இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்லபூபால வன்னிபத்தின் உயில்
இந்த ஆவணத்தின் முக்கியத்துவத்தினை அறிந்துகொள்வதற்கு கீழ்வரும் தலைப்புகளிலான சுருக்கமான தேடல்கள் உதவிபுரியும் அதேவேளை அவை வன்னிபச் சிற்றரசுளின் காலத்தில் இருந்த சமூக நிலைகளை விளங்கிக் கொள்வதற்கு துணைபுரிவதாகவும் இருக்குமெனலாம். இந்த அடிப்பையில்
01. வரலாற்றுக்கால தமிழ்ச் சிற்றரசுகள்
02. வன்னி அரசர் அல்லது வன்னிபம்
03. திருகோணமலை வன்னிபங்களும் அதன் தேசவழமைகளும்
04. கொட்டியாரப்பற்று வன்னிமை
05. இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபத்தின் உயில்.
என்பனவற்றினை தனித்தனியே ஆராய்தல் பொருத்தமானதாக இருக்கும்.
திருகோணமலை வன்னிபங்களும் அதன் தேசவழமைகளும்
நன்றி - குளக்கோட்டன் தரிசனம் ( 1985 ) - தங்கேஸ்வரி கதிராமன்
பண்டைய நூல்களைப்போலவே திருகோணமலைப் பிரதேச வன்னிமைகள் பற்றிக் கூறும் முக்கிய ஆவணங்களான இரு கல்வெட்டுக்கள் கொட்டியாபுரப்பற்றில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதில் வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோயிலிலுள்ள சாசனம் ‘ஸ்ரீ சுப்ரமண்ய நம தெற்கு மதில் கயில வன்னியனார் உபயம்’எனக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு சித்திரவேலாயுத சுவாமி கோயில் திருப்பணிகள் இடம் பெற்ற பொழுது தெற்கு மதில் சுவரை கயிலாய வன்னியனார் என்பவர் கட்டினார் என்பதனை உறுதிப்படுத்துகிறது.
இரண்டாவது கல்வெட்டு கங்குவேலிக் கல்வெட்டு என்றழைக்கப்படுகிறது. இது திருகோணமலை கொட்டியாரப்பற்றில் கங்குவேலி சிவன் கோயிலில் உள்ள மூன்றடி உயரமான ஒரு தூணில் பொறிக்கப்பட்டள்ளது. இதில் ‘மலையில் வன்னியனாரும், ஏழுர் அடப்பர்களும் கூடி தம்பிரானார் கோணைநாதனுக்கு’ என்று தொடர்கின்ற தான சாசனம் இருக்கிறது. 14ஆம் நூற்றாண்டுக்குரிய இக்கல்வெட்டு மலையில் வன்னியனார் என்று குறிப்பிடுவது திருகோணமலை வன்னிபத்தையாகும். இவர் அவ்வூரிலுள்ள வெளியொன்றை புல்நடப்பமாக கோணநாதர் கோயிலுக்கு கொடுத்தார் என்பதின் மூலம் அவர் சுதந்திரமாக அப்பிராந்தியத்தில் ஆட்சி புரிந்தார் என்பதை அறியக் கூடியதாக உள்ளது.
மேற்கூறிய பண்டைய நூல்கள், கல்வெட்டுக்கள் என்பனவற்றிற்கு அடுத்ததாக முக்கியத்துவம் பெறுவது ஐரோப்பிய நிர்வாகிகளின் ஆவணங்களாகும். அவற்றில் ஒன்று கி.பி.1551 இல் திருகோணமலையில் ஆட்சி செய்த வன்னிபம் இறந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வாரிசு உரிமை தொடர்பான ஒரு தகவலைப் பதிவு செய்திருக்கிறது. திருகோணமலை வன்னிபத்தின் வாரிசு வயதில் இளையவனாக இருந்ததினால் திருகோணமலை வன்னிபத்தின் உறவினர்களில் ஒருவன் வன்னிபமாக பதவியேற்க முயற்சி செய்தான் என்பதையும். இதனை யாழ்ப்பாண சங்கிலி மன்னன் தலையிட்டு நிறுத்துவதற்கு முயன்றபோது அவன் போர்த்துகீசப் படைகளின் உதவியை எதிர்பார்த்து கத்தோலிக்க மதத்திற்கு மாறினான் என்பதையும் அது ஆதாரப்படுத்துகிறது. எனினும் இம் முயற்சி சங்கிலி மன்னனால் தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய நிர்வாகிகளின் ஆவணங்களில் முக்கியத்துவம் பெறுவது அலெஷாந்தர் ஜோன்ஸ்ரன் ஆவணச் சுவடிகளாகும். 1815 ஆம் ஆண்டு பிரதமநீதியரசர் அலெஷாந்தர் ஜோன்ஸ்ரன் ஒல்லாந்து அரசாங்கம் தமிழர் வாழும் பகுதிகளுக்கென தொகுத்து சட்டமாக்கிய தேசவழமைகளின் பிரதிகளை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி இருந்தார். அவற்றின் பிரதிகள் அலெஷாந்தர் ஜோன்ஸ்ரன் ஆவணச் சுவடிகள் என்ற தொகுப்பாக வெளிவந்தன.
திருகோணமலைப்பற்று வன்னிமைகள் பற்றியும் ,அங்கிருந்த தேசவழமை பற்றியும் அறிய உதவும் வரலாற்றாதாரங்களாக இவ்வாவணம் விளங்குகின்றது. திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு வன்னிமைகளும் இவ்வாவண உருவாக்கத்தில் பங்குகொண்ட வேளை தங்கள் பகுதிகளில் நடைமுறையில் இருந்த தேசவழமை குறித்து அறிக்கை சமர்ப்பித்திருந்தார்கள். இவ்வாறு எழுதப்பட்ட அறிக்கைகள் சுருக்கமானவை என்றாலும் திருகோணமலை தேசவழமை குறித்த சில முக்கிய அம்சங்களை இவ்வறிக்கைகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாவணத்தில் முக்கிய இடம் வகிப்பது சொத்துரிமை தொடர்பான விதிகளாகும். பெற்றோர் தேடிய சொத்துக்கள் பிள்ளைகளுக்கு கிடைக்கும், பரம்பரைச் சொத்துக்கள் மருமக்களைச் சேரும் என்பது திருகோணமலை வன்னிபங்களில் நிலவிய வழமையாகும். இது மருமக்கள் தாயமுறையினை அடிப்படையாகக் கொண்டது. வன்னிப பிரிவுகளான கட்டுக்குளப்பற்று, கொட்டியாரப்பற்று, தம்பலகாமப்பற்று என்பன முக்குவரிடம் காணப்பட்ட வழமையை ஒத்த மருமக்கள் தாயமுறையினை தமது தேசவழமையாகக் கொண்டிருக்க, விதிவிலக்காக திருகோணமலைப்பற்று யாழ்ப்பாணத்தை ஒத்த தேசவழமை முறையினைக் கொண்டிருந்த்து குறிப்பிடத்தக்கது.
குடிமக்கள் வன்னிபத்திற்கு அறிவித்து , அனுமதி பெற்று காடுகளைத் திருத்தி குடியிருப்பாகவோ , தோட்டமாகவோ பயன்படுத்த முடியும். அந்நிலங்கள் அவர்களுக்கு உரித்தானவையாகும். அவற்றை அவர்கள் விற்கவோ, ஒற்றியாகக் (அடமானம்) கொடுக்கவோ அல்லது சீதனமாகக் கொடுக்கவோ உரித்துடையவர்களாக இருந்திருக்கிறார்கள். எனவே குடிமக்கள் தாம் திருத்தி, வளப்படுத்தி, செய்கைபண்ணும் நிலங்களின் மீது உரிமை கொண்டவர்கள் என்ற கோட்பாடு திருகோணமலை வன்னிமைகளில் நிலவியதை இதன்மூலம் அறியக்கூடிதாக இருக்கிறது.
சொத்துரிமைக்கு அடுத்ததாக திருமணம் தொடர்பான வழமைகள் இடம்பெற்றுள்ளது. திருமணங்கள் பெற்றோரினால் பேசித் தீர்மானிக்கப்படும் வழக்கம் அக்காலத்தில் இருந்திருக்கிறது. திருமணம் செய்ய விரும்புவோர் வன்னிபத்திற்கு அது தொடர்பில் அறிவித்து அவர் முன்னிலையில் திருமண ஒப்பந்தம் எழுதிக்கொள்ள வேண்டும். மணமகனோ, மணமகளோ தமது வாக்குறுதியில் தவறினால் குற்றப்பணம் கொடுப்பதற்கும், தண்டனை அனுபவிப்பதற்கும் உரித்தானவர் ஆவார் என்பதனை உத்தரவாதம் செய்தல் வேண்டும். முறைப்படி நடைபெறும் திருமணத்தில் மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி அணிவிக்கவேண்டும். தாயின் சீதனம், பெற்றோரின் தோட்டம் என்னும் வகையில் அடங்கும் சொத்துக்கள் என்பன கல்யாணப் பெண்ணுக்கு சீதனமாக கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. வன்னியனார் முன்னிலையில் இடம்பெறும் கத்தோலிக்க, இஸ்லாமிய திருமணங்கள் அவர்களது சமய முறைகளின்படி இடம்பெறும்.
இவற்றுடன் இந்த ஆவணங்கள் இப்பிராந்தியத்தில் நிலவிய அடிமை முறைபற்றிய பதிவுகளைக் கொண்டிருக்கிறது. எவரேனும் ஒருவர் மனிதனொருவரைக் கூலியாளாகக் கொண்டால் அம்மனிதனுக்கு வேண்டிய உணவு, துணி, கூலிப்பணம் என்பனவற்றைக் கொடுக்க வேண்டும். அடிமைகள் எசமானின் நிலங்களில் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதோடு , அவரது வீடு, வளவு, தோட்டம் ஆகியவற்றிலும் வேலை செய்தல் வேண்டும். அத்துடன் சமயத்தில் எசமானின் மெய்ப்பாதுகாவலர் போல் செயற்படவும் ஆயத்தமாக இருத்தல் வேண்டும் என்றும் இவ்வாவணங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இவ்வாவணத்தில் முக்கியம் பெறும் இன்னொரு அம்சம் கோணேசர் கோயில் தொடர்பானது. வயல் நிலங்கள், தோட்டங்கள் என்பனவற்றில் இருந்து பெறப்படும் வருமானத்தில் 10 வீதம் கோணேசர் கோவிலுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதாகும். ஒல்லாந்தர் ஆட்சியில் வன்னிபங்களே தங்கள் பிரதேசத்தின் நிர்வாகங்களுக்குப் பொறுப்பாக இருந்தனர். வன்னிபங்களுக்கும் , ஒல்லாந்தர்களுக்கும் இடையே வரி தொடர்பான உடன்பாடும் ஏற்பட்டிருந்தது.
10.04.1815 ஆம் திகதியிட்ட மேற்படி அறிக்கை சுருக்கமானதாக இருந்தாலும் அக்காலவழக்கில் இருந்த தேசவழமை பற்றிய வரலாற்றாதாரமாக கொள்ளத்தக்கவை. இலங்கைத் தமிழர் தேசவழமைகளும் சமூக வழமைகளும் என்ற நூலில் பேராசிரியர்.சி.பத்மநாதன் அவர்கள் அலெஷாந்தர் ஜோன்ஸ்ரன் ஆவணச் சுவடிகளை முழுமையாக மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
த.ஜீவராஜ்
தொடரும்.................
மேலும் வாசிக்க
வரலாற்றுக்கால தமிழ்ச் சிற்றரசுகள் - வன்னிபத்தின் உயில் - 1
வன்னி அரசர் அல்லது வன்னிபம் - வன்னிபத்தின் உயில் - 2
திருகோணமலை வன்னிபங்கள் - வன்னிபத்தின் உயில் - 3
Dear Dr
ReplyDeleteWe have to document these and release the books to each and every one in our country
Kernipiththan
வணக்கம்
ReplyDeleteஆலயம் இருப்பதாக அறிந்தேன்... ஆனால் இப்படியான தகவல்கள் தங்களின் பதிவு வழிதான் அறிந்தேன்... பகிர்வுக்கு நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு.
ReplyDelete