தேசிய உடையில் தோன்றி
செந்தமிழ் வளர்த்த கோமான்!
காசிநாதர் ஐயா கல்விக்
கண்களைத் திறந்த மேலோன்!
கிண்ணியாவின் கல்வித் தரத்தை
கீர்த்தியை வளர்த பெருமை
அவரையே சாரும் என்று
அனைவரும் புகழ்ந் துரைப்பர்.
சாதி சமயங்களை மீறி
சகலரும் சமம் என்று
நீதியைக் கருத்தில் ஏற்று
நித்தமும் வாழ்ந்த தூயோன்.
காலையில் எழுந்து சென்று
கல்விக்காய் ஏங்குவோரின்
கவலைகள் தீர்த் தவரின்
கல்வியை வளர்த்த வள்ளல்.
உடையற்றோர் குறைகள் நீக்கி
உணவும் கொடுத்தவரின்
மனத்தினை வென்று கல்வி
மாண்பினை எடுத்துச் சொல்லி
அன்புடன் அவர் சகிதம்
அழகாகக் கல்விக் கூடம்
வரும் அவர் மாண்புதனை
வாழ்த்தாத மனங்கள் இல்லை.
பத்து ஆண்டுகள் பணிபுரிந்து
பலரும் போற்றும் வண்ணம்
கிண்ணியாவின் கல்வித் தரம்உயர
கீர்த்திபெற உழைத்த மேலோன்
வளர்ந்தோர் கல்விக்காக
வளமாக சேவை செய்தோன்.
தன்னலங் கருதா தெங்கள்
தலை மகன் காசிநாதர்.
தானியக் களஞ்சியமாய் திகழ்கின்ற
தம்பலகாமப் பாடசாலை தரம் உயர
தனித்து நின்று செயலாற்றி வெற்றி கண்டு
தானே அதிபராய்க் கடமையேற்று
புனிதமாய்க் கல்வித் தொண்டு செய்து
புவியுள்ளோர் நன்கு போற்றும் வண்ணம்
வாழ்வாங்கு வாழ்ந்த வள்ளல் எங்கள்
வாழ்வுக்கு வழியமைத்த காசி நாதர்.
மாணவருக்கு கல்வி எனும் அறிவையூட்டி
வந்த காலம் முடிந்த பின்பு ஓய்வு பெற்று
சமுகப் பணிகளை தலைமேல் ஏற்று
தனக்கென வாழாத தகமையாளன்!
சாதி மத பேதமின்றி உலகோர் போற்ற
சன்மார்க்க நெறியில் வாழ்ந்த சீலன்!
காசிநாதர் என்னும் கருணை வள்ளல்!
கல்விக் கண்களை திறந்த மேலோன்!
இரத்தின பூபதியின் நேசராக
இல்லறத்தில் இனிதே வாழ்ந்த வேளை
கமலாதேவி சிவபாலரின் தந்தையாகி
கண்ணும் கருத்துமாய் வளர்த்தெடுத்து
திண்ணிய நெஞ்சினராய் திகழ வைத்து
தேசமெலாம் அவர் புகழைப் பேசவைத்தோன்.
கண்ணியம் மிக்க எங்கள் காசி நாதர்
கல்விக் கண்களை திறந்த மேலோன்!
எண்பத்தி நாலு அகவைதனில்
இறைவனடி இணைந்த செய்தி கேட்டு
கண்ணீரால் அஞ்சலி செலுத்தி மக்கள்
கதறியழுத காட்சி என்னே!
சாதி மத பேதங்கள் பாராது
சகலரும் சமம் என்று வாழ்ந்த மேதை!
மேதினியில் சிறந்த எங்கள் காசி புகழ்
மென்மேலும் ஓங்கட்டும் சாந்தி! சாந்தி!
கலாபூசணம் வே.தங்கராசா
புகைப்படங்கள் - சட்டத்தரணி காசிநாதர் சிவபாலன்
அருமையான பதிவு
ReplyDeleteதொடருங்கள்
http://tebooks.friendhood.net/