Wednesday, December 21, 2022

தம்பலகாமம் குடாக்கடல் - Tamblegam bay

தம்பலகாமம் குடாக்கடல் பண்டைய துறைமுகங்களில் ஒன்றாக இருந்தது. அது துறைமுகமாகச் செயற்பட்டது தொடர்பில் ஐரோப்பியர் காலத்து பதிவுகளே அதிகளவில் கிடைக்கின்றன. தம்பலகாமம் குடாக்கடலின் கப்பல்துறைக் கிராமப்பகுதியில் முன்னர் துறைமுகம் ஒன்று இருந்ததற்கான அழிபாடுகள் காணக் கிடைத்ததாக 1970 களில் கப்பல்துறைக்காட்டில் வேட்டையாடச் சென்றவர்கள் மூலமாக  அறியக்கூடியதாக இருக்கிறது. சிப்பித்திடல், முள்ளியடிப் பகுதிகள் எதிர்காலத்தில் களஆய்வு செய்யப்படுமாக இருந்தால் மேலும் பல விடயங்கள் வெளிவரக்கூடும்.

திருகோணமலை மாவட்ட ஒல்லாந்து ஆளுநர் Jacques Fabrice van Senden  அவர்களின் திருகோணமலை மாவட்ட சுற்றுப்பயண அறிக்கையில் (15.05.1786 - 21.06.1786) முள்ளியடித் துறை பற்றிக் குறிப்பிடப்படுகிறது. ஆளுநரின் தம்பலகாமப்பற்று விஜயத்தின் போது மூதூரில் இருந்து கடல்வழியாக வந்த அவரை தம்பலகாமப்பற்று வன்னிபம் கனகதண்டிகை கனகரட்ணம் முதலியார் 03.06.1786 அன்று முள்ளியடியில் வைத்து வரவேற்றதாக குறிப்பிருக்கிறது. எனவே அக்காலப்பகுதியில் முள்ளியடி ஒரு துறையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதனைப் புரிந்துகொள்ளலாம். அதுபோலவே 1804 இல் கண்டிப் படையெடுப்பில் தோல்வியைத் தழுவிய பிரித்தானியப் படையணி நூற்று அறுபதிற்கும் (160) மேற்பட்ட படைவீரர்களை இழந்து பின்-  வாங்கி வந்தபோது தம்பலகாமத்தில் இருந்து திருகோணமலை நகரை அடைய இந்தத் துறையினைப் பயன்படுத்தியதை அவர்களது ஆவணங்கள் உறுதிப்படுத்துகிறது.(1)

பிரித்தானியரால் இலங்கையின் கரையோரப்பகுதிகள் கைப்பற்றப்பட்டமையால் இலங்கையின் மத்திய பகுதியில் விசாலமாகப் பரந்திருந்த கண்டி இராட்சியம் தனது வெளிநாட்டு அரசியல் மற்றும் வர்த்தகத் தொடர்புகளுக்கு மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டது. இதனால் பிரித்தானியாவிடம் இருந்து கரையோர துறைமுகங்களைப் பெற்றுக்கொள்வதில் அதிக அக்கறை கொண்டிருந்தது.

இதன் ஒரு பகுதியாக 1799 ஆண்டு Tamblegam bay  உள்ளிட்ட திருகோணமலைத் துறைமுகப் பகுதிகளைப் பெற்றுக்கொள்ள கண்டி அரசு முயற்சித்தது. எனினும் இந்தக் கோரிக்கையை பிரித்தானியா மறுத்துவிட்டது. முயற்சியைக் கைவிடாத கண்டி அரசு 1812 இல் தாம் பிணைக்கைதியாக கைப்பற்றி வைத்திருந்த Major Davie என்பரை விடுவிப்பதற்கு துறைமுகப் பகுதிகள் தம்மிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என நிபந்தனை விதித்தது. (2) இதற்கும் பிரித்தானியா இணக்கம் தெரிவிக்க வில்லை. இதனால் கண்டி அரசால் Tamblegam bay உள்ளிட்ட திருகோணமலைத் துறைமுகப் பகுதிகளை மீளப்பெற முடியாமல் போனது. பிரித்தானியர் காலத்தில் Tamblegam bay (தம்பலகாமம் குடாக்கடல்) கொண்டிருந்த முக்கியத்து வத்தினைப் புரிந்துகொள்ள மேலுள்ள சம்பவம் மிக உறுதுணையாக இருக்கிறது.

உசாத்துணை

(1)  காலனித்துவ திருகோணமலை - கலாநிதி கனகசபாபதி   சரவணபவன், 2010,  பக்கம் 217

(2)  The Sinhala King and British envoys by KAMALIKA PIERIS   http://island.lk/ August 12.2014.7:49 pm  

Udarata was also very anxious to get access to the sea and kept asking for a seaport. In 1799.they asked back the 'seashore around Trincomalee' including Tamblegam bay. saying Boyd had promised this. Britain refused saying that they had conquered it. Udarata was persistent and these requests continued. As late as 1812, Udarata was still trying to get the British possessions back. Major Davie, kept as a hostage, would be released, they said, but 'the coastal districts must be surrendered'. Governor Brownrigg wrote back firmly that there would be no return of territory. Udarata never got the 'coastal districts' back.

The writings of Colvin R de Silva. K.M. de Silva. S.Tammita Delgoda. D.A Kotelawele. P.E. Pieris. M. Roberts. A Schrikker. T. Vimalananda and Upali C Wickremeratne were used for this essay.

நட்புடன் ஜீவன்.
tjeevaraj78@gmail.com

 மேலும் வாசிக்க

திருகோணமலை வன்னிபங்கள் -   பெயர் பட்டியல்

07.06.1786  இல் ஆதிகோணநாயகர் ஆலயம்

ஊர்ப்பெயர் திரிபு    -   தம்பலகாமம்  முதல் Thambalagamuwa வரை





இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment