Saturday, March 25, 2017

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முயற்சிகள் - புகைப்படங்கள்


தி/தி.விபுலானந்தா கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் 12/3/2017 அன்று டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்நிகழ்வின்போது விபுலானந்தா கல்லூரியில் தரம் 13 இல் கல்வி கற்கும் செல்வன் பாலேந்திரராஜா சிவஜெயனால் admin@geevanathy.com க்கு அனுப்பி வைக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.

சமீபகாலமாக டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக காணப்படும் திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முயற்சிகளில் தாமாக முன்வந்து செயற்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.


 டெங்கு வைரசினைக் காவும் ஏடிஸ் (Aedes) வகைக் நுளம்புகளால் (குறிப்பாக ஏடிஸ் எகிப்தியால்) டெங்குநோய் பரவுகிறது. ஏடிஸ்  (Aedes) வகை நுளம்பினை இலகுவில் அடையாளம் காணக்கூடியதாக இருக்கும். இதன் சிறப்பம்சமாகக் கருநிறக் காலில் வெள்ளை வரிகள் காணப்படும். இந்நுளம்புகள் பகலிலேயே மனிதர்களைக் கடிக்கின்றன. பொதுவாக விடியற்காலையிலும், பிற்பகலிலும் இந்நுளம்புகள் கடிக்கின்றது.

 நோயுள்ள ஒருவரைக் கடித்த உடனேயே நோயற்றவரை இந்நுளம்பு  கடிக்குமாயின் டெங்கு பரவக்கூடும். இதைவிட, பெண் நுளம்பு  தனது குருதி உணவை நோய் தொற்றியுள்ளவரிடமிருந்து பெற்ற பின்னர், நுளம்புபின் குடற்கலங்களை டெங்கு வைரஸ் அடைகின்றன. 8 – 10 நாட்கள் கழிந்து  நுளம்புபின் ஏனைய இழையங்களுக்குத் டெங்கு வைரஸ் பரவுகின்றன, இவ்வகையில் உமிழ்நீர்ச் சுரப்பியையும் அவை சென்றடைகின்றன.

நோயில்லாத ஒருவரை நுளம்புகள் கடிக்கும்போது டெங்கு வைரஸ் செறிந்த தமது உமிழ்நீரை அவருக்குள் செலுத்துகின்றன, இதன் மூலம் அவரும் தொற்றுக்கு உள்ளாகின்றார். எனவே நுளம்பானது உடனேயோ அல்லது 8-10 நாட்கள் சென்ற பின்னரோ நோய்க்காவியாகத் தொழிற்படுகின்றது.

தமது குருதி உணவைப் பெற்றுக்கொள்ள மனிதனுக்கு அருகாமையில் உள்ள செயற்கையான நீர்நிலைத் தேக்கங்களில் முட்டை இடுவதை ஏடிஸ்  எகிப்தி நுளம்புகள் விரும்புகின்றன,

கூரையில் உள்ள நீர்வடி பள்ளங்கள், குளிப்பதனப் பெட்டியிலிருந்து சொட்டும் தண்ணீரை சேமிக்கும் பாத்திரங்கள், சிமெண்ட் தொட்டிகள், சிமெண்ட் கலசங்கள், பீப்பாய்கள், பானைகள், வாளிகள், பூந்தொட்டிகள், தாவரத் தொட்டிகள், நீர்தேக்கத் தொட்டிகள்,  உதவாத பாத்திரம்கள், பள்ளங்கள், ரயர்கள், தேங்காய் ஓடுகள், சிரட்டைகள், மரத்திலுள்ள துணை குழிகள் மற்றும் மழைநீர் தேங்கியுள்ள, சேகரிக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் இவை தங்கள் இனப்பெருக்கத்தை செய்கின்றன.

நுளம்பு உருவாகாமல் தடுப்பதற்கு நமது சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்தல், நுளம்பின் வதிவிடத்தை அழித்தல், வதிவிடத்தில் இனம்பெருகாது கட்டுப்படுத்தல் என்பன முக்கியமானது.

சுற்றுப்புறத்தில் தேங்கும் நீர் நிலைகளைக் கண்டறிந்து அவற்றை வெறுமைப்படுத்துதல் இதில் முக்கியமானது.  நீர் தேங்கி உள்ள அத்தகைய இடங்களில் பூச்சிகொல்லி மருந்துகளைத் தெளித்தல் இன்னொரு வழிமுறையாகும். இதைவிட உயிரியற் கட்டுப்பாட்டுக் காரணிகளை ( நுளம்பு குடம்பிகளையிம், புழுக்களையும் உண்ணும் மீன்களை வளர்த்தல்) இடல் போன்றன நுளம்புகளின் பெருக்கத்தைத் தடுக்கின்றது. பூச்சிகொல்லி மருந்துகளால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருதுமிடத்து தேங்கிய நீர்நிலைகளை வெறுமைப்படுத்தும் முறையே சாலச்சிறந்ததாக கருதப்படுகிறது.

திருகோணமலையில் கடந்த 7 ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்ட டெங்கு நோயாளர் விபரம்.

Source of data collection - www.epid.gov.lk

மேலே காட்டப்பட்டுள்ள புள்ளி விபரங்களின்படி திருகோணமலை மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் டெங்கு நோயின் தாக்கம் இருப்தனை அறியமுடியும். அத்துடன் மார்கழி மாதம் தொடங்கும் அதிகரித்த டெங்கு நோயின் தாக்கம் பங்குனி மாதம்வரை இருப்பதையும் சிலவேளைகளில் அத்தாக்கம் ஆனி மாதம்வரை நீடிப்பதையும் அவதானிக்க முடிகிறது.

எனவே ஆண்டு முழுவதும்  டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முயற்சிகள் தொடரவேண்டி இருப்பதுடன் கார்த்திகை மாத தொடக்கத்தில் அவை அதிக முனைப்புடன் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதையும் இப்புள்ளி விபரங்கள் உணர்த்துவதாக இருக்கிறது.

ஒரு தரம் நுளம்பு கடிப்பதே நோய் உண்டாவதற்கு வழிகோலும் என்பதனால்  சிரமதானப் பணிகள் ஒழுங்குபடுத்தப்படும் போது நுளம்பு கடி தவிர்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பது முக்கிய அம்சமாகும்..


மேலும் வாசிக்க

01. டெங்கு காய்ச்சல் (Dengue fever)   - நாம் செய்ய வேண்டியவை

02. டெங்கு காய்ச்சல் (Dengue fever) -  திருமலை நிலவரம் 15.03.2017

03. டெங்கு காய்ச்சல் - நாம் செய்ய வேண்டியது என்ன

04. டெங்கு வைரசுக்கான விசேட பரிசோதனை (Dengue NS1 antigen)

05. டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முயற்சிகள்




இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. சிறந்த பணித் திட்டம்
    வாழ்த்துவோம்.

    ReplyDelete