இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள மாத்தளை மாவட்டத்தில் செம்புவத்தைக் குளம் அமைந்திருக்கிறது. இங்குள்ள எல்கடுவ தேயிலைத் தோட்டத்தின் மலையுச்சியில் உருவாகும் செம்புவத்தை அருவி சுற்றிலும் மலைகளால் அரண் செய்யப்பட்டு மனித முயற்சியினால் உருவான அணை மூலமாக செம்புவத்தைக் குளமாகக் காட்சி தருகிறது.
சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவருகின்ற பிரதேசமாக மாறியுள்ள இக்குளம் 1960களில் அமைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. தற்போது குளம் இருக்கும் பிரதேசம் பிரித்தானியர் காலத்தில் கோல்ப் விளையாட்டுத் திடலாக பயன்படுத்தப்பட்டதாகச் சிலர் கூறுகிறார்கள்.
திருகோணமலையில் இருந்து தொடங்கிய எமது பயணம் மாத்தளை நகரில் முத்துமாரியம்மன் , எழுமுகக் காளியம்மன் ஆகிய ஆலய தரிசனங்களைத் தொடர்ந்து செம்புவத்தை நோக்கித் தொடர்ந்தது.
மாத்தளையில் இருந்து சுமார் 22 Km தூரமுள்ள இப்பிரதேசத்தினை அடைய சுமார் ஒரு மணிநேரம் எடுக்குமென மேற்சொன்ன இரு ஆலயங்களிலும் நாங்கள் விசாரித்தவர்கள் கூறினார்கள்.
பசுமையான மிக ரம்மியயான மலைச்சாரல் ஒருபக்கம் பயங்கரமான பள்ளத்தாக்கு மறுபக்கம் இவற்றுக்கிடையில் எதிர்ப்படும் வாகனங்கள் எல்லாம் எருதில்லாத எமனாகத் தெரிய Google Map இன் வழித்துணையோடு பயணம் தொடர்ந்தது.
இவ்வாறான பயணங்களுக்கு புதிய இடங்களைப் பார்ப்பதில் ஆர்வம் நிறைந்த சக பயணிகளும் அடைய வேண்டிய இடத்தின் தூரத்தினைச் சரியாகச் சொல்லாமல் ‘இந்தத் திருப்பத்திற்கு அடுத்த திருப்பத்தில் நாம் போகவேண்டிய இடம் வந்திடும் என்று சலிக்காமல் திரும்பத்திரும்பத் சொல்லக் கூடிய நபர் ஒருவரும் DVD player க்குள் இளையராஜாவின் இடைக்காலப் பாடல்களும் அமைவது அவசியம். அதிஸ்டவசமாக அத்தனையும் குறைவில்லாமல் அன்றைய பயணத்தில் அமைந்திருந்தமையால் இயற்கையின் கொடையினை இரசித்த வண்ணம் சலிப்பில்லாமல் பயணிக்க முடிந்தது.
தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த மலைப்பகுதியில் இருந்து துள்ளிக்குதித்தோடிவரும் அருவிகளையும் மற்றும் அந்தத் தோட்டங்களில் கடின உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்களையும் அவர்களது லயன் முறை வீடுகளையும் சிறியரகக் கடைகளையும் கடந்தபடி திடீர் திருப்பங்கள் நிறைந்த அந்த வளைவு மலைப்பாதையில் எமது பயணம் தொடர்ந்தது.
எமது நீண்ட பயணம் எல்கடுவ தேயிலைத் தோட்டத்தினை அடைந்து அங்கு செம்புவத்தைக் குளத்தினைப் பார்வையிடுவதற்கான நுளைவுச்சீட்டினைப் பெற்றுக்கொண்டு மிகக் குறுகலான வீதிவழியே பயணித்தோம்.
சுமார் 30m ஆழம் நிறைந்த இக்குளத்தினில் குளிப்பதற்கு அனுமதி இல்லை என்பதனால் அருகில் நீராடுவதற்கு ஏற்றவகையில் சிறு தொட்டிகளை அமைத்து வைத்திருக்கிறார்கள். அருவியின் குளிரினை அனுபவிக்க இந்த ஏற்பாடு.
இயற்கையின் கொடையாக அமைந்திருக்கிற அந்தக் குளத்தின் அழகினைப் பருகிக் கொண்டே நீங்கள் குளத்தினில் படகுச் சவாரி செய்யலாம். குளத்தில் இருந்தபடி மலையின் அழகை இரசிப்பதற்கும் மலைக்காட்டில் இருந்தபடி குளத்தினை இரசிப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மெல்லிய குளிர்காற்றின் அரவணைப்பில் உயர்ந்து நிழல்பரப்பும் மரங்களிடையே நடந்து செல்லும் அனுபவத்தினைப் பெற்றுக்கொள்ளும் போது அங்குள்ள அட்டைகள் தொடர்பில் கொஞ்சம் அவதானமாக இருக்க வேண்டி இருக்கும்.
முன்னம் பயணப்பாதையினை விபரித்து வந்ததைப்போல் அந்தக் குளத்தின் அழகினை விபரிக்க வார்த்தை ஜாலங்களினால் முடியாது என்பதனால் அக்குளத்தின் அழகின் சிறுபகுதியினை புகைப்படங்களாகப் பதிவு செய்கிறேன்.
இயந்திரத்தன்மை நிறைந்த வாழ்வில் தோன்றும் மன இறுக்கங்களில் இருந்து விடுபட இயற்கை கொடுத்த வரங்களில் ஒன்றாக இப்பிரதேசம் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
awesome pictures.thank you for sharing this post with us .keep it up.in this moment i cant write in tamil .
ReplyDeleteநீங்கள் பேறு பெற்றவர்.����
ReplyDelete