Friday, August 12, 2022

கொட்டியாரப் பற்று வன்னிபங்கள் - நூல் வெளியீடு 14. 08. 2022 காலை 10 மணி

திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு காலப்பகுதிகளுக்குரிய 22 கல்வெட்டுகளின் வாசகங்களை உள்ளடக்கி இருக்கும் இந்நூல் ‘கொட்டியாரப் பற்று வன்னிபங்கள்’ என்ற தலைப்புடன் எனது முதலாவது நூலாக வெளிவருவது மகிழ்ச்சி தருகிறது.

மிகநீண்ட பாரம்பரிய வரலாற்றைக் கொண்ட திருகோணமலையினை  சிற்றரசர்களாக  ஆட்சி செய்த வன்னிபங்கள் , திருகோணமலையில் நிலவிய சோழராட்சி தொடர்பான  தகவல்கள்  மற்றும் தேவரடியார்கள் , அண்ணாவிமார்கள், திருக்கோணேச்சரம் போன்ற வரலாற்று அம்சங்கள்  இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அத்துடன்  அண்மையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட  கல்வெட்டுகளான  கழனிமலைக் கல்வெட்டு, மூதூர் பட்டித்திடல் கல்வெட்டு என்பன பற்றியும்  கந்தளாயில் கிடைத்த  அபூர்வ துளைகொண்ட பானை  பற்றியும் விபரிக்கின்ற கட்டுரைகளை  இந்நூல் உள்ளடக்கியிருக்கிறது. திருஞானசம்பந்தரின்  திருக்கோணேச்சர தேவாரப்பதிகம் தொடர்பான ஆய்வுடன் இந்நூல்  நிறைவுபெறுகிறது. 


2008 ஆம் ஆண்டு முதல் ஜீவநதி வலைப்பதிவில் பதிவேற்றப்பட்டு பின்னர் அச்சூடகங்களில் வெளியான திருகோணமலையின் வரலாறு சார்ந்த கட்டுரைகளில் சில தேர்ந்தெடுக்கப்பட்டு இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. இவை திருகோணமலை மண்ணின் வரலாற்றை அறிய ஆவல்கொண்டுள்ள இன்றைய இளைய தலைமுறையினருக்கு அறிமுகத் தகவல்களாக அமையும் விதத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. இந்நூலிலுள்ள கட்டுரைகளின் விடயதானங்கள் ஒவ்வொன்றும் வருங்காலங்களில் பல்வேறு தரப்பினரால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்போது திருகோணமலைக்கான விரிவான வரலாற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது எனது நம்பிக்கை.

தனது எழுத்துக்கள் மூலமாக வரலாற்றுத் தேடலில் ஆர்வத்தை உருவாக்கிச் சென்ற எனது அப்பப்பா அமரர் க.வேலாயுதம், என்னுடைய படைப்புகள் அனைத்திற்கும் ஆலோசகராகவும் உறுதுணையாகவும் இருக்கும் தந்தை கலாபூசணம் வே.தங்கராசா, இத்தனை ஆண்டுகாலமாக வலைப்பதிவில் பதிவேற்றப்படும் பதிவுகளுக்கு இணையத்திலும், நேரிலும் தொடர்ச்சியான ஆதரவினை வழங்கிவரும் வாசகர்கள் அனைவருக்கும் என்றென்றும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

தங்களது பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் இந்நூலினை பிழைதிருத்தி உதவிய நண்பரும் ஆசிரியருமான கவிஞர் தி. பவித்ரன் மற்றும் வரலாற்று ஆர்வலரும் ஆசிரியருமான திரு சி.பிரகாஷ் ஆகியோருக்கு எனது மனம் நிறைந்த நன்றியும், அன்பும். 

இன் நூல் வெளியீடு 14. 08. 2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு திருகோணமலை நகரசபை நூலக மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் நூல் அறிமுக உரையினை வழங்க இருக்கும் நண்பன் கவிஞர் தில்லைநாதன் பவித்ரனுக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்நூலினை அச்சுருவாக்கி வெளியிடும் கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மற்றும் உற்சாகப்படுத்தி  ஊக்குவித்த சிரேஸ்ட கலாச்சார உத்தியோகத்தர் திரு. குணபாலா, கலாச்சார உத்தியோகத்தர் திரு.கோணேஸ்வரன் ஆகியோருக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்.

நட்புடன் ஜீவன்.






இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete