Wednesday, March 11, 2015

திருஞானசம்பந்தரின் தமிழ் பக்தி இயக்கத்தில் திருக்கோணேஸ்வரம். பகுதி 2


பெரும்பாலான தமிழ் நாட்டுத் தலங்களை தரிசித்த ஞானசம்பந்தர்  அவ்வாலயச் சூழலின் அழகினைப் பாடல்களிலமைத்து அவ்வாலயம் பற்றிய விம்பங்களைப் பாடுவோர் மனத்தில் பதித்திடும் வகையில் தனது பதிகங்களைப் பாடியுள்ளார். அதுபோலவே கோணேசர் பதிகத்திலும் அடுத்துவரும் வரிகள் திருக்கோணேசர் ஆலயச் சூழலின் இயற்கை அழகினை வர்ணிப்பதாக அமைத்திருக்கிறார் சம்பந்தர்.

பகுதி - 1  வாசிக்க.... திருக்கோணேச்சரம்  2015 - புகைப்படங்கள்

மாதுமை அம்பாள் ஆலயம் - தெட்சணகயிலாய புராணத்தின் திருநகரச் சுருக்கம் சொல்லும் இந்த பிரமாண்டமான கோபுரத்தை உடைய மாதுமை அம்பாள் ஆலயம் தேரோடும் வீதியையும் பல மண்டபங்களையும், மடங்களையும் கொண்டிருந்தது. அத்துடன் பாவநாச தீர்த்தத்தைச் சூழ அடியார்களின் உபயோகத்திற்காக ஐந்து கிணறுகளையும் கொண்டிருந்தது. மலை உச்சியில் இருந்த கோணேசப்பெருமான் மாதுமை அம்பாள் ஆலயத்திற்கு எழுந்தருளிய பின்னர் இங்கிருந்துதான் திருகோணமலை நகருக்கான கோணேசர் நகர்வலம் ( இரதோற்சவம் ) ஆரம்பிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஸ்ரீ நாராயணமூர்த்தியின் கற்கோவில் - திருக்கோணேஸ்வரத்தில் குளக்கோட்டு மன்னன் திருப்பணிகள் செய்த காலத்தில் கட்டிய ஸ்ரீ நாராயணமூர்த்தியின் கற்கோவில் அமைந்திருந்தது. உயர்ந்த கோபுரத்தை உடைய இக்கோயிலின் கருவறையில் ஸ்ரீமகாலெட்சுமி சமேத நாராயணமூர்த்தியின் சிலாவிக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.


கோணேசர் கோவில் - திருகோணமலைத் துறைமுகத்தின் தரைப்பகுதியில் இருந்து கடலுக்குள் நீண்டிருக்கும் மலையில் மூன்று கோவில்கள் இருந்தது. அவற்றில் கடலுக்குள் நீண்டிருக்கும் 400 அடி உயரமான மலையில் இருக்கும் கோணேசர் ஆலயமே மிகப்பிரபல்யமான ஆலயமாகும். கீழைத்தேசத்தவரின் ரோமாபுரியாக இக் கோணேசர் கோவில் விளங்குகியது.




திருக்கோணேஸ்வர ஆலய திருப்பணிகள் முடிந்த பின் குளக்கோட்டு மன்னன் திருகோணமலையின் நான்கு வன்னிபங்கள், பாசுபதர் என்றழைக்கப்பட்ட பூசகர்கள் , தொழும்பாளர்கள் , குடிமக்கள் ஆகியோருக்கு ஆலய நடைமுறை தொடர்பாக அறிவுறுத்தும் நிகழ்வு.



1623 - 1624ம் ஆண்டு போர்த்துக்கேயப் படைவீரர்கள் கொன்ஸ்ரன்ரயின் டீசா என்பவனுடுடைய தலைமையிற் கோயிலினுட் புகுந்தனர். எதிர்த்தவர்களை வெட்டிக்கொன்றுவிட்டு கோயிலிலிருந்த தங்க, வெள்ளி நகைகளையும், விலைமதிப்புமிக்க பிறபொருள்களையும் சூறையாடிக்கொண்டு சென்றனர். அத்தோடு போர்த்துக்கேயர் பீரங்கிகளுடன் மீண்டும் வந்து மூன்று கோயில்களை முற்றாக அழித்தனர். அவற்றோடு ஆயிரங்கால் மண்டபமும் , பெரியதொரு தீர்த்தக்கேணியும், பிறமண்டபங்களும் அழிந்தன. இவற்றோடு தங்கநிற மையினால் பூசப்பட்ட 7 அடுக்குகளை உடைய தங்கரதம் எரித்துச் சாம்பலாக்கப்பட்டது.


திருக்கோணேஸ்வர ஆலயம் கிபி 1624 ஆம் ஆண்டளவில் போர்த்துக்கீசரால் அழிக்கப்படும் பொழுது அங்கு கடமையாற்றிய பூசகர்களும் , தொழும்பாளர்களும் , பக்தர்களும் இணைந்து கோயிலுக்குள் இருந்த புராதான விக்கிரகங்களை எடுத்துச் செல்லும் காட்சி.



 2015 ஆண்டில் இடம்பெற்ற மகாகும்பாபிஷேகத்திற்குப் பின்னரான 
திருக்கோணேஸ்வர ஆலயம்

‘குடிதனை நெருக்கிப் பெருக்கமாய்த் தோன்றும் கோணமாமலை அமர்ந்தாரே’ என்று கண்மூடிப் பாடுகையில் இன்றும் நமக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்படும். இது பிரதேச உணர்ச்சியைப் பயன்படுத்தி சைவசமய மறுமலர்ச்சியில் மக்களைத் தாமாக முன்வந்து உழைக்கச் செய்ய அவர் கையாண்ட வழிமுறையாகும். ஓவ்வொரு பாடலின் இறுதியிலும் குறிப்பிட்ட தலத்தின் பெயரினை இணைத்துப் பாடும் வழக்கம் காரைக்கால் அம்மையாரால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்
அப்ப னிடந்திரு ஆலங் காடே

என்ற காரைக்கால் அம்மையாரின் திருவாலங்காட்டுத் திருப்பதிகம் இதற்குச் சான்றாகிறது. எனவே இந்த வழிமுறையைப் பின்பற்றி  ‘கோணமலையமர்ந்தாரே’ என்று பாடிய சம்பந்தரின் பதிகங்கள் சமய உணர்வை மட்டுமின்றி நமக்கு பிரதேச உணர்வை ஊட்டுவதோடு இன்று திருகோணமலைப் பிரதேசத்தின் வரலாற்றை ஆராய்வோருக்கு உதவும் ஓர் ஆவணமாகவும் இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.


பாடல் எண் : 1
கரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக்
குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே.
(சந்தனக் கட்டைகளும், கரிய அகில் கட்டைகளும், அளவில்லாதமாணிக்கக் கற்களும் கடற்கரையினில் சேர, ஒலிக்கின்ற கடலின் அலைகள் முத்துக்களைக் கொழிக்கும் கோணமாமலையில் சிவபெருமான் வீற்றிருக்கிறார்.)


பாடல் எண் : 2
கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து கொள்ளமு னித்திலஞ் சுமந்து
குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங் கோணமா மலையமர்ந் தாரே.
(பிறர் கொடியது என்று அஞ்சும்அளவு அலைகளையுடைய ஒலிக்கின்ற கடல் முத்துக்களைச் சுமந்து வந்து மக்களுக்கு வழங்கும் வளமிக்க கோணமாமலையில் சிவபெருமான் வீற்றிருக்கிறார்.)

பாடல் எண் : 3
குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே.
(ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த கோணமாமலையில் வீற்றிருக்கிறார். )


பாடல் எண் : 4
தெழித்துமுன் னரற்றுஞ் செழுங்கடற் றரளஞ் செம்பொனு மிப்பியுஞ் சுமந்து
கொழித்துவன் றிரைகள் கரையிடைச் சேர்க்குங் கோணமா மலையமர்ந் தாரே.
(ஆரவாரத்துடன், செழுமையான முத்துக்கள், செம்பொன், இப்பி(சங்கு,சிப்பி) இவற்றைத் திரளாக அலைகள் கரையிலே சேர்க்கும் கோணமாமலை என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருக்கிறார்.)


பாடல் எண் : 5
ஞாலம் ,
கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே.
(இவ்வுலகில், திருக்கோயிலும், சுனையும் கடலுடன் சூழ விளங்கும் கோணமாமலையில் சிவபெருமான் வீற்றிருக்கிறார்.)

பாடல் எண் : 6
விரிந்துயர் மௌவன் மாதவி புன்னை வேங்கைவண் செருந்திசெண் பகத்தின்
குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழ் கோணமா மலையமர்ந் தாரே.
(விரிந்து உயர்ந்த மல்லிகை, மாதவி, புன்னை, வேங்கை, செருந்தி, செண்பகம், முல்லை ஆகிய சோலைகள் சூழ்ந்த கோணமாமலையில் சிவபெருமான் வீற்றிருக்கிறார்.)


இப்பதிகங்களின் வரிகள் இயற்கையில் அவருக்கிருந்த ஈடுபாட்டை நமக்கு உணர்த்துவதாய் அமைந்துள்ளன. அவர் நேரில் தரிசித்திராத திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் சூழலை தலயாத்திரை வந்துசென்ற அடியவர்கள் மூலம் அறிந்துகொண்டு அந்த அழகினை தனது மனக்கண்களால் பருகி ‘குரைகடல் ஓதம்’ என்று ஆர்பரிக்கும் கடலினை விழித்து அங்கு வீற்றிருக்கும் இறைவனின் அழகினைப் பாடியிருக்கிறார் சம்பந்தர்.

தலங்களின் மேல் பதிகங்கள் பாடுவதின் மூலம் சைவசமயக் கருத்தக்களை இலகுவாக பக்தர்களிடம் கொண்டு சேர்க்க நினைத்த ஞானசம்பந்தர் இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக தமிழ் நாட்டுத் தலங்களின் வரிசையில் கடல்கடந்த ஈழத்துச் சிவத்தலங்களான திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம்  என்பனவற்றை இணைத்துக் கொண்டார். இச்செயல்முறையானது கடல் கடந்த தேசங்களில் சைவசமயம் செல்வாக்குச் செலுத்த உறுதுணை புரியும் என அவர் நம்பினார். அத்துடன் அவருக்குப் பின்வந்தவர்களுக்கும் வழிகாட்டினார்.


ஞானசம்பந்தரைத் தொடர்ந்து அவர் சமகாலத்தவரான 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர் (அப்பரடிகள்)‘தெக்காரும்மாகோணத்தானே’ என்றும், 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் ‘மறைக்காட்டானே திருமாந்துறையாய் மாகோணத்தானே’ என்றும், 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் பெருமான்   ‘ஆழிபுடைசூழ்ந்தொலிக்கும் ஈழந்தன்னில் மன்னு திருக்கோணமலை மகிழ்ந்த செங்கண்மழவிடையார்’ எனப் பெரியபுராணத்திலும், 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமாபதி சிவாச்சாரியார் ‘மன்னு திருக்கோணமாமலையின் மாதுமை சேர் பொன்னே கோணேசப்புரத்தானே’ என்றும் , 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த  அருணகிரிநாதர்  ‘திருக்கோணாமலை தலத்தாறு கோபுர நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே’ என்றும், 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குருநமச்சிவாய தேசிகர் ‘கோணமா மலையில் வாழும் கோதிலா ஆதியே நீ’என்றும் போற்றிப்பாடிட முன்னுதாரணமாக இருந்தவர் ஞானசம்பந்தர்.

தொடர்ந்து வாசிக்க, புகைப்படங்களைக் காண கீழே சுட்டவும்...



பகுதி - 3  வாசிக்க.... Koneswaram 2015 - Photo Galleries




த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

5 comments:

  1. சம்பந்தர் பதிகங்களுடன் நினைவூட்டிய
    பயன்தரும்
    திருமலை வரலாறு!

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா
    எமது மண்ணில் அமர்ந்திருக்கும் கோண நாதர் பற்றி தேவார முதலிகளின் ஆதாரத்துடன் வரலாற்றை பறை சாற்றிய விதம் வெகுசிறப்பு ஐயா... பகிர்வுக்கு நன்றி..
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  4. உன் பணி மிகப்பெரியது ஜீவா! அது இப்போது விளங்காது. வருங்காலம் சொல்லும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா

      Delete