Thursday, April 03, 2014

திருகோணமலையில் கண்டெடுக்கப்பட்ட 'தாழி' - புகைப்படங்கள்

ஈமத்தாழி

திருகோணமலை நகராட்சி மன்ற குளக்கோட்டத்தில் கிணறு வெட்டும்போது பல ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட தாழி இதுவாகும். நீண்ட தேடல்களுக்குப் பின்னால் இப்படங்கள் கிடைக்கப்பெற்றது. எனினும் இது பற்றிய மேலதிக தகவல்கள் எதுவும் அறியக்கிடைக்கவில்லை. இத்தாழியுடன் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த மரங்களையும் படங்களில் காணக்கூடியதாக இருக்கிறது.

ஈமத்தாழி
ஈமத்தாழி
ஈமத்தாழி

 நன்றி - திரு. கனகசபாபதி சரவணபவன் ( படங்களைத் தந்துதவியவர் )

ஈமத்தாழி  அல்லது முதுமக்கள்தாழி ஒன்றே திருகோணமலை நகராட்சி மன்ற குளக்கோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்ற செவிவழிக்கதையை நம்பி தேடியபோதே மேற்கூறிய படங்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. 

...................................................................................................................................................................

ஈமத்தாழி 

ஈமத்தாழி
(இறந்தவர்களை வைத்து அடக்கம் செய்யும் மட்கலம்)

தமிழர்களின் பண்பாட்டுக்கூறுகளுள் ஒன்று ஈமத்தாழி. இறந்தவர்களை வைத்து அடக்கம் செய்யும் மட்கலமான ஈமத்தாழி பற்றிய குறிப்புகள் சங்கப்பாடல்கள் பலவற்றிலும் காணப்படுகிறது. இறந்தவரை அடக்கும் தாழி அவரது பெருமைக்கு ஏற்ப மிகப்பெரிதாக இருக்கவேண்டும் என்ற மரபும் அக்கால வழக்காக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒருவர் இறந்த பின்னர் அவரது உடலை அல்லது எலும்புகளை அவர் பயன்படுத்திய பொருட்களுடன் ஒரு தாழியில் வைத்துப் புதைத்து விடுவது வழக்கம். இறந்த மனிதன் திரும்பவும் தாயின் கருப்பையில் பிறக்கிறான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஈமத்தாழியை தாயின் அகண்ட கருப்பை வடிவத்தில் வடிவமைத்தனர். ஈமத்தாழியின் கழுத்துப் பகுதிக்கும் சற்று கீழே காட்டப்படும் தொப்புள் கொடியின் வடிவமைப்பு இக்கருத்தாக்கத்தை வலுப்படுத்துவதாக அமைந்திருப்பதைக் காணலாம்.

இவற்றோடு ஈமத்தாழியுடன் தொடர்புடைய சிறு சுடுமண்தாழிகளையும் அவர்கள் புதைத்தனர். அவற்றுள் மாந்தர் பயன்படுத்திய கருவிகள், அணிகலன்கள் என்பனவற்றினை வைத்தனர். ஈமத்தாழியில் புதைக்கப்பட்ட மனிதனின் சுற்றமும், நட்பும் அவனுக்கு விருப்பமான பொருள்களை ஈமத்தாழி புதைக்கப்பட்ட பின் அவன் நினைவாக நிலத்தில் புதைக்க இந்தச் சிறு தாழிகள் பயன்பட்டதாக கருதப்படுகிறது.

புறநானூறு பாடல் - 257   அகலிதாக வனைமோ! (http://ta.wikisource.org/wiki )

பாடியவர்: பெயர் தெரிந்திலது
திணை: பொதுவியல் துறை: முதுபாலை

கலம்செய் கோவே : கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!
(http://ta.wikisource.org/wiki )

வண்டிச்சக்கரத்தில் உள்ள பல்லியைப் போல தலைவனுடன் இன்ப, துன்பங்களில் ஒன்றாக வாழ்ந்த தலைவி அவன் இறந்துவிட தலைவனை நீங்கி தனியாக வாழ விரும்பாது தானும் அவனோடு இருப்பது போன்ற மிகப் பெரிய தாழியைச் செய்வாயாக என்று கலம் செய்யும் குயவனிடம் வேண்டுவதாக அமைந்திருக்கிறது இப்பாடல். (புறநானூறு பாடல் - 257 )


.................................................................................................................................................................

திருகோணமலையில் கண்டெடுக்கப்பட்ட 'தாழி' 

ஈமத்தாழி

ஈமத்தாழி பற்றிய விளக்கங்களில் இருந்து இத்தாழி அந்த வகையைச் சார்ந்த தாழி அல்ல என்பது புலனாகிறது. திருகோணமலையில் கண்டெடுக்கப்பட்ட இத்'தாழி' முறையாகப் பாதுகாக்கப்படாமையால் ஆய்வுகளுக்கு உட்படாமலேயே அழிவடைந்து இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment