Sunday, March 08, 2015

திருஞானசம்பந்தரின் தமிழ் பக்தி இயக்கத்தில் திருக்கோணேஸ்வரம். பகுதி 1


வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே சிவபூமியாக விளங்கிய ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றான திருக்கோணேஸ்வரத்தின் தொன்மை - ( புகைப்படங்கள், ஓவியங்கள் உதவியுடன் ) என்ற பதிவு 2013 இல் எழுதப்பட்டபோது  திரு.யோகன் பாரிஸ் (Johan-Paris) அவர்கள் திருகோணமலைத் திருப்பதிகம் தொடர்பில் விளக்கம் கேட்டிருந்தார்.

பாடசாலைப் பருவத்தில் தவணையின் இறுதிக்காலத்தில் படித்து அதிக புள்ளி எடுக்கும் பாடமாக இருந்தது சைவசமய பாடம். அத்துடன் ஆங்கிலபாடத்தில் ஏற்படும் குறைவால் மொத்தப்புள்ளிகளில் ஏற்படும் சரிவினை சீர்செய்யும் பாடமாகவும் அது இருந்தது. இந்தக் காரணங்களால் திருக்கோணேஸ்வர தேவாரப்பதிகம் மனப்பாடமாக இருந்தபோதிலும் அதன் பொருள் தொடர்பில் விளக்கம் சொல்லும் அளவிற்க்கு தெளிவு இருக்கவில்லை.  இதன்காரணமாக திருக்கோணமலைத் திருப்பதிகத்தை பொருளுணர்ந்து மீண்டும் படிக்கவேண்டிய தேவை ஏற்பட்டது.

இப்பதிவுத் தொடரில் பதிக விளக்கங்களுடன் 22 வருடங்களின் பின் திருக்கோணேஸ்வர ஆலயத்தில் 2015 ஆண்டில் இடம்பெற்ற மகாகும்பாபிஷேகத்திற்குப் பின்னரான ஆலய படங்களும் இணைந்துகொள்கிறது.


திருஞானசம்பந்தரின் தமிழ் பக்தி இயக்கத்தில்
திருக்கோணேஸ்வரம்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘பல்லவர் கால பக்தி இயக்கங்கள்’ பரந்துபட்ட மக்கள் இயக்கமாக விபரிக்கப்படுகிறது. இவ்வியக்கம் சைவம், வைணவம் என்னும் இருபிரதான கிளைகளாக ஓங்கி அக்காலப்பகுதியில் தமிழர்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த சமண, பௌத்த சமயங்களுக்கு எதிராகச் செயற்பட்டு அவற்றினைத் தோற்கடித்தது.

கிறுஸ்துவுக்கு சற்று முற்பட்ட காலப்பகுதியில் தமிழகத்தின் தொன்மைச் சமயங்களான சைவமும்,வைணவமும் ஏனைய சமயங்களுக்கு எதிராகத் தொடங்கிய தத்துவப் போராட்டமே பக்தி இயக்கத்தின் ஆரம்பமாகும்.எனினும் அவ்வியக்கம் முழுவீச்சில் எழுச்சிபெற்றது கி.பி.6 ஆம் நூற்றாண்டில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இக்காலப்பகுதியில் தமிழகத்தில் பல்லவ மன்னர்களின் ஆட்சி நிலைபெற்றிருந்தது. கி.பி.600 முதல் கி.பி.900 வரையிலான இக்காலப்பகுதியில் பக்தி இயக்கங்களை உருப்பெறச் செய்தவர்கள் நாயன்மார்களும், ஆழ்வார்களுமாவர்.

நாயன்மார்களும், ஆழ்வார்களும் தம்சமயக் கொள்கைகளை எல்லோரும் விளங்கக்கூடிய வகையில் இனிய தமிழில் பண்ணிசைத்துப் பாடல்களாகப் பாடினார்கள். இவ்வாறு இசைத்தமிழால் இறைவனைப் பாடி தமிழர்களின் சமயத்தினை மீழ்எழுச்சி செய்வதற்கான போராட்டத்தினை முதலில் தொடங்கி வைத்தவர் ஒரு பெண் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. அவர் தமிழுக்கு ‘அந்தாதி’ என்னும் இலக்கண முறையை அறிமுகம் செய்த ‘காரைக்கால் அம்மையார்’ ஆவர். இவருடைய பதிகங்களின் முறையைப் பின்பற்றியே பின்னாட்களில் தேவாரங்கள் இயற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

காரைக்கால் அம்மையாருடன், திருமூலரும், முதல் ஆழ்வார்களும் பக்தி இயக்கத்தினை 6ஆம் நூற்றாண்டில் தொடங்கி வைத்தவர்களாகக் கொள்ளப்படுகின்றனர். இவர்களைத் தொடர்ந்து கி.பி 7ஆம்  நூற்றாண்டில் சமய எழுச்சிக்கான போராட்டத்தினை பரந்துபட்ட மக்கள் போராட்டமாக்கிய பெருமை திருநாவுக்கரசரையும், திருஞானசம்பந்தரையும்சாரும். இவர்கள் சைவ பக்தி இயக்கத்தின் தலைமையை ஏற்று தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து தமிழிசை மூலம் சமய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினர்.


இவ்விருவரின் பின்னால் காரைக்கால் அம்மையார் தொடங்கி வைத்த பணியினை திலகவதியார், மங்கையற்கரசியார் ,சுந்தரமூர்த்திநாயனார் , மாணிக்கவாசகர் மற்றும் ஆழ்வார்கள் தொடர்ந்து வழிநடத்திச் சென்றனர். இதனால்அதுவரைகாலமும் அரசர்களையும், செல்வந்தர்களையும் பாடுவதற்குப் பயன்பட்ட பாடல்கள் தமிழ் கடவுளைப் பாடுவதற்கு மட்டுமே இனிப் பயன்பட வேண்டும் என்ற கொள்கை வளர்ந்தது. சாதிமுறை வலுவாக நிலவிய அந்தக்காலத்தில் அனைத்து மக்களும் சமம் , இறையடியார்கள் அனைவரும் வணங்கத்தக்கவர்கள் போன்ற சீர்திருத்தக் கருத்துக்கள் வலிமை பெற்றன.

கற்றவர்களுக்கு மட்டுமே உரிமையாக்கப்பட்டிருந்த இலக்கியங்கள் எல்லாம் மக்கள் இலக்கியங்களாக மாற்றம் பெற்றன. நாயன்மார்களும், ஆழ்வார்களும் பேச்சு வழக்கிலுள்ள தமிழ்ச் சொற்களை அவர்களது பாடல்களில் உயிர்த்துடிப்புடன் கையாண்டனர். அத்துடன் நாட்டார் மரபுகளையும் அவர்கள் பயன்படுத்தினர். இவற்றுடன் இனிய இசையும் இணைந்து கொண்டதால் அவை இலகுவாக மக்களைச் சென்றடைவது சாத்தியமாயிற்று. இவர்கள் தமது பக்தி இலக்கியத்தில் தமிழ் மொழியை தெய்வமொழியாக உணர்ச்சிப் பெருக்குடன் பாடும் புதிய பண்பையும் உருவாக்கினர்.

இத்தகைய பின்னணியிலேயே திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் பக்தி இயக்கப்பணிகள் நோக்கத்தக்கது. தமிழ்ப்பக்தி இயக்க வரலாற்றில் தூர சிந்தனையுடன், மிகவும் திட்டமிட்ட முறையில் தனது போராட்டத்தை மக்கள் மயப்படுத்தி வழி நடத்திச் சென்றவர் சமய குரவர்களுள் முதல்வராகக் கருதப்படும் திருஞானசம்பந்தர். அதனால்தான் பெரியபுராணத்தைப் பாடிய சேக்கிழார் சுவாமிகள் தமது நூலில் பெரும்பகுதியை சம்பந்தருக்கு ஒதுக்கிச் சிறப்பித்திருக்கிறார். 4286 செய்யுள்களைக் கொண்ட பெரிய புராணத்தில் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுள்களில் அமைந்துள்ளது அவரின் சிறப்பினை நமக்கு உணர்த்துகிறது. பெரியபுராணத்தில் பிள்ளையாகிய திருஞானசம்பந்தருக்கு கொடுக்கப்பட்ட இடத்தினைக் கொண்டு ‘பிள்ளைபாதி, புராணம்பாதி’ என அழைக்கும் வழக்கம் உருவானதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

திருஞானசம்பந்தரின் தேவாரங்கள் முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. 7 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்தவராகக் கருதப்படும் திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர் , சிறுத்தொண்டர் என்றழைக்கப்படும் பரஞ்சோதியார் போன்ற நாயன்மார்களின் சமகாலத்தவர். சோழவள நாட்டில் பிறந்தவரான திருஞானசம்பந்தர் சிறுவயது முதல் சைவசமய மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்டவர். பின் வந்த சமயகுரவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்.

திருஞானசம்பந்தரது பதிகங்களில் காணப்படும் பொதுப் பண்புகளை நோக்குவதன் மூலம் தான் நினைத்த இலக்கினை அடைய அவர் கையாண்ட வழிமுறைகளை அறிந்து கொள்ள முடியும். இதனை விரிவாக அறிய திருஞானசம்பந்தர் திருக்கோணேஸ்வரம் மீது பாடியருளிய பதிகத்தின் பண்புகளை ஆராய்தலே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


திருஞானசம்பந்தரது ஏனைய பதிகங்களுடன் ஒப்பிடுகையில் திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் மீது பாடப்பட்டவை அதிக சிறப்புப் பொருந்திய பதிகங்களாகும். தமிழகத்தில் பெரும்பாலான தலங்களுக்குச் சென்று அவ்வாலயங்கள் பற்றி அவர் ஆய்வு செய்த பின்னரே அவ்வாலயங்கள் மீது பதிகம் பாடினார். ஆனால் ஈழத்திற்கு வருகைதராமலே அங்கு தலயாத்திரை செய்து வந்த அடியார்கள் மூலம் தான் அறிந்து கொண்டவற்றைக் கொண்டு அவ்வாலயங்கள் மீது பதிகம் பாடினார் என்பது இந்தச் சிறப்புக்கு காரணமாகும்.


பக்தி இயக்கத்தினை வழிநடத்தியவர்களில் மிக இளவயதுக்காரரான திருஞானசம்பந்தர் தனது பணியினைச் சிறப்புறச் செய்வதற்காக சில ஒழுங்குமுறைகளைக் கையாண்டார். தலங்களைப் பாடுவதற்கு பத்துப் பாடல்களைக் கொண்ட பதிகம் என்னும் அமைப்பினைத் தெரிவு செய்தமை அதில் முதன்மையானது. இத்தெரிவுக்கு அவருக்கு வழிகாட்டியாக இருந்தவர் தமிழ் பக்தி இயக்கத்தின் ஆரம்பகர்த்தாவான காரைக்கால் அம்மையாராவர். இப்பதிகங்கள் அடியார் கூட்டங்களுடன் தலங்களைத் தரிசிக்கச் செல்லும் போது பாடுவதற்கு ஏற்றதாகவும்,கோயிலைச் சுற்றி வலம் வந்து பாடுவதற்கு ஏற்றதாகவும் அமைந்திருந்தது. இறைவன் புகழ் பரப்ப எண்ணங் கொண்ட ஞானசம்பந்தர் தான் மட்டுமல்லாது தனக்குப் பின்வந்தோரும் பங்கு கொள்ளும் வகையில் திட்டமிட்ட முறையில் தன்பணியைச் சிறப்பாகச் செய்ய பதிகத்தைத் தெரிவு செய்தார் எனலாம்.

சமயக் கருத்துக்களை தனிமனே பாடுவதற்குப் பதிலாக அவற்றைக் குறிப்பிட்ட தலங்களின் மேல் பாடுவதன் மூலம் அப்பிரதேச மக்களிடையே இலகுவாக சைவசமயக் கருத்துக்களின் செல்வாக்கினைப் பெருக்கலாம் என்ற சம்பந்தரின் எண்ணமே இதற்கு அடிப்படைக் காரணமாகும். இதனால் பெரும்பான்மையான சம்பந்தரின் பதிகங்களின் முதல் இரண்டு அல்லது மூன்று வரிகள் இறைவனைப் புகழ்ந்து பாடுவதாகவும், அவனது அருட்செயல்களை வரிசைப்படுத்திக் கூறுவதாவவும் அமைந்திருப்பதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இதனை நாம் கோணேசர் பதிகத்திலும் காணலாம்.


பாடல் எண் : 1
நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலர்நீ றணிதிரு மேனி
வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்
(பாம்பினை மாலையாக அணிந்த சிவபெருமானின் வலது திருவடியில் வீரக்கழலும், இடது திருவடியில் சிலம்பும் ஒலிக்கின்றன. தனது திருமேனியில் திருநீறு அணிந்த இவர் பாசங்களில் இருந்து நீங்கியவர். மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டவர். இடபக்கொடி உடையவர்.)


பாடல் எண் : 2
கடிதென வந்த கரிதனை யுரித்து அவ்வுரி மேனிமேற் போர்ப்பர்
பிடியன நடையாள் பெய்வளை மடந்தை பிறைநுத லவளொடு முடனாய்க்
(விரைவாகப் பாய்ந்து வந்த யானையின் தோலினை உரித்துத் தனது திருமேனிமேல் போர்த்திக் கொண்டவர் சிவபெருமான். அவர் பெண்யானை போன்ற நடையையும்,பிறை போன்ற நெற்றியையும், வளையல்களை அணிந்தவருமாகிய உமா தேவியை ஒரு பாகமாக உடையவர்.)


பாடல் எண் : 3
பனித்திளந் திங்கட் பைந்தலை நாகம் படர்சடை முடியிடை வைத்தார்
கனித்திளந் துவர்வாய்க் காரிகை பாக மாகமுன் கலந்தவர் மதின்மேல்
தனித்தபே ருருவ விழித்தழ னாகந் தாங்கிய மேருவெஞ் சிலையாக்
குனித்ததோர் வில்லார்
(சிவபெருமான் தனது படர்ந்த சடைமுடியில் குளிர்ச்சியான ,இளமையான சந்திரனையும், பசுமையான தலையையுடைய பாம்பையும் அணிந்துள்ளார். மேரு மலையை வில்லாகக் கொண்டு, வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கொண்டு, அக்கினியைக் கணையாகக் கொண்டு முப்புரத்தை அழித்த ஆற்றலுடையவர் இவர் கனிபோன்ற சிவந்த வாயையுடைய உமாதேவியை ஒரு பாகமாக உடையவர்.)


பாடல் எண் : 4
பழித்திளங் கங்கை சடையிடை வைத்துப் பாங்குடை மதனனைப் பொடியா
விழித்தவன் தேவி வேண்டமுன் கொடுத்த விமலனார் கமலமார் பாதர்
(சிவபெருமான் பெருக்கெடுத்து வந்த கங்கை நதியின் வேகத்தைக் குறைத்து அதனை தனது சடையில் தாங்கிக் கொண்டவர். அழகிய மன்மதனை தனதுநெற்றிக்கண்ணால் சாம்பலாக்கியவர். பின் மன்மதனின் தேவி கேட்டுக் கொண்டதிற்கு இணங்க அவனை உயிர்ப்பித்து அவளுக்கு மட்டும் தெரியும்படி அருள்செய்தவர். இயல்பாகவே பாசங்களின் நீங்கிய இவர் தாமரை போன்ற பாதங்களை உடையவர்.)

பாடல் எண் : 5
தாயினு நல்ல தலைவரென் றடியார் தம்மடி போற்றிசைப் பார்கள்
வாயினும் மனத்தும் மருவிநின் றகலா மாண்பினர் காண்பல வேடர்
நோயிலும் பிணியுந் தொழிலர்பா னீக்கி நுழைதரு நூலினர்
(அடியவர்கள் தாயைவிட நல்ல தலைவர் என்று சிவபெருமானின் திருவடிகளைப் போற்றிப் பாடுவர். அவர் அடியார்களின் வாயிலும், மனத்திலும் நீங்காத மாண்புடையவர். பல கோலங்களை உடையவர். மார்பில் முப்புரிநூல் அணிந்தவரான இவர் தம்மை வழிபடும் தொழிலுடைய அடியவர்களுக்கு நோய், பிணி முதலியன வராதவண்ணம் காப்பவர்.)

பாடல் எண் : 6
பரிந்துநன் மனத்தால் வழிபடுமாணி தன்னுயிர் மேல்வரும் கூற்றைத்
திரிந்திடா வண்ண முதைத்தவற் கருளுஞ் செம்மையார் நம்மையா ளுடையார்
(பக்தி பெருக்கெடுக்கும் நல்ல மனத்தால் அன்பு பெருக வழிபடும் மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவந்த காலனை உதைத்துப் அவருக்கு அருள் புரிந்த செம்மையான நிறமுடையவர் சிவபெருமான். இவர் இச்செயலை இறைவழிபாடு வினைப்பலனைச் சாராமல் காக்கும் என்ற சைவக் கொள்கைக்கு முரண்படாவண்ணம் நிகழ்த்தினார். அத்துடன் இவர் ஆன்மாக்கள் ஆகிய நம்மை ஆட்கொள்பவர்.)


பக்திச் சுவை நிறைந்த கோணேசர் பதிகத்தின் ஏழாவது பதிகம் நமக்குக் கிடைக்கவில்லை. மேலே நாம் பார்த்த பதிகங்கள் கண்மூடிப் பொருளுணர்ந்து பாடும் அடியவர் மனத்தில் பக்திப் பரவசத்தை ஊற்றெடுக்க வைக்கும் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை.

தொடர்ந்து வாசிக்க, புகைப்படங்களைக் காண கீழே சுட்டவும்...



பகுதி - 3  வாசிக்க.... Koneswaram 2015 - Photo Galleries



த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

  1. படங்களும் தகவலும்
    வரலாற்றை வெளிப்படுத்தும்
    சிறந்த பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா.
    முன்பு இருந்ததிற்கும் இப்போ இருப்பதற்கும் வித்தியாசம்... அதிகம்.. வரலாற்றுதகவலுடன்.. யாவரையும் கவரும் வகையில்அழகிய படங்களுடன் பகிர்ந்துள்ளீர்கள்பகிர்வுக்கு நன்றி... ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  4. அருமையான வரலாற்றுத் தகவல்களை பதிவு செய்துள்ளீர்கள்
    சம்பந்தர் சிறப்பானவர் என்பதை
    சேக்கிழார் எடுத்துக் காட்டியமை
    சிறப்பு கோணேசர் புகழ் உலகெங்கும் பரவட்டும் வாழ்த்துகள்

    ReplyDelete