Thursday, October 02, 2014

சம்பூர் வதனரூபனின் “அடையாளமற்றிருத்தல்” - புகைப்படங்கள்


கவிதை நூல் வெளியீடும் அறிமுகமும்.
சம்பூர் வதனரூபனின் “அடையாளமற்றிருத்தல்”
இடம்;: தி உவர்மலை விவேகானந்தா கல்லூரி
காலம்: 26.09.2014. நேரம்: மாலை 4.00 மணி.

சம்பூர் வதனரூபனின்அடையாளமற்றிருத்தல்’ என்னும் கவிதை நூல் வெளியீடும், அறிமுகமும் ‘பகிர்வின்’ ஏற்பாட்டில் திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி பல்லூடக அறையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

திருகோணமலை வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.ந.விஜேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார். வரவேற்புரையை திரு.கா.செந்தூரன்(பகிர்வு) அவர்களும் முதனுரையை திரு.கு.சுரேஸ்(பகிர்வு) அவர்களும் சிறப்பாக ஆற்ற நூல் வெளியீடு இடம்பெற்றது.

முதற் பிரதியை சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசுமாகிய திரு.சி.புலேந்திரன் அவர்கள் பெற்றுக் கொண்டார். அறிமுகவுரையை திரு.தில்லைநாதன்(பகிர்வு) ஆற்ற இலக்கிய அரசியல் எழுத்தாளர் திரு.ஆ.யதீந்திரா ‘ஒரு வாசகனின் பார்வையில் ‘அடையாளமற்றிருத்தல்’ என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

பிரதம விருந்தினரின் சிறப்புரையை அடுத்து ஏற்புரையை நூலாசிரியர் சம்பூர் வதனரூபன் ஆற்றினார். 96 பக்கங்கள் உள்ள இந்தக் கவிதை நூலில் 44 கவிதைகள் உள்ளன.  “கள்” இணையத்தள சஞ்சிகையிலும் “வார்ப்பு” இணையத்தள சஞ்சிகையிலும் “நீங்களும் எழுதலாம்” கவிதை சஞ்சிகையிலும் “கொட்டியாரப்பற்று இலக்கிய மரபு” தொகுப்பிலும் இந்நூலிலுள்ள கவிதைகள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

திரு. மு.மயூரன் அவர்கள் குறிப்பிடுவதுபோல ‘இங்கே தொகுக்கப்பட்டுள்ள வதன ரூபனின் கவிதைகள் பெரும்பாலும் 2005, 2006 இற்குப்பின்னான சம்பூரினதும், மூதூர் கிழக்கினதும் அரசியல் நிலவரத்தின் உறுத்தலாலும் உந்துதலாலும் உருவானவை என்பது மிகப் பொருத்தமானது. அவர் எழுதிய முன்னுரையின் சில பகுதிகள்.

அடையாளமற்றிருத்தல்

"இப்போதும்
மரநிழலில் இருந்தபடியே
என் ஆச்சி
சருகு பொறுக்கிச் சேர்ப்பாள்.
கேட்டால்
பயிர் வளர உரம் இடுவாளாம்
சிரிப்பு வரும்.
அவள் வாழ்வது அகதிமுகாம் என்பது
எப்பொழுதும்அவளுக்கு நினைவில் வராது. "

இலங்கையின் அண்மைக்கால அரசியல் நடப்புக்கள் பற்றியும், இலங்கையின் தேசிய இன முரண்பாடு பற்றியும், போர் பற்றியும் ஓரளவுக்கேனும் அறிந்து வைத்திருக்கும் வாசகர்களுக்கு, சம்பூர் வதனரூபனின் இக் கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகள் சொல்லவரும் பொருளையும் தொற்ற நினைக்கும் உணர்வினையும் புரிந்துகொள்வதிற் சிரமங்கள் அதிகம் இராது. எனினும், இக்கவிதைகள் உருவாகி எழுந்த பிரதேசத்தினையும் 2005இற்குப் பின்னரான அப்பிரதேசத்தின் அரசியற் போக்குகளையும் அப்பிரதேசத்து மக்களின் வாழ்வையும் அறிந்துவைத்திருப்பது இக்கவிதைகளைப் படிக்கும் வாசகர்களுக்குச் சிலவேளை உதவியாக அமையக்கூடும்.

"எனக்குப் பிடித்த வில்லுக்குளம்
அதில்
உனக்குப் பிடித்த வெண் தாமரைப் பூக்கள்.
அறிந்தேன்..இப்போது எனக்கென்று நீயும்
வில்லுக்குளத்தில் தாமரையும் இல்லையென்று."

45% இற்கு மேற்பட்டவர்கள் விவசாயத்தையும் 35% இற்கு மேற்பட்டவர்கள் மீன்பிடித்தொழிலையும் செய்துவந்த தன்னிறைவான நிலம் சம்பூர். போர்க்காலத்திலும் போருக்குப் பின்னான காலத்திலும் இலங்கையினது அரசியலில் சம்பூர் எனும் சிறு கிராமம் மிகவும் முக்கியமானதாய் இருந்துவருகிறது. இனப்படுகொலையுடன் நிறைவுற்ற இறுதிப்போரின் உச்சகட்டக் காட்சிகள் அரங்கேறிய பகுதிகளில் எல்லாம் பெயரளவிலாவது மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுவரும் நிலையில், போரின் தொடக்கத்திலேயே இலங்கை அரசபடையினரால் கைப்பற்றப்பட்டுவிட்ட சம்பூர் கிராமத்து மக்கள் இன்னமும் தமது ஊருக்குப் போக அனுமதியற்று அகதிமுகாம்களில் வாழ்ந்து வருவது ஒன்றே இந்த அரசியல் முக்கியத்துவத்தினை எளிதாக விளங்கப்படுத்திவிடும்.

இங்கே தொகுக்கப்பட்டிருக்கும் வதனரூபனின் கவிதைகள் பெரும்பாலும் 2005-2006 இற்குப் பின்னான சம்பூரினதும் மூதூர் கிழக்கினதும் அரசியல் நிலவரத்தின் உறுத்தலாலும் உந்துதலாலும் உருவானவை. இப்பிரதேசத்தில் இந்த 2005-2006 ஏன் தெளிவான ஒரு காலப் பிரிகோடாக அமைகிறது?

மண்ணை நேசித்த எல்லோராலும்
எல்லா நேரத்திலும்
மண்புழுக்களைப்போல
நிராகரிக்க முடியாதவர்களாக
மண்ணிற்குள்ளும் வெளியிலுமாக சேமிக்கப்படுகிறோம்.

அப்பாவிகளின் பகல்களின் மீது
கரியள்ளிப் பூசுகிறவர்கள்
இன்னும் வென்றுவிடவில்லை.

பிரிவினைவாதத்தை ஒழித்தல், பயங்கரவாதத்தைத் தோற்கடித்தல், நக்சல்பாரிகளை நசுக்குதல், ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் என்ற நூற்றுக்கணக்கான அழகான பெயர்களைச்சூடிய போர்கள் உலகம் முழுவதும் மக்களை வேரோடும் வேரடி மண்ணோடும் அவர்களது வாழ்விடங்களிலிருந்து பிய்த்தெறிந்துவிட்டு வளம் மிக்க அம்மக்களது நிலத்தை இலாப வேட்டைக்கும் பேராசைக்கும் தாரைவார்க்கின்ற கதைகள் சமகாலத்தின் அன்றாடச் செய்திகள். இன்றைய உலக ஒழுங்கின் மாபெரும் சதுரங்கப்பலகையில் எவரெவரதோ ஆட்டங்களுக்காக எதற்கு வெட்டப்படுகிறோம் என்றே தெரியாமல் வெட்டப்பட்டு வீழும் மதிப்பற்ற வெறும் காய்களான மக்களது உள்ளத்தினை இக்கவிதைகள் சிறிதளவிலேனும் பதிவு செய்ய முயன்றிருக்கின்றன.

வடலி வெளியீடாக வந்திருக்கும் சம்பூர் வதனரூபனின் "அடையாளமற்றிருத்தல்"  கவிதைத் தொகுப்புக்கு திரு. மு.மயூரன் எழுதிய முன்னுரை.
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

  1. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா.

    நான் நிகழ்வை சக்தி செய்தியில் அறிந்தேன் வதன ரூபன் என்னுடைய நண்பன் ஒன்றாக பழகியவர்கள் இருவரும்.. தகவலை பார்த்தவுன் மனதில் மகிழ்ச்சி பொங்கியது மேன்மேலும் வதன ரூபன் வளர எனது வாழ்த்துக்கள்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. மிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு.

    ReplyDelete