திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு இயற்கையான வெந்நீரூற்று கன்னியா வெந்நீரூற்று ஆகும். சைவமரபின்படி இத்தீர்த்தம் கன்னிகா என்ற தலத்தில் உருவானதால் கன்னிகைதீர்த்தம் என்றும் குமரித்தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இறந்தவர்களுக்கு பிதிர்கடன் செய்யும் இடமாக பலகாலம் புகழ்பெற்றிருந்தது இத்தீர்த்தம்.
1889 ஆம் ஆண்டளவில் திரு.வே.அகிலேசபிள்ளை அவர்களால் எழுதப்பட்டு 1950 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூல் திருக்கோணாசல வைபவம். திரு.வே. அகிலேசபிள்ளை தஷ்ணகைலாய புராணம், திருகோணமலைப் புராணம், திருக்கரசைப் புராணம், கம்பசாத்திரம், பெரியவளமைப் பந்ததி, கோணேசர் கல்வெட்டு போன்ற நூல்களைக் கற்றுணர்ந்து அதனைப் பலரும் அறியவேண்டும் என்ற ஆவலில் உரைநடையாக திருக்கோணாசல வைபவம் என்ற நூலாக்கித் தந்திருக்கிறார்.
திரு. அகிலேசபிள்ளை அவர்கள் தான்கற்ற புராணத்தகவல்களை பலரும் பயன்பெறும் வண்ணம் உரைநடையில் பதிவுசெய்ததோடு தனது சமகாலத்தரவுகளையும் எதிர்காலச் சந்ததியினரின் நன்மை கருதி ஆவணப்படுத்தி இருக்கிறார்.
அவ்வாறு அவர் பதிவுசெய்த விடையம் கீழ்வருமாறு அமைந்திருக்கிறது. விட்டுணுமூர்த்தி உண்டாக்கிய ஏழு கூவல்களுந் தற்காலம் இருக்கின்றன. இவ்வூரவர்கள் அவ்விடத்திற்றானே அந்தியேட்டி செய்விக்கின்றார்கள்.
(கூவல் - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம் - வெந்நீரூற்றினைக் குறிக்கிறது)
இச்சொற்றொடர் சுமார் 130 வருடங்களுக்கு முன்பதாக இங்கு அந்தியேட்டி நிகழ்வு நிகழ்ந்ததையும். அந்த வழமை அப்பகுதி மக்களின் நீண்டகால பாரம்பரியத்தினை அடிப்படையாகக்கொண்டது என்பதையும் ஆதாரப்படுத்துகிறது.
நட்புடன் ஜீவன்.
No comments:
Post a Comment