நீண்ட காலத்திற்குப் பிறகு மதியநேரம் ஒன்றில் அவளது அப்பா வீட்டில் இருப்பதையும், குழந்தைகள் அனைவரும் அவர் மடியிலும், தோளிலுமாக துள்ளி விளையாடுவதையும் காண மனமெல்லாம் மகிழ்ச்சியில் திளைத்துப்போனது. ஆனால் இந்த சந்தோசம் தொடர்ச்சியாக இருக்க வேண்டுமே என்ற பயம் அவள் மனதை ஆட்டிப்படைத்தது. கேசவனின் கழுத்தினை கைகள் இரண்டாலும் இறுக்கி கட்டிக்கொண்டு ஆதினி அவன் காதுக்குள் கிசுகிசுத்தாள். 

காட்டுக்குப்  போக வேண்டாம் அப்பா.

கேசவன் சிரித்தான். அறிவாட்டிப் பாட்டி உன்னை பயமுறுத்தி விட்டா போல. பயப்படாத எல்லாம் பழக்கப்பட்டதுதான் என்றான் சர்வசாதாரணமாக. நீண்ட நேரம் தன்னாலான எல்லா வழிமுறைகளைப் பயன்படுத்தியும் கேசவன் மனதை அவளால் மாற்ற முடியவில்லை.

அன்றைய தினம் வழமைக்கு மாறாக கேசவனின் வீட்டைத் தேடி இடைச்சேரியின் பல மனிதர்கள் வந்தார்கள். அவனது பழைய வீர பிரதாபங்களைச் சொல்லி அவனை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள் . வதனமார்களாக தெரிவான இளைஞர்களின் பெற்றோரும் வீடு தேடி வந்து கேசவனிடம் தங்கள் பிள்ளைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு வேண்டிக்கொண்டார்கள். அந்த நாளும் அதைத் தொடர்ந்து வந்த நாட்களும் கேசவன் வீடு இடைச்சேரியில் அதிக விருந்தினர் வந்துபோன வீடாக மாறிப்போயிருந்தது.

வேள்வி தொடங்கியது. முதல் பதினெட்டு நாட்களும் பூசைக்கு கேசவன் குடும்பத்துடன் போயிருந்தான். வேள்வியில் வதனமாருக்கு வழங்கப்படும் சிறப்பிடம் கண்டு ஆதினி மிகுந்த மகிழ்ச்சி கொண்டிருந்தாள். பத்தொன்பதாம் நாள் கண்ணீர் மல்க நின்ற ஆதினியிடமும், கோமதியிடமும், பிள்ளைகளிடமும் விடைபெற்றுக்கொண்டு  கேசவன் வதனமாருடன் காட்டுக்குள் குழுமாடு பிடிக்கச் சென்றான்.

கேசவன் காட்டுக்குச் சென்ற நாளிலிருந்து கோமதியோ, ஆதினியோ  வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்லவில்லை. வேள்வி தொடங்குவதற்கு முன்னால் திருக்கோணேச்சர ஆலயம், கந்தளாய்ப் பெருங்குறிப் பெருமக்கள் சபை, இடைச்சேரி ஊரவர்களால் வழங்கப்பட்ட நன்கொடைத் தானியங்கள் அவர்களது அன்றாட உணவுத் தேவைக்கு போதுமானதாக இருந்தது . கேசவனின் கால்நடைகளை ஊரில் உள்ளவர்கள் பொறுப்பெடுத்து பார்த்துக்கொண்டார்கள். ஆதினிக்கு நாட்கள் மிக மெதுவாக நகர்ந்து செல்வதுபோல் இருந்தது. அவர்களுக்கு அப்போது இருந்த ஒரே ஆறுதல் அறிவாட்டிப் பாட்டியின் வருகைதான். பாட்டிதான் அந்தக் குடும்பம் குறைந்தபட்ச மகிழ்ச்சியுடன் இயங்க காரணமாக இருந்தாள்.

நாள்தோறும் வீடு தேடி வரும் பாட்டி வராததால் ஆதினி அவளது வீடு நோக்கி நடந்தாள். வழக்கம்போல ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டு அறிவாட்டி அமர்ந்திருக்கும் திண்ணைப்பகுதி காலியாக இருந்தது. அயல் வீட்டிலிருக்கும் கமலம் அக்கா வெந்நீருடன் பாட்டியின் வீட்டுக்குள் அவசரமாக போவது ஆதினியின் மனதில் பரபரப்பை உருவாக்கியது. 

என்னக்கா பாட்டிக்கு..... ஆதினியின் குரல் அலறியது.

பயப்படாத காலையில இருந்து பாட்டியிட உடம்பு சூடாக் கிடக்குது என்றாள் கமலம் அக்கா.

ஆதினிக்குத் தெரிந்து அன்றுதான் அறிவாட்டி முதல் முறையாக பகல் வேளையில் படுத்திருக்கிறாள். தடித்த துணியினால் போர்த்தியபடி குறுக்கிக்கொண்டு நடுங்கியபடி படுத்திருக்கும் பாட்டியைப் பார்த்தபோது ஆதனிக்கு அழுகை வந்தது. அயலில் இருந்த பெண்கள் பலர் பாட்டிக்குத் தேவையான பணிகளைச் செய்ததால் அருகில் அவள் தலையைத் தடவியபடி இருக்கும் வாய்ப்பு ஆதினிக்குக் கிடைத்தது. மாலை வேளையில் பாட்டிக்கு உடல் சூடு தணிந்தது. ஆதினியின் உதவியுடன் பாட்டி சுவரோரமாய் உட்கார்ந்திருந்தாள்.

என்ன பயந்திட்டியா? வயது போனால் இப்படித்தான். சிரிக்க முயன்றாள் பாட்டி. பதிலேதும் சொல்லாது பாட்டியையே உற்றுப் பார்த்தபடி இருந்தாள் ஆதினி. பாட்டிக்கு தேவையான பணிவிடைகள் அனைத்தையும் செய்து முடித்திருந்த அயல் வீட்டுப் பெண்கள் ஒவ்வொருவராக குறைந்து செல்ல இறுதியில் அன்றைய இரவு பாட்டிக்குத் துணையாக ஆதினி இருக்க ஏற்பாடாகி இருந்தது.

எப்ப பாட்டி கந்தளாய்க்கு வந்தீங்க? 

ஒம்பதரை வயசில. 

ஆதினிக்கு ஆச்சரியமாக இருந்தது. வழமையாக அறிவாட்டி அவளது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய கேள்விகளுக்கு எப்போதும் பதில் சொன்னதே இல்லை.

நல்லா ஞாபகம் இருக்குது விஜயராஜ விண்ணகரத்திற்கு தம்பலகாமத்தில இருந்து காணிக்கை நெல் கொண்டு வருகிற மாட்டு வண்டி தொடரில நாலாவது வண்டியில நானும் கோதையம்மாவும் வந்தோம்.

கோதையம்மா யார் பாட்டி? 

என்னுடைய பாட்டிதான். தேவரடியாராக என்ன நெற்றித் திலகமிட்டு திருமணம் முடிச்சுக் கொடுக்க கூடவே வந்தாங்க.

எப்ப பாட்டி அது நடந்தது? 

மூன்று நாளுக்கு பிறகு. விஜயராஜ விண்ணகரத்து யாத்திரிகர் மடத்துல நாங்க தங்கி இருந்தம். முகூர்த்த நாளில அலங்கரிச்சு எங்களை கூட்டிப் போனாங்க. நாங்க மூன்று பேர். தம்பலகாமத்தில இருந்து நானும், கந்தளாய் நாவலூர்ல இருந்தும், சதுர்வேதி மங்கலத்தில இருந்தும் மற்ற இரண்டு பேரும் வந்திருந்தாங்க.

பிராமணப் பெண்ணுமா பாட்டி? 

ஆமா சதுர்வேதி மங்கலத்தில இருந்து வந்தவ. உனக்கொன்டு தெரியுமா? இப்பவரைக்கும் அவ பேர் யாருக்கும் தெரியாது. பிராமணப் பெண் எண்டுதான் தேவரடியாரெல்லாம் கூப்பிடுவாங்க.

திருமணம் எப்படி பாட்டி நடந்துச்சு? 

முகூர்த்த நேரத்தில ஒவ்வொருவரா கருவறைக்கு அழைச்சிட்டுப் போனாங்க. வடக்கு திசை பார்த்து உட்காரச் சொன்னாங்க. ஆண்டாள நினைச்சுட்டு கண்ண மூடி உட்கார்ந்து இருந்தன். உடம்பெல்லாம் இண்டைக்கு நடுங்கின மாதிரி நடுங்கிற்று இருந்துச்சு. ஆசாரியார் மூலவர் கழுத்தில இருந்த தாலியை எடுத்து என் கழுத்துல கட்டி விட்டார். எனக்கு என்ன செய்யிற எண்டு தெரியல்ல . தம்பி நல்லா இருக்கணும் எண்டு கடவுளை கும்பிட்டன்.

பயந்தீங்களா பாட்டி?

ம்....ம் வாழ்க்கையில முதன் முதலா பயந்தேன். திருவாட்கைப்பட்டவங்கள தேவகண்மிகள் கிட்ட ஒப்படைச்சிட்டு உறவினர்கள் போகலாம் என்று கோயிலில இருந்தவங்க சொன்னதும் நாங்க மூன்று பேரும் எங்களைக் கூட்டி வந்தவங்கள கட்டி பிடிச்சு ஆழ ஆரம்பிச்சோம். வலுக்கட்டாயமாக என்னை கோதையம்மாவிடமிருந்து பிரிச்சு எடுத்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது. மூன்று நாளா வீட்ட போகணும்.......வீட்ட போகணும்...... என்று நான் அழுது அடம்பிடிச்சத பிறகு பல பெரிய மூத்த தேவரடியார்கள் சொல்லிச் சிரிப்பாங்க.

பிறகு என்ன பாட்டி நடந்தது? ஆதினியின் குரலில் ஆர்வத்தை விட கவலை மிகுந்திருந்தது.

பாட்டியிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை. பலம்குன்றிப்போன தனது வலது கையை மெதுவாக உயர்த்தி தன்னிரு தோள்பட்டைகளையும் தடவிப் பார்த்துக் கொண்டாள் அறிவாட்டி. மூன்று நாளுக்குப் பிறகு எங்க மூன்று பேரையும் குளித்து, மங்கல சின்னங்கள் அணிந்து, ஆலய வழிபாட்ட முடிச்சிட்டு சத்தியதேவி அம்மாவை சந்திக்கச் சொன்னாங்க.  விஜயராஜ விண்ணகரத்தில் இருந்த மருத்துவம் பார்க்கும் தேவரடியார் அவர். வயதில் மூத்தவர். பார்ப்பதற்கு மிகவும் சாந்தமாக இருந்தார். மூன்று பேரில் என்னைத்தான் அவர் முதலில் அழைத்தார்.

என்ன செய்ய வேண்டும் பாட்டி? என்று கேட்டபடி அவர் அருகில் சென்றேன்.

உனக்கு முத்திரையிடப் போகிறேன் என்று மிக அமைதியாக பதிலளித்தார் சத்தியதேவி பாட்டி. அவரது வார்த்தைகளைப் போலவே பார்வையும் கருணை மிகுந்ததாக இருந்தது. அவருக்கு உதவியாக இரண்டு தேவரடியார்கள் இருந்தார்கள். அவர்கள் காட்டிய பீடத்தில் என்னை குப்புறக் கிடத்தி இரண்டு பக்கமும் அவ்விரு தேவரடியார்களும் என் தோள்களை இறுகப் பற்றிக் கொண்டார்கள்.

என்னவென்று தெரியவில்லை. ஏதோ ஒரு துன்பம் நிகழப்போகுது என்று மனது படபடத்துக் கொண்டது. என்ன நடந்தாலும் அழக்கூடாது என்ற வைராக்கியமான எண்ணம் மனதுக்குள் எழுந்தது. கண்களை இறுக்கி மூடிக்கொண்டு மகாவிஷ்ணுவை மனதார வேண்டிக் கொண்டிருந்தேன். ஏதோ நெருப்பில் தீய்ந்தது போன்ற வாசனையை உணரக்கூடியதாக இருந்தது. அடுத்த கணம் எனது இரண்டு தோள்பட்டையும் நெருப்பில் பொசுங்கிப்போனது. அம்மா....... என்று யாரோ தூரத்தில் அலறுவது போல என் காதுகளுக்கு கேட்டது. அதற்குப் பிறகு எதுவும் எனது நினைவில் இல்லை.

ஒரு கிழமைக்கு பிறகுதான் அன்று நடந்தது என்னவென்று பார்க்கும் மனத்தைரியம் எனக்கு வந்தது. பிராமணப்பெண்ணின் இடது தோளில் சங்கு சின்னமும், வலது தோளில் சக்கர சின்னமும் இருந்தது. அறிவாட்டிப் பாட்டியின் தோள்களை மறைத்திருந்த ஆடையை விலக்கி அங்கே குறியிடப்பட்டிருந்த சங்கு, சக்கர சின்னங்களை மெதுவாக வருடினாள் ஆதினி. அவளது கண்கள் கலங்கி இருந்தது. 

நாதழுதழுக்க மருந்து போட்டாங்களா பாட்டி என்றாள் ஆதினி.

நன்றாக சுத்தம் செய்யப்பட்ட செம்மண்தான் மருந்து. எனக்கு காயம் ஆறவில்லையென்று வில்வ இலைச்சாறு போட்டாங்க என்றாள் பாட்டி.

ஆதினியின் கண்ணீர்த் துளிகள் தீயினால் சுடப்பட்ட வடுக்கள் மேல் விழுவதை அறிவாட்டி உணர்ந்து கொண்டாள்.

என்னத்தால பாட்டி சுட்டவங்க?

செப்புல செய்த இலட்சனைய நெருப்புல பழுக்கக் காய்ச்சி சுடுவாங்க. சிவன் கோயில் தேவரடியாராக இருந்திருந்தா திரிசூலச் சின்னமும், ரிஷபச் சின்னமும் என் தோளில இருந்திருக்கும் என்றாள் பாட்டி.

தோள்பட்டைத் தழும்புகளை தடவிக் கொண்டிருந்த ஆதினி பாட்டியின் முகத்தை திருப்பி ஏன் பாட்டி தேவரடியாராகப் போனீங்க என்று கேட்டாள்.

அறிவாட்டியின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவருடைய கண்கள் ஓலை குடிசையின் வழியே ஊடுருவி எங்கோ ஒரு தொலைவில் நிலைக்குத்திட்டு இருந்தது. குடிசைக்குள் இருந்த நீண்ட மௌனத்தை கலைத்தபடி மீண்டும் ஆதினி ஏன் பாட்டி..... என்று கேள்வியை மீளக்கேட்கத் தொடங்கவும் அறிவாட்டி செருமிக்கொண்டு அது நரபலியோடு தொடர்புபட்டது நாளைக்குச் சொல்கிறேன் என்றாள். நரபலி என்றதும் அதிர்ச்சி அடைந்த ஆதினி ஒரு குழந்தையாக அறிவாட்டியின் மடியில் அடைக்கலமானாள்.


தொடரும்.....................


நட்புடன் ஜீவன்.
tjeevaraj78@gmail.com


நன்றி   -  2023  பங்குனி  தாய்வீடு இதழ்



                                                            ஒலி வடிவில் கேட்க..........





இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment