Tuesday, October 11, 2022

ஊர்ப்பெயர் திரிபு - தம்பலகாமம் முதல் Thambalagamuwa வரை

ஊர்ப் பெயர்கள் காலத்துக்குக் காலம் மாற்றமடைந்து வருவதை இடப்பெயர் வரலாறு நெடுகிலும் நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. அவ்வாறு ஊர்ப் பெயர்களில் திரிபு வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. 

பிரதேசங்களை வெற்றிகொண்ட அரசர்களினால் ஊர்ப்பெயர்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. ஆட்சியாளர்களால் அப்பிரதேசம் பிறருக்கு தானமாக வழங்கப்படும் பொழுது அவ்வூரப்பெயர்கள் மாற்றப்பட்டிருக்கிறது. இவை தவிர அங்கு வாழும் மக்களின் சமய, சமூக, அரசியல் காரணங்களாலும் ஊர்ப்பெயர்களில் மாற்றம் இடம்பெறுவதுண்டு. சிலவேளைகளில் அறிஞர்களாலும் ஊர்ப்பெயர்கள் மாற்றப்படுவது உண்டு. ஆட்சியாளர்கள், அறிஞர்களுக்கு அப்பால் சாதாரண மக்களாலும் ஊர்ப்பெயர்கள் மாற்றம் கண்டதை இடப்பெயர் ஆய்வுகளில் நாம் காணக்கூடியதாக உள்ளது.

கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீகக் கிராமம் தம்பலகாமம். வயலும் வயல்சார்ந்த மருத நிலப்பிரதேசம்தான் அதன் சிறப்படையாளம் என்றாலும் அதற்குச் சற்றும் குறைவில்லாத அளவில் கடல், மலை, காடு, குளம் போன்ற அனைத்து வளங்களையும் தன்னகத்தே நிறைவாகக் கொண்டமைந்த இயற்கை எழில் நிறைந்த  பூமி தம்பலகாமம்.

மிக நீண்டகாலம் இடம்பெற்று வந்த யுத்த அனர்த்தம், திட்டமிட்ட குடியேற்றங்கள், பாரிய உள்நாட்டு வெளிநாட்டு இடப்பெயர்வுகள், இயற்கை அழிவுகள், படுகொலைகள், வன்செயல்கள் என்று பல்வேறுபட்ட காரணங்களால் மிக அதிகளவில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இதுவுமொன்று.

தம்பலகாமம் என்ற ஊரின் பெயர் காலத்துக்குக் காலம் இங்கு மேலாதிக்கம் செலுத்திய ஆட்சியாளர்களாலும், இலக்கிய விற்பனர்களாலும், சாதாரண மக்களாலும் மாற்றப்பட்டதை சுருக்கமாக இங்கு பார்க்கலாம். 

1. தம்பலகாமம்

தம்பலகாமம் என்ற பெயர் இன்றைக்குச் சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன்பாகவே வழக்கில் இருந்துவரும் ஊர்ப்பெயர். இதனைத் தம்பலகாமம் கல்வெட்டு ஆதாரப்படுத்துகிறது. 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியினைச் சேர்ந்த இக்கல்வெட்டில் தம்பலகாம ஊர் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2. தம்பலகாமப் பற்று 

இலங்கையில் ஐரோப்பியரின் ஆதிக்கம் ஏற்படுவதற்கு முன்னால் இப்பிரதேசத்தில் சுதந்திரச் தமிழ்ச் சிற்றரசாக இயங்கிய வன்னிபங்கள் இப்பிரதேசத்தின் பெயரினை தம்பலகாமப் பற்று எனப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். பின்னர் ஐரோப்பியர் ஆதிக்கத்தின் கீழ் வன்னிபங்களின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டு அவர்கள் நிர்வாகிகளாகச் செயற்பட்ட காலத்திலும் அப்பெயரையே பாவித்திருக்கின்றார்கள். இலங்கை சுதந்திரமடைந்த காலம் வரை வன்னிபங்களின் முக்கிய ஆவணங்களில் அப்பெயர் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. தம்பலகாமப் பற்று என்பது இன்றைய தம்பலகாமப் பிரதேசத்துடன் கிண்ணியா, ஆலங்கேணி, கந்தளாய் போன்ற இடங்களை உள்ளடக்கிய பரந்த பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

3. தமனதோட்ட  Tamanatota

1658 ஆம் ஆண்டு காலப்பகுதியில் போர்த்துக்கீசர் இலங்கை மீதான ஆதிக்கத்தினை இழந்த வேளையில் கண்டி இராட்சியம் திருகோணமலை மீது தனது மேலாதிக்கத்தினைச் செலுத்தியது. அக்காலப்பகுதியில் கண்டி இராட்சியத்தில் பல மாகாணங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று தம்பன் கடவை. தம்பன் கடவையின் துறைமுக நகரமாக தம்பலகாமம் சில காலம் செயற்பட வேண்டி இருந்தது. கடல்வழி வணிகத்திற்கும், போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்பட்ட திருகோணமலையின் பகுதிகளில் ஒன்றாக தம்பலகாமக் குடாக்கடல் முக்கியத்துவம் பெற்றிருந்தமை இதற்கான காரணமாகும். கண்டி அரசின் மேலாதிக்கம் காரணமாக இப்பகுதி அவர்களால் தமனதோட்ட  Tamanatota என்று அழைக்கப்பட்டிருக்கிறது. 

4. தம்பை நகர் , தம்பலகமம் , தம்பலகாம தேசம் 

ஊரின் பெயர் ஆட்சியாளர்களால் மட்டுமல்ல அங்கு வாழ்ந்த அறிஞர்கள், இலக்கியவாதிகள், சமூக அமைப்புகள் என்பனவற்றாலும் மாற்றம் பெறுவதுண்டு. அந்தவகையில் 17 ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற இலக்கியங்கள் இவ்வூரின் பெயரினை பின்வருமாறு பதிவு செய்கிறது. திரிகோணாசலப் புராணம்  தம்பை நகர் என்றும் வெருகல் ஸ்ரீ சித்திர வேலாயுதர் காதல் அதனை தம்பலகமம் என்றும் பதிவு செய்திருக்கிறது. 

சமகாலத்தில் வன்னிபங்கள் திருகோணமலையினை ஆட்சி செய்த போது திருகோணமலையில் தம்பலகாமப் பற்று, கட்டுக்குளப் பற்று, கொட்டியாரப்பற்று, திருகோணமலைப் பற்று என்ற நான்கு வன்னிப் பிரதேசங்கள் இருந்தன. இவை சுயாட்சி கொண்ட குறுநில மன்னர்களான வன்னிபங்களால் ஆளப்பட்டன. அக்கால வழக்கில் இந்த நான்கு பற்றுக்களும் நான்கு தேசங்களாகக் கருதப்பட்டிருக்கிறது என்பதனை ஆவணங்கள் மூலமாக அறியக்கூடியதாக இருக்கிறது. இந்த வழக்கிற்கு அமைய தம்பலகாமம் தம்பலகாமதேசம் என அழைக்கப்பட்டிருக்கிறது.

5. Tamblegam

இதனைத் தொடர்ந்து வந்த ஒல்லாந்தர், பிரித்தானியர் மேலாதிக்கத்தின் போது இப்பிரதேசம் உச்சரிப்பு (ஒலி) பிரச்சனையால் Tamblegam , Tampalagam போன்ற  பெயர்களால் ஐரோப்பியரால் அழைக்கப்பட்டிருக்கிறது.

 6. தாயூர்  தம்பலகாமம்

1917 ஆம் ஆண்டுக்குரிய இறப்புத் தொடர்பான கள்ளிமேட்டுக் கல்வெட்டு தம்.கள்ளிமேடு என இறப்பு இடம்பெற்ற இடத்தினைக் குறிக்கின்றது. 

தம்பலகாமத்தைச் சேர்ந்த கள்ளிமேடு என்பதனையே இது சுருக்கமாகச் சொல்கின்றது. இதன் மூலம் தம்பலகாமத்தில் இருந்த சிற்றூர்களை அடையாளப்படுத்தும் போது தம் என்று அவற்றின் தாயூரான தம்பலகாமத்தை குறிக்கும் வழமை அக்காலத்தில் இருந்ததை இது உறுதிப்படுத்துகிறது. 

இக்கல்வெட்டு பொறிக்கப்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட வீடு, வயல், காணி உறுதிகளிலும், நீதிமன்ற வழக்குகள் தொடர்பான தமிழ் ஆவணங்களிலும் திரு.தம்.கந்தளாய், திரு.தம்.கிண்ணியா, திரு.தம்.ஆலங்கேணி போன்ற சொற்றொடர்களைக் காணலாம். அத்துடன் இன்று வழக்கொழிந்து போய்விட்ட புறோநோட்டு| என்று அழைக்கப்பட்ட கடன் பத்திரங்களிலும் இவ்வகையிலேயே தம்பலகாமப்பற்றின் கீழிருந்த சிற்றூர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தம்பலகாமம், கிண்ணியா, ஆலங்கேணி, கந்தளாய் உள்ளடங்கலான தம்பலகாமப் பற்று பிரதேசத்தில் இவ்வழமை தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டு வந்தமையினை ஆவணங்களின் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.

7. தம்பலகமுவ (Thambalagamuwa)

2018 ஆம் ஆண்டுக் குடித்தொகை கணக்கெடுப்புகளின்படி  20,614 முஸ்லீம்களும், 7,554 சிங்களவர்களும், 6,563 தமிழர்களுமாக 34,736 பேர் வாழ்கின்ற இப்பிரதேசம் இன்று தம்பலகமுவ (Thambalagamuwa) என்று அழைக்கப்படுகிறது. இப்பெயர் மாற்றம் சில தசாப்தங்களுக்கு முன்னால் செய்யப்பட்டு இன்றுவரை அரச நிர்வாக ஆவணங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பிரதேசத்தில் அடங்கியிருக்கும் பன்னிரெண்டு கிராம சேவையாளர் பிரிவுகளில் ஒரு கிராமத்தில் புராதனமான தம்பலகாமம் என்ற பெயர் இன்றும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. 

குடித்தொகைக் கணக்கெடுப்பின்படி சுமார் 75 வீதமான தமிழ்பேசும் (தமிழர்கள், முஸ்லீம்கள்) மக்கள் இப்பிரதேசத்தினை தம்பலகமம், தம்பலகாமம் என அழைக்கின்ற சமகாலத்திலேயே அரச நிர்வாக ஆவணங்களில் தம்பலகமுவ (Thambalagamuwa)  என்று இப்பிரதேசம் அடையாளப்படுத்தப்படுவது கவனிக்கத்தக்கது.



தம்பலகாமம் என்னும் ஊர்ப் பெயர் தொடர்பில் ஆய்வு செய்கின்ற இன்நூல் 

16 . 10 . 2022 

ஞாயிற்றுக்கிழமை 

காலை 10:30 மணிக்கு 

திருகோணமலை நகரசபை மண்டபத்தில் வெளியிடப்பட இருக்கிறது. நட்புள்ளங்கள் அனைவரையும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு  அன்புடன் அழைக்கின்றேன்.

நட்புடன் ஜீவன்




இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment