Monday, March 20, 2017

டெங்கு காய்ச்சல் - நாம் செய்ய வேண்டியது என்ன


டெங்கு காய்ச்சல் (Dengue fever) டெங்கு வைரசால் ஏற்படுகின்றது. இந்த வைரசில் நான்கு வகைகள் தற்பொழுது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவை வகைகள் ஒன்று தொடக்கம் நான்கு வரையான பெயர்களால் அழைக்கப்படும். இவற்றில் வகை இரண்டு மற்றும் நான்கு வீரியம் கூடியவையாக அடையாளப்படுத்தப்படுகின்றன.

டெங்கு வைரஸ்

இலங்கையில் ஐந்தாவது வகை ஒன்று அடையாளம் காணப்பட்டாலும் அதன் நிலவரம் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. வகை ஒன்றும் மூன்றும் சாதாரண டெங்கு காய்ச்சலையும் மற்றைய வகைகள் டெங்கு குருதிப்பெருக்கு மற்றும் டெங்கு அதிர்ச்சி நிலைகளுக்கு சடுதியாக இட்டுச் செல்லும் வகைகள் ஆகும்.

டெங்கு காய்ச்சல் ஒரு வைரஸ் காய்ச்சலுக்குரிய குணம் குறிகளையே கொண்டது. காய்ச்சல், உடல் நோவு (இது சற்று அதிகமாக்க காணப்படும், இதனாலேயே இது எலும்பை முறிக்கும் காய்ச்சல் என அழைக்கப்படும்), கண்களின் பின் நோவு அல்லது தலையிடி, சருமம் சிவந்து காணப்படல், தொண்டை நோவு, வாந்தி என்பன காணப்படும்.


காய்ச்சல் முதல் மூன்று தொடக்கம் ஐந்து நாட்களில் மாறிவிடும். பின் குருதி பேருக்கு ஏட்படுமாயின் மீண்டும் 24 தொடக்கம் 48 மணி நேரங்களின் பின் மீண்டும் கடும் காய்ச்சலும் உடலில் சிவப்புப் புள்ளிகளும், குருதி வெளியேற்றமும் (வாய், மூக்கு, மலவாசலில், வாந்தியுடன்) ஏற்படும்.

இதுதான் இந்த நோயின் ஆபத்தான நிலையின் ஆரம்பம். இது கவனிக்கப் படாது போயின் இறப்பு சாத்தியமாகும். மேலும் டெங்கு அதிர்ச்சி நிலை மிகவும் மோசமான நிலை ஆகும். இது இறப்பு வீதத்தை அதிகரிக்கின்றது. டெங்கு காய்ச்சலுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்துகள் கிடையாது. இங்கு காய்ச்சல் பராமரிப்புக்காக பரசிட்டமோல் ஆறு மணித்தியால இடைவெளியில் வழங்கப் படும்.

காய்ச்சலைக் குறைக்க ஈரத் துணியால் உடல் முழவுக்க துடைக்கவும். இது ஒவ்வொரு ஒரு மணி நேரமும் அல்லது காய்ச்சல் குறையும் வரை செய்யவும். பரசிட்டமோல் குறித்த நேர இடைவெளியிலேயே கொடுக்கவும். வேறு காய்ச்சல் குறைப்பு மருந்துகளை வைத்திய ஆலோசனை இன்றி எடுக்க வேண்டாம். இது நோயின் குருதி பேருக்கு நிலையின் போது ஆபத்தாக முடியும். ஆகவே கவனமாக மருந்துகளை எடுங்கள். குழந்தைகள், முதியவர்கள், வேறு நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் கவனமாக மருத்துவ ஆலோசனைகளை நேரத்துடன் எடுங்கள். ஏனையவர்களும் தகுந்த வைத்திய ஆலோசனைகளை பெறுங்கள்.

டெங்கு காய்ச்சலும் ஒரு சாதாரணக் காய்ச்சல்தான் என்பதையும் தகுந்த பராமரிப்பு இன்மையே இறப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் கவனத்தில் கொள்க. காய்ச்சல் ஏற்பட்டால் ஓவொரு மணித்தியாலமும் நீராகாரம் எடுக்கவும். வெறும் நீரை விட ஜீவனி, இளநீர், கஞ்சி, பால் என்பன நன்று. சிவப்பு மற்றும் கருப்பு நிற உணவுகளைத் தவிருங்கள். ஏனெனில் வாந்தியுடன் சிவப்பு நிறமாக ஏதும் வரும் பொது தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம்.

பதட்டம் வேண்டாம். குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும் பொது அவர்களைப் பதட்டப்பட வைக்க வேண்டாம். தகுந்த மருத்துவப் பராமரிப்பு இறப்பு ஏற்படுவதை 99 சதவீதற்கும் அதிகமாக குறைக்கும் என்பதைக் கவனிக்க. தகுதியான வைத்திய பராமரிப்பு பற்றியே நான் இங்கு குறிப்பிடுகிறேன்.


அரச வைத்தியசாலைகள் அநேகமாக சிறந்த வசதிகளுடன் காணப்படுகின்றன. தகுதியற்ற வைத்திய அலையோசனைகளை எடுக்க வேண்டாம். திருகோணமலையை பொறுத்தவரை இது முதல் பெரிய அளவில் ஏற்பட்ட டெங்கு தாக்கம் ஆகும். ஆகவே இங்கு அதிகாரிகள் முதல் அனைவரும் வேறு இடங்களில் இருந்தே ஆலோசனைகளை பெற வேண்டி உள்ளது. மற்றும் அரச வைத்தியசாலையில் இடம் மற்றும் ஆளணி வசதிகள் குறைந்து உள்ளது. தற்பொழுது வைத்திய சாலையின் வளங்களை அதிகரித்தல் பிரதான தேவை ஆகும். வசதி படைத்தவர்கள், மாகாண மட்ட மற்றும் மத்திய அரச மந்திரி சபைகள் உடனடியாக இதில் கவனம் எடுங்கள்.

டெங்கு பரிசோதனைகளாக பல காணப்பட்டாலும் இன்றும் குருதி எண்ணிக்கை (BLOOD COUNT ) மட்டுமே அநேக இடங்களில் பயன்படுத்தப் படுகின்றது. இது ஓரளவு மட்டுமே பயன் தருகின்றது, ஆயினும் செலவு குறைந்தது. ஆரம்பக் கட்ட சோதனைகளாக NS1g பிறபொருள் ( antigen ) மற்றும் PCR சோதனைகள் செய்யலாம். இவை காய்ச்சல் தொடக்கி மூன்று நாள் வரை செய்ய முடியும்.


இதில் PCR மூலம் எந்த வகை வைரஸ் என்றும் அறிய முடியும். ஆயினும் இவை அரச வைத்திய சாலைகளில் தற்பொழுது இல்லை. இவை மிகவும் செலவு கூடிய சோதனைகள் ஆகும். NS1g இலகுவான சோதனை ஆகும். வசதி படைத்தவர்கள் யாரும் இந்த வகை சோதனை செய்யும் பட்டைகளை (STRIPS) வாங்கி அரச வைத்தியசாலைகளை வளப்டுத்தலாம். இதனால் உண்மையிலேயே  டெங்கு காய்ச்சல் வந்தவர்களை  மட்டும் வைத்தியசாலைகளில்  பராமரிக்க முடியும், நெருக்கடியும் குறையும்.



டெங்கு காய்ச்சல் பரப்பும் நுளம்புகள் ஏடிஸ் வகை ஆகும். இவை சிறிய கறுப்பு வகை நுளம்புகள் இவற்றின் உடலில் புலி மாதிரி வெள்ளை வரிகள் காணப்படும். இவை TIGER நுளம்புகள் எனப்படும். இவற்றின் பரம்பல் உலகம் முழுதும் உள்ளது. இவை நன்னீரில், அதுவும், சுத்தமான நீரிலே பொதுவாக பெருகும். ஆயினும் இப்பொழுது உவர் நீரிலும் , சாக்கடைகளில் பெருகும் வாய்ப்பும் உள்ளது. இவை சிறியவையாக அமைந்ததனால் பயன்படுத்தப்படும் பாத்திரங்களிலேயே பொதுவாகப் பெருகும் ஆயினும் தற்பொழுது கிணறுகள், மரப்பொந்துகள் மற்றும் அனைத்து நீர் தேங்கும் இடங்களிலும் பெருகுவதாகக் காணப்படுகின்றது.

இவற்றின் கட்டுப்பாடு மிகவும் கடினமானது. இவை கிணறுகளிலும், உவர் நீரிலும் (கடலை அண்டிய நீர் நிலைகள், களப்புகள்) பெருகுவதால் இந்நிலை ஏற்ப்படுகின்றது. ஆயினும் எமது சூழலை நுளம்பு பெருகும் இடமாக இல்லது வைத்தருத்தல் நோய்த் தாக்கத்தை வெகுவாகக் குறைக்கும்.



நுளம்புக் கடியைத் தவிருங்கள். 
இவை பகல் நேரத்திலேயே பொதுவாகக் கடிக்கும். இரவு நேரத்தில் கடித்தல் அரிது. ஆகவே பகல் நேரங்களில் வெளியில் அவசியமின்றி செல்வதைத் தவிருங்கள், நுளம்பு எதிர்ப்பு களிம்புகளை (mosquito repellent creams) உடலில் வெளிப்படும் பகுதிகளில் பூசுங்கள். குழந்தைகளுக்கென தனியே களிம்புகள் உள்ளன. புல் என்னையும் நல்லது.

நுளம்பு வலைகளால் ஜன்னலை மூடுங்கள், கதவுகளை பூட்டி வைய்யுங்கள். பகல் நேரம் குழந்தைகளை வெளியில் பாதுகாப்பின்றி செல்ல விட வேண்டாம். வீட்டினுள் நுளம்பு எதிர்ப்பு இரசாயனங்களை (repellents, coils) அவதானத்துடன் பாவியுங்கள். பகலில் தூங்குவோர் நுளம்பு வலைகளை பாவியுங்கள்.

உங்கள் அயலில் டெங்கு காய்ச்சல் வந்தால் உடனடியாக அந்த இடத்திற்குரிய PHI ஐ சந்தித்துக் கூறுங்கள். இது தடுப்பு நடவடிக்கைகளை வேகமாக்க உதவும்.
தேவையற்ற வதந்திகளை பரப்பவேண்டாம். இது மக்களை மேலும் குழப்பும். அரச வைத்தியாசாலையை அங்கு இருக்கும் பற்றாக் குறைகளை புரிந்து செயற்படுங்கள். அங்கு நீங்கள் தேவையற்று ஏற்படுத்தும் எந்தக் குழப்பமும் ஒரு நோயாளியின் பராமரிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நீங்கள் சிரமதானப் பணிகளில் ஈடுபடும் போது நுளம்பு கடி தவிர்ப்பையும் உறுதி செய்யங்கள். எல்லோரும் சேர்ந்துதான் இந்த டெங்கு தாக்கத்தை எதிர் கொள்ள வேண்டும். குறைகள் கூறுவதைத் தவிர்த்து சூழலையும் எங்களையும் காப்போம். எதிர்காலத்திலும் இந்த நிலை ஏற்படும் போது மரணங்களைக் குறைக்க அல்லது தவிர்க்க இன்றில் இருந்து செயற்படுவோம்.

விருந்தினர் பதிவு                                                 
   

கலாநிதி கணபதி கஜபதி
Kanapathy Gajapathy, BSc. (Hon.), PhD
Lecturer
Department of Zoology
University of Jaffna
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. சிறந்த விழிப்புணர்வு வழிகாட்டல்
    பாராட்டுகள்

    மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
    https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

    ReplyDelete