
மைந்தனைப் பறிகொடுத்து
மார்பினில் அறைந்தரற்றும்
பைந்தமிழ் அன்னைக் கிந்தப்
பாரினில் துணையுமுண்டோ?
எந்தையே! தமிழருக்காய்
இயன்றிடப் பாடுபட்ட
தந்தையே! நின் பிரிவால்
தவிக்குதே! தமிழர் நெஞ்சம்
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வன்னியசிங்கம் அவர்களின் மறைவுக்காகப் எழுதப்பட்ட இக்கவிதையூடாக அமரர் திரு.க.வேலாயுதம் அவர்கள் எழுத்துலகில் பிரவேசித்தார்.
வீரகேசரி, மித்திரன், தினபதி, சிந்தாமணி, சுடர், சுதந்திரன், தினகரன், தினக்குரல், ஆத்மஜோதி, சிவநெறி, குமுதம் பக்தி இதழ் ஆகியவற்றில் தனது கைவண்ணத்தைக் கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல், செய்தி மடல் என பலவகைகளில் பதிவு செய்த இவர் திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர், சிறந்த கவிஞர், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற்றியவர்.
தமிழையும் தான் பிறந்த மண்ணையும் உயிரென மதித்துப் போற்றிய அப்பெருமகனாரை 19.05.2009 ஆம் ஆண்டு நாம் இழந்து விட்டோம்.
No comments:
Post a Comment