திருகோணமலையின் கொட்டியாரப்பற்றில் அடங்கியிருக்கும் இயற்கை வனப்பு நிறைந்த ஒரு ஊர்
மேன்காமம். அங்கு சுமார்
120 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு
உறுதி அண்மையில் எமக்குக் கிடைக்கப்பெற்றது.
05.06.1893 ஆந் திகதியிடப்பட்ட அவ்வுயில்
கொட்டியாரப்பற்று மேன்காமத்தில் வசித்த இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபத்தினால் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் தொழும்புகள் பற்றி ஒரு நியமன உறுதி முடித்துக் கொடுக்கப்பட்டதைச் சொல்கிறது. திருகோணமலைப் பிராந்திய தமிழர்களின் வரலாற்றாதாரங்களில் இது ஒரு முக்கிய ஆவணமாகும். மேற்குறித்த உயிலின் அடிப்படையிலும், கிடைக்கும் ஏனைய சான்றாதாரங்களின் துணைகொண்டும் வன்னிபங்களின் காலத்து திருகோணமலைப் பிரதேசத்தின் வழமைகளை ஆராயமுயல்கிறது இக்கட்டுரை.