Friday, July 17, 2020

திருக்கோணேச்சரத்தின் அரிய வரலாற்று (1831) ஆவணம் - புகைப்படங்கள்


கடந்த காலங்களில் எமது இருப்புக்கள் தொடர்பான இடர்பாடுகள் எழும்போது பெரும்பாலும் உணர்வுபூர்வமான எதிர்வினைகளே ஆற்றப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் ஒரு ஆரோக்கியமான மாற்றமாக இம்முறை திருக்கோணேச்சரத்தின் வரலாறு தொடர்பான கேள்விகள் எழுந்தபோது முன்புபோல் இல்லாது அதற்கான எதிர்ப்பினை அறிவியல்பூர்வமாக பலரும் முன்னெடுத்து வருவது நம்பிக்கை தருவதாக இருக்கிறது.



அண்மையில் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத் தொழும்பு முறை தொடர்பாக தகவல்களைத் திரட்டும் பொருட்டு எனது தந்தை திரு.வே.தங்கராசா அவர்களின் நெருங்கிய நண்பர் திரு மனுவல் இந்திரசூரியன் அவர்களின் வீட்டிற்கு சென்றிருந்தோம். ஆலய வழமை தொடர்பில் தேடிச்சென்ற எங்களுக்கு திருக்கோணேச்சரம் தொடர்பான மிக முக்கியமான ஆவணம் ஒன்று கிடைக்கப்பெற்றது அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியைத் தந்தது.



இந்த ஆவணம் தம்பலகாமத்தைச் சேர்ந்த கோபாலபிள்ளை கதிர்காமத்தம்பி அவர்களின் சேகரிப்பில் இருந்து பின்னர்  திரு மனுவல் இந்திரசூரியன்  அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. கோபாலபிள்ளை கதிர்காமத்தம்பி அவர்கள் தம்பலகாமத்தில் தோம்பராகக் கடமை புரிந்தவர்.

தோம்பு என்பது இலங்கையில் போத்துக்கீசர் ஆட்சியின் போதும் பின்னர் ஒல்லாந்தர் ஆண்ட காலத்திலும், உருவாக்கப்பட்டுப் புழக்கத்தில் இருந்த நில உடைமைப் பட்டியலைக் குறிக்கும் சொல்லாகும். அரசாங்கத்துக்கு உரிய வரியை வசூலிப்பதிலும், குடிமக்களால் அரசாங்கத்துக்காகச் செய்யப்படவேண்டிய ஊழியத்தை செய்விப்பதையும் ஒழுங்குபடுத்தும் நோக்கிலேயே தோம்புகள் உருவாக்கப்பட்டன.

ஒவ்வொரு ஊர்களுக்கும் தனித்தனியாகத் தோம்புகள் எழுதப்பட்டன. அவ்வூர்களிலுள்ள நிலங்கள் தொடர்பில், நிலத்தின் பெயர், அதன் பரப்பளவு, உரிமையாளர் பெயர், அவர் சாதி, நிலத்தில் அடங்கியுள்ள பயன்தரு மரங்கள், வீடு முதலிய உடைமைகள், அவர்கள் அரசாங்கத்துக்கும், அதிகாரிகளுக்கும் செய்யவேண்டிய கடமைகளும், செலுத்தவேண்டிய வரிகளும், அவர்கள் செய்யவேண்டிய ஊழியம் பற்றிய விபரங்கள் என்பன போன்ற தகவல்கள் அவற்றில் அடங்கியிருந்தன.

தம்பலகாமத்தில் தோம்பர் என்றால் அனைவரும் கோபாலபிள்ளை கதிர்காமத்தம்பி அவர்களின் பெயரையே சொல்கிறார்கள். எனவே அவரிடம் பல்வேறுபட்ட ஆவணங்கள் இருந்திருக்கும் என்பதனை ஊகிக்கக்கூடியதாக உள்ளது.

தோம்பரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற ஆவணங்களில் பல முன்னம் இடம்பெற்ற இடப்பெயர்வு, வன்செயல் என்பனவற்றில் அழிந்து போய்விட்டமை தொடர்பில் கவலைகளைப் பகிர்ந்து கொண்ட திரு மனுவல் இந்திரசூரியன்  அவர்கள் தனது வீட்டுக்கு அருகில் இருந்த தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய தொழும்பாளர் வைராவியார் அவர்களின் புராதானமான பெட்டகம் ஒன்றில் பாதுகாக்கப்பட்டு வந்த ஓலைச்சுவடிகளும், ஆவணங்களும் 1980களின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் ஒருவரால் ஆய்வுக்காக எடுத்துச்செல்லப்பட்டது தொடர்பில் நினைவுகூர்ந்தார். இந்த ஆவணங்கள் அனைத்தும் வெளியுலகிற்கு வரும்பொழுது திருகோணமலை வரலாற்றின் இருண்ட பக்கங்கள் பல வெளிச்சத்துக்கு வரும் என்பதில் ஐயமில்லை

1831 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 21 ஆம் திகதி INDIOPHILUS எனக் கையொப்பம் இட்டிருப்பவரால் THE EDITOR OF THE CEYLON GOVERNMENT GAZETTE க்கு இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. எனது தேடல்களின் அடிப்படையில் INDIOPHILUS எனக்கையொப்பம் இட்டிருப்பவரை சைமன் காசிச்செட்டி (Simon Casie Chetty, மார்ச் 21, 1807 - நவம்பர் 5, 1860) என அனுமானிக்க முடிகிறது.







19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த புகழ் பெற்ற தமிழர்களில் ஒருவரான சைமன் காசிச்செட்டி அவர்கள் அரசாங்கத்தில் பல உயர் பதவிகளை வகித்தவர். பிரித்தானியர் காலத்தில் இலங்கை நிருவாகச் சேவைக்கு இணைக்கப்பட்ட முதல் இலங்கையரான இவர் இலங்கையில் பிரித்தானிய அரசு பின்னர் வெளியிட்ட "கசெற்" என்னும் செய்தி வெளியீட்டுக்கு முன்னோடியாகக் கருதப்பட்ட "சிலோன் கசற்றியர்" என்னும் வெளியீட்டைச் செய்தவர் என்பது கவனத்தில்கொள்ளத்தக்கது.

கவிராஜவரோதயன் என்பவரால் பாடப்பட்ட கோணேசர் கல்வெட்டு எனும் நூலில் உள்ள விடையங்களை சுருக்கமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இலங்கை வரலாற்றை ஆராய முற்படுபவர்களுக்கு ஒரு தூண்டுதலாக அமையும் என்ற நம்பிக்கையுடன் இந்த ஆவணத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

ஆங்கில தொடர் எழுத்தில் இருக்கும் இந்த கையெழுத்துப் பிரதி இலகுவில் வாசித்தறியக் கூடியவாறு உள்ளது. இந்த ஆவணத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய விதத்தில் google drive இல் பதிவேற்றி உள்ளேன்.


இதனை இலவசமாக பதிவிறக்கி நீங்கள் ஆய்வு செய்யலாம். 

வரலாற்று ஆய்வாளர்கள், வரலாற்று ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இவ்வாறான ஆவணங்களின் உள்ளடக்கங்களை சாதாரண மக்களின் பார்வைக்கு கொண்டு வரவேண்டிய கடப்பாடு உடையவர்களாக இருக்கிறார்கள் என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

நமது வரலாற்றை நாம் தேடிச்சேகரித்து ஒரு தொடர்ச்சியான நம்பகத்தன்மையுள்ள வரலாற்றை கட்டியெழுப்ப வேண்டியது வரலாற்றுத் திரிபுகளிலிருந்து விடுபடுவதற்கான ஒரு முக்கிய வழிமுறையாக இருக்கிறது.

 நட்புடன் ஜீவன்.
admin@geevanathy.com


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

8 comments:

  1. தற்போதய நிலமையில் அவசியமான பதிவும் விளக்கம்

    நன்றி ஐயா

    ReplyDelete
  2. தங்கள் கருத்துரைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  3. க. விஐயகுமரகுருJul 21, 2020, 10:27:00 PM

    காத்திரமான பணி! தொடர்ந்து செயலாற்ற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. Very good idea. Nanrikall

    ReplyDelete