“ஜீவா நான் ஊருக்கு வந்துவிட்டேன்” என்ற உற்சாகமான குரல் எனது அன்றைய நாளைச் சந்தோசத்துடன் தொடங்கி வைத்தது. நீண்ட நாட்களாக நான் எதிர்பார்த்திருந்த அந்தக் குரலுக்குரியவர் கலாநிதி சரவணபவன் அவர்கள். திருகோணமலையின் பண்டைய வரலாற்றினை இலகுதமிழில் கால ஒழுங்குக்கு அமைய ‘வரலாற்றுத் திருகோணமலை’, ‘காலனித்துவ திருகோணமலை’ என்ற இருநூல்களை ஒழுங்குபடுத்தப்பட்ட வரலாற்று ஆவணங்களாக நமக்கு உருவாக்கித்தந்தவர். பார்ப்பதற்கும், பழகுவதற்கும் எளிமையான, இனிமையான மனிதர்.
ஒரு வாசகனாக அவருடைய நூலுடனான அறிமுகம் 2003ல் வெளிவந்த ‘வரலாற்றுத் திருகோணமலையுடன்’ ஆரம்பமானது. ஈழத்தமிழரின் வரலாற்றுத் தடங்களை கால ஒழுங்கு நிரலில் வரிசைப்படுத்தி எழுதுவதில் பல சிரமங்கள் உள்ளதாயினும், கிடைக்கும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு திருகோணமலையின் பெருங்கற்கால ஆதிக்குடிகள் முதல் போர்த்துக்கீசரின் வருகைக்கு முன்னுள்ள காலப்பகுதி வரையான வரலாற்றினைப் பதிவு செய்திருந்தது இந்நூல்.
பலமுறை வாசித்தும் இன்றுவரை சுவாரிசம் குன்றாமல் இருக்கும் ‘வரலாற்றுத் திருகோணமலை’ என்ற நூலின் முதல் மூன்று அத்தியாயங்களும் திருகோணமலையின் ஆதிக்குடிகள் தொடர்பான சான்றாதாரங்களை பிராமிக் கல்வெட்டுக்கள், சங்ககால இலக்கியங்கள், தீபவம்சம், மகாவம்சம், சூளவம்சம், புராணங்கள் என்பவற்றின் உதவி கொண்டு விரிவாக ஆராய்கிறது.
அதைத் தொடர்ந்து வரும் அத்தியாயம் திருக்கோணேஸ்வரத்தின் தோற்றகாலம் தொடர்பான தேடல்களின் ஆவணப்படுத்தலாக அமைகின்றது. அதனைத் தொடர்ந்து வரும் தென்னிந்திய அரசுகளின் எழுச்சிக்காலம் என்ற அத்தியாயம் திருகோணமலை வரலாற்றில் நேரடியான அரசியல், சமூக, பண்பாட்டுப் பாதிப்புக்களை உருவாக்கிச் சென்ற பல்லவ, சோழ, பாண்டிய அரசுகளின் மேலாதிக்கம் தொடர்பாக ஆராய்கின்றது. இதில் குறிப்பாக சோழப் பேரரசு எழுச்சியுற்றிருந்த காலத்தில் திருகோணமலை கொண்டிருந்த முக்கியத்துவத்தினைப் புரிந்து கொள்வதற்கு உறுதுணையான பல சாசன ஆதாரங்களை முன்வைத்திருப்பது குறிப்பிடத்தது.
இவற்றைத் தொடர்ந்து திருகோணமலைப் பிரதேசத்தில் காலத்தால் அழியாத பதிவுகளை விட்டுச் சென்ற கஜபாகு, குளக்கோட்டன், வன்னிபங்கள் தொடர்பான ஆவணப்படுத்தல்கள் சரித்திர ஆதாரங்களுடன் இடம்பெற்றிருந்தது. நூலின் இறுதி அத்தியாயங்கள் திருகோணமலை சமூகத்தின் சமூக வழமைகள், மதங்கள், தொல்மரபுகள் என்பவற்றின் ஆராய்வுகளுடன் நிறைவுபெறுவதாக அமைந்திருந்தது.
வாசித்து வியந்த எழுத்தாளர்களுடன் பேசிப்பழகக் கிடைத்த வாய்ப்புகள் அற்புதமானவை. அவ்வாறானதொரு அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித்தந்தது ஜீவநதி வலைப்பதிவு (www.geevanathy.com) வரலாற்றுத்துறை சார்ந்த ஆர்வத்துடன் தொடர்ந்து ஒரு தலைமுறையினரின் (வேலாயுதம், தங்கராசா , ஜீவராஜ் ) கட்டுரைகளைப் பிரசுரித்து வரும் ஜீவநதி வலைப்பதிவு இணைய வெளியூடாக எனக்குப் பல அறிஞர்களின் அறிமுகங்களை உருவாக்கித்தந்திருக்கிறது.
இணையவெளி அறிமுகம் தரையில் சந்திப்பாக இடம்பெற்ற நாளும் வந்தது. 2010 இல் ஒரு மாலை வேளையில் மிக எளிமையான தோற்றத்தில், அவரது இரண்டாவது வரலாற்று நூலான ‘காலனித்துவ திருகோணமலை’ நூல் வெளியீட்டு அழைப்பிதழுடன், பெருந்தன்மையோடு எனது வீட்டுக்கு வந்திருந்தார் அவர். கேட்பதற்கு நிறையக் கேள்விகள் என் மனதில் இருந்தபொழுதிலும், அவரது நூல் வெளியீட்டு வேலைகளை கருத்தில் கொண்டு ஒரு குறுகிய சந்திப்பாக அது அமைந்திருந்தது. இருந்தும் ஒவ்வொரு எழுத்தாளனும் தான் எழுதிமுடிக்காத பல நூல்களை மனநூலகத்தில் சுமந்தபடி சமூகத்தில் சாதாரணமாக உலவிக்கொண்டு இருக்கிறான் என்ற அடிப்படை உண்மையை என்னில் பதியவைத்த சந்திப்பாக அமைந்தது அன்றைய முதல் சந்திப்பு.
காலனித்துவ திருகோணமலை என்ற நூல் திருகோணமலை வரலாற்றினை ஜரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்களின் கொடி திருகோணமலைக் கோட்டையில் ஏற்றப்பட்ட 1623 ஆம் ஆண்டு முதல், திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் இருந்து பிரித்தானியக் கொடி இறக்கப்பட்ட 15.10.1957 வரையான காலப்பகுதியினை பதிவு செய்கிறது இந்நூல். இலண்டன், நெதர்லாந்து, பிரித்தானிய ஆவணக் காப்பகங்களின் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு சுவாரிசமான ஆனால் அவ்வாணங்கள் சொல்லும் கருத்துக்கள் மீதான விமர்சனமற்ற வரலாற்றுப்பதிவாக அமைகிறது இந்நூல்.
திருகோணமலையில் ஒல்லாந்து ஆளுனராகக் கடமையாற்றிய Jacques Fabrice van Senden அவர்களின் சுற்றுப்பயண அறிக்கை (15.05.178 - 21.06.1786) அடிமைப்பட்ட சமூகம் ஒன்றின் மீதான காலனித்துவ ஆட்சியாளரின் பார்வைப்பதிவுகள் என்றாலும் திருகோணமலை வரலாற்றின் மிக முக்கிய விடையங்கள் அடங்கிய ஒரு பொக்கிசமாக இந்நூல் இருக்கிறது. இதன்பின் வருபவை பெரும்பாலும் போர்த்துக்கீசு, ஒல்லாந்து, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் திருகோணமலை மீது செலுத்திய அதிகார மாற்றங்கள் தொடர்பாகப் பேசுபவையாக அமைந்துள்ளன. இடையிடையே காலனித்துவம் திருகோணமலை மக்களின் வாழ்வியலில் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றிய சிறுகுறிப்புகளும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினக்குரலின் வாரமலரில் தொடராக வெளிவந்த திருகோணமலை மீதான யப்பானியத் தாக்குதல் ஒரு நேர்முக வர்ணனையாளரின் விறுவிறுப்புடன் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. காலநித்துவ ஆட்சியில் சுதேச தமிழ்ச் சிற்றரசுகளின் இறையாண்மை பாதிக்கப்பட்டு, வரலாற்று பண்பாட்டு பெருமிதங்கள் தகர்க்கப்பட்ட பின்னர் ஈழத்தமிழர் வரலாற்றாதாரங்களில் ஐரோப்பிய ஆவணங்கள் தவிர்க்க முடியாத முக்கிய இடம்பெறுவதை எடுத்துக்காட்டும் ஒரு நூலாக இது அமைந்துள்ளது.
இந்நூலின் வெளியீட்டினைத் தொடர்ந்து நேரங்கிடைக்கும் போதெல்லாம் அவர் வீட்டுக்குச் சென்று திருகோணமலை தொடர்பான வரலாற்றுத் தகவல்களைப் பற்றி கலந்துரையாடுவதை வழமையாகக் கொண்டிருந்தேன். இந்தச் சந்திப்புகளின் பலனாக பல அரிய புத்தகங்களையும், ஆவணங்களையும், காணொளிகளையும் அவரிடமிருந்து இரவல் வாங்கிப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
இவ்வாறு நாட்கள் நகர்கையில் ஒரு நாள் (27.12.2013) தம்பலகாமம் பொற்கேணியில் சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அவரை அழைத்துச் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தப் பயண நிகழ்வினை ஒழுங்கமைத்திருந்தவர் திரு.விஜேந்திரன் அவர்கள்.
தம்பலகாமம் சிவசக்திபுரத்தைச் சேர்ந்த இந்த இளைஞர், கண்டி பேராதனைப் பல்கலைக் கழகக் கலைப்பட்டதாரி. தம்பலகாமம் தொடர்பான வரலாற்றாதாரங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்பதில் துடிப்பாக இயங்கும் இளைஞர். அன்றையத் தேடலில் என்னுடன் நண்பர் விஜேந்திரன், கலாநிதி.கனகசபாபதி சரவணபவன், திருமதி.சாந்தினி சரவணபவன், வே.தங்கராசா ஆகியோர் இணைந்திருந்தனர்.
தம்பலகாமம் பொற்கேணியிலுள்ள அழிவடைந்த ஓர் ஆலயத்தின் எச்சங்களாக இருக்கலாம் என்று நம்பப்படும் ஒரு பகுதிக்கு முதலில் சென்றிருந்தோம். அருகிலேயே அவ்வாலயத்திற்குச் சொந்தமான கேணி ஒன்று தூர்ந்துபோன நிலையில் காணப்படுகிறது. பண்டைய நாட்களில் பிரபல்யமாக இருந்த இந்த இடத்திற்கு பொற்கேணி என்று பெயர்வர இவை காரணமாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது.
புராதான பொருட்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த அவர் நாங்கள் நின்ற இடத்தினைச் சுற்றி கிடைத்த மட்பாண்ட ஓடுகளை ஆர்வத்துடன் சேகரித்துக் கொண்டிருந்தார். பெரும்பாலும் வரலாற்றுத் தேடல்களுக்காக கிராமங்கள் தோறும் கலாநிதி சரவணபவனுடன் உடன் செல்லும் இவர் அங்கு தகவல் சேகரிப்பதிலும், பின்னர் அவை நூலுருவாகும் பொழுது கணனித் தட்டச்சுச் செய்வதிலும் உதவி அவரது சாதனைகளுக்குத் துணைபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாங்கள் அனைவரும் புராதான ஆலயச்சிதைவுகளும், தூர்ந்துபோன கேணியும் இருந்த இடத்தினிலிருந்து சேனவழிக்குளக் கரையினை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தோம். அந்தப்பயண நேரத்தில் பொற்கேணிப் பகுதியில் சிலர் புதையல் எடுக்க முற்பட்டதையும், அதன்போது அவர்கள் கிராமதேவதை பூசைக்காக நாகபாம்பு ஒன்றினைப் பலியிட்டதையும் நண்பன் விஜேந்திரன் விபரமாகக் கூறிக்கொண்டு வந்தார். நடுநிசி நேரத்தில் அவர்களது சாந்தி பூசைகள் முடிவுறும் நேரத்தில் பெரிய ஒளிப்பிழம்பொன்று பொற்கேணிப்பகுதியில் தோன்றவே புதையல் தோண்டும் பணியைப் பாதியில் விட்டுவிட்டு அனைவரும் ஓடிவிட்டதாக விஜேந்திரன் கூறிவந்தபோது சதுப்பு நிலங்களில் தோன்றும்’மெதேன்’ வாயு (கொள்ளிவாயு) பற்றிய எண்ணங்கள் என் மனத்தில் தோன்றி மறைந்தன.
“ஒரு காலத்தில உங்கட ஊரில நரபலி நடந்தது தெரியுமா?” எனக் கேட்டார் கலாநிதி சரவணபவன் அவர்கள். விஜேந்திரன் சொல்லி வந்த நாகபாம்பு பலியிடலின் தொடாச்சியான உரையாடலாக இது இடம் பெற்றது. இன்றைய நாட்களில் தம்பலகாமம் ஆதி கோணநாயகர் ஆலய 18ஆந் திருவிழாவின்போது வைராவியாருக்கு அலகு பாய்ச்சும் நிகழ்வு நடைபெறுகிறது. ஆனால் பண்டைய நாட்களில் பன்னிரண்டு வருடங்களுக்கொருமுறை வைராவியார் தொழும்பு முறையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றின் இளம்பெண் ஒருவரை திருவிழா இறுதிநாளன்று பலியிடும் வழக்கம் இருந்தது. எனினும் இந்த வழமை பின்னர் திருகோணமலை பூபால வன்னியனார் தலையீட்டினால் ‘வைராவியாருக்கு அலகு பாய்ச்சும்’ நிகழ்வாக மாற்றியமைக்கப்பட்டதாக மரபுவழிக் கதைகள் மூலம் அறியக் கூடியதாக இருக்கிறது எனக் கூறினார் அவர்.
திருகோணமலை பூபால வன்னியனார் தம்பலகாமம் ஆதி கோணநாயகர் ஆலயத்திற்கு வருகைதந்தபோது பூரண மரியாதையுடன் வரவேற்கப்பட்ட நிகழ்வு ஆலய உட்பறச் சுவரில் சித்திரமாக வரையப்பட்டிருந்தது. எனினும் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக நடந்த ஆலயத் திருத்தவேலைகளின்போது நம்மவர்கள் தூரநோக்குடன் சிந்திக்காது செயற்பட்டமையால் அவ்வரிய பொக்கிசங்களை நாம் இன்று இழந்துவிட்டோம்.
இது தொடர்பாக பல கட்டுரைகளை எழுதியிருந்த அமரர் தம்பலகாமம் க.வேலாயுதம் அவர்களை மனதில் நிறுத்தியே கலாநிதி சரவணபவன் அக் கேள்வியினைக் கேட்பது புரிந்தது. எனது அறிமுகம் அப்பாவை (வே.தங்கராசா) கலாநிதி சரவணபவன் அவர்களுடைய நண்பர் பட்டியலில் ஒருவராகச் சேர்த்தது. அவர் மூலமாக அப்பப்பாவின் எழுத்துக்களைப் படித்து, அவருக்கு அபிமானியாகிப்போன அவர் ஒவ்வொரு முறையும் என்னைக் காணும்போது சொல்வார் “ஜீவா உங்கள் அப்பப்பா எழுதிப் பதிவு செய்ததில் 10 வீதம் கூட நீங்களும், உங்கள் தகப்பனாரும் இன்னும் செய்யவில்லை”என்று.
அமரர் தம்பலகாமம் க.வேலாயுதம் மேல் அவர் கொண்டிருந்த அபிமானம் அவரது மூன்றாவது நூலான ‘இது குளக்கோட்டன் சமூகம்’ என்ற நூலில் 63வது பக்கம் முதல் 83வது பக்கம்வரை இடம்பெறும் ‘பலி’ தொடர்பான கட்டுரையில் 68ஆம் பக்கத்தில் ‘தம்பலகாமம் நரபலி’ என்ற தலைப்பின் கீழ் மிக விரிவாக கோணேசர் கல்வெட்டுப் பாடல்களின் ஆதாரத்துடன் மிகச் சிறப்பாக விளக்கியிருக்கிறார்.
‘பலி’ என்ற இந்தப்பகுதி பலியிடலின் தோற்றவரலாறு, மடை, மிருகபலி , தற்கொலைப்படை, நவகண்டம் (போருக்கு முன்னர் வீரர்களை காளி சிலைக்குப் பலியிடல்) போன்றவற்றை விரிவாக ஆராய்கிறது. இதில் நாட்டார் வழிபாட்டில் பேணப்பட்ட வட்டார மரபுவழிச் சடங்குகள் பற்றிய நடைமுறைகள் விளக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டுரையின் இறுதியில் பலியிடும் சிறுதெயவ வழிபாட்டினை எதிர்த்த புத்த, சமண மத தத்துவங்கள் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன.
பலிடல் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களோடு சேனைவழிக் குளத்தின் கரையினை நாங்கள் வந்தடைந்திருந்தோம். இந்தக்குளக்கரைக்கு அண்மையில் ‘கல்நெருக்கம்’ என்ற கருங்கற்பாறைகள் கொண்ட இடம் ஒன்றிருக்கிறது. மெல்லிய ஈரலிப்புடன் குளக்கரையிலிருந்து வீசிய காற்றும், உச்சிவெயில் நேரத்திலும் மிகக் குழுமையான நிழலினைத்தந்த அந்த இடமும் எங்கள் பயணத்தின் இளைப்பாறுமிடமாக அதை மாற்றியது.
ஆரம்பத்தில் இந்துமதத்தின் தொல் குடிமரபுகளில் சிறுதெய்வ வழிபாடுபற்றிப் பேசும் அக்கட்டுரை கண்ணகி, பேச்சியம்மன், மாரியம்மன், காளி , சப்தகன்னியர்கள் போன்ற பெண் தெய்வ வழிபாட்டினை விரிவாக ஆராய்கிறது. அத்துடன் சாமியாட்டம், தீமிதிப்பு, பலி ,கந்தளாய்க் குளக்கட்டு மடை , மந்திரமும், சடங்குகளும் போன்ற தொல்குடி மரபுகளையும் ஆராய்கிறது. இவற்றுடன் திருகோணமலை வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ள அகத்தியர் ஸ்தாபனம் தொடர்பான தகவல்களையும் பதிவு செய்துள்ளது.
‘அட்டதிக்கும் புகழ்ந்தருளும் நீலாசோதயன்’ என்று கோணேசர் கல்வெட்டுப் புகழும் நீலாசோதயனின் மிகவும் பலம் பொருந்திய படையணி பின்னாட்களில் பூதங்களாகச் சித்தரிக்கப்பட்ட வரலாற்றையும் இந்நூல் ஆராய்கிறது. நீலாசோதயனைப் போலவே குளக்கோட்டன் காலத்தில் குறுநில அரசர்களாக இருந்த வெண்டரசன், நீலாப்பணிக்கன், குருவிநாச்சியார் போன்றவர்களின் நாட்டார் இலக்கியங்கள் சார்ந்த கதைகளை அடிப்படையாகக் கொண்ட ஆராய்வு இந்நூலில் மூன்றாவது அத்தியாயத்தில் 224ஆம் பக்கத்திலிருந்து 229ஆம் பக்கம்வரை இடம்பெற்றுள்ளது.
கந்தளாய், தம்பலகாமம் பகுதிகளை ஆட்சி செய்த சுதேச அரசனான வெண்டரசன் குளக்கோட்டனுடன் முரண்பட்டுக் கொண்டதையும் இவ்வரசனால் கந்தளாயில் அமைக்கப்பட்ட ‘வெண்டரசன் குளம்’ இன்றுவரை ‘வெண்டரசன் குளம்’ என அழைக்கப்படுவதையும் இந்நூல் பதிவு செய்துள்ளது. தம்பலகாமப்பற்றை ஆட்சிபுரிந்த வெண்டரசனுக்கு நிகரான குறுநில அரசனாகக் கட்டுக்குளப்பற்றில் ஆட்சி புரிந்த நீலாப்பணிக்கன் பற்றிய நாட்டார் கதைகளும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.
தம்பலகாமம் பொற்கேணியில் தொடங்கிய அன்றைய நாளுக்கான தேடல்கள் சிவசக்திபுரத்தில் முடிவடைந்தது. அழைத்தச் சென்ற நண்பர் விஜேந்திரனுக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றோம். திரும்பிவரும்பொழுது ‘இன்று தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய திருவிழாக்களில் பெண்தொழும்பாளர் அபிநயம் பிடிப்பதுபோல் செய்வது பண்டைய நாட்களில் ஆலயச்சடங்குகளில் தேவதாசிகள் பங்கேற்றதின் குறியீடுகள்’ என்றார் கலாநிதி சரவணபவன் அவர்கள்.
இப்பொழுது உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம்.’இது குளக்கோட்டன் சமூகம்’ என்ற நூல் தம்பலகாமத்தை மட்டும்தான் பேசுகிறதோ? என்று. அது என்னுடைய ஆர்வக்கோளாறு. எந்தப்புத்தகம் கைக்குக்குக் கிடைத்தாலும் அதில் எங்கெங்கு எங்களுடைய ஊரைப்பற்றிய குறிப்புகள் வருகிறது என்று முதலில் தேடி வாசித்து விடுவதை சிறுவயதிலிந்தே வழக்கமாகக் கொண்டிருந்ததன் விளைவு இது. எனக்குத் தெரிந்து தம்பலகாமத்தின் கிராமிய வழிபாட்டினை முறையாகப் பதிவு செய்த நூலாக இது அமைகிறது. அது போலவே திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர், திரியாய், கந்தளாய், நிலாவெளி, குச்சவெளி, கப்பல்துறை, விளாங்குளம், தென்னமரவாடி போன்ற பல புகழ்பூத்த கிராமங்களைப் பதிவுசெய்யும் இந்நூலினை முழுமையாக வாசிக்க நீண்ட கால அவகாசமும், ஆழமான வாசிப்பும் தேவையாக இருக்கிறது எனக்கு.
என்ன இந்த மனிதர் தன்னுடைய ஊர் வரலாற்றினை மட்டுமே சொல்லிவந்திருக்கிறாரே என்று சலித்துக் கொள்ளாதீர்கள். இந்நூலின் இறுதி அத்தியாயமான ‘வரலாறும் ,வழிப்போக்கர்களும்’ என்ற பகுதியில் 233ஆம் பக்கத்தில் இதற்கு விடை சொல்லப்பட்டுள்ளது. சிறிய அலகுகளாக வாழும் மண்ணையும், மரபுகளையும் நுணுக்கமாக ஆராய்வதின் மூலமே வரலாறு நெருக்கமடையும். இதனையே வரலாற்று விமர்சகர்கள் நுண்வரலாற்று எழுத்தியல் என்று அடையாளம் காட்டுவதாக குறிப்பிடுகிறார் கலாநிதி சரவணபவன் அவர்கள். ஒவ்வொரு மனிதரும் தான் பிறந்த ஊரின் வரலாற்றை அறிவதிலும், அவற்றினை ஆவணப்படுத்துவதிலும் ஆர்வம்காட்டவேண்டியதன் அவசியத்தினை உணர்த்துகிறது இந்த அத்தியாயம்.
சிறுதெய்வ வழிபாடு, கிராமிய வழிபாட்டுச் சடங்குகள், தேவதாசி முறைமை , பிராமணர், வேளாளர் தொடர்பான சாதியக்கருத்துக்கள் என்பன இன்றைய நாட்களில் விரிவான ஆராய்வுகளும், விமர்சனங்களும் நிறைந்த பேசுபொருட்களாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவை பற்றிப்பேசுகின்ற இந்நூல் பல தர்க்கங்களையும், உரையாடல்களையும் தோற்றுவிக்கும் களமாக அமையும் என்பதில் ஐயமில்லை. அதனையே நூலாசிரியரும் எதிர்பார்பதாக தன் பின் அட்டைப்படச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்று சேர்ந்து பயணம் செய்யுங்கள்.
சேர்ந்தமர்ந்து விவாதியுங்கள்.
உங்கள் மனங்களெல்லாம் ஒன்றாகட்டும்.
- இருக்கு வேதம் (ரிக்வேத) -
திருகோணமலையிலுள்ள அன்புவழிபுரத்தில் கலாநிதி சரவணபவன் வீட்டில் அவருக்கென இந்தியாவிலிருந்து வான்வெளி மூலம் தருவிக்கப்பட்டிருந்த தனிப்பிரதியில் தம்பலகாமம் தொடர்பான பக்கங்களைப் புரட்டிப் புரட்டி வாசிப்பதும், தம்பலகாமம் பொற்கேணி பயணத்தின் ஞாபங்களை மீட்டுப் பார்ப்பதாகவும் இருந்த என்னை
‘வீட்டில எல்லோரும் நலந்தானே?’என்றவாறே சிற்றூண்டியுடன், தேநீரும் ஏந்தி நின்ற திருமதி சாந்தினி சரவணபன் அவர்களின் குரல் என்னை நிஜ உலகிற்கு கொண்டுவந்தது.
தொலைபேசியில் புத்தகங்களை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல்வழியாக கொண்டுவருவது பற்றி அச்சக உருமையாளர்களுடன் பேசிமுடித்திருந்த கலாநிதி சரவணபவன் அவர்களும்
‘என்ன புத்தகத்தைப் பற்றி இன்னும் ஒன்றும் சொல்லவேயில்லை’ என்று புன்னகைத்தவாறே கேட்டார்.
இருவரது கேள்விகளுக்கும் நடுவில் மிக அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன், கண்ணைக்கவரும் வண்ணத்தில், 264 பக்கங்களுடன் என் கைகளிலிருந்தது மிகவிரைவில் வெளியிடப்படவிருக்கும் ‘இது குளக்கோட்டன் சமூகம்’ என்ற காலப்பதிவேடு. அதனை முழுமையாக வாசித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தினால் வைக்கமனமில்லாமல் அருகிலிருந்த மேசைமேல் புத்தகத்தினை வைத்தேன். இருவரது கேள்விகளுக்கும் பதிலளித்தபின் என்னிடம் எஞ்சியிருந்தது ஒரு கேள்வி மட்டும்தான்.
‘இது குளக்கோட்டன் சமூகம்’ நூலின் வெளியீடு எப்போது?
பயணம் தொடரும்........
நட்புடன் ஜீவன்.
admin@geevanathy.com
மேலும் வாசிக்க
(பேராசிரியர் சி.பத்மநாதன் உடனான வெருகல் நோக்கிய வரலாற்றுத் தேடல்)
வணக்கம்
ReplyDeleteஐயா.
விரிவான தகவல்.. இப்படியான தகவலை எழுத்துவடிவில் அச்சுக் கோரத்தால் புத்தக வடிவம் பெறும் தகவலை பாதுகாத்தால் எதிர்காலத்தில் வருகிற எம்மவர்களுக்கு வழிகாட்டியாக அமையும்.
தங்களின் தேடலுக்கு எனது பாராட்டை கூறிக்கொள்ள விரும்புகிறேன். தொடருங்கள் பயணத்தை...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ,
ReplyDeleteவரும்நாட்களில் பதிவுகளை நூலாக்கும் எண்ணம் இருக்கிறது.
Where Can I buy this books
ReplyDeleteஇன்னும் வெளிவரவில்லை. வெளியிடப்பட்டதும் அறியத்தருகிறேன்.
ReplyDeleteவெளி வந்து விட்டனவா
Deletedear jeevaraj you are recording our historybeyond your profession. amazing job. congrates and continue it. how can i get those previous 2 books . i am eargerly waiting for the new ones publication. let me know the date of publication and convey my kind regards to the auther Kanakasabapathy Saravanabavan
ReplyDeleteஇந்தப் புத்தகங்களைப் பெற்றுக கொள்ளும் வழி கூறி உதவுங்கள்
ReplyDeleteஇந்தப் பத்தகங்களைப் பெற்றுக் கொள்ள உதவுங்கள்
ReplyDeleteதிருகோணமலை மூர்வீதி ரசாக்கியா புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.
ReplyDelete