வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்த நிகழ்வு 01.May.1639
1639 ஆம் ஆண்டு திருகோணமலை கோட்டை கைப்பற்றப்பட்டது தொடர்பில் இதற்கு முன்னர் திருகோணமலை கோட்டை கல்வெட்டு என்ற பதிவில் விரிவாகப் பார்த்திருந்தோம்.
அந்தப் பதிவில் சொல்லப்படாத ஒரு முக்கிய விடயம் இது. போர்த்துக்கேயரின் ஆட்சியின் கீழிருந்த திருகோணமலை கோட்டையை கைப்பற்றுவதற்காக ஒல்லாந்துக் கடற்படையும் அவர்களுக்கு உதவியாக கொட்டியாரம், மட்டக்களப்பு, சம்மாந்துறை ஆகிய பகுதிகளிலிருந்து தமிழ் வன்னிச் சிற்றரசர்களும் தயார் நிலையில் இருந்தன.
1639 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி 25 சிறப்பு படை வீரர்களைக் கொண்ட மூன்று பிரிவுகள் திருகோணமலை கோட்டையின் முன்னரங்க காவலரண்களை நோக்கி படை நடவடிக்கையை மேற்கொண்டது.
சுமார் 3 மணி நேரத்தின் பின்னர் போர்த்துக்கேயரின் முன்னரங்கு காப்பரண்கள் தகர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒல்லாந்துப் படை சார்பில் ஒரு உதவிப்படைத்தலைவனும் முரசறையும் ஒருவனும் கோட்டைக்குள்ளே அனுப்பப்பட்டு போர்த்துக்கேயரை சரணடையுமாறு கேட்கப்பட்டது.
சரணடைவது தாமதித்தால் அவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டது. ஆனால் போத்துக்கேயர் வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இச்சம்பவம் ஒல்லாந்து கட்டளைத்தளபதியின் கோபத்தை கிளறச் செய்தது.
உடனடியாக ஈவிரக்கமற்ற முறையில் குண்டுகளை வீசி கோட்டையை கைப்பற்றும் நடவடிக்கை கட்டளைத் தளபதி கேன் அவர்களால் முன்வைக்கப்பட்டது. இதனை நடைமுறைப் படுத்துவதற்காக பின்வரும் படையணி ஒழுங்கு செய்யப்பட்டது.
20 சுடுகலன் வீரர்கள்
10 ஆயுதம் தாங்கிய மாலுமிகள்
14 ஆயுதம் தாங்கிய கடற்படை மருத்துவப் பிரிவினர்
70 மேஜரின் கீழ் உள்ள படையணி
100 துப்பாக்கி தரித்த கடற்படையினர்
140 ரிசர்வ் படையினர்
120 துப்பாக்கி வீரர்கள்
என்று மொத்தம் 514 பேர் இத்தாக்குதலில் பங்குபற்றினர்.
இத்தாக்குதலில் போத்துக்கேயரில் 14 பேர் கொல்லப்பட்டதுடன் 9 பேர் காயமடைந்தனர். ஒல்லாந்தர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்தனர்.
தாக்குதலின் முடிவில் இரண்டு போத்துக்கேய தளபதிகள் பிரசன்னமாகி படிப்பறிவற்ற தமது வீரர்களால் சமாதான கொடி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தாங்கள் மன்னிப்பு கேட்பதாக கூறியதுடன் கோட்டைச்சாவிகளையும் ஒல்லாந்தரிடம் கையளித்தனர்.
குறிப்பு - மேற்குறித்த சம்பவத்தின் விரிவான விவரங்களை லெப்டினன் கேர்ணல் ஜீ.பி தோமஸ் R.A எழுதிய திருகோணமலை வரலாறு (தமிழில் கி. முரளிதரன்) என்ற நூலில் 1639 ஒல்லாந்தரால் திருகோணமலை கைப்பற்றப்படல் என்ற பகுதியில் விரிவாக வாசித்தறியலாம்.
...................................................................................................................................................
ஒன்பது ஆண்டுகளின் பின்னர் சுதந்திரம் பெற்ற திருகோணமலை கடற்படைத் தளம்
1505 இல் இருந்து 1948 வரை ஐரோப்பியர் ஆட்சியில் இருந்த இலங்கை மாசி மாதம் நாலாம் திகதி சுதந்திரம் அடைந்தது.
பிரித்தானிய ஆட்சியாளர்கள் உடன் இலங்கைப் பிரதமர் டி . எஸ் சேனநாயக்கா செய்து கொண்ட பாதுகாப்பு உடன்படிக்கையின் பிரகாரம் திருகோணமலைக் கடற்படைத் தளம் தொடர்ந்தும் பிரித்தானிய அரசின் நிர்வாகத்தின் கீழ் இருந்து வந்தது.
06.06.1957 இல் S.W.R.D பண்டாரநாயக்க திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் இருந்து பிரித்தானிய கடற்படையை வெளியேற்றும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்.
இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 15.10.1957 இல் பிரித்தானிய அரசினால் இலங்கை கடற்படையிடம் திருகோணமலை கடற்படை தளம் ஒப்படைக்கப்பட்டது.
162 ஆண்டுகளாக பிரித்தானிய அரசின் கிழக்கு கடற்படைப் பிரிவின் கட்டளைத் தளமாக இருந்த திருகோணமலை கடற்படைத் தளத்தில் பிரித்தானியக் கொடி இறக்கப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டது.
கடற்படை தளத்தை இலங்கையிடம் கையளிப்பதற்கு பிரித்தானிய கடற்படையின் 900 கப்பற்படை வீரர்களை கொண்ட Cruiser HMS Ceylon என்ற கப்பல் திருகோணமலை துறைமுகத்துக்கு வருகை தந்தது. இலங்கை கடற்படை போர்க் கப்பலான விஜய இந் நிகழ்வில் கலந்து கொண்டது.
இவ்வாறாக இலங்கை பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரம் பெற்று ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் திருகோணமலை கடற்படைத் தளம் பிரித்தானிய ஆளுகையில் இருந்து விடுதலை பெற்றது.
குறிப்பு - இந்நிகழ்வு தொடர்பான விரிவான விளக்கங்களை கலாநிதி கனகசபாபதி சரவணபவன் அவர்களின் காலனித்துவ திருகோணமலை என்ற நூலின் 268 வது பக்கத்தில் வாசித்தறியலாம்.
........................................................................................................................................
திருகோணமலையில் திருப்பள்ளியெழுச்சி தொடர்பான கல்வெட்டு
எனக்கும் திருப்பள்ளியெழுச்சிக்குமான தொடர்பு பாடசாலை செல்வதற்கு முன்னரான காலப்பகுதியில் உருவானது.
1980களில் தம்பலகாமத்தின் மார்கழிப் பனிக்குளிரில் நடுங்கியபடி அதிகாலையில் எழுந்து நித்திரைக் கலக்கத்துடன் திருவெம்பாவை குழுவினருக்காகக் காத்திருப்பது வழமையாக இருந்தது. ஊரில் இடம்பெறும் திருவெம்பாவை நடை பவனியின்போது திருப்பள்ளியெழுச்சியும் பாடப்படுவது வளமை.
தம்பலகாமத்தில் திருவெம்பாவை நிகழ்வினை 1972ஆம் ஆண்டு முதல் தம்பலகாமம் இந்து வாலிபர் சங்கம் ஒழுங்கு செய்து வந்தது. தம்பலகாமம் பட்டிமேட்டுப் பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பிக்கும் இந்நிகழ்வு பல்வேறு திடல்களுக்கு(சிற்றூர்) ஊடாக நடைபவனியாகச் சென்று தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்தில் நிறைவடையும்.
திருவெம்பாவை நிகழ்வில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் திருவெம்பாவைப் பாடல்களையும் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களையும் பக்திபூர்வமாக பாடிக்கொண்டு வருவர். இதன் போது சங்கு,தாளம்,சேமக்கலம் போன்ற இசைக்கருவிகள் பாடலுக்கு மெருகூட்டும்.
தம்பலகாமத்தில் இருந்த பல்வேறு இந்து வாலிபர் சங்கங்களை இணைத்து 1974 முதல் இந்து இளைஞர் மன்றம் என்ற அமைப்பினூடாக திருவெம்பாவை நிகழ்வு இன்றுவரை நிகழ்த்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனது சிறுவயது ஞாபகங்களில் திருவெம்பாவை காலங்களில் பொழுது புலராத அதிகாலை வேளையில் அப்பா அவசர அவசரமாக எழுந்து கொள்வார். மின்னிணைப்பு இல்லாத காலம் என்பதால் அவரது முதலாவது வேலை பெற்றோல் மெக்ஸ் விளக்கினை ஒளிரச் செய்வதாக இருக்கும்.
முற்றத்தினைக் கூட்டி பெரிய படங்கொன்றை விரித்து அப்பா வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது அம்மா தேனீர் தயார் செய்வார். கடலை தாளிப்பதற்கு அயலவர்கள் உதவி செய்வார்கள்.
VCக் கிணற்றடியில் சங்கின் சத்தமும் சேமக்கலத்தின் ஒலியும் கேட்கும்பொழுதே வீடு பரபரப்பாகி விடும். திருவெம்பாவை பாடிவரும் பக்தர்கள் அனைவரும் பெட்றோல் மெக்ஸ் விளக்கொளியில் படங்கில் அமரவைக்கப்பட்டு அவர்களுக்கு தேனீரும் சிற்றூண்டியும் வழங்கப்படும். பின்னர் எமது திடலில் உள்ள பக்தர்களும் இணைந்துகொள்ள திருவெம்பாவை நடைபஜனை தொடர்ந்து இடம்பெறும்.
அவர்கள் பாடிச் செல்லும் பாடல்கள் தொடர்பில் அப்போது என் வயதுச் சிறுவர்களுக்கு எதுவும் தெரியாது என்றாலும் அதற்கு எம்பாவாய் பாடல் என்று பெயர் வைத்திருந்தோம்.
தம்பலகாமத்தில் இருந்து தனியாக திருகோணமலைக்கு வந்து சமாது வீதியில் வாழ்ந்த 90 களின் ஆரம்பப்பகுதியிலும் குடும்பத்துடன் பெரியகடையில் குடியேறிய 90களின் இறுதிப் பகுதியிலும் திருகோணமலையில் திருவெம்பாவை நகர சங்கீதத்தினைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தது.
மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது மனம் உருகிப்பாடிய திருவெம்பாவை பாடல்களோடு திருப்பள்ளியெழுச்சி பாடல்களும் பாடப்படும் திருவெம்பாவை நகர சங்கீர்த்தனம் திருகோணமலையின் பல பகுதியிலும் இன்றும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
கோணேசர் ஊர்வலம், கும்பத் திருவிழா, கார்த்திகை விளக்கீடு, திருவெம்பாவை நகர சங்கீர்த்தனம் என்பன திருகோணமலையில் சைவசமய தனித்துவ அடையாளங்களாக காணப்படுகிறது.
கூட்டம் கூடுவதற்கு எதிரான கொரோனா காலத்துக்கு முன்னமே மேற்படி நிகழ்வுகளில் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் தொடர்ந்தும் மனம்தளராத பல்வேறு அடியவர்களின் அயராத முயற்சியால் இவை இன்றும் திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
திருகோணமலையில் திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டதற்கான கல்வெட்டு ஆதாரம் கி.பி 1145 ஆண்டில் கந்தளாயில் கிடைக்கிறது.
இன்றைக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கந்தளாயில் இருந்த விஜயராஜேஸ்வரம் என்கின்ற சிவாலயத்தில் திருப்பள்ளி எழுச்சி பாடப்பட்டதையும் அதன்போது மந்திர போனகம் அமுது வழங்குவதற்காக காசுகள் வழங்கப்பட்டதையும் இந்தக் கல்வெட்டு பதிவு செய்திருக்கிறது.
திருகோணமலையில் திருப்பள்ளியெழுச்சி 1000 வருடங்களுக்கு மேலாகப்பாடப்பட்டு வருகிறது என்ற கல்வெட்டு ஆதாரத்தை இன்றும் கந்தளாயில் உள்ள சிவாலயத்தில் நீங்கள் காணலாம்.
குறிப்பு - திருப்பள்ளியெழுச்சி தொடர்பான கல்வெட்டின் மேலதிக விபரங்களை பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களின் இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் என்ற நூலின் 137வது பக்கத்தில் வாசித்தறியலாம்.
.....................................................................................................................................
திருகோணமலை கோட்டை கல்வெட்டு
இன்றைக்கு 380 ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலை கோட்டை 01.05.1639 அன்று ஒல்லாந்தரால் தாக்கப்பட்டது.
கண்டியரசன் இரண்டாம் இராஜசிங்கன் உடன் போர்த்துக்கேயருக்கு எதிராக ஒல்லாந்தர் செய்துகொண்ட உடன்படிக்கையை தொடர்ந்து இந்த தாக்குதல் இடம்பெற்றது.
ஒல்லாந்துப் படை 12 கப்பல்கள் கொண்ட கடற்படையுடன் கோட்டையை முற்றுகையிட்டது.
இவர்களுக்கு உதவியாக கிழக்கிலங்கையில் இருந்த தமிழ் சிற்றரசுகளான வன்னிபங்களின் படைப்பிரிவுகளும் போரில் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பில் இருந்து 500 படையினர்
கொட்டியாரத்திலிருந்து 400 படையினர் மற்றும் பணியாளர்கள்
சம்மாந்துறைப் படையணி
என்பன இத்தாக்குதலில் பங்குபற்றின. இக்காலப்பகுதியில் திருகோணமலை கோட்டையில் போத்துக்கீசர் சார்பில் 40 ஐரோப்பிய வீரர்களும் 100 சுதேச படைச்சிப்பாய்களும் இருந்தார்கள். கோட்டையில் மூன்று பீரங்கித் தளங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
02.05.1639 அன்று திருகோணமலை கோட்டை ஒல்லாந்தரினால் கைப்பற்றப்பட்டது.
இந்த வெற்றியைப் பதிவு செய்யும் முகமாக ஒல்லாந்தருக்கு ஆதரவு வழங்கிய வன்னி பிரிவுகளின் தலைமை அதிகாரியால் திருகோணமலை கோட்டை வாயிலில் கல்வெட்டு உருவாக்கப்பட்டதாக பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் குறிப்பிடுகிறார்.
இந்தக் கல்வெட்டின் சிதைந்த எழுத்துக்களை இன்றும் நீங்கள் திருகோணமலைக் கோட்டை வாயிலின் வலது பக்கத்தில் பாண்டியரால் அமைக்கப்பட்ட இரண்டு மீன் சின்னங்களுக்கு கிழே காணக்கூடியதாக இருக்கும்.
(மு)ன்னே குள
(க்)கோட்டன் மூட்டு
(தி)ருப்பணியை(ப்) பி
ன்னே பறங்கி (பி)
(ரிக்)கவே மன்ன(வ)
( பி)ன் பொண்ணா(த)
(தனா )ன யியற் (ற)
(ழித்)தே வைத்து
(எண்)ணா(ர் வரு)
(வேந்தர்)கள்
தங்களுடைய காலத்தில் மிகச் சிறப்புடன் விளங்கிய திருக்கோணேச்சரம் தரைமட்டமாகி இருப்பதையும் அந்த இடத்தினை முன்பின் அறிமுகமில்லாத வெவ்வேறு வெளிநாட்டினர் மாறி மாறி கைப்பற்றி ஆட்சி செய்வதையும் பார்த்து ஒருவித விரக்தியுடன் உள்ளூர் மக்களின் பிரதிநிதிகளான வன்னிபங்களால் இந்த வாசகங்கள் பொறிக்கப்பட்டு இருப்பதை அவதானிக்க முடிகிறது.
பிற்காலங்களில் புலமை பெற்றவர்களால் மாற்றம் செய்யப்பட்டு வாய்மொழியாக பொதுவழக்கில் வழங்கிவரும் செய்யுளில் உள்ள பூனைக்கண், செங்கண், புகைக்கண் போனபின் மானே வடுகாய் விடும் போன்ற வாக்கியங்கள் இக்கல்வெட்டில் இல்லை என்பது தெளிவானது.
குறிப்பு - திருகோணமலை கோட்டை சாசனம் தொடர்பான மேலதிக தகவல்களை பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களுடைய இலங்கையில் இந்து சமயம் என்ற நூலின் 170 ஆவது பக்கத்தில் பார்க்கக் கூடியதாக இருக்கும்
.......................................................................................................................................................
திருகோணமலையில் சீனர்கள்
இலங்கையில் சீனர்களின் குடியேற்றம் 1938 தொடக்கம் 1945 வரையிலான காலப்பகுதியில் பெரும் அளவில் இடம்பெற்றது. இக்காலப்பகுதியில் இடம்பெற்ற சீன ஜப்பான் போர் மற்றும் சீனப்புரட்சி என்பன பெருந்தொகையான சீனர்களை சீனாவிலிருந்து வெளியேற்றக் காரணமாக அமைந்தன.
சீனர்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்தார்கள். இவ்வாறு குடியேறிய சீனர்கள் இலங்கையின் கொழும்பு பகுதியில் குடியேறிய பின்னரே இலங்கையின் வேறு பகுதிகளுக்கு குடிபெயர்ந்து இருக்கிறார்கள்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் சீனாவின் சங்காய் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவிலிருந்து இவர்களது வெளியேற்றத்திற்கு போர் ஒரு பிரதான காரணமாக கூறப்பட்டாலும் பொருளாதாரத் தேவைகளும் முக்கியமானதாக கருதப்பட்டது.
திருகோணமலையில் சீனர்களின் குடியேற்றம் பிரித்தானிய நிர்வாகிகளால் உருவாக்கப்பட்டது. எண்ணைத் தாங்கிகள் அமைத்தல், விமானத்தளம் அமைத்தல் போன்ற பெரும் பணிகளுக்கு பெருந்தொகையான சீனர்கள் வரவழைக்கப்பட்டார்கள்.
இந்த பணிகள் இடம்பெறும் காலத்தில் அவர்கள் தங்கியிருந்த பகுதிகளை பிரித்தானிய நிர்வாகிகள் சீனக் குடா அழைத்தார்கள். இந்த இடம் தற்போது சீனக்குடா என்றே வழங்கப்பட்டு வருகிறது.
இவை தவிர கொழும்பு கல்கிசை பகுதியில் இருந்து திருகோணமலைக்கு வந்து குடியேறிய சீனர்களில் பலர் திருகோணமலை நகர் பகுதியில் சிறு வணிகத்தில் ஈடுபட்டு வந்தனர்.
குறிப்பாக இந்தியர்களின் பட்டுக்குப் போட்டியாக சீனர்களின் செயற்கை பட்டு(Satin) திருகோணமலையில் இவர்கள் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இவை தவிர வீட்டுப் பாவனைப் பொருட்கள் மலிவான விலையில் திருகோணமலைக்கு இவர்களால் எடுத்து வரப்பட்டது.
சீனர்கள் பல் கட்டும் வேலையிலும் சிறந்து விளங்கினார்கள். இங்குள்ள சீனர்கள் பெரும்பாலும் சென் மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களுடைய விசேட சடங்குகளில் சிவப்பு நிறம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
சீனப் பெண்களுக்கு ஆண்கள் சீதனம் கொடுக்கும் முறை முன்னர் இருந்திருங்கிறது. எண்சட்டம் மூலம் கணக்கிடும் முறையினை இன்றும் பலர் பின்பற்றுகின்றார்கள்.
திருகோணமலையில் சீனர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது. இதனால் திருமணங்கள் வேறு இனத்தவர்களுடன் ஏற்பட்டு அவர்களுடைய உணவுப் பழக்கம், மொழி, பண்பாட்டு அம்சங்கள் என்பன தற்போது மறைய தொடங்கி வருகிறது.
குறிப்பு - திருகோணமலையில் சீனர்கள் தொடர்பான மேலதிக தகவல்களை கலாநிதி கனகசபாபதி சரவணபவன் அவர்களின் வரலாற்று திருகோணமலை என்ற நூலில் 247 ஆம் பக்கத்தில் வாசித்தறியலாம்.
....................................................................................................................................
வீரபாண்டியனின் வெற்றித்தூண்
திருகோணமலை நகரில் வாழும் அன்பர்கள் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் வீரபாண்டிய மன்னனால் நிறுவப்பட்ட வெற்றி துணைத் தரிசிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள்.
திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி கோயிலில் காணப்படும் இந்த வெற்றித் தூண் ஜடவர்மன் சுந்தர பாண்டியனின் (கி.பி. 1251 -1268) இளைய சகோதரனும் துணை அரசனாகிய வீரபாண்டியனால் நிறுவப்பட்டது.
இக்காலப்பகுதியில் ஆட்சி செய்த சாவகனான சந்திரபாணு மன்னனை திருகோணமலையில் இடம்பெற்ற போரின் போது வீரபாண்டிய மன்னன் வெற்றி கொண்டு அதன்பின் திருகோணமலையில் வெற்றி விழா நிகழ்த்திய பொழுது இந்த வெற்றித் தூண் நிறுவப்பட்டது என்று கருதப்படுகிறது.
பாண்டியப் படை வீரர்கள் தாம் அடைந்த வெற்றிக்கு நன்றிக் கடனாக முருகப்பெருமானுக்கு வழிபாடுகள் செய்து, தானதர்மங்கள் புரிந்து இந்த வெற்றிச் சின்னத்தை நாட்டியுள்ளனர் என்பதை புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
இக்காலப்பகுதியில் வில்லூன்றி கந்தசுவாமி ஆலயம் திருப்படைக் கோயிலாக காணப்பட்டது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. முருகப்பெருமானின் படைக்கலமாகிய வேலினை ஆலயத்தின் மூலஸ்தானத்தில் வைத்து வணங்கும் கோயில்களை திருப்படைக் கோயில் என்று அழைப்பது வழக்கம்.
இந்த வெற்றி துணினை புராதன ஆலயத்தின் முக மண்டபத்தில் நாட்டினார்கள் என்பது கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது. எனவே திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி ஆலயத்தின் வரலாறு 700 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.
குறிப்பு திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி கோயில் சாசனம் தொடர்பான மேலதிக விபரங்களை பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களின் இலங்கைத் தமிழ் சாசனங்கள் 2 நூலின் 343 வது பக்கத்தில் முழுமையாக படித்த அறியலாம்.
......................................................................................................................................
ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் திருகோணமலை மண்ணில் இருந்த சமய பல்வகைமை
திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு கல்வெட்டு மாங்கனாய் சாசனம்.
இச்சாசனம் இன்றைக்கு சுமார் 850 வருடங்களுக்கு முன்னர் 1153 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்டது.
மிந்தன் கொற்றன் என்கின்ற தமிழ் பௌத்தன் அரண்மனையில் ஒரு குழுவினரின் தலைமை அதிகாரியாகப் பணிபுரிந்திருக்கிறார். இவருடன் தொடர்புடைய நிலதானம் தொடர்பான விடயங்களை இக்கல்வெட்டு உள்ளடக்கியிருக்கிறது.
இக்கல்வெட்டில் என்னைக்கவர்ந்த மூன்று விடயங்கள் இருக்கிறது.
1. இங்கு தானம் அளிக்கப்பட்ட விகாரையில் இருந்த புத்தர் படிமத்தை இக்கல்வெட்டு வேரத்தாள்வார் என்று குறிப்பிடுகிறது. வைணவ மரபில் திருமாலுடைய அடியார்களை ஆழ்வார் என்று அழைப்பது வழமை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
இக்கல்வெட்டில் கூறப்பட்டிருக்கும் தானத்திற்கு தீங்கு செய்பவர்களுக்கு எதிராக இரண்டு வெவ்வேறு தெய்வங்கள் மீது சத்தியம் செய்யப்பட்டிருப்பதை கீழ்வரும் வாசகங்கள் உணர்த்துகிறது. இதனை கல்வெட்டும் மரபில் ஓம்படைக்கிளவி என்று கூறுவார்கள்.
'...இதுற்கு ஒரு விக்னஞ் செய்(ய)
(லெஞ்று)மை திப் புத்தராஞ்ஞை
வல்லவரையன் சூளறவு'
2. புத்தராஞ்ஞை - புத்த பெருமான் மீது ஆணை என்பதனை குறிக்கிறது.
3. வல்லவரையன் சூளறவு - விநாயகர் மீது சத்தியம் என்பதை குறிக்கிறது. வல்லவர் என்பது விநாயகரின் 32 நாமங்களில் ஒன்று என்பது கருத்தில் கொள்ளத்தக்கது.
இக்கல்வெட்டு திருகோணமலையில் சுமார் 850 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ் பௌத்தர்களிடையே இந்துசமயம் கொண்டிருந்த செல்வாக்கினை விளக்குவதாக அமைந்திருக்கிறது.
இந்த விடயங்களில் விசாலமான அறிவில்லாமல் இலங்கை வரலாற்றினை பூரணமாகப் புரிந்து கொள்வது இயலாத காரியம்.
குறிப்பு மாங்கனாய்க் கல்வெட்டு தொடர்பான முழுமையான விபரங்களை பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள் எழுதிய இலங்கை தமிழ் சாசனங்கள் நூலின் 325 ஆம் பக்கத்தில் விரிவாகப் படித்து அறியலாம்.
............................................................................................................................
திருகோணமலை மக்களிடையே நிலவிய கொள்ளை நோய் தொடர்பான நம்பிக்கைகள்
வரலாற்றுப் பேரிடர் காலத்தில் ஒவ்வொரு சமூகமும் பல்வேறு விதமான நம்பிக்கைகளை கொண்டிருக்கும். அவ்வாறு நூறு வருடங்களுக்கு முற்பட்ட திருகோணமலை மாவட்ட மக்களிடையே காணப்பட்ட சில நம்பிக்கை தொடர்பிலான வரலாற்றுப் பதிவு இது
பல்வேறுபட்ட ஐரோப்பிய ஆவணங்களில் இருந்து தொகுக்கப்பட்ட திருகோணமலையின் வரலாறு சார்ந்த விடயங்களை மிகச் சுவைபடச் சொல்லும் கலாநிதி கனகசபாபதி சரவணபவன் அவர்கள் எழுதிய காலனித்துவ திருகோணமலை என்னும் நூலில் இருந்து மிகச் சிறிய துளி ஒன்று உங்கள் பார்வைக்காக முன்வைக்கப்படுகிறது
1918 ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் மிகப் பரவலான பாதிப்பினை ஏற்படுத்தியது. அவ்வாண்டில் ஐப்பசி மாதத்தில் மாத்திரம் வைரஸ் காய்ச்சலினால் 123 பேர் இறந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில் அரசு மருத்துவமனைக்கு வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டிருக்கிறது. அத்துடன் இவ்வாண்டில் சுமார் 20,000 நோயாளிகள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்று தொடர்கிறது பிரித்தானிய அறிக்கை.
இவ்வறிக்கையில் 1918 முதல் 1919 வரை உலகம் முழுவதும் இடம்பெற்ற Influenza pandemic கொள்ளைநோய் தாக்கத்தின் பொழுது வைரஸ் காய்ச்சல் தொடர்பில் திருகோணமலை மாவட்ட மக்களிடையே வழக்கத்திலிருந்த மூன்று நம்பிக்கைகளை அது பட்டியலிட்டிருக்கிறது.
1. டாக்டர் W.S. Ratnavale தயாரித்த மருத்துவ அறிக்கையில் நோய்களுக்கு காரணம் கெட்ட ஆவி அல்லது பேய்தான் என படித்தவர்களும் படிக்காதவர்களும் நம்பினார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் மூட நம்பிக்கைக்கும் அலட்சியமே நோய்க்கான உண்மையான காரணம் என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
2. அவர் மேலும் பதிவு செய்கையில் கொத்தமல்லி தண்ணீரும் பட்டினியும் மக்களுடைய வீட்டு சிகிச்சை முறையாக இருந்ததால் பலர் பரிதாபமாக இருந்தார்கள் என குறிப்பிட்டிருக்கிறார்.
3. இக்காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்தில் சாராயம் கள்ளு ஆகியவற்றின் விற்பனை நேரங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. கள்ளுக்கடை காலை 6 மணியிலிருந்து மாலை 6.30 மணிவரை திறக்க அனுமதிக்கப்பட்டது.
வைரஸ் காய்ச்சலுக்கு சாராயம் நல்லது என்ற நம்பிக்கை நிலவியதால் திருகோணமலை மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் காலங்களில் சாராய விற்பனை அதிகரித்து காணப்பட்டது.
நூறு வருடங்களுக்கு முன்னர் திருகோணமலையில் வாழ்ந்த மக்கள் Influenza pandemic கொள்ளைநோய் இடர் காலத்தில் பல்வேறுபட்ட நம்பிக்கைகளை தங்களிடையே கொண்டிருந்தார்கள் என்பதை மேற்கூறிய ஆவணத்தில் இருந்து நாம் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
இவையெல்லாம் இடம்பெற்று 100 ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறுபட்ட தொழில்நுட்ப விஞ்ஞான அறிவுடன் வாழும் இன்றைய சமூகம் தான் எதிர்கொள்ளும் கொரோனா தொற்று நோயிலிருந்து முற்றாக விடுபட உண்மையான இலகுவாகக் கடைப்பிடிக்கக் கூடிய உரிய சுகாதார வழிமுறைகளின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டிய தருணமிது.
குறிப்பு படத்தில் இருப்பது 1900 ஆண்டுகால திருகோணமலைக் கடற்படை வைத்தியசாலை.
...................................................................................................................................
நூறு ஆண்டுகளுக்கு முந்திய கொள்ளை நோய் பற்றிய தகவல்
பல மாதங்களுக்கு முன்னர் திரு. சபாபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. தம்பலகாமம் கள்ளிமேட்டினைப் பிறப்பிடமாகக் கொண்ட அவரது வயது தற்போது 84.
தற்செயலான ஒரு உரையாடலின்போது தன்னுடைய தகப்பனின் தாய் இதுபோன்றதொரு கொள்ளை நோயினால் இறந்துபோனதை தனது சிறிய வயதுகளில் பலரும் சொல்லக் கேட்டதாக ஞாபகப்படுத்தினார்.
அவரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற 100 ஆண்டுகளுக்கு முன்னதான கொள்ளை நோய் தொடர்பான வாய்மொழி வரலாறு இது.
அவர் குறிப்பிடும் சம்பவம் 1918 முதல் 1919 வரை உலகம் முழுவதும் இடம்பெற்ற Influenza pandemic கொள்ளைநோய் தொடர்பானது. இதன்போது பிரித்தானியரினால் இலங்கை ஆட்சி செய்யப்பட்டு வந்தது. அக்காலத்தில் இலங்கை முழுவதும் பரவிய இக்கொள்ளை நோயின் தாக்கம் தம்பலகாமத்திலும் எதிரொலித்தது.
தம்பலகாமத்தில் இந்நோய் தாக்கத்துக்கு உள்ளானவர்களைப் பராமரிப்பதற்கான தற்காலிக மருத்துவ முகாம் தம்பலகாமம் கோயிற்குடியிருப்பில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பிரித்தானிய ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்டிருக்கிறது. நோய்த்தொற்று அறிகுறி உள்ளவர்கள் அனைவரும் இங்கு சுமார் 40 முதல் 50 நாட்கள்வரை தங்கவைத்துப் பராமரிக்க பட்டிருக்கிறார்கள்.
இவர்களில் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் உடல்கள் ஊரில் உள்ள உறவினர்களிடம் இறுதிச் சடங்குகளுக்காக ஒப்படைக்கபடாமல் நேரடியாக முள்ளியடி மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே புதைக்கப்பட்டதாக தனது குடும்ப மூத்த உறுப்பினர்கள் கூறியதை அவர் நினைவு கூர்ந்தார்.
இப்பேரிடர் காலத்தில் இருந்து தங்கள் உறவுகள் தப்பி வந்ததை இவரது வயதை ஒத்த பலரும் அச்சத்துடன் நினைவு வைத்திருந்திருக்கிறார்கள். இக் கொள்ளைநோய் காலத்தில் தம்பலகாமத்தில் இவரது தகப்பனுடைய தாய் உட்பட சுமார் 12 முதல் 14 பேர் இந்நோய் தாக்கத்தால் இறந்திருக்கிறார்கள்.
கொரோனா என்னும் கொள்ளை நோய் நாம் சந்திக்கும் முதலாவது பேரிடர் அல்ல. இதுபோன்ற பல்வேறு இன்னல்களை நமது மூதாதையர் தொழில்நுட்ப வசதிகள் மிகக் குறைந்த காலத்திலேயே எதிர் கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய தொற்று நோய் பரவல் பேரிடர் காலங்களில் ஒரு தனி மனிதனாக அதனை எதிர்கொள்ள நமக்குத் தேவையானது
@ தன்னம்பிக்கை
@ சுய ஒழுக்கம் (முறையான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றல்)
@ சமூகப் பொறுப்புணர்வு என்பனவாகும்.
ஆனால் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்துதல் என்பது தனிமனிதன் சார்ந்ததல்ல. அது சமூகம் சார்ந்தது. எனவே அச்சவாலை எதிர்கொள்ளும் சமூகம் முறையான நீண்டகால நோக்கிலான, தெளிவான திட்டமிடலுடன் அதனை எதிர்கொண்டாலே இப்பேரிடரில் இருந்து அனைவரும் விடுபட முடியும்.
நட்புடன் ஜீவன்.
tjeevaraj78@gmail.com
No comments:
Post a Comment