Tuesday, July 15, 2014

வன்னி அரசர் அல்லது வன்னிபம் - வன்னிபத்தின் உயில் - 2

vanniyar


இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்லபூபால வன்னிபத்தின் உயில்

திருகோணமலையின் கொட்டியாரப்பற்றில் அடங்கியிருக்கும் இயற்கை வனப்பு நிறைந்த ஒரு ஊர் மேன்காமம். அங்கு சுமார் 120 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு உறுதி அண்மையில் எமக்குக் கிடைக்கப்பெற்றது. 05.06.1893 ஆந் திகதியிடப்பட்ட அவ்வுயில்   கொட்டியாரப்பற்று மேன்காமத்தில் வசித்த இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபத்தினால் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் தொழும்புகள் பற்றி ஒரு நியமன உறுதி முடித்துக் கொடுக்கப்பட்டதைச் சொல்கிறது. திருகோணமலைப் பிராந்திய தமிழர்களின் வரலாற்றாதாரங்களில் இது ஒரு முக்கிய ஆவணமாகும். மேற்குறித்த உயிலின் அடிப்படையிலும், கிடைக்கும் ஏனைய சான்றாதாரங்களின் துணைகொண்டும் வன்னிபங்களின் காலத்து திருகோணமலைப் பிரதேசத்தின் வழமைகளை ஆராயமுயல்கிறது இக்கட்டுரை.

இந்த ஆவணத்தின் முக்கியத்துவத்தினை அறிந்துகொள்வதற்கு கீழ்வரும் தலைப்புகளிலான சுருக்கமான தேடல்கள் உதவிபுரியும் அதேவேளை அவை வன்னிபச் சிற்றரசுளின் காலத்தில் இருந்த சமூக நிலைகளை விளங்கிக் கொள்வதற்கு துணைபுரிவதாகவும் இருக்குமெனலாம். இந்த அடிப்பையில்
01. வரலாற்றுக்கால தமிழ்ச் சிற்றரசுகள்
02. வன்னி அரசர் அல்லது வன்னிபம்
03. திருகோணமலை வன்னிபங்களும் அதன் தேசவழமைகளும்
04. கொட்டியாரப்பற்று வன்னிமை
05. இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபத்தின் உயில்.
என்பனவற்றினை தனித்தனியே ஆராய்தல் பொருத்தமானதாக இருக்கும்.

வன்னி அரசர் அல்லது வன்னிபம்

vanniyar


 ‘வன்னியர்’ என்ற சொல் ‘வலிமை நிறைந்த’ என்ற பொருளில் ஒரு குறிப்பிட்ட தமிழ் சமூகத்திற்கு வழங்கப்பட்டு வரும் பெயராகும். தமிழகத்தில் வன்னியர் என்ற சமூகம் மிக நீண்டகாலமாக தனித்துவ அடையாளங்களோடு இருந்து வருகிறது. தமிழகத்தின் வடபகுதியில் பரந்து வாழும் இச்சமூகம் பற்றி இலக்கியங்களில் பல ஆதாரங்கள் உள்ளன. கல்லாடம், சிலைஎழுபது ,வன்னியர் புராணம், வன்னியர் குல நாடகம், வன்னியர்குல கல்யாணக்கொத்து   என்னும் நூல்கள் அவர்களது தோற்றம் பற்றிய விரிவான தகவல்களைத் தருகிறது. அத்தோடு அவர்கள் படைக்கலப் பயிற்ச்சிகளில் கொண்டிருந்த சிறப்பான திறமைகளையும் அவை விபரிக்கின்றன.

பெரும்பாலும் இராணுவ அமைப்புகளில் சிறப்பிடம் பெற்றிருந்த வன்னியர்கள் சிறந்த வில்லாளிகளாகவும் இருந்தனர். பண்டையகாலத்தில் பல்லவ, பாண்டிய, அரசுகளில் மாத்திரமின்றி சோழர்கால அரசிலும் வன்னியர்களின் படைத்தொகுதி சிறப்பிடம் பெற்றிருந்தது. சோழப் பெருமன்னர் காலத்தில் படைத்தொழிலில் சிறப்புப்பெற்று விளங்கிய இவ்வன்னியர்கள் அவர்களது இராணுவ சேவைக்கு ஊதியமாக வழங்கப்பட்ட  பல பகுதி  நிலங்களில் செறிந்து வாழ்ந்தனர். இவ்வாறு வன்னியர்கள் கூட்டமாக நிறைந்திருந்த பிரதேசங்கள் ‘வன்னிப்பற்றுக்கள்’என்று அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தில் பொலநறுவைக் காலத்திலும் (கி.பி 993 - 1215),  அதன் பின்பும் தமிழகத்திலிருந்து வன்னியர்களின் வருகை நிகழ்ந்தது. ஈழத்தில் சோழர்களுடன் வந்த வன்னிய பிரதானிகள் தமக்கென தனியான வேளைக்கார பிரிவுகளையும் கொண்டிருந்தனர். சோழர் ஆட்சிக்காலத்தில் ஈழத்தின் நிர்வாகத்தில் வன்னிப்பற்றுக்கள் என்ற பிரிவுகள் காணப்பட்டன. இருநூற்றாண்டு காலத்திற்கும் மேலாக செல்வாக்குப் பெற்றிருந்த வன்னிய பிரதானிகளும் வேளைக்காரர்ளும் காலப்போக்கில் ஈழத்தின் பல பகுதிகளில் சுயாட்சி வன்னிப் பற்றுக்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தார்கள் எனலாம்.

இலங்கையில் 13ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் வன்னியரசுகளின் தோற்றம் நிகழ்ந்தது. தமிழகத்திலிருந்து வந்து பல பிரதேசங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களோடு ஆட்சிசெய்த வன்னி அரசுகள் இலங்கையில் நிகழ்ந்த பேரசுகளின் வீழ்ச்சியின் பின்னர் சுயாட்சி அதிகாரம் பெற்றன. அங்கு சிற்றரசர்களாக அரசு புரிந்தவர்களை வன்னி அரசர் அல்லது வன்னிபம் என்றழைக்கும் வழக்கம் உருவானது. அக்காலத்தில் இலங்கையில் ஆறு வன்னிப் பிராந்தியங்கள் இருந்தன. அவை முறையே.
1. அடங்காப்பற்று.(வன்னி)
2. திருகோணமலைப் பிரதேசம்.
3. மட்டக்களப்பு தேசம்.
4. நுகரகலாவிய
5. புத்தளம், சிலாபம்.(தெமள  ஹத்பத்து)
6. ஊவா வெல்லஸ்ஸ
என்பனவாகும்.

இவற்றில் நுவரகலாவிய,  ஊவா வெல்லஸ்ஸ ஆகிய இரு வன்னிகளும் சிங்கள வன்னிபங்களால் ஆளப்பட்டவையாகும். இவர்களை  ஸ்ரீவன்னி, மகாவன்னி , வன்னிராஜ என அழைப்பது வழக்கமாகும். ஏனைய நான்கு வன்னிப்பிரதேசங்களும்  தமிழ் வன்னிபங்களால் ஆளப்பட்டவையாகும். வன்னியர் சுயாட்சியதிகாரம் கொண்ட சிற்றரசர்களாக விளங்கினர். நிர்வாகம், நீதிபரிபாலனம் ,வேளாண்மை, ஆலயத்தொழும்பு போன்ற  ஏற்பாடுகளை அவர்கள் கண்காணித்தனர். தமக்கெனப் படைப்பிரிவுகளைக் கொண்டிருந்த அவர்கள் தமது நிர்வாகத்துக்குட்பட்ட பிரதேசங்களில் வரி அறவிடும் அதிகாரம் பெற்றிருந்தனர்.

சுயாட்சி அலகுகளான இவ்வன்னிபங்கள் சிற்சில காலங்களில் யாழ்ப்பாண , கண்டி அரசுகளின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டிருந்ததும் குறிப்பிடத் தக்கது. இவ்வன்னிமைகள் கண்டி, யாழ்ப்பாண மேலாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த காலங்களில் அவற்றுக்கு ஆண்டு தோறும் திறை செலுத்தியிருக்கின்றன. அத்துடன் போர்க்காலங்களில் அவ்வரசர்கள் சார்பாக படை திரட்டியதோடு, போர் நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கிச் செயற்பட்டும் இருக்கிறது. பல சமயங்களில் இவ்வரசகள்  இராட்சியங்களின் முக்கிய விடயங்களில் வன்னிபங்களுக்கு கௌரவமான பங்கு கொடுத்திருப்பதையும் வரலாற்றாதாரங்கள் மூலமாக அறியக்கூடியதாக உள்ளது.

த.ஜீவராஜ்
தொடரும்.................


மேலும் வாசிக்க

வரலாற்றுக்கால தமிழ்ச் சிற்றரசுகள் - வன்னிபத்தின் உயில் - 1



மலை முரசு
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. வணக்கம்
    ஐயா
    அறிய முடியாத வரலாற்றுக்குறிப்பு தங்களின் பதிவுவழி அறிந்தேன் தொடருங்கள் அடுத்த பகுதியை காத்திருக்கேன் பகிர்வுக்கு நன்றி
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பேனாமுனைப்போராளி:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete