Wednesday, October 19, 2016

கொட்டியாபுரத்து வன்னிபங்கள் - புகைப்படங்கள்

நன்றி -  Dr. அரு­மை­நாதன் ஸதீஸ்­குமார் 

இலங்கை ஐரோப்பியரின் காலணித்துவ ஆட்சியின் கீழ் செல்வதற்கு முன்னர் நாட்டின் வட பகுதியில் முழுமையாக வளர்ச்சியடைந்த யாழ்ப்பாண இராட்சியமும், அடங்காப்பற்று (வன்னி), திருகோணமலைப் பிரதேசம், மட்டக்களப்பு தேசம், புத்தளம், சிலாபம் ஆகிய பிரதேசங்களில் சுயாட்சி அதிகாரம் கொண்ட தமிழ் வன்னிபங்களால் ஆளப்பட்ட சிற்றரசுகளும் காணப்பட்டன. இதில் யாழ்ப்பாண இராட்சியம் தவிர்ந்த அனைத்தும் வன்னி அரசுகள் என அழைக்கப்பட்டன.

திருகோணமலைப் பிரதேசத்தினைப் பொறுத்தவரை அது நான்கு வன்னிப் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. திருகோணமலை (நகரப்பகுதி), கட்டுக்குளப் பற்று, கொட்டியாபுரப் பற்று (மூதூர், வெருகல், சேருவில), தம்பலகாமப் பற்று என்பன அவையாகும். பயிர்ச்செய்கை விருத்தியால் தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்த திருகோணமலையின் நான்கு வன்னிப் பற்றுக்களும் குளக்கோட்டு மன்னன் காலத்தில் சிறப்பிடம் பெற்றிருந்ததோடு ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட வரையறைகளையும் கொண்டிருந்தது.

வன்னிப்பற்றுக்கள் என்றழைக்கப்பட்ட இப்பிரதேசத்தினை ஆட்சி செய்தவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர் ‘வன்னிபம்’ என்பதாகும். இது வன்னியனார், வன்னிராசர் போன்ற சொற்களுக்கு இணையானது. வன்னிபங்கள் தமது ஆட்சிப்புலத்தில் சுயாட்சி அதிகாரம் கொண்டிருந்தனர். பெரும்பாலான ஒல்லாந்து ஆவணங்கள் வன்னிபங்களை அரசன் என்றும், அவர்களது ஆட்சிப்புலத்தினை ‘இராட்சியம்’ என்றும் குறிப்பிடுகிறது. சுயாட்சி அலகுகளான இவ்வன்னிப்பற்றுக்களில் சில வெவ்வேறு காலப்பகுதிகளில் யாழ்ப்பாண, கண்டி இராட்சியங்களின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டிருந்தன.

திருகோணமலையில் இருந்த நான்கு வன்னிப் பிரிவுகளிலும் இடப்பரப்பிலும், இயற்கை வளத்திலும், படைப்பலத்திலும்,  துறைமுக நகராகவும் முக்கியத்துவம் பெற்று விளங்கிய பிரதேசம் கொட்டியாபுரப் பற்றாகும். இத்தகைய சிறப்புப்பெற்றிருந்த கொட்டியாபுரப் பற்றினை ஆட்சி செய்த வன்னிபங்கள் பற்றிய தகவல்கள் கல்வெட்டுக்கள், பண்டைய நூல்கள், உறுதிகள்,  ஐரோப்பியரின் ஆவணங்கள் என்பனவற்றில் இருந்து எமக்கு கிடைக்கின்றது. இலங்கையில் காலணித்துவ ஆட்சி ஏற்பட்ட பின்னரும் வன்னிபங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் பிரதேச நிர்வாகிகளாகச் செயற்பட்டு வந்திருக்கிறார்கள்.

இருபதாம் நூற்றாண்டு

இருபதாம் நூற்றாண்டு காலப்பகுதியில் கொட்டியப்புரப் பற்றின் வன்னிபங்களாகச் செயற்பட்ட சிலரின் பெயரினை பிரித்தானிய ஆவணங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. 1939 ஆம் ஆண்டில் திரு. T.சங்கரப்பிள்ளை அவர்களும், 1924 ஆம் ஆண்டில் திரு. சின்னப்பு நவசிவாயம் அவர்களும் கொட்டியாபுரப் பற்று வன்னிபங்களாகக் கடமையாற்றினர். 1912 ஆம் ஆண்டு ஆடி மாதம் 15,16 திகதிகளில் மட்டக்களப்பில் இடம்பெற்ற மாகாநாடு ஒன்றில் கொட்டியாபுரப் பற்று வன்னிபம் திரு. D.துரையப்பா கலந்து கொண்டிருந்தார். மேலே குறிப்பிடப்பட்டவர்களில் வன்னிபம் திரு. சின்னப்பு நவசிவாயம் அவர்களின் பாட்டனார் (கதிரவேலு  வன்னிபம்), மாமனார் (கந்தப்பர் வேலுப்பிள்ளை வன்னிபம்) இருவரும் கொட்டியாபுரப் பற்று வன்னிபங்களாக கடமையாற்றியவர்கள். எனினும் அவர்களது  பதவிக்காலம் பற்றிய விடையங்கள் உறுதியாகத் தெரியவில்லை.

பத்தொன்பதாம்  நூற்றாண்டு

பத்தொன்பதாம் நூற்றாண்டில் கொட்டியாபுரத்து வன்னிபம் தொடர்பாக இரண்டு குறிப்புக்கள் கிடைக்கின்றன. 1893.06.14 இல் கொட்டியாபுரப் பற்று மேன்காமத்தில் வசித்த இருமரபுந் துய்ய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபம் பற்றி அவரது தம்பலகாமம் கோணைநாயகர் கோவில் பாராபரிப்புத் தொடர்பான நியமன உயில் மூலமாக அறியக்கிடைக்கிறது. அவ்வுறுதியில் சாட்சியங்களாக கையொப்பமிட்டு இருப்பவர்களுள் மூதூர் தம்பையா முத்துக்குமாரு வன்னிபமும் ஒருவர் என்பது சிறப்பம்சமாகும்.

திருகோணமலையை ஆண்ட வன்னிபங்கள் பற்றிய வரலாற்றாதாரங்கள்

10.04.1815 ஆம் ஆண்டில் திருகோணமலைப் பிரதேசத்தினைச் சேர்ந்த நான்கு வன்னிப் பிரிவுகளினதும் தேசவழமைகள் குறித்த அறிக்கையினை பிரதம நீதியரசரான அலெஷாந்தர் ஜோன்ஸ்ரன் அவர்களுக்கு வன்னிபங்கள் அனுப்பி வைத்திருந்தார்கள். அவ்வறிக்கையில் கொட்டியாபுரப் பற்றிலுள்ள வழமைகள் தொடர்பில் கொட்டியாபுரப் பற்று வன்னிபத்தால் அறிக்கை சமர்பிக்கப்பட்டிருந்தது. அவ்வறிக்கையில் திருமணம் தொடர்பான நடைமுறைகள், சட்டங்கள், சீதனம், சொத்துரிமை, நன்கொடைகள், சொத்து விற்பனை தொடர்பான விடையங்கள், வளர்ப்புப் பிள்ளை (மஞ்சள் நீர்ப்பிள்ளை) தொடர்பான கடமைகள் போன்ற விடயங்கள் விபரிக்கப்பட்டிருந்தன.
பதினெட்டாம் நூற்றாண்டு

பதினெட்டாம் நூற்றாண்டில் திருகோணமலை மாவட்ட ஒல்லாந்து ஆளுநர் Van Senden  அவர்கள் 15.05.1786 அன்று கொட்டியாபுரப் பற்றிற்கு விஜயம் செய்திருந்தார். அவரை கொட்டியாபுரப் பற்று வன்னிபம் இருமரபுந் துய்ய எதிர்வீரசிங்க நல்ல மாப்பாண வன்னியனார் மூதூரின் இறங்குதுறையில் வைத்து வரவேற்றார். ஆளுநர் தனது விஜயத்தின் போது ஊர் மக்களதும், கிராமத் தலைவர்களினதும் கூட்டத்தில் (02.06.1786) ஆளுநர் இல்லாதபோது வன்னியனார்தான் உங்களது தலமை அதிகாரி’ என்று கூறியதை தனது அறிக்கையில் பதிவு செய்திருக்கிறார். சுற்றுப்பயணத்தின்போது 25.05.1786 இல் மேன்காமத்தில் ஒரு வன்னியனாரின் வீட்டில் தங்கியிருந்த அவர் அவ்வன்னியனார் சிறிதுகாலத்துக்கு முன்னர் காலமானதைப் பதிவு செய்கிறார். எனினும் அவ்வன்னியனாரின் பெயர் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
பதினேழாம் நூற்றாண்டு

பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கி.பி.1611 இல் கண்டியரசன் போர்த்துக்கேயருக்கு எதிரான போராயத்தங்களை மேற்கொண்ட பொழுது அதற்காகக் கூட்டப்பட்ட இராசதானி பிரதானிகள் சபையில் கொட்டியாபுரப் பற்று வன்னிபம் இடலி கலந்துகொண்டிருந்தான். எனினும் 1612 ஆம் ஆண்டில் கொட்டியாபுர வன்னிபம் கண்டியரசனுக்கு எதிரான கிளர்ச்சியொன்றை ஏற்படுத்தும் சூழ்ச்சித் திட்டத்தினில் பங்குகொண்டானென குற்றம் சுமத்தப்பட்டது. அதன் காரணமாக கண்டி அரச சபையிலே பிரசன்னமாகுமாறு வன்னிபத்திற்கு அரசன் கட்டளையிட்டான். வன்னிபமான இடலி நோய்வாய்ப்பட்டு இருந்த காரணத்தால் தன்னை அழைத்தமைக்கான காரணங்களை அறிவதற்கு தனது மருமகனை இராசதானிக்கு அனுப்பி வைத்தான். இதன் பிரதிபலனாக கொட்டியாபுரத்து வன்னிபம் கண்டி அரசனுடைய விசுவாசத்தினை மீண்டும் பெற்றுக் கொண்டான். அதனை அதற்கு அடுத்த ஆண்டு இடம்பெற்ற நிகழ்வுகள் உணர்த்துவதாக இருந்தது.

1613 ஆம் ஆண்டில் கண்டி அரசன் நோயுற்று இருந்தான். அவன் தான் இறக்க நேரிடும் என்ற எண்ணம் ஏற்பட்டதனால் தனது வாரிசாக இளவரசனை நியமிப்பதற்கும், அரச பரிபாலனத்தை கொண்டு நடாத்துவதற்கும் ஒரு குழுவினை நியமிப்பதற்கு இராசதானிகள் சபையினைக் கூட்டினான். அச்சபையின் முடிவுகளை தெரிவிப்பதற்கென இளவரசனை அழைத்துவரும் பொறுப்பினை கொட்டியாபுரப் பற்று வன்னிபத்திடம் கண்டி அரசன் ஒப்படைத்தான்.

கி.பி. 1639 ஆம் ஆண்டில் திருகோணமலையில் உள்ள போர்த்துக்கேயரின் கோட்டையை ஒல்லாந்தரின் கடற்படைத் தலைவன் 12 கப்பல்கள் அடங்கிய படையுடன் முற்றுகையிட்டான். அவனுக்கு உதவியாக கொட்டியாபுரப் பற்றில் இருந்து 500 படைவீரர்களும், தொழிலாளர்களும் சென்றிருந்தனர். கொட்டியாபுரத்து வன்னிபம் கண்ணில் ஊனமுற்று ஐந்து வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்தபடியால் அவ்வன்னிபம் போரில் பங்குகொள்ளவில்லை எனச் சொல்லப்படுகிறது. எனினும் கொட்டியாபுர வன்னிபம் மூலமாக கோட்டைக்குப் போகும் இரகசியப் பாதையை ஒல்லாந்தர் அறிந்து கொண்டனர்.

ஒல்லாந்தர் போர்த்துக்கேயரிடம் இருந்து திருகோணமலையைக் கைப்பற்றிக் கொண்டதன் பின்னால் ஒல்லாந்தரின் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகள் பரவலாக உருவாகின. டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி கொட்டியாரத்தின் பின்னனி நிலங்களை கைப்பற்றுவதன் மூலம் வரிகளையும், வருமானங்களையும் அதிகமாகப் பெறலாம் எனத் திட்டமிட்டார்கள்.


கொட்டியாபுரப் பற்று வன்னிபம் இருமரபுந் துய்ய இளஞ்சிங்க வன்னியனார் வீரமும், தமிழ்ப்பற்றும் ஒருங்கே கைவரப்பெற்றவராக விளங்கினார். 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டி மன்னன் இரண்டாம் இராஜசிங்கனின் (கி.பி 1635 - 1687) ஆட்சிக்காலத்தில் இளஞ்சிங்க வன்னிபத்தின் முன்னிலையில் நூல் அரங்கேற்றம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. தம்பலகாமத்தைச் சேர்ந்த வீரக்கோன் முதலியார் பாடிய ஸ்ரீ சித்திர வேலாயுதர் காதல் எனும் நூல் அரங்கேற்றம் வெருகல் சித்திர வேலாயுதர் கோயில் மண்டபத்தில் நிறைவேறியது. அங்கு கூடியிருந்த தேசத்தவர் மாகாநாட்டில் கொட்டியாபுர வன்னிபம் இருமரபுந் துய்ய இளஞ்சிங்க வன்னிபம் தலைமை தாங்கி சிறப்பிக்க நூல் அரங்கேறியிருக்கிறது.

இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் நூல் அரங்கேற்றம் பற்றிய தகவல்களை சிறப்பாகக் கொண்டிருக்கும் இந்நூல் இளஞ்சிங்க வன்னிபம் தொடர்பான குறிப்புகளை ஆதாரப்படுத்துவதாக இருக்கிறது.

இதற்கடுத்ததாக வரலாற்று முக்கியத்துவம் வாயந்த சாசனம் ஒன்று வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோயிலில் இருக்கிறது. ஸ்ரீ சுப்ரமண்ய நம தெற்கு மதில் கயில வன்னியனார் உபயம்’எனக் குறிப்பிடும் அச் சாசனத்தின் வரிவிடங்கள் 16ஆம், 17ஆம் நூற்றாண்டுக்குரியவை. அக்காலத்தில் கொட்டியாரப்பற்றில் அரசு புரிந்த கயில வன்னிபத்தால் தேசத்துக் கோயிலான வெருகல் சித்திர வேலாயுதர் கோயிலின் தெற்கு மதிற் சுவர் கட்டிக்கொடுக்கப்பட்டதை அது ஆதாரப்படுத்துகிறது.

நன்றி -  பேராசிரியர் சி.பத்மநாதன்
பதினாறாம் நூற்றாண்டு

 பதின்நான்காம் நூற்றாண்டு
நன்றி -  பேராசிரியர் சி.பத்மநாதன்

கொட்டியாபுரப் பற்று சுதந்திரச் சிற்றரசாக இருந்த காலப்பகுதி தொடர்பான தகவல் பதின்நான்காம் நூற்றாண்டில் கிடைக்கிறது. கங்குவேலிச் சிவன் கோவில் கல்வெட்டு அதற்கான ஆதாரமாக அமைகிறது. இது ஒரு பூமிதானம் தொடர்பான கல்வெட்டு. இதனைப் பொறித்த வன்னிபத்தை திருகோணமலை வன்னியனார் என இனங்காணும் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் அவ்வன்னிபம் சாசனம் எழுதப்பட்ட காலத்தில் கொட்டியாபுரப் பற்றில் அதிகாரம் பெற்றவராக இருந்தார் என்கிறார். அத்துடன் அவ்வன்னிபம் மேலாதிக்கம் செலுத்தும் அதியரசன் எவருமில்லாமல் சுதந்திரமாக ஆட்சிபுரிந்தவன் எனபதையும் அவர் பதிவுசெய்கிறார்.

இதுவரை நாம் பார்த்துவந்த ஆதாரங்களுக்களுக்கு மேலதிகமாக கொட்டியாபுர வன்னிபங்கள் தொடர்பான தகவல்களைத் தரும் இலக்கிய ஆதாரங்கள் இரண்டு நம்மிடம் இருக்கின்றன. முதலாவது கோணேசர் கல்வெட்டு என்கின்ற நூல். கவிராஜவரோதயன் அவர்களால் 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் இந்நூல் சாசன ஆதாரங்களைக் கொண்டு படைக்கப்பட்ட இலக்கிய நூலாகக் கருதப்படுகிறது. குளக்கோட்டு மன்னனால் ஒழுங்கமைக்கப்பட்ட வன்னிபங்களின் பெயர் விபரங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.

திருகேகாணமலைப் பற்றிலிலுள்ள பூபாலகட்டு எனும் இடத்திலுள்ள மாளிகைகளில் வாழ்ந்த ‘தனியுண்ணாப் பூபாலன்’ எனும் சிறப்புப் பட்டம் தாங்கிய 32 வன்னிபங்களுக்கு அடுத்ததாக மருங்கூர் வன்னிபம் 37 பேரும், சோழநாட்டு வன்னிபம் 31 பேரும், காரை நகர் வன்னிபம் 42 பேரும் இந்நூலில் அடங்கியிருக்கிறது. தம்பலகாமப் பற்று, கொட்டியாபுரப் பற்று, கட்டுக்குளப் பற்று என்ற மூன்று வன்னிபப் பிரிவுகளையும் ஆட்சி செய்த வன்னிபங்களாக காரைநகர், மருங்கூர், சோழநாட்டுக் குலங்களில் வந்த வன்னியங்கள் கருதப்படுகின்ற போதும் தனித்தனியாக அவர்களை இனங்காண்பது கடினமானதாக இருக்கிறது. மேலும் பல ஆய்வுகள் செய்தால் கொட்டியாபுரப் பற்றினை ஆண்ட வன்னிபக் குலம் எதுவென அடையாளம் காணலாம்.

இரண்டாவது இலக்கிய ஆதாரமான வையாபாடல் 16 ஆம் நூற்றாண்டளவில் வித்துவான் வையாபுரி ஐயர் அவர்களால் இயற்றப்பட்டது. இதில் மாமுகன் எனும் வன்னியன் வெருகல்,  தம்பலகாமம் எனும் பிரதேசங்களை ஆண்டதாகச் சொல்கிறது.

இதுவரை நாம் பார்த்துவந்த கொட்டியாபுரத்து வன்னிபங்கள் தொடர்பான ஆதாரங்கள் ஒரு முழுமையடையாத தொகுப்பாக இருப்பதை உணர்வீர்கள். காலவரையறைப்படி ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவில் கொட்டியாபுரப் பற்று வன்னிபங்கள் தொடர்பான தகவல்களைப் பதிவு செய்ய இன்னும் பல முதல்நிலைத் தரவுகள் தேவைப்படுவதாக இருக்கிறது. அவை இன்னும் வெளிப்படுத்தப்படாத கல்வெட்டுகளாக,  ஓலைச் சுவடிகளாக, காணி உறுதிகளாக, தொல்பொருட் சின்னங்களாக, ஐரோப்பியர் ஆவணங்களாக, வாய்மொழி வழங்காறுகளாக நம்மைச் சுற்றி இருக்கக்கூடும். அவற்றைத் தேடி முறையாக வெளிப்படுத்துவதன் மூலமே நாம் அந்த இலக்கினை அடையமுடியும்.        
 நட்புடன் ஜீவன்.

மேலும் வாசிக்க
வரலாற்றுக்கால தமிழ்ச் சிற்றரசுகள் - வன்னிபத்தின் உயில் - 1
வன்னி அரசர் அல்லது வன்னிபம் - வன்னிபத்தின் உயில் - 2
திருகோணமலை வன்னிபங்கள் - வன்னிபத்தின் உயில் - 3
திருகோணமலை வன்னிபங்களும் அதன் தேசவழமைகளும் - வன்னிபத்தின் உயில் - 4
இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்லபூபால வன்னிபத்தின் உயில் - 5


ஊசாத்துணை
வன்னியர் - பேராசிரியர் சி. பத்மநாதன் 1970
இலங்கைத் தமிழர் தேச வழமைகளும், சமூக வழமைகளும் - பேராசிரியர். சி. பத்மநாதன்
காலனித்துவ திருகோணமலை - கனகசாபாபதி சரவணபவன் – 2010
‘கோணேசர் கல்வெட்டு’ - பதிப்பாசிரியர் பண்டிதர் இ. வடிவேல்
வெருகல் சிந்திரவேலாயுதர் காதல் - உரையாசிரியர் - பண்டிதர் இ. வடிவேல்  1906
இலங்கைத் தமிழ் சாசனங்கள் 2 – பேராசிரியர் சி. பத்மநாதன் – 2013
A True and Exact Description of the great Island of Ceylon by– Philipus Baldaeus 


பின்னிணைப்பு


இலங்கையில் காலணித்துவ ஆட்சி ஏற்பட்ட பின்னரும் வன்னிபங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் பிரதேச நிர்வாகிகளாகச் செயற்பட்டு வந்திருக்கிறார்கள். அவர்களில் தனது உறவினர்களான சிலரது புகைப்படங்களை திரு.விபுலானந்தன் கௌரிதாசன் அவர்கள் எமக்கு  ( admin@geevanathy.com ) அனுப்பி வைத்திருந்தார்.


சித்திரவேலு வன்னியனாரும் அவரது மனைவி மங்கையற்கரசி நாச்சியாரும்.


எனது (திரு.வி.கௌரிதாசன்)  அம்மப்பா சித்திரவேலு வன்னியனார், அவரது தந்தையார் வைரமுத்து வன்னியனார் இருவரும் கொட்டியாரப்பற்று வன்னியனார்களாக இருந்தவர்கள். 

கட்டுக்குளப்பற்று இராசையா வன்னியனாரது மகள் 
மங்கையற்கரசி நாச்சியார்.

குறிப்பு - பிரித்தானியர் ஆட்சியில் 1936 இல் திருகோணமலையில் இருந்த வன்னிபங்கள் தொடர்பான விபரங்கள் கட்டுக்குளப்பற்று - திரு.இராசையா கொட்டியாரப்பற்று - திரு.சங்கரப்பிள்ளை,  தம்பலகாமப்பற்று - திரு.கனகசிங்கம், திருகோணமலைப்பற்று - திரு.சரவணமுத்து 

திரு.வி.கௌரிதாசன் அவர்கள் அனுப்பிவைத்த விபரங்கள் பிரித்தானியர் ஆட்சியில் நியமன வன்னிபங்களாக கடமை புரிந்தவர்கள் தொடர்பானவை என்பதனை உணர முடிகிறது. இவ்வாறு பலரிடமும் உள்ள வன்பனிங்கள் பற்றிய விபரங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஆவணமாக்கப்படும்போது அது ஒரு முழுமையான வரலாறாகப் பரிணமிக்கும் என்பதில் ஐயமில்லை. 

நட்புடன் ஜீவன்.
admin@geevanathy.com


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

7 comments:

  1. அருமையான வெளியீடு
    வரவேற்கிறேன்

    ReplyDelete
  2. நன்றிகள் ஜீவன்...உங்கள் பெரும் பணி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. Dear Dr
    I am very proud of you and your efforts. I need some particulars about Thampalakamam vanniyars to write my novel. I spoke to your father yesterday.
    Kernipithan

    ReplyDelete
  4. Effortless to jeeva anna Sathees anna and gowry anna

    ReplyDelete
  5. தங்களது மிகவும் அவசியமான அரியபணியாகும். தொடரட்டும் தங்கள் பணி.

    ReplyDelete
  6. தங்கள் அனைவரதும் உற்சாகம் தரும் கருத்துரைகளுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  7. காலத்தின் தேவையுணர்ந்த மிகச் சிறந்த பணி, வாழ்த்துக்கள் ஜீவா!

    ReplyDelete