Tuesday, March 04, 2014

சிறுகதை ஆசிரியை திருமதி முகுந்தன் கவிதா


கண்ணகிக்கு விழா எடுக்கும் கள்ளிமேட்டில் தெற்குப் பக்கமாக அமைந்துள்ளது மாரியம்மன் கோயில். வருடா வருடம் இக்கோயிலில் தீ மிதிப்பு வைபவம் மிகச் சிறப்பாக இடம்பெறும். இக்கோயிலுக்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ளது சிறுகதை ஆசிரியை திருமதி முகுந்தன் கவிதா அவர்களின் பெற்றோர்களின் வீடு.

ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு மேல் தம்பலகாமம் கிராமச்சபையின் தலைவராகக் கடமையாற்றிய திரு. சண்முகலிங்கம் அவர்களுக்கும் அவரது தர்மபத்தினி அபிராமிப்பிள்ளை அவர்களுக்கும் எட்டுப் பிள்ளைகள். இவர்களில் ஆண் மூவர். பெண்கள் ஐவர். இவர்களில் ஒருவர்தான் தம்பலகாமத்தின் பெண் எழுத்தாளர்களில் ஒருவராகிய ஆசிரியை திருமதி.கவிதா முகுந்தன் அவர்கள்.தற்பொழுது திருகோணமலை சாகிறாக் கல்லூரியில் ஆசிரியையாகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார். அவரது கணவர் முகுந்தன் அவர்கள் வெளிநாடொன்றில் தொழில் புரிகிறார்.

2001.07.04 ஆந் திகதி ‘தினமுரசில்’ பிரசுரமாகிய ‘துணை’ என்ற சிறுகதை மூலம் திருமதி.கவிதா முகந்தனின் எழுத்துப் பிரவேசம் இடம் பெற்றது. இதனைத் தொடர்ந்து மண்வாசைன நிறைந்த பல சிறுகதைகள் தினமுரசு, சுடரொளி, ஞானம் போன்ற பத்திரிகைகளிலும் ‘இலங்கை எழுத்தாளர்களின்  26 சிறுகதைகள்’ என்ற மணிமேகலைப் பிரசுர நூலிலும் இடம்பெற்றன.

தம்பலகாமத்தில் தி/சாரதா வித்தியாலயத்தில் ஆரம்பக்;கல்வியைக் கற்ற திருமதி.கவிதா முகந்தன் அவர்கள் திருகோணமலையில் தி/சண்முகா இந்துமகளிர் கல்லூரியில் க.பொ.த.உயர்தரக்கல்வியைக் கற்று பின்னர் வெளிவாரியாக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமானிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

கவிதாவின் சிறுகதைகள் ‘மண்வாசனை’ நிறைந்தவை.தமிழ் மககளின் பாரம்பரிய உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவற்றைச் சிறப்பிப்பவை. ‘எதிர்நீச்சல்’ ‘சாதிகள் இல்லையடி’ போன்றகதைகள் சாதிப்பிரச்சினையை மையமாகக் கொண்டவை. தமிழ் சமூகத்திலிருந்து சாதிப்பேயை விரட்டியடிக்க வேண்டும் என்ற முற்போக்கான கருத்துக்களைப் பிரதிபலிப்பவை.

காளியப்பு தெய்வானைக் கிடையில் நிகழும் 50 வருட அலுக்காத தாம்பத்தியத்தின் அருமை பெருமைகளை ‘பிரிவு’ என்னும் சிறுகதை அலசுகிறது.  ‘புத்தம் புதிய சைக்கிள்’ஒரு ஏழைக் குடும்பத்தின் நிறைவேறாத ஆசைகளை துல்லியமாக எடுத்துச் சொல்கிறது.

இயல்பான நடையில் சுவாரிசமாகத் தன் கதைகளைச் சொல்லுகிறார் கவிதா. இத்துறையில் தொடர்ந்தும் அவர் முயற்சிகளை மேற்கொண்டு நாடறிந்த நல்ல எழுத்தாளராக வரவேண்டும் என வாழ்த்துவோம்.

வேலாயுதம் தங்கராசா.


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. Dear Dr
    After reading about Ms.Kavitha I went to Zahira college to meet the author. Unfortunately she was on leave. So I could'nt meet her.
    It is a verygood thing to bring into light of our people who served in any field from our villages.Thank you and Thanka.Please convey my best to Thanka and Ammah
    Kernipiththan

    ReplyDelete