Thursday, May 07, 2020

தங்கையைக் கொல்லி வளவு - புகைப்படங்கள்


தம்பலகாமத்தின் இடப்பெயர் வரலாற்றைத் தேடி அலைந்து கொண்டிருந்த பொழுதுகளில் எனக்கு கிடைத்த மிக சுவாரஸ்யமான இடப்பெயர்களில் ஒன்று இந்த வளவின் பெயர்.



தம்பலகாமம் பசுமை நிறைந்த வயல் வெளிகளுக்கு இடையில் தீவு போன்ற நிலப்பரப்புகளை திடல்களாகக் கொண்டமைந்த ஊர். அதில் பண்டாரியார் திடல் என்ற பகுதிக்கு அருகில் இந்த வளவு இருக்கிறது.

குஞ்சரடப்பன் திடலில் இருந்து பண்டாரியார் திடலினை அடைவதற்கு தற்பொழுது வீதி அமைத்திருக்கிறார்கள். விரும்பியவர்கள் பச்சை வயல் ஓரம் அமைந்திருக்கும் அந்த வீதியின் ஊடாக தங்களது வாகனங்களில் தங்கையைக் கொல்லி வளவிற்கு செல்லலாம்.



நீங்கள் பசுமையான வயல்வெளிக்கு நடுவில் அமைந்திருக்கும் சேற்று வரம்பில் கால்பதித்து நடக்கும் பிரியம் உடையவராக இருந்தால் இயற்க்கையின் எழிலை இரசித்தபடி நடந்தும் செல்லலாம்.

என்னை அழைத்துச் சென்ற மைத்துணன் திரு.செழியனுக்கு பின்னால் கடந்துசெல்லும் இயற்கை அழகை பருகியபடி சிறுவயதில் கேட்ட கதையினை அசைபோட்டவாறு அந்த வளவினைச் சென்றடைந்தேன்.


வளவு என்று அழைத்தாலும் அது ஒரு சிறு திடல் என்றே கொள்ளவேண்டும்.. தங்கையை கொல்லி வளவிற்கும் பண்டாரியார் திடலிற்கும் நடுவே ஒரு சிறு கால்வாய் செல்கிறது.

வளவில் அதிகளவில் தென்னை மரங்களும் ஒருசில பனைமரங்களும் இருக்கிறது. மற்ற திடல்களைவிட உயரமாக காணப்படும் இந்த வளவில் வரலாற்று எச்சங்கள் ஏதும் மேற்பரப்பில் தென்படவில்லை.

 

அந்த வளவின் தற்போதைய உரிமையாளர் குஞ்சி மாமா என்று அழைக்கப்படும் திரு.பாலசுந்தரம் அவர்களைக் கண்டு அளவளாவ முடிந்தது. வளவின் உரிமையாளரும், தம்பலகாமத்தில் பலரும் தங்கையைக் கொல்லி வளவு பற்றி அறிந்திருக்கும் கதை ஒன்றிருக்கிறது. அது வாய்மொழி வழியாக பரம்பரை பரம்பரையாக பேணப்பட்டுவரும் ஒரு சோகமான கதை.

பிரித்தானியர் இலங்கையை ஆண்ட காலத்தில் தம்பலகாமத்தில் அவர்களுடைய சிறிய படையணி ஒன்று காவலுக்கு இருந்ததது. சமகாலத்தில் தம்பலகாமத்தில் அழகி ஒருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் பண்டாரியார் திடலினை சேர்ந்தவள். தாய் தந்தையை இழந்த அந்தப் பெண் தன்னுடைய தமையனார் பாதுகாப்பில் வசித்து வந்தாள்.

பிரித்தானியசிப்பாய்க்கும் இந்த பண்டாரியாரர் திடல் அழகிக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இந்தக் காதலை ஏற்றுக் கொள்ளாத அழகியின் சகோதரனுக்கும் அந்தப் பெண்ணிற்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதுண்டு.

ஒருநாள் வாக்குவாதம் நீண்டுபோய் கோபத்தை கட்டுப்படுத்த முடியாதுபோன சகோதரன் அடித்ததில் அந்த அழகி இறந்துபோனாள். மிகப்பாசமாக தாயாக, தந்தையாக இருந்து வளர்த்த தனது தங்கையின் பிரிவை தாங்காத அந்தச் சசோதரன் அவளது இறந்த உடலினை அந்தவளவிலேயே அடக்கம் பண்ணினான். பின்னர் பிரிவுத்துயர் தாங்கமுடியாத அந்தச் சகோதரனும் இறந்துபோனான் என்று முடிகிறது அந்தக்கதை.

தமையனார் தனது தங்கையைக் கொன்று புதைத்த அந்த வளவு அன்றிலிருந்து இன்றுவரை தங்கையை கொல்லி வளவு என்றே அழைக்கப்படுகிறது.


தம்பலகாமத்தில் இந்தக் கதைக்கு பல வடிவங்கள் இருக்கிறது. ஆனால் எல்லா கதைகளிலும் இருக்கும் ஒற்றுமை பிரித்தானியப் படைவீரன், பாசமுள்ள அண்ணன், அழகிய தங்கை, இந்த வளவு, திட்டமிடாத கொலை என்ற பொதுவான அம்சங்கள். கதைசொல்லியின் பின்னணிக்கு ஏற்ப சம்பவங்கள் மாற்றம் பெற்றிருக்கும்.

இடப்பெயர்களுக்கு ஒரு குணாதிசயம் இருக்கிறது ஒரே வகையான பெயர்கள் ஒரு பிரதேசத்தின் அருகருகே காணப்படும் அந்த வகையில் முன்னம் தம்பலகாமம் பற்றுக்குள் உள்ளடங்கி இருந்த பிரதேசத்தில் இருக்கும் இன்னொரு இடத்தின் பெயர் பிள்ளை கொல்லி மணல். இதுபற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் விவரமாக பார்க்கலாம்.

நட்புடன் ஜீவன்.
admin@geevanathy.com


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

  1. அழகிய கிராமம்

    ReplyDelete
  2. இது போன்ற கதைகள் மறையாமல் இருப்பதற்காக உங்கள் பணி தொடர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்


    ReplyDelete
  3. அந்த நாளையில் விழுமியங்கள் உயிரினும் மேலாக மதிக்கப்பட்டன.
    ஊர் கதை அறிய கிடைத்தது மகிழ்ச்சி. இன்னும் நிறைய எழுத வேண்டுகோளுடன் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்💐

    ReplyDelete