Tuesday, June 03, 2014

தெய்வத்தை வேண்டுகின்றேன்

பெரியோர்கள் செய்கை

பாசத்தில் பிணைப்புண்டிந்த
பாரினில் பிறந்து விட்டேன்
யோசனை பல வாறாக
நொடிக் கொரு ஆவல் தோன்றும்.
ஆசையை அறுத் தெறிந்தால்
அமைதியை அடையலாம் தான்
லேசில்லை அதனைச் செய்தல்
நிம்மதி இழந்தேன் அந்தோ!.



தையலார் வதனம் கண்டால்
சந்திர வதனம் என்றேன்.
பொய்யுரை கூறி இந்தப்
பூமியில் நாள் கழித்தேன்.
ஜயகோ! என்ன செய்வேன்
அறிவின்றி இருளில் வாழ்ந்தேன்
உய்வினை நாடித் தவம்
ஒன்றையும் செய்தேனில்லை.

பணம் தேடும் நோக்கில் ஓடிப்
பகல் முற்றும் உழைத்து ஓய்ந்தேன்
குணநலன் இல்லா தோரின்
கூட்டுறவாலே கெட்டேன்
கணம் நிலைக்காத வாழ்வில்
காலத்தை வீண் செய்தேன்
மனம் என்னும் குரங்கின் வசம்
வகையாக மாட்டிக் கொண்டேன்.

அறம் என்னும் நெறியில் நின்று
அதன் வழி செல்வோனாக
பிறர் நலன் பேணி வாழும்
பெரு மன முடையோனாக
குறள் தரும் அறிவுரையின்
கூற்றினுக் கமைவாய் நிற்கும்
திறன் எனக் கருளு மென்று
தெய்வத்தை வேண்டுகின்றேன்.

பேரின்பம் அருள் என்று இரப்பேன்!

ஆணவ மலமென்னும் இருட் சிறையதனுள்
அகப்பட்டு எனதுயிர் இருக்க
என்புடன் தசையும் இரத்தமும் சேர்ந்த
இவ்வுடல் ஈந்தனை எந்தாய்
வானவர் போற்றும் மகபதி யாக
வரம் எனக் கீந்தாலும் வேண்டேன்
மேன் நிலையான வீடு பேற்றினை
வேண்டியே உன்னிடம் இரப்பேன்.

தம்பலகாமம் க.வேலாயுதம்.


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

  1. ஆசையை அறுத்தெறிந்தால் அமைதியை அடையலாம்...என்பது சரியில்லை. ஆசையை அனுபவித்து முடித்தலே ஆசையை வெல்லும் வழி. இதைத்தானே நாம் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாகச் செய்துகொண்டிருக்கிறோம்! அழகிய கவிதை.

    ReplyDelete
  2. நம் ஆசைகள் நேர்மையாகவும், அடுத்தவரை பாதிக்காததாயும் இருந்தால் நல்லது.

    ReplyDelete
  3. வணக்கம்

    மனதை திகட்டாத கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. Dear Dr
    Thank you for your postings. Please bring these in documentation and let our generation read and understand who Veleutham is? He is a poet who lived in Thampalakamam.
    Kernipiththan

    ReplyDelete