முதன்முறையாக வயலுக்குச் சென்ற நாளில் ஏற்பட்ட அனுபவம் இன்றும் மறக்க முடியாததாக இருக்கிறது. அது ஒரு அறுவடைக் காலம். வயல் அறுவடை முடிந்து களத்தில் நெற்சூடு வைத்திருந்தார்கள்.
என்னை கண்டதும் ஒரு பெரியவர் தம்பி ஓடிப்போய் அந்தக் களத்தில இருக்கிற சூடு திருப்பியை கெதியா வாங்கிட்டு வா. சூடு சரியுது என்றார்.
ஆஹா முதல் நாளில் முதல் வேலை கிடைத்திருக்கிறது. அதைச் சரியாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் எந்தவித மேலதிக விசாரிப்புகளும் இல்லாமல் அவர் காட்டிய திசையில் இருந்த களத்தை நோக்கி ஓடத் தொடங்கினேன்.
குறித்த களத்தில் இருந்தவர்கள் நான் ஓடிச்சென்று கேட்ட சூடு திருப்பி சற்று நேரத்திற்கு முன்னர்தான் மற்றைய களத்தில் இருந்து வந்த ஒருவர் வாங்கிச் சென்றார் என்று சொன்னார்கள்.
அடடா கொஞ்சம் பிந்தி விட்டேனே என்று கவலைப்பட்ட நான் சரி அடுத்த களம்தானே என்று மீண்டும் வயல் வரம்புகளுக்குள் விழுந்து ஓடத் தொடங்கினேன்.
அங்கும் அதே போன்றதொரு ஏமாற்றமளிக்கும் பதில்தான் கிடைத்தது. ஆனால் அந்தக் களத்தில் இருந்தவர்கள் மூன்றாவதாக இருக்கும் களத்தை நோக்கி செல்லும் ஒருவரைக்காட்டி அவர்தான் சூடு திருப்பியை எடுத்திட்டுப் போறார் விரைவாக ஓடிச் சென்றால் நீ அவரை பிடித்து பெற்றுக் கொள்ளலாம் என்றார்கள்.
வேறு வழியில்லாமல் தூரத்திலே தெரியும் அந்த நபருடைய தலையை குறிவைத்து ஓடத் தொடங்கினேன். அவசரத்தில் வயல் வரம்புகளில் தடக்கி விழுந்து பின் எழுந்து ஓடி நான் மூன்றாவது களத்தினை அடைந்தபொழுது அந்த நபர் வேறு எங்கோ சென்றுவிட்டார்.
அந்த மூன்றாவது களத்தில் இருந்தவர்கள் ஒரு அதிர்ச்சியான செய்தியினைக் கூறினார்கள். சற்று முன்னர்தான் உங்களுடைய களத்திலிருந்து வந்த நபர் ஒருவர் அந்த சூடு திருப்பியை வாங்கி சென்றுவிட்டார் என்ற பதில்தான் அது.
ஆஹா நாம் ஒவ்வொரு களமாக ஓடித்திரிந்த நேரத்தில் நேரடியாக வந்து சூடு திருப்பியை எடுத்து விட்டு சென்றுவிட்டார்களே என்ற கவலையோடு மெதுவாக எங்களுடைய களத்தை மீண்டும் சென்றடைந்தேன்.
அங்கே எல்லோரும் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்கள். எனக்கும் தேநீர் கிடைத்தது. நானும் எதுவும் பேசவில்லை. அவர்களும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை.
சற்று நேரத்தின் பின்னர் அருகில் வந்து அமர்ந்த அப்பா சொன்னார் நீ தேடி சென்றது வேலைக்காரன் தடி. அது களத்தில் உள்ள நெற்சூட்டினைச் சரி செய்வதற்காக பயன்படுத்தும் ஒரு உபகரணம். புதிதாக வருபவர்களை பரீட்சித்துப் பார்ப்பதற்காக அதன் பெயரினை மாற்றி சூடு நிமிர்த்தி அல்லது சூடு திருப்பி என்று கூறுவதுண்டு. இங்கே களத்தில் இருந்தவர்கள் அனைவரும் உனது உறவினர்கள். உனக்குரிய வேலை தரப்பட்டபோதே விளக்கமாக எங்களிடம் கேட்டிருந்தால் இந்த அலைச்சல் உனக்கு வந்திருக்காது என்றார்.
ஒருவர் வேறு களங்களுக்கு சென்று சூடு நிமிர்த்தி அல்லது சூடு திருப்பி என்று கேட்டால் அந்தக் களத்தில் உள்ளவர்கள் இவர் வேலைக்கு புதிதாக வந்த நபர் என்பதைப் புரிந்துகொள்வார்கள். எனவே அவர்கள் சிரிப்பை மறைத்துக் கொண்டு அடுத்த களத்தவர் அதனைக் எடுத்துச் சென்றாகச் சொல்வார்கள். நீயாக இந்த உபகரணம் எப்படி இருக்கும் என்று விசாரிக்கும்வரை இது இப்படியே தொடரும். சிறுபிள்ளை என்பதனால் மூன்று களத்தோடு உன்னை விட்டுவிட்டார்கள் என்றார் அவர்.
ஒரு பக்கம் ஓடி வந்த களைப்பு, இன்னொரு பக்கம் முறையாக ஏமாற்றப்பட்டு விட்டோமே என்ற வருத்தம், இந்நிகழ்வின்பின் ஏற்பட்ட பலருடனான மகிழ்ச்சியான அறிமுகங்கள் என்று வயல் வாழ்வின் முதல்நாள் அனுபவம் ஒரு கலவையாக மனநிலையைத் தந்திருந்தது.
அது இன்றும் பசுமையாக என் மனதில் அழியாத சித்திரமாக இருக்கிறது. எத்தனையோ ஆண்டுகள் கடந்த பின்னும் இன்றும் ஏதாவது ஒரு விடயத்தில் முழுமையாக விசாரிக்காமல் இறங்கி ஏமாற்றமடைந்து திரும்பும்போது சூடு திருப்பி பற்றிய ஞாபகங்கள் வந்து போவதை தவிர்க்க முடிவதில்லை.
களத்துமேட்டு நிகழ்வுகள் பல வாழ்க்கையின் அனுபவக் குறிப்புகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நட்புடன் ஜீவன்.
admin@geevanathy.com
நான் கூட வேலைக்காரன் கம்பு கேள்விப்பட்டு உள்ளேன். சூடு திருப்பி புதிதாக அறிந்து கொண்டேன். நன்றி. இவ்வாறான காலத்து மேட்டு கதைகள், நம்பிக்கைகள் பல இருக்குமே. உங்களுக்கு தெரிந்ததையும் மற்றவர்களின் அனுபவங்களையும் எழுதலாமே. மண் வாசனை நுகர பலர் ஆர்வமாய் இருப்பர். மிக்க நன்றி ��
ReplyDeleteநன்றாக பாடுபட்டு உழைப்பவர்களை கூட அவன் பெரிய வேலைக்கார கம்பு என்று அழைக்க கேள்விப்பட்டுள்ளேன்.
ReplyDeleteஇதில் சுடுகின்ற உண்மை என்னவென்றால் இன்று தம்பலகாமத்து வயல்களில் களங்கள் இல்லை என்பதுதான்.
ReplyDelete