Saturday, August 12, 2017

அறநெறிப் பாடசாலைகள் ஊடாக ஆன்மீக, சமூக, பொருளாதார முன்னேற்றம்


உலக சைவ இளைஞர் மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் சுவாமி விபுலானந்தர் அரங்கில் இடம்பெற்ற அறநெறிக் கல்விக்கான வெள்ளிக்கிழமைப் பிரகடனம் எனும் நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்ட அறநெறிப் பாடசாலைகள் ஊடாக ஆன்மீக, சமூக, பொருளாதார முன்னேற்றம் எனும் நோக்கிலான சில முன்மொழிவுகள் இவை.


திட்டம் 1 - அறநெறிப் பாடசாலைக்கான நிரந்தரக் கட்டடம் அமைத்தல்


உண்மையில் அறநெறி வகுப்புகளை மரத்தின் கீழ் இயற்கையின் அரவணைப்பில் செயற்படுத்தலே சிறந்ததெனினும் இன்றுள்ள சூழ்நிலையில் எமது இருப்புகளை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாலும், எமது சமயத்தின் நிறுவனமயமாக்கலை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளவர்கள் நாம் என்பதினாலும் நிரந்தர கட்டடம் அவசியமாகிறது.

நிரந்தரக் கட்டடம் அமையும் போது
1.பெரிய வகுப்பறைக்கான இடம்
2.நூலகம் (நூல்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் இடமாக )
3. களஞ்சிய அறை (சத்துணவு திட்டத்திற்கு தேவையான பாத்திரங்கள், கலைநிகழ்வுகளுக்கு தேவையான பொருட்கள் , இதர பொருட்கள் என்பனவற்றை சேமித்து வைக்க )
4. மலசல கூடம் (ஆண், பெண்)
போன்றவற்றை உறுதிசெய்தல்.

நடைமுறைப்படுத்தல் - ஆலயத்திற்கு சொந்தமான காணி , பொது மக்களால்
நன்கொடையாக வழங்கப்படும் காணி , முறையான அனுமதியுடன்
கிடைக்கும் அரச காணி போன்றவற்றில் அறநெறிக்கான கட்டடத்தினை அமைத்தல்

அறநெறிக்கட்டடம் தொடர்பாக ஆலோசனைக் குழு ஒன்றினை அமைத்தல்
1. கட்டடம் அமைப்பதற்கான அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளல்
2. அறநெறிப் பாடசாலையினைப் பதிவு செய்தல்
3. கட்டட பயன்பாடு தொடர்பில் முடிவெடுக்க
4. கட்டடத்தின் பராமரிப்பினை உறுதிசெய்ய

பொறுப்பு
1.அறநெறிப் பாடசாலைக்கான நிரந்தரக் கட்டடம் – அறநெறிப்பாடசாலை தொடர்பான ஆலோசனைக்குழு
2. அறநெறிப் பாடசாலையினைப் பதிவு செய்தல் - அறநெறிப்பாடசாலை தொடர்பான ஆலோசனைக்குழு ,அறநெறி ஆசிரியர்கள், இந்து கலாச்சார உத்தியோகத்தர் , கிராம உத்தியோகத்தர்
3. கட்டடத்தின் பராமரிப்பு – ஊர்மக்கள், ஆலய பரிபாலன சபையினர்,
சமய அமைப்புக்கள், ஆர்வலர்கள்

நிதி - ஊர்மக்கள், உள்ளூர் வர்த்தக சமூகம், நன்கொடையாளர்கள், புலம்பெயர் சமூகம், ஆலய நிர்வாகம்

திட்டம் 2 - அறநெறிக் கல்வி அபிவிருத்தித் திட்டம் (இலங்கை முழுவதும்)


நடைமுறைப்படுத்தல் - அறநெறிப் பாடசாலைகளுக்கான புதிய நடைமுறைகள் உள்ளடங்கிய இந்து சமயஅறநெறிக் கல்வி அபிவிருத்தித் திட்டம் எனும் நூல்
கதைகள் வழியாக கற்பிக்கும் முயற்சி

பொறுப்பு - இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்

நிதி - இலவசம் (அரச நிதி)


திட்டம் 3 - மாணவர் ஊக்குவிப்பு

நடைமுறைப்படுத்தல் - சத்துணவு திட்டம் , கற்றல் உபகரணங்கள் வழங்குதல், இலவச சீருடை ,போட்டிகள் , பரீட்சை, பரிசில்கள்
( போட்டிகள் - அறநெறிப்பாடசாலை மாணவரின் ஆக்கத்திறனை வெளிக்கொணர்ந்து விருத்தி செய்யும் நோக்குடன் மாணவர்களிடையே பேச்சாற்றல், எழுத்தாற்றல், சித்திரம், வில்லுப்பாட்டு, பண்ணிசை, பஜனை, நாடகம்,பரதநாட்டியம் ஆகிய துறைகளில் )

பொறுப்பு -
1. சத்துணவு திட்டம் , கற்றல் உபகரணங்கள் வழங்குதல் - உள்ளூர் , புலம்பெயர் நன்கொடைகள்
2.இலவச சீருடை ,போட்டிகள் , பரீட்சை, பரிசில்கள் -இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் ,அறநெறி ஆசிரியர்கள் , இந்து கலாச்சார உத்தியோகத்தர் ,சமய நிறுவனங்கள்,, சமய ஆர்வலர்கள்

நிதி -
1.சத்துணவு திட்டம் , கற்றல் உபகரணங்கள் வழங்குதல் - தேவைக்கேற்ப இயலுமானவரை பொருளாக
2. இலவச சீருடை ,போட்டிகள் , பரீட்சை, பரிசில்கள் - இலவசம் (அரச நிதி)

திட்டம் 4 ஆசிரியர் ஊக்குவிப்பு

நடைமுறைப்படுத்தல் -
1.ஊக்குவிப்புத் தொகை
2.கருத்தரங்குகள் (அறநெறி தொடர்பான மேலதிக கல்வி , ஆசிரியர்களுக்கான சுய முன்னேற்ற வகுப்புகள் போன்றனவற்றை ஒழுங்குசெய்தல்)
3.சீருடை
4.சான்றிதழ்கள்

பொறுப்பு -
1.போட்டிகள் , கருத்தரங்குகள், சீருடை , சான்றிதல்கள்
- இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம்
2. ஊக்குவிப்புத் தொகை - இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், சமய , சமூக ஆர்வலர்கள்

நிதி -
போட்டிகள் , கருத்தரங்குகள், சீருடை , சான்றிதழ்கள் - இலவசம் (அரச நிதி)
ஊக்குவிப்புத் தொகை (மாதம் 200 ரூபாய் வருடத்திற்கு 2400 ரூபாய் இதர தேவைகளுக்காக 2000ரூபாய் - அரச நிதி )
ஊக்குவிப்புத் தொகை - உள்ளூர், புலம் பெயர் நன்கொடையாளர்கள், சமய , சமூக ஆர்வலர்கள்

திட்டம் 5 - பெற்றோர் ஊக்குவிப்பு

நடைமுறைப்படுத்தல் - காலாண்டு கலந்துரையாடல்கள்
1. குறைகேட்டல்
2 .எதிர்காலத்திட்டங்கள் தொடர்பில் விளங்கப்படுத்தல்
3. பெற்றோர் பங்களிப்பினை அதிகரிப்பதற்கான முயற்சிகள்

பொறுப்பு - அறநெறி ஆசிரியர்கள் ,அறநெறிப்பாடசாலை ஆலோசனைக்குழு

நிதி - தன்னார்வ தொண்டு

திட்டம் 6 - சுற்றுலா

நடைமுறைப்படுத்தல் - உள்ளூரில் உள்ள தமிழரதும் , சைவத்தினதும் தொன்மையினை வெளிப்படுத்தும் இடங்கள் பற்றிய சிறிய கைநூலினைத் தயாரித்தல்
1.தமிழர் வரலாற்றுத் தகவல்கள்
2.சமயம் தொடர்புடைய விடையங்கள்
3.ஆலய வரலாறு, ஆலயத்துடன் தொடர்புடைய சமூக , சமய வழமைகள்
சுற்றுலா நிறைவடைந்த பின் அறநெறி மாணவர்களை அவர்கள் பார்த்து , கேட்டு சேகரித்த தகவல்களை எழுத்துருவில் பதிவுசெய்யத் தூண்டுதல் பின்னர் அது தொடர்பில் கலந்துரையாடல்

பொறுப்பு - அறநெறி ஆசிரியர்கள் , சமய, சமூக ஆர்வலர்கள்

நிதி
1. சுற்றுலா கைநூல் – 1000 ரூபாய்க்கும் குறைவான தொகை – நன்கொடையாளர்கள்
2. பயணச் செலவு - ஊர்மக்கள், உள்ளூர் வர்த்தக சமூகம், நன்கொடையாளர்கள், புலம்பெயர் சமூகம், ஆலயம் நிர்வாகம்


திட்டம் 7 - கையெழுத்துச் சஞ்சிகை 

நடைமுறைப்படுத்தல் - அறநெறிப்பாடசாலைகள் ஒவ்வொன்றும் வருடத்தில் ஒருமுறையேனும்
கையெழுத்துச் சஞ்சிகையை உருவாக்கி வெளியிடுதல்
1- முற்றுமுழுதாக மாணவர் ஆக்கங்கள்
2- சிறந்த ஆக்கங்களுக்கு பரிசு வழங்குதல்
3- நுண்வரலாற்றைப் பதிவுசெய்தல் (கிராமத்தின் இடப்பெயர் ஆய்வு, இயற்கை வளங்கள், குடித்தொகைப்பரம்பல், மக்களின் சமூக ஒழுங்கமைப்பு, வாழ்வு முறை, பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார உற்பத்தி முறைகள், நிர்வாக அமைப்பு, வழிபாட்டு முறைகள், தொன்மங்கள், ஐதீகங்கள், கலை இலக்கியப் பாரம்பரியம், வாய்மொழி மரபுகள், கல்வெட்டுக்கள், தொல்பொருட்கள், ஓலைச் சுவடிகள், வாய்மொழிக் காவியங்கள் )
4- இரு பிரதியினை நூலகங்களில் ஆவணப்படுத்தல்

பொறுப்பு - அறநெறி ஆசிரியர்கள் , சமய, சமூக ஆர்வலர்கள்

நிதி
கையெழுத்துப் பிரதியினை இலவசமாக தயாரித்தல் 10 Photocopy 1000 ரூபாய்க்குள்ளான செலவு -
விளம்பரதாரர்கள் உதவி


திட்டம் 8 - தலைமைத்துவ பயிற்சி

அறநெறி மாணவர்களை சமூக விடயங்களில் முன்னிலைப்படுத்தல்
நடைமுறைப்படுத்தல் -
1.சிரமதானப் பணிகளில் பங்களிப்பு
2.முதலுதவி பயிற்சி வழங்கல்
3.மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல்
4.ஆலய விழாக்களில் மாணவர்களை சிறுசிறு குழுக்களாகப் பிரித்து பொறுப்புக்களை வழங்குதல்

பொறுப்பு - அறநெறி ஆசிரியர்கள் , சமய, சமூக ஆர்வலர்கள்

நிதி - தன்னார்வ தொண்டு


திட்டம் 9 - பொது அறிவினை மேன்படுத்தல்

நடைமுறைப்படுத்தல் -
வாசிப்பு பழக்கத்தினை மேம்படுத்தல் - ஒவ்வொரு வருடமும் வாசிப்பு மாதத்தில் அயலவர்களிடம் இருந்து பழைய நூல்களை மாணவர்கள் மூலம் சேகரித்தல்
மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தினை தூண்டுதல்
உள்நாட்டு, வெளிநாட்டு நாளாந்த விடயங்களில் ஆர்வங்கொள்ளச் செய்தல்
அறநெறி வகுப்பின் முதல் 10 நிமிடங்களை செய்தி வாசிப்புக்காக ஒதுக்குதல். இதன் போது மாணவர்களால் அந்த வாரத்தில் இடம்பெற்ற முக்கிய விடயங்கள் செய்தியாக வாசிக்கப்பட்டு பின்னர் கலந்துரையாடப்படும்.

பொறுப்பு - அறநெறி ஆசிரியர்கள் , சமய, சமூக ஆர்வலர்கள்

நிதி - தன்னார்வ தொண்டு

திட்டம் 10 - எதிர்காலம் குறித்த திட்டங்களை அறநெறி மாணவர்களிடத்தில் உருவாக்குதல்

நடைமுறைப்படுத்தல் - வாழ்வில் வெற்றி அடைந்தவர்களின் அனுபவப்பகிர்வுகளை அறநெறி மாணவர்கள் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுத்தல்
வேலைவாய்ப்பு தகவல்கள்
சுயமுன்னேற்ற கருத்துரைகள்
சேமிப்பு பழக்கம்
அரச தனியார் அலுவலக நடைமுறைகளை அறிதல்

பொறுப்பு - அறநெறி ஆசிரியர்கள் , சமய, சமூக ஆர்வலர்கள்

நிதி - தன்னார்வ தொண்டு

திட்டம் 11 - விளையாட்டு, ஆரோக்கியம் & நல்வாழ்வு

நடைமுறைப்படுத்தல் - விளையாட்டுத் துறையில் ஆர்வங்கொள்ளச் செய்தல், உடல் ஆரோக்கியத்தில் கவனமெடுக்கச் செய்தல் ( ஆரோக்கியம் தரும் உணவுகள், உடற்பயிற்சி) போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள்

பொறுப்பு - அறநெறி ஆசிரியர்கள் , சமய, சமூக ஆர்வலர்கள்

நிதி - தன்னார்வ தொண்டு

திட்டம் 12 - அறநெறிக் கட்டடத்தினை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தல்

நடைமுறைப்படுத்தல் -அறநெறி வகுப்புக்கள் இடம்பெறாத சந்தர்ப்பத்தில்
சுயதொழில் வகுப்புக்களை நடத்துதல்
சமய விழாக்கள்
கலாச்சார நிகழ்வுகள்
பகுதிநேர வகுப்புக்கள்
அனுமதிக்கப்பட்ட தனிநபர் நிகழ்வுகள் (உ+ம் திருமணம், பாராட்டு விழா )

பொறுப்பு - அறநெறி ஆலொசனை சபை, ஆலய பரிபாலன சபை

நிதி - கட்டணம் வசூலித்தல் , நிதியை அறநெறி மேம்பாட்டுக்கு பயன்படுத்தல்
கணக்கறிக்கை சமர்ப்பித்தலும், கணக்குப் பரிசோதனையும் (Audit)

திருகோணமலையில் மிகவும் பின்தங்கியதும், யுத்தத்தால் பலமுறை முழுமையாகப் பாதிக்கப்பட்டதுமான கிராமங்களில் கப்பல்துறைக் கிராமமும் ஒன்றாகும்..அங்கு நிரந்தரக் கட்டடமின்றி முத்துமாரியம்மன் ஆலய மண்டபத்தில் தற்காலிகமாக சிவநய அறநெறிப்பாடசாலை நீண்டகாலம் இயங்கிவந்தது.

இணையம் மூலமான வேண்டுகோளுக்கு இணங்க 2016 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வசிக்கும் நன்கொடையாளர்களான தம்பதியினரால் 22 இலட்சம் இலங்கை ரூபாய் பெறுமதியில் சிவநய அறநெறிப் பாடசாலைக் கட்டடம் அமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கப்பல்துறை சிவநய அறநெறிப்பாடசாலை , சிவசக்திபுரம் பத்திரகாளி அம்மன் அறநெறிப் பாடசாலை ,தங்கநகர் சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலை எனபனவற்றோடு ஏற்பட்ட தொடர்புகளால் கிடைத்த அனுபவங்களைக்கொண்டு இத்திட்ட முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

 ஜீவன்.
admin@geevanathy.com



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment