30.06.2017 இன்று தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய கொடியேற்ற நிகழ்வு நிகழ்கிறது. ஒரு தேவைக்காக பழைய பதிவுகளைத் தேடியபோது அகப்பட்ட புகைப்படங்கள் இவை. 2009 ஆம் ஆண்டு ஆலய கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றபோது எடுக்கப்பட்டவை.
1985 முதல் பலமுறை உயிர்காக்க பாதுகாப்பான இடமாக அப்போது நாங்கள் கருதிய இடங்களுக்கு மூட்டை முடிச்சுக்களுடன் ஓடுவதும், சில நாட்களின் பின் மீளத் திரும்பி வருவதுமாக இருந்து வந்தோம். அவை தற்காலிக இடப்பெயர்வுகள், மூன்று அல்லது நான்கு முறை இருக்குமென்று நினைக்கிறேன். பெரும்பாலும் இந்த இடப்பெயர்வுகள் இரவினை பாதுகாப்பாக்க கழிப்பதற்கான ஏற்பாடுகளாக இருந்தது. அதாவது இரவுச் சாப்பாட்டை மாலை நேரத்தில் தயாரித்து எடுத்துக் கொண்டு காட்டிற்குள் இருக்கும் சேனை நிலங்களான ஐயனார் கோவில் தீவு, கந்தளாய்த் தீவு என்பனவற்றில் இரவினைக் கழித்துவிட்டு அதிகாலையில் ஊர் திரும்பி விடுவோம்.
சிறுவனாக இருந்த காரணத்தினால் முதல்முறை ஊரோடு சேர்ந்தோடியது பயம்கலந்த குதுகலமான அனுபவமாக இருந்தது என்றாலும், நாட்செல்லச் செல்ல அதன் கோரமுகம் புரியத்தொடங்கியது. யுத்த நிலைமைகள் தீவரமடையத் தொடங்கிய காலப்பகுதியில் ஒவ்வொரு வீட்டிலும் அவசரமாக இடம்பெயர்வதற்குத் தேவையான பொருட்கள் நிரம்பிய பசளைப்பையொன்று தயார்நிலையில் இருக்கத்தொடங்கியது. இராணுவம் வருகிறதாம் என்ற செய்தி அறிந்ததும் ஆலாவிடம் இருந்து தன் குஞ்சுகளைக் காக்கும் கோழிகளாய் பெற்றோர்கள் பாடசாலை வந்து தம் பிள்ளைகளை பதறியடித்து அழைத்துச் செல்வார்கள். அரச, தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் அவசர அவசரமாக மூடப்படும். வயலுக்குச் சென்றவர்களும், மாட்டுப் பட்டிகளுக்குச் சென்றவர்களும் வேலைகளை இடை நடுவில் விட்டபடி விழுந்தடித்து ஓடிவருவார்கள். உயிர்ப்பயத்துடன் இடம்பெயர்ந்து ஓடுகையில் உறவினர் சிலரை விட்டுவிட்டு ஓடிவந்து பின் தேடி அலைந்தவர்களும் உண்டு.
பெரும்பாலும் சிறுவர்களைக் கொண்ட குடும்பங்களே ஐயனார் கோவில் தீவு, கந்தளாய்த் தீவு ஆகிய இந்த இடங்களுக்கு இடம்பெயர்வதும் பின் திரும்பி வருவதுமாக இருந்தன. பலர் பயத்துடனும், விழிப்புடனும் ஊரிலேயே தங்கி இருந்தனர். இன்னும் சிலர் திருகோணமலை, யாழ்ப்பாணம், வன்னி, மன்னார் முதலான நாட்டின் ஏனைய பாகங்களுக்கு இடம்பெயரத் தொடங்கினர். யுத்தம் தனது நச்சு நிறைந்த நாக்குகளால் எங்கள் பச்சைவயல் நிறைந்த கிராமத்தினை பொசுக்க ஆரம்பித்தது. ஐயனார் கோவில் தீவில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட குடிசைகளில் வாழ்ந்த எட்டு அல்லது ஒன்பது வயது ஞாபகங்களின் ஒவ்வொரு இடப்பெயர்வின்போதும் இறப்புக்கள் மலிந்த எங்கள் ஊர்த்தெருக்களுக்கு யுத்தம் இரத்தமுலாம் பூசிச்சென்றது.
எமது ஊருடனான நீண்டகாலப் பிரிவின் தொடக்கம் 1990களில் உருவானது. அந்த நடுநிசி கடந்த இரவு இன்றும் எம் நெஞ்சில் நிலைத்திருக்கிறது. வழக்கம் போலில்லாமல் உயிர்குடிக்கும் வேட்டுச் சத்தங்களும், எறிகணை வீச்சுக்களும் ஆரம்பித்தபோதே மிகச் செறிவாக இருந்தமையால் நீண்ட மனப் போராட்டத்துக்குப் பின் ஊர்விட்டகலுவதாக முடிவெடுக்கப்பட்டது.
பிறந்து வளர்ந்த ஊரை விட்டோடிய அவலத்தின் ஒவ்வொரு கணமும் நினைவிருக்கிறது. நான் பன்னிருவயதில் பாவித்த சிறியரக துவிச்சக்கரவண்டியின் கைபிடிகள் இரண்டிலும் பசளைப் பையில் சமையலுக்குரிய முக்கிய பொருட்கள் கட்டப்பட்டிருந்தது. பின்னிருக்கையை வானொலிப் பெட்டி நிறைத்திருந்தது. வண்டியை உருட்டி நடக்கையில் பாரத்தின் பழு தெரியாமல் பார்த்துக்கொண்டது உயிர் வாழ்தல் பற்றிய பயம்.
குழந்தைகள் ,முதியவர் என எந்தப்பாகுபாடும் இல்லாமல் குளிர் நிறைந்த அந்த இரவில் கைக்குக் கிடைத்த துணிகளால் எங்களை மூடிக்கொண்டு தெருவில் நடந்து கொண்டிருந்தோம். துப்பாக்கி வேட்டுக்களாலும் , எறிகணைவீச்சுக்களாலும் நிறைந்திருந்தது வானம். அழுகுரல்களுக்கும் , ஓலங்களுக்குமிடையில் தெளிவாக கேட்டுக்கொண்டிருந்தது ' எப்படியாவது தப்பிப் போயிடணும்' என்ற எங்களது ஆழ்மன ஏக்கம். நள்ளிரவில் ஆரம்பித்த அந்த மிகக் கடுமையான நடைப்பயணம் அதிகாலை நான்கு மணிக்கு சூரங்கல் எனும் இடத்துக்குச் சென்றடைந்ததைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறைவுக்கு வந்தது. ஆனால் யுத்த அவலம் எம்மைக் கணநேர ஆறுதல் அதையவிடாமல் தொடர்ந்து துரத்தியது. சூரங்கல் , மாதிரிக்கிராமம், கச்சகொட்டுத்தீவு, காக்காமுனை, சமாவைத்த தீவு, பிள்ளைகொல்லி மணல், மண் எடுத்த கிடங்கு, நடுவூற்று ,மாகாமம், கண்டக்காடு என்று நீண்டு கங்கைக் கரையோரத்தில் துயரத்தோடு நிறைவுக்கு வந்தது.
ஓடி அலைந்தவர்களில் யுத்ததத்திற்கு உயிர்ப்பலி கொடுத்தவர்கள் போக எஞ்சி இருந்தவர்கள் சுமார் 6000 பேர் திரும்பி வந்து சொந்த ஊரில் அகதிகளானோம். வாழ்வின் மிகமோசமான காலப்பகுதி அது. அகதிமுகாமாக மாறிய தம்பலகாமம் மகாவித்தியாலயத்தில் பொலித்தீன் பைகளுடன் சீனி, அரிசி, பருப்பு , மண்ணெண்ணைக்காக வரிசையில் நின்றவர்களில் பலர் கொஞ்சம் கோஞ்சமாக ஊர்விட்டகன்றனர். அரச உத்தியோகத்தர்கள், திருமலை நகரப்பகுதியில் வீடு இருந்தவர்கள், இந்திய முகாம்களுக்கு கடல்வழி சென்றவர்கள், நாட்டின் இதர பாகங்களுக்கு இடம்பெயரந்தவர்கள் (யாழ்ப்பாணம், வன்னி, மன்னார்), ஊர்முகாமில் எஞ்சி இருந்தவர்கள் தவிர்த்து ஊரின் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் வன்னி நிலப்பரப்பில் தஞ்சம் புகுந்தார்கள். வன்னியின் பலபாகங்களிலும் தம்பலகாமம் மக்கள் முல்லைத்தீவு, கைவேலி, வல்லிபுரம், முள்ளியவளை, உடையார்கட்டு என்று பல இடங்களிள் தஞ்சம்புகுந்திருந்தாலும் புதுக்குடியிருப்பு பகுதியிலே அவர்களில் அதிகமானோர் வசித்தனர்.
2006 இல் ஆரம்பித்த கொடிய யுத்தம் 2009 இல் மிகப்பெரிய இழப்புக்களுடன் நிறைவுக்கு வந்தது. வன்னியிலில் நடந்த யுத்தம் அங்கு வாழ்ந்த மக்களை வன்னிக்கு வெளியில் இருந்த உறவுகளிடம் இருந்து முற்றாகப் பிரித்திருந்தது. யுத்தம் முடிந்த பின்னரும் அவர்களில் பலர் முள்வேலிக்குள் சிறைப்பட்டிருந்தார்கள். எனவே இன்றைக்கு சுமார் எட்டு வருடங்களுக்கு முதல் இடம்பெற்ற தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய கொடியேற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருக்கும் மக்களின் மனங்களிலும், முகங்களிலும் அந்த அவலம் தொடர்பான வேதனைகளை உணரக்கூடியதாக இருக்கிறது.
thank you for information
ReplyDeletethank you. we can't forget past
ReplyDelete