அவரது பெயர் திரு.வீரக்குட்டி புண்ணியமூர்த்தி பெயருக்கேற்றாப்போல் நல்ல மனிதர் என்று ஊரில் பெயர் எடுத்தவர். மின்சாரமில்லாத 1950 களில் மடிப்புக்குலையாத வெள்ளைநிற மேலாடையுடன் வேட்டியும், சால்வையுமாக எங்கள் ஊரை வலம் வந்தவர். உடுத்திருக்கும் உடுப்புமட்டுமில்லாமல் அவரது நெற்றியில் இருக்கும் சந்தணப் பொட்டுக்கூட மிகநேர்த்தியாக இருக்கும் எனப்பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
04.06.1974 இல் அவரது மரணத்திற்குப் பின்னர் 20.02.1978 ஆம் ஆண்டு முதல் எனது பெற்றோரால் பொறுப்பேற்கப்பட்ட இந்த வீடு இன்றும் அவரது ஆசீர்வாதத்துடன் நிலைத்திருக்கிறது. எனது பெற்றோர் மிகக்கடினமான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்களது வாழ்க்கையை கொண்டு நடத்த ஆதாரமாக இருந்தது இந்த வீடு. அவர்களது சுகதுக்கம் அனைத்தினதும் சாட்சியாக இருக்கிறது. மிகக் கடினமான வேளையொன்றில் கைநழுவிப் போககிருந்த வீட்டைக்காப்பாற்றிக் கொள்ள வயல்களை விற்றதற்கு அதுவே காரணமாக இருந்திருக்கும் என நினைக்கின்றேன்.
வலைமனை இதுவும் நமக்கொரு வீடு. நம் சிந்தனைக் குழந்தைகள் பிறந்து தவழ்கிற வீடு. நட்புக்கள் வருகிற வீடு. ஏதோ காரணத்தால் ஒரு நாள் நம் வலைமனைக்கு வர முடியாவிட்டால் என்னமோ தொலைச்சா மாதிரி இருக்கில்ல. பரம்பரையா வாழ்ந்து, நாம விளையாடி, வளர்ந்து நம் விருப்பத்தில் எங்கயோ பிழைப்புன்னு போனாலே வீடு கவனம் வந்திச்சோ எல்லாத்தையும் கடாசிட்டு வந்து ஒரு ஒரு செங்கல்லா தொட்டுத் தடவி, ஒரு ஒரு செடியா பார்த்து பேசி கொஞ்சி, நம் மண்ணின் சில்லிப்பில் கால் பதிய நிக்கமாட்டமான்னு ஏங்கிப் போகுமில்லையா? அது மறுக்கப்பட்ட ஒரு இதயத்தின் வலி. ஆறுதல் சொல்ல முடியாத வலி. அதை விட ஆயிரம் வீடு வாங்கினாலும் அத்தனையும் கொடுத்து விடுகிறேன். இடிந்து சிதிலமானாலும் பரவாயில்லை. அந்த மண் எனக்கு வேண்டும் என என்றும் வலிக்கும் வலி. ஜீவநதியில் ஜீவராஜ் வீடு என்ற இடுகையில் அந்த வலியை நாம் உணர வைக்கிறார். வலைச்சரத்துக்காக நான் தேடியதில் கிடைத்த இன்னோரு வைரம் இவர் எழுத்து.
அந்தப் பதிவின் இணைப்பு - வீடு - ஞாபகச்சிதறல்
இந்த வீட்டை எங்களுக்கு ஒருவரப்பிரசாதமாக விட்டுச்சென்ற எனது அம்மாவின் அப்பா திரு.வீ.புண்ணியமூர்த்தி அவர்கள் எனக்காக ஒரு வரலாற்றுப் பொக்கிஷத்தையும் விட்டுச் சென்றிருக்கிறார். அது ஒரு பழமையான மருத்துவச் சுவடி. ‘வாகடம்’ என அதை அழைக்கிறார்கள். அதன் பழமைபற்றி எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. பல நூற்றுக்கணக்கான ஓலைச்சுவடிகளில் பல அவரது இறப்புக்குப்பின் சொந்தங்களிடையே சிறுசிறு பகுதிகளாகப் பிரிந்துபோய் அவற்றில் பல யுத்தகாலத்தில் அழிந்து போய்விட ஒரு சிறு பகுதி அம்மாவிடம் இருந்தது எனக்குக் கிடைத்திருக்கிறது.
ஆயள்வேத வைத்தியரான திரு. வீரக்குட்டி அவர்களின் மூத்த மகன் திரு.வீ.இராசையா அவர்கள் கலைத்துறையில் ஆர்வமுள்ளவராக இருந்ததுடன் கள்ளிமேட்டில் ஆயள்வேத சிகிச்சைகளையும் வழங்கிவந்துள்ளார். இரண்டாவது மகன் திரு.வீ.பொன்னுத்துரை அவர்கள் நடுப்பிரபந்திடலில் கண் தொடர்பான ஆயுள் வேத சிகிச்சைகளில் பெயர் பெற்றவராகத் விளங்கியதுடன் தம்பலகாமம் கிராமச்சபைத் தலைவராகவும் சிறப்புறக் கடமையாற்றியுள்ளார். நான்காவது மகன் திரு.வீ.செல்லப்பிள்ளை அவர்கள் நடுப்பிரபந்திடலில் உடலில் தோன்றும் சீழ் கட்டிகளுக்கான ஆயள் வேத சிகிச்சையாளராகச் சிறந்து விளங்கி இருக்கிறார். மூன்றாவது மகனான எமது அம்மப்பாவாகிய திரு.வீ.புண்ணியமூர்த்தி அவர்கள் ஆயுள்வேத சிகிச்சைகளில் முழுநாட்டத்துடன் ஈடுபடாவிட்டாலும் தேடிவருபவர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் உதவுவதற்காக இக்கலையைப் பயன்படுத்தி இருக்கிறார்.
எனவே இந்த ஓலைச்சுவடி திரு.வீரக்குட்டி அவர்களிடமிருந்து திரு.வீ.புண்ணியமூர்த்தி அவர்கள் ஊடாக எனது தாயாரை வந்தடைந்திருக்க வேண்டும் என அனுமானிக்க முடிந்தது. அதனால் இந்த ஓலைச்சுவடியின் காலம் குறைந்த பட்சம் 120 வருடங்களைத் தாண்டுகிறது எனக் கருதலாம். அதற்கப்பால் ஆராய்வதற்கான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.
எண்ணிக்கையில்சிறிய அளவு என்றாலும் அவற்றினை ஆவணப்படுத்துவதற்கான முன்னகர்வுகள் இடம் பெற்று வருகிறது. எந்த வரலாற்றினைத் தேடி ஊரூராய் அலைந்து திரிகிறேனோ அதுபோல் ஒரு வரலாற்றுப் பொக்கிஷம் வீட்டில் வெளிப்படுத்தப்படாமல் இருந்தது அன்றுதான் புரிந்தது.
தங்கள் ஞாபகங்களை மட்டுமல்ல சில பெறுமதியான வரலாற்றுப் பதிவுகளையும் விட்டுச் சென்ற நம் முன்னோர்கள் உங்கள் வீட்டிலும் ஏதோவோர் சுவரில் ஆர்ப்பாட்டமில்லாமல் ஆணியடித்து மாட்டப்பட்ட படங்களில் உறைந்துகொண்டிருக்கலாம்.
148 ஓலைச்சுவடிகள் அடங்கிய மருத்துவ ஓலைச்சுவடிகள் தற்பொழுது யாவரும் வாசிக்கும் வண்ணம் PDF வடிவில் நூலகத் திட்டத்தில் கிடைக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள படத்தின் மேல் சுட்டுவதன் மூலம் மருத்துவ ஓலைச்சுவடிகனை வாசிக்கலாம்.
நட்புடன் ஜீவன்.
tjeevaraj78@gmail.com
வணக்கம்
ReplyDeleteஐயா
தங்களின் வரலாற்று வழியை அறிந்தேன்மிகவும் சிறப்பாக வாழ்ந்தவர்கள் மட்டுமல்லாது பல துறைகளில் பல கலைகளை கற்றவர்கள் என்பதையும் அறியமுடிந்தது... தாத்தாவின் வீடு பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்... அவரின் வழி வந்த கிடைக்க பெறாத பொக்கிஷமான ஓலைச்சுவடி பற்றியும் சொல்லியுள்ளீர்கள் கிடைத்ததை இனி ஆவணப்படுத்துவதே நோக்கம் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு.
ReplyDelete".... ஒரு ஒரு செங்கல்லா தொட்டுத்தடவி, ஒரு ஒரு செடியா பார்த்துப் பேசி,கொஞ்சி, நம்ம மண்ணின் சில்லிப்பில் கால் பதிய நிக்கமாட்டமான்னு ஏங்கிப்போகுமில்லையா..?"
ReplyDelete"அது மறுக்கப்பட்ட ஒரு இதயத்தின் வலி..!!! ஆறுதல் சொல்ல முடியாத வலி..!!!!!"
"அதைவிட ஆயிரம் வீடு வாங்கினாலும் அத்தனையும் கொடுத்து விடுகிறேன்.. இடிந்து சிதிலமானாலும் பரவாயில்லை அந்த மண் எனக்கு வேண்டும்" என என்றும் வலிக்கும் வலி..
என்ற மேலுள்ள வரிகள் என்னை 80, 90 களின் யாழ்ப்பாணத்திற்கு "வேண்டாம் வேண்டாம்...." என்று கதறக்கதற, வலுக்கட்டாயமாய் இழுத்துச் செல்வதாய் உணர்கிறேன்!!
ஹ்ம்.. கதறக் கதறவே தான்..
ஏனெனில், அதே தான்... அதே தான்...
"ஆறுதல் சொல்ல முடியாத வலி.." அது!! அதைத்தாங்குவதற்கெல்லாம் ஒரு தனியான 'திராணி' வேண்டும்!!
அதனாலேயே மறந்து விட்டதாய் நம்மை நாமே ஏமாற்றி வாழ முயலும், ஆனாலும், "ஸ்வாசத்தின் வாசங்களில் இரட்டிப்பு ஈரமாய் இந்தக்கணமும் வீசிக்கொண்டிருக்கும் இதம் காயாத இன்ப வாசம்" அது..!!
- பானு சுதாஹ்ரன் -
சந்தர்ப்பங்களும், சம்பவங்களும் வேறுபட்டாலும் உலகெல்லாம் மனிதர்களின் உணர்வுகள் ஒன்றானவையே. மிக்க நன்றி.
Delete