வயல்வெளியும், மலைகளும் ,பிரமாண்டமான நீர்த்தேக்கமும் கொண்டமைந்த இயற்கை வனப்பு நிறைந்த பூமி கந்தளாய். இன்று கந்தளாயில் 13679 குடும்பத்தினைச் சேர்ந்த 50961 மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் 40467 பேர் சிங்களவர்கள்;, 8746 பேர் முஸ்லீம்கள் ,1748 பேர் தமிழர்கள்.
1921 முதல் 1981 வரை திருகோணமலையில் இடம்பெற்ற திட்டமிட்ட குடியேற்றங்கள் அதன் இன விகிதாசாரத்தில் பாரியதாக்கத்தினை ஏற்படுத்தின. இந்த இனவிகிதாசார மாற்றத்திற்கு கந்தளாய், தம்பலகாமம் ,சேருவில, பதிநகர் (பதவிசிறிபுர) ,குமரங்கடவை (கோமரங்கடவெல), முதலிக்குளம் (மொறவெவ) திருகோணமலை நகர்ப்பகுதி என்பனவற்றில் ஏற்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் காரணமாக அமைந்தன. இதன் மூலம் 1871 இல் திருகோணமலையில் 64.69 வீதமாக இருந்த தமிழர்களின் குடித்தொகை 1981 இல் 34.5 வீதமாக வீழ்ச்சி அடைந்தது. இதற்கு கந்தளாய்க் குடியேற்றத் திட்டம் கணிசமான பங்கினை வகித்தது. கந்தளாய் வரலாற்றுடன் தொடர்புடைய இருகட்டுரைகளை அருமையான புகைப்படங்களுடன் தனது ஆவணி , ஐப்பசி மாத இதழ்களில் பிரசுரித்த கலைக்கேசரி ஆசிரியர் குழாமிற்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்.
நட்புடன் ஜீவன்.
...................................................................................................................................................................
கலைக்கேசரியின் ஆவணி 2015 மாத இதழ்
ஒரு நரபலியின் துயரக்கதை(அம்மான் கண் )
குளக்கோட்டு மன்னனால் கந்தளாய்க்குளத் திருப்பணிகள் நிறைவுபெற்ற பின்னர் அதிலிருந்து நீரைப்பெறுவதற்கான வழி ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட பிரதேசமே அம்மான் கண் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. இது கண்டிநோக்கிய பாதையில் (குளக்கட்டில்) ஒரு வளைவான பிரதேசத்தில் அமைந்திருக்கிறது. அம்மான் கண் என்ற இந்த இடத்தின் பெயர் ஒரு காரணப்பெயராக கர்ணபரம்பரைக் கதை மூலம் சொல்லப்படுகிறது. அது அந்த இடத்தில் நடந்ததாகக் கருதப்படும் ஒரு நரபலியுடன் சம்மந்தப்பட்டது. இது தலைமுறை தலைமுறையாக இப்பிரதேச சமூகத்தின் கூட்டு ஞாபகத்தில் பேணப்பட்டுவந்த வாய்மொழி மரபாகும். நவீன வரலாற்று எழுத்தியலில் வட்டார வரலாற்றை எழுதுவதற்கு வாய்மொழி வழக்காறுகள் பெரும் பங்கு வகிப்பதால் இதனை ஆவணப்படுத்துவது அவசியமாகிறது.
கலைக்கேசரியின் ஐப்பசி 2015 மாத இதழ்
இராஜராஜ சதுர்வேதி மங்கலம்
(கந்தளாய்)
உலகின் ஒவ்வொரு நிலப்பரப்பின் வரலாறும் அங்கு வலிமையுடன் நிலைபெறும் மக்கள் கூட்டத்தினரால் எழுதப்படுகி;றது. ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் பழமையில் வலிமையுடன் இருந்த மக்கள் கூட்டம் காலப்போக்கில் வலிமை குன்றிப்போவதும், சிலவேளைகளில் முற்றாக மறைந்து போவதும் உண்டு. அதுபோலவே புதிதாகக் குடியேறிய மக்கள் கூட்டம் வலிமை பெற்று நிலைபெறுவதோடு புதிய ஒழுங்குகளை அங்கு உருவாக்கி விடுவதும் உண்டு. இந்த மாற்றங்களை வரலாற்றுப்பக்கங்கள் நெடுகிலும் நாம் காணக்கூடியதாய் இருக்கும். இலங்கையில் உள்ள திருகோணமலை மாவட்டத்தில் இன்றைய நிலையில் மிகச்சிறிய அளவில் தமிழர்கள் வாழ்கின்ற பிரதேசம் கந்தளாய். இப்பிரதேசம் இன்றைக்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சுயாட்சியுடன் கூடிய நிர்வாகப் பலமுள்ள பாரிய பிராமணக் குடியிருப்பாக இருந்ததை மீட்டுப்பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கலைக்கேசரியின் ஐப்பசி ,ஆவணி 2015 மாத இதழ்கள்
No comments:
Post a Comment