Monday, July 14, 2014

வரலாற்றுக்கால தமிழ்ச் சிற்றரசுகள் - வன்னிபத்தின் உயில் - 1

vanniyar


இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்லபூபால வன்னிபத்தின் உயில்

திருகோணமலையின் கொட்டியாரப்பற்றில் அடங்கியிருக்கும் இயற்கை வனப்பு நிறைந்த ஒரு ஊர் மேன்காமம். அங்கு சுமார் 120 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு உறுதி அண்மையில் எமக்குக் கிடைக்கப்பெற்றது. 05.06.1893 ஆந் திகதியிடப்பட்ட அவ்வுயில் கொட்டியாரப்பற்று மேன்காமத்தில் வசித்த இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபத்தினால் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் தொழும்புகள் பற்றி ஒரு நியமன உறுதி முடித்துக் கொடுக்கப்பட்டதைச் சொல்கிறது. திருகோணமலைப் பிராந்திய தமிழர்களின் வரலாற்றாதாரங்களில் இது ஒரு முக்கிய ஆவணமாகும். மேற்குறித்த உயிலின் அடிப்படையிலும், கிடைக்கும் ஏனைய சான்றாதாரங்களின் துணைகொண்டும் வன்னிபங்களின் காலத்து திருகோணமலைப் பிரதேசத்தின் வழமைகளை ஆராயமுயல்கிறது இக்கட்டுரை.

இந்த ஆவணத்தின் முக்கியத்துவத்தினை அறிந்துகொள்வதற்கு கீழ்வரும் தலைப்புகளிலான சுருக்கமான தேடல்கள் உதவிபுரியும் அதேவேளை அவை வன்னிபச் சிற்றரசுளின் காலத்தில் இருந்த சமூக நிலைகளை விளங்கிக் கொள்வதற்கு துணைபுரிவதாகவும் இருக்குமெனலாம். இந்த அடிப்பையில்

01. வரலாற்றுக்கால தமிழ்ச் சிற்றரசுகள்
02. வன்னி அரசர் அல்லது வன்னிபம்
03. திருகோணமலை வன்னிபங்களும் அதன் தேசவழமைகளும்
04. கொட்டியாரப்பற்று வன்னிமை
05. இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபத்தின் உயில்.
என்பனவற்றினை தனித்தனியே ஆராய்தல் பொருத்தமானதாக இருக்கும்.

வரலாற்றுக்கால தமிழ்ச் சிற்றரசுகள்

vanniyar

வன்னியரசுகளின் வருகைக்கு முன்பாக ஈழத்தில் பல தமிழ் குறுநில அரசுகளின் சுயாட்சி நிலவிவந்தன என்பதற்கு இலங்கையின் வரலாற்று உதயகாலத்திற்குரிய ‘பிராமிச் சாசனங்கள்’ ஆதாரமாக இருக்கின்றன. அவ்வாறு நிலவிவந்த தமிழ் குறுநில அரசுகள் இலங்கையின் பல பாகங்களிலும் நீண்டகாலம் நிலைபெற்றிருந்தது என்பதற்கும் இச்சரித்திரச் சான்றாதாரங்கள் உறுதியளிக்கின்றன.

ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுக்களில் வேள் (வேள) , ஆய் (அய) , உதி , சிவ , அபய, கமனி ஆகிய தமிழச் சிற்றரசர்களைக் குறிக்கும் பெயர்கள் காணப்படுகின்றன. வேள், ஆய் என்ற தமிழ் சிற்றரசர்களைக் குறிக்கும் பல கல்வெட்டுக்கள் அனுராதபுரம், களனி, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, பூநகரி, பெரியபுளியங்குளம் ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. இவை கி.மு 3 ஆம் நூற்றாண்டுக்கு உரியவையாகும். இவற்றில் திருகோணமலை மாவட்டத்தின் சேருவில, சோம ஆகிய இடங்கள் சிவ , அபய என்னும் சிற்றரரசர்களாலும், குச்சவெளி நாச்சியார் மலை உள்ளடங்கிய பிரதேசம் உதி என்கின்ற சிற்றரரசனாலும் நிர்வகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்ககாகும்.

இவற்றுடன் பல பிராமிச் சாசனங்களில் காணப்படும் பெருமக, பருமக என்னும் வடிவங்கள் தலைவன், தலைமகன் ,முதல்வன் எனப்பொருள்பட அமைந்தவை என்பதனையும் கருத்தில் கொள்ளவேண்டும். எனவே இலங்கையில் நாகதீபம் அல்லது மணிபல்லவம் என்று வரலாற்றுக் காலத்தில் அழைக்கபட்ட வடபகுதி முதல் தமிழச் சத்திரியக் கல்வெட்டுக்கள் மூலம் அடையாளங்காணப்படும் கதிர்காமம், சந்தணகாமம் ஆகிய இடங்களுள்ள தென்பகுதிவரை தமிழச் சிற்றரரசுகளின் சுயாட்சிப் பிரதேசங்கள் பல காணப்பட்டதை ‘பிராமிச் சாசனங்கள்’ ஆதாரப்படுத்துகின்றன எனலாம்.

பிராமிச் சாசனங்களுக்கு அடுத்ததாக தமிழச் சிற்றரசுக்கள் தொடர்பிலான தகவல்களைத் தரும் முக்கிய மூலமாக இருக்கிறது மகாவம்சம். இது இலங்கையின் வரலாற்றுத் தகவல்களை காலவரிசைப்படி, சிங்கள பௌத்த மதத்தினை முன்னிலைப் படுத்தி, பௌத்த பிக்குகளினால் பாளி மொழியில் எழுதப்பட்ட நூலாகும். மகாவம்ச காவியத்தலைவனான துட்டகாமினி அபயன் (துட்டகைமுனு ) எல்லாளனைத் தோற்கடிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு படையெடுத்து வந்தபோது 32 தமிழ் குறுநில மன்னர்களுக்கு எதிராக அவன் நடத்திய போர்களை அது விபரமாகச் சொல்கிறது.

துட்காமினி கிழக்கிலங்கை மஹியங்கணை முதல் வடக்கில் மகாவலி ஆற்றோரம் வரை நிகழ்த்திய போர்கள் பற்றிய விபரிப்புகள் சிங்கள பௌத்த காவியமான மகாவம்சத்தில் காணப்படுகிறது. இங்கு குறிப்பிடப்படும் பல தமிழ் குறுநில அரசர்கள் பண்டைய நாட்கள் தொட்டு சுயாட்சி அதிகாரம் பெற்றவர்களாக ஆட்சி செய்திருக்கிறார்கள் என்ற செய்தி உறுதிப்படுத்தப்படுகிறது. எனினும் இன்றைய வரலாற்று ஆய்வுகளில் துட்டகாமினி தமிழ் அரசர்களை வென்றான் என்பது மட்டும் பெரிதுபடுத்தப்பட்டு அவ்வரசர்களின் சுயாட்சி அலகுகள் பற்றிய செய்திகள் மழுங்கடிக்கப்பட்டு விட்டது.

மகாவம்சத்தின் 25 ஆவது அதிகாரம் துட்டகாமினி பெற்ற வெற்றிகளைக் கீழகண்டவாறு விபரிக்கிறது. இந்த விபரிப்பில் வெற்றிகொள்ளப்பட்ட பிரதேசத்தின் பெயர், தமிழச் சிற்றரசனின் பெயர், அவர்களை வெற்றிகொண்ட விதம் என்பன சொல்லப்படுகிறது. அவ்வாறான சில சுயாட்சி அலகுகளும் அதன் சிற்றரசர்களது பெயர் விபரங்களும் கீழே...

மஹியங்கணை - சாத்தன்
அம்பதீர்த்தம்(விந்தனைக்கருகிலுள்ளது) - தித்தம்பன்
கேமாராமம் - ஏழு தமிழச் சிற்றரசர்கள்
அந்தரா சோபா - மகா கொத்தன்
தோணகாவரம் – கவறன்
ஹாலகோலம் – ஈஸ்வரன்
நாழிசோப்பம் - நாளிகன்
திகாபய கல்லகம் – தீகாபயன்
கச்ச தித்தம் - கபிஸன்
கோட்டநகர் – கோட்டன்
ஹாலவஹா – நகன்
வஹிட்ட - வஹிட்டன்
காமணி - காமணி
கும்பகாமம் - கும்பன்
நந்திகாமம் - நந்திகன்
காணுகாமம் – காணு
தம்பை – தம்ப(ன்)
உண்ணம – உண்ணம(ன்)

ஆகிய அரசர்களை வென்றபின் பாதுகாப்பு நிறைந்த விஜிதநகரம் நோக்கி அவன் படைகள் நகர்ந்ததைச் சொல்கிறது மகாவம்சம். இதன் பின்னரே துட்டகாமினி எல்லாளன் யுத்தம் இடம் பெறுகிறது. எல்லாளன் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு இலங்கையை 44 ஆண்டுகள் ஆட்சிபுரிந்த தமிழரசன். இவனது நீதி தவறாத ஆட்சியைப் புகழ்ந்துரைக்கும் பாளி நூல்கள், எல்லாளன் தனது ஆட்சியில் பௌத்த மதத்திற்கு ஆதரவு அளித்த போதிலும், தவறான மார்க்கத்தினை (இந்து மதத்தினை) தழுவியவன் எனக் குறிப்பிடுகிறது.


எல்லாளன்

கி.மு 3 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 247) கி.மு 1 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 29) இடைப்பட்ட 220 ஆண்டுகால அனுராதபுர அரசின் வரலாற்றில் ஆட்சி புரிந்த 19 மன்னர்களுள் 8 தமிழ் மன்னர்கள் 81 வருடங்களுக்கு மேல் ஆட்சி புரிந்துள்ளனர். இதில் 44 வருடங்கள் எல்லாளனுக்கும் 22 வருடங்கள் அவனது தந்தை ஈழசேனனுக்கு உரியவை. அத்துடன் இலங்கையை சூரதிச்சன் எனும் சிங்கள மன்னனிடமிருந்து கைப்பற்றி ஆண்டவர்கள் சேனனும் குத்திகனும் என்னும் இரு தமிழ் அரசர்கள். இவர்கள் கி.மு 177 ம் ஆண்டு முதல் கி.மு 155 ம் ஆண்டு வரை இருபத்திரண்டு ஆண்டு காலம் இலங்கையை ஆட்சி செய்திருந்தனர்.

இவ்வாறு நீண்டகால ஆட்சியினை மேற்கொண்ட எல்லாளன், சேனன், குத்திகன் என்னும் தமிழ் அரசர்களை மகாவம்சம் சோழமரபினர், ஆக்கிரமிப்பாளர்கள், அக்கரையைச் சேர்ந்தவர்கள் ,தமிழகத்தில் இருந்து படையெடுத்து வந்தவர்கள் என்று சொல்கிறது. எனினும் இவர்கள் ஈழவூரின் உத்தரதேசத்தை (தற்போதைய பூநகரி) சேர்ந்த சிற்றரசர்களாக இருந்து பின்னர் அனுராதபுரம் மீது படையெடுத்தவர்களா? என்ற ஐயப்பாடுகளை அண்மைய ஆய்வுகள் உருவாக்கி இருக்கின்றன. சமகால வரலாற்றுப் பதிவுகளில் இவர்கள் தமிழகத்தில் இருந்து படையெடுப்புக்களை மேற்கொண்டதிற்கான ஆதாரங்கள் இல்லாதிருப்பதும், இவ்வரசர்கள் தமிழகத்தில் நாடத்திய ஆட்சி பற்றிய குறிப்புகள் ஏதும் கிடைக்காததாலும் இந்த சந்தேகம் வலுக்கிறது.

கி.மு 3 நூற்றாண்டைச் சேர்ந்த அனுராதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் வணிகரின் கல்வெட்டு தமிழகத்தைச் சேர்ந்தவர்களைக் குறிக்க தமேட என்றும் ஈழத்தவரைக் குறிக்க ஈள என்ற பதங்கள் பயன்படுத்தப்படும் மரபு அக்காலத்தில் இருந்ததை ஆதாரப்படுத்துகிறது.  ஈழ, ஈலா என்ற பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஓடுகள் பூநகரியில் கண்டுபிடிக்கப்பட்டது. பெரியபுளியங்குளத்திலும் , திருகோணமலைச் சேருவிலவிலும் கண்டுபிடிக்கப்பட்ட தானசாசனங்களில் தமேட என்று தமிழகத்தவரைக் குறிப்பதையும் காணலாம். தமிழ் நாட்டிற்கும் ,ஈழத்திற்கும் இடையே வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலே கலாச்சார பண்பாட்டுத் தொடர்புகள் இருந்து வந்தமை பல ஆய்வுகள் மூலம் நிருபிக்கப்பட்டிருக்கிறது.  எனினும் அவ்விரு பகுதியினரும் தமிழகத்தினர் (தமேட), ஈழத்தவர் (ஈழ) என்ற தனித்துவ அடையாளத்துடன் இருந்ததை இச்சாசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் அனுராதபரத்தில் தமிழ் அரசர்களின் ஆட்சி ஏற்படும் சமயங்களில் அவர்களை தமிழகத்தில் இருந்து படையெடுத்தது வந்தவர்கள் என்று சுட்டிக்காட்டும் மாகவம்ச போக்கு ஆராய்வுக்குரியது.

இவற்றுடன் தேவநம்பியதீசன் (கி.மு 247 - 207) அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த காலத்தில் கதிர்காமம் மற்றும் சந்தணகாமத்தைச் சேர்ந்த தமிழ் சிற்றரசர்கள் தேவநம்பியதீசனின் அழைப்பினை ஏற்று புனித அரசமரக்கிளை நாட்டும் விழாவில் கலந்துகொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இதுவரை நாம் பார்த்த ஆதாரங்கள் இலங்கையில் வன்னி அரசுகள் தோற்றம் பெறுவதற்கு முன்பாக பண்டைய காலங்களில் நிலவிவந்த தமிழ் குறுநில சுயாட்சி அரசுகளைப்பற்றி ஆதாரப்படுத்தி நிற்கின்றன.
 த.ஜீவராஜ்
தொடரும்.................


மேலும் வாசிக்க



திருகோணமலைச் செய்திகளைத் தாங்கி வாரம்தோறும் சனிக்கிழமைகளில் பிரசுரமாகும் மலை முரசில் 


மலை முரசு
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

  1. Dear Dr
    Very good research and it is very useful to our society.
    Thank you
    Kernipiththan Arulanantham

    ReplyDelete
  2. It's a great job that beats against the myths of 'maha vangsam'and escalates real historical roots of ancient tamil.

    ReplyDelete