திருகோணமலையில் பெரியகுளம் பகுதியில் இருக்கும் வெல்கம் விகாரை என அழைக்கப்படுகின்ற இராஜராஜப் பெரும் பள்ளியில் 11, 12, 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 16 தமிழ் அறக்கொடைச் சாசனங்கள் 1929, 1953 ஆண்டுகளில் இடம்பெற்ற தொல்பொருள் ஆய்வுகளின்போது கிடைக்கப்பெற்றன. திருகோணமலை சோழர் ஆட்சியின் கீழ் வந்த பின்னர் அது பல நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. அதில் ஒரு பெரும் பிரிவு இராஜேந்திரசிங்க வளநாடு. இந்த வளநாட்டில் அடங்கி இருந்த ஊர்களில் ஒன்றே வெல்காமம். வெல்காமம் என்னும் ஊரில் இவ்விகாரை அமைந்திருந்ததால் வெல்காமப்பள்ளி என்றும் அழைக்கப்பட்டது.
இங்கு கண்டுபிடிக்கப்பட்ட 16 தமிழ் சாசனங்களில் பெரும்பாலானவை சோழர் காலத்து(14) தானசாசனங்கள். இச்சாசனங்கள் பெரும்பள்ளிக்கு வழங்கப்பட்ட தானங்கள் பற்றிச் சொல்கிறது. தானகாரர்களின் பெயர், அவரது ஊர்ப் பெயர் , பதவி அல்லது விருதுப் பெயர், அவர் வழங்கிய நன்கொடை என்பன அச்சாசனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
விளக்கு, பசுக்கள், எருமைகள், காசு என்பன இராஜராஜ பெரும்பள்ளிக்குத் தானமாக வழங்கப்பட்டது என்பதை இங்குள்ள தமிழ் கல்வெட்டுகள் ஆதாரப்படுத்துகிறது. ஆதித்தப்பேரரையன் ஒரு நந்தா விளக்கும் 84 பசுங்களும் வழங்கினான். இராஜேந்திர சோழரின் 12ஆம் ஆட்சி ஆண்டிலே புவனதேவன் நந்தா விளக்கொன்றும் 4 காசும் கொடுத்தான். தானம் சங்கத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. விளக்கெரிப்பதற்கு வேண்டிய எண்ணையைக் கொடுக்கும் பொறுப்பினை சங்கத்தார் ஒப்புக்கொண்டனர். காயாங்குடையானானஅமுதன் சாத்தன் இராஜேந்திர சோழ தேவரின் 25 ஆம் ஆட்சியாண்டில் நந்தா விளக்கொன்றையும் ,10 பசுக்களையும் ,10 எருமைகளையும் தானமாகக் கொடுத்தான். ஏறாநாடன் கண்டன் யக்கன் நந்தா விளக்கு ஒன்றினை நன்கொடையாக வழங்கினான். இராஜேந்திர சோழதேவரின் பதினைந்தாம் ஆட்சியாண்டில் 35 பசுக்களும் , 5 எருமைகளும் பெரும்பள்ளிக்கு தானமாக வழங்கப்பட்டன. இவ்வாறு இந்த தமிழ் பௌத்தப் பள்ளிக்கு வழங்கப்பட்ட தானங்களை விபரமாக இக் கல்வெட்டுக்களில் சில பதிவு செய்திருக்கிறது.
இங்குள்ள பெரும்பாலான சாசனங்களில்; ஏற்பட்ட சிதைவினால் தானம் செய்யப்பட்ட விபரங்களை பூரணமாக அறிந்து கொள்வது சிரமமாக உள்ள போதிலும் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களால் இலங்கை தமிழ் சாசனங்கள் என்ற நூலில் திருத்தியமைக்கப்பட்ட சில இராஜ இராஜ பெரும்பள்ளி கல்வெட்டுகள் கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வெட்டு 1
11. ஸ்வஸ்தி ஸ்ரீ திருமன்னி வளர (இ)
12. (ரு) நில மடந்தையும் போற் (ச)
13. (ய) பாவையும் சீர்தனிச் (செ)
14. ல்வியும் தன் பெருந் தேவிய
15. (ராகி) இன்புற நெடுதியலூ
16. (ழி)யுள் இடைதுறை – நாடுந்
17. தொடர் வனவேலி படர் வன
18. வாசியு (ஞ்) சுள்ளி சூழ் மதிற் கொ
19. (ள்ளிப்) பாக்கையும் நண்ணற்
20. (கரு ம)ரண் மண்ணைக் கடக்க
21. மும் பொருகடல் ஈழத்தரைசர்
22. தம் முடியும் ஆங்கவர் தேவி
23. யர் ஒங்கெழில் முடியும் முன் -
24. னவர் பக்கல் தென்னவர் வை
25. த்த சுந்தர முடியும் இந்திர
26. (ந)ரமும் தெண்டிறல் ஈழ மண்ட
27. ல முழுவதும் எறிபடை
28. க்கேரளன் முறைமையிற் சூடும்
29. குலதனமாகிய பல்புகழ் முடி-
30. யும் செங்கதிர் மாலையும் சங்
31. திர் வேலைத் தொல்பெருங் கா
32. (வற்) பல்பழந் தீவும் செருவிற் சி-
33. னவில் இருபத்தொருகால் அ-
34. ரைசுகளை கட்டப் பரசுராமன்
35. (மே) வருஞ் சாந்திமத்தீவரண் க(ருதி)
36. (இருத்)திய செம்பொற் றிருத்த
37. கு முடியும் பயங்கொ(டு) பழி
38. (மிக) (மு) யங்கி(யில்) முடுகித்
கல்வெட்டு 2
4. (மிக) மு(ய)ங்கியில் மு(துகிட்டொழி) –
5. (த்)த ஜயசிங்கன் அள(ப்) (பரும் புகளொ)
6. டு பீடியில்லிரட்டபா(டி) (யேழரை இல) –
7. க்கமும் நவநெதிக் குல(ப்) (பெருமலைகளு)
8. ம் விக்கிரம வீரர் சக்கர(க்) கோட்டமும் முதிர்) –
9. (ப)ட வல்லை மதுரமண்டலமும் (காமிடை) –
10. வள நாம(ணை) ய் கோணை(யும்) வெ (ஞ்)
11. (சினவீரர்) பஞ்சபள்ளியும் (ப) (hசடை)
12. (ப்) பழன(ம்) மாசுணித்தேசமும் (அயர்)-
13. வில் வண் (கீர்)த்தி ஆதிநகரவை(யி) (ல் சந்)
14. திரன் (தொ) ல் (குல) லத்திந்திராதனை வி (ளை அ)
15. (ம)ர்களத்துக் - கி(ளை) யொடும் (பிடித்து)-
16. ப் பலதனத் (தெடு நிறை ………
கல்வெட்டு 3
1. ………………….
2. யும் வன் மலை (யூரெ) (யி)
3. ற்றொந் மலையூரும் ஆழ்(க)
4. டல் அகல் சூழ் மாயிருடிங்
5. கமும் கலங்கா வல்(வினை) இ -
6. லங்கா சோகமும் கோப்புறு நி
7. றை புனை மாப்பப்பாலமும்
8. காவலம் புரிசை மேவிளிம்
9. பங்கமும் விளைப்பந்தூருடை
10. வலைப்பந்தூரும் கலைத்
11. தக்கோர் புகழ் தலைத் தக் -
12. கோலமும் (தி) த்தமர் வல் (வி) –
13. (னை)ள மாத்தமாலிங்கமும் கலா
14. (மு) திர் கடுந்திறல் இலாமுரி –
15. (..)தசமும் தேநக்கவார் (பொ) –
16. (ழி)ல் மாநக்கவாரமு (ந்) தொடு (க)
17. (ட)ற் காவற் கடுமுரட் கிடார(மு) ……..
கல்வெட்டு 4
1. ஸ்ரீ பலவன் புதுக்கு
2. டி யான் ஆதித்தப்
3. பேரரையன் ஸ்தவ்;யா
4. றாமய னா மானாவதிளானா
5. ட்டு வெல்க வேரான இ
6. ராஜராஜ பெரும்பள்ளிக்கு
7. வைத்த னொந்தா வி
8. ளக்கு 1 பசு 8
9. 4
கல்வெட்டு 5
1. கோ பரகேசரி
2. பத்மரான ஸ்ரீ ராஜேந்த்ர
3. சோழ தேவர்க்கு யா
4. ண்டு 12 டாவதில் கோ
5. லத்து தரிய நன் புவன
6. (தே)வன் வெல்கவேரத்
7. து தேவ (ர்)க்கு வை
8. ச்ச னந்தா விளக்கு
9. 1 காசு 4 இப்பள்ளிச்
10. சங்கத்தார் விள
11. க் கெண்ணையு (ம்)
12. (வை) ப்பதாகவு
13. ம்
கல்வெட்டு 6
1. (ஸ்வஸ்தி உடையார்)
2. ஸ்ரீ ராஜேந்த்ர (சோழ) தே
3. வற்கு யாண்டு 5 சாவது
4. மும்முடி சோழ மண்டல
5. த்து மேலா (ந) ங்ங னாட்டு
6. வீரபரகேசரி வளநாட்டு
7. பனாவாசத்துளாகாமத்து
8. பாத்தரவிதாரமந் வெல்கம்
9. வேரமான ராஜராஜ பெரும்
10. பள்ளி புத்தர்க்குப் புண்ணி
11. யத்துக்கு வைத்த பசு
12. 35 எருமை 5
கல்வெட்டு 7
1. (பூர்வதேசமும் கங்கையும்
2. கடாரமுங் கொண்ட) கோப்பரகேசரிபந்
3. மரான உடையார் இராஜேந்த்ர
4. சோழ தேவற்கு யாண்டு
5. 25 ஆவது இராஜேந்த் ரசி
6. ங்க வளநாட்டு அப யாஸ்ரய வ
7. ளநாட்டு வெல்காமப் பள்ளி n
8. வல்கம் வேரமாந ராஜராஜ
9. ப் பெரும்பள்ளி புத்தர்க்கு
10. பணிமகன் காயாங்குடைய
11. hந் அமுதன் சாத்தந் சந்த்ராதி
12. த்தவல் நின்றெரிய வை
13. த்த திரு நொந்தா விளக் n
14. காந்றி(னு) க்கு நிசதம் மூந்று
15. உழக்குக்கு நிவந்த ம(hக)
16. வைத்த எருமை பத்து
கல்வெட்டு 8
ஞ்சாம் பக்கத்துப் பூசம் பெற்ற வியாழக்கிழமை நான்று இட்ட இருபது சாணே நால் விரல் நீளத்து தாராநிலை விளக்கு ஒன்று இது திருநொந்தா விளக்காய்ச் சந்திராதித்தவல் நின்றெரிய நிசதிப்படி
கல்வெட்டு 9
ஏறாநாடன் கண்டன் யக்கன்
இட்ட திரு நூந்தா விளக்கு
மேலே உள்ள கல்வெட்டுக்களில் காணப்படும் தானகாரர்களில் சிலர் சோழர்களின் நிர்வாக அதிகாரிகள். அவ்வாறு தானம் வழங்கியவர்களில்
1. ஆதித்தப்பேரரையன்
2. புவனதேவன்
3. அமுதன் சாத்தன்
4. கண்டன் யக்கன்
5. பாத்தரவித ராமன்
போன்றவை தானசாசனங்களில் தெளிவாகத் தெரியும் பெயர்களாகும். இவற்றுடன் இராஜேந்திர சோழனுடைய மெய்க்கீர்த்திகள் பலவும் இச்சாசனங்களில் இடம்பெற்றுள்ளன. இச்சாசனங்களில் ஒன்று புதுக்குடி என்ற ஊரைச் சேர்ந்த ஆதித்தப்பேரரையன் இராஜராஜப் பெரும்பள்ளிக்கு ஒரு விளக்கினையும் , 8 பசுக்களையும் மற்றும் பல பொருட்களையும் (சாசன எழுத்துக்கள் தெளிவில்லையாதலால் குறிப்பிட முடியவில்லை) தானமாகக் கொடுத்த செய்தியைப் பதிவுசெய்கிறது. இங்கு குறிப்பிடப்படும் ஆதித்தன் என்பது அவனது இயற்பெயர். பேரரையன் என்பது சோழரின் நிர்வாகத்தில் சேவைபுரிந்த பிரதானிகளில் ஒரு வகையினருக்கு வழங்கப்பட்ட பதவிப்பெயர். அவனது ஊர் புதுக்குடி.
புதுக்குடி என்னும் பல ஊர்ப்பெயர்கள் இலங்கையில் உள்ளதால் ஆதித்த பேரரையன் சோழரின் நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிந்த இலங்கைத் தமிழனா என்ற சந்தேகத்தைத் தருகிறது. எனவே திருகோணமலையில் தமிழர்களின் வரலாறு தொடர்பான தேடல்களில் வெல்காமப்பள்ளி என்கின்ற வெல்கம் விகாரை தொடர்பான ஆதாரங்களும் முக்கியத்துவம் பெற்றவையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
பெரியகுளத்து இராஜராஜ பெரும்பள்ளி ஒரு பௌத்த கோவிலாக அமைக்கப்பட்டிருக்கிறது என்பதும் , அது சோழர் ஆட்சிக்காலத்தில் புனர்நிர்மாணம் பெற்றது என்பதையும் அதன் கட்டுமானம் திராவிட கலைப்பாணியில் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இராஜராஜப் பெரும்பள்ளியில் கிடைக்கப்பெற்ற சாசனங்கள் அனைத்தும் தமிழ்ச் சாசனங்கள் என்பதோடு தமிழர்களே இவ்விகாரைக்கு தானங்களை வழங்கியுள்ளார்கள் என்பதையும் அறியக்கூடியதாக இருக்கிறது. இவர்களில் சிலர் சோழர் நிர்வாகத்தில் பதவி பெற்றிருந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
இந்தத் தமிழ் விகாரையின் அடித்தளப் படைகளின் வேலைப்பாடுகள் அனுராதபுரம், பொலன்னறுவை ஆகியவற்றில் உள்ளவற்றைக் காட்டிலும் வேறுபட்டதாகும். அவை பொலன்னறுவையிற் சோழர்கள் அமைத்த இந்துக் கோயில்களில் உள்ளவற்றைப் போன்றனவாகும்.
தென்னிந்தியாவிலே பல பௌத்தப் பள்ளிகள் இருந்தபோதும் இதுவரை தமிழ்நாட்டில் அவற்றைச் சேர்ந்த தொல்பொருட்கள் கிடைக்காத படியால் பெரியகுளத்திலே கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் முக்கியத்துவம் இலங்கைக்கு வெளியில் உள்ளவர்களின் கவனத்திற்கும் உரியதாகும்.
@@@@@@
வெல்கம் விகாரை கல்வெட்டுகள் தொடர்பான முழுமையான கட்டுரையை 'கொட்டியாரப் பற்று வன்னிபங்கள்’ நூலில் வாசிக்கலாம்.
நட்புடன் ஜீவன்.
No comments:
Post a Comment