Tuesday, January 21, 2014

சோழ இலங்கேஸ்வரனும், மச்சகேஸ்வரமும் - புகைப்படங்கள்

வெள்ளை வில்வபத்திர கோணநாயகர் ஆலயம்
முன்னைய பதிவில் சோழ இலங்கேஸ்வரன் காலத்து திருகோணமலை மானங்கேணிச் சாசனம் பற்றி பார்த்திருந்தோம்.
இனி.....
திருகோணமலையில் மத்ஸ்யகேஸ்வரம், சோழ இலங்கேஸ்வரன் என்பன பற்றிக் குறிப்பிடும் இச்சாசனம் மிக முக்கியமான வரலாற்றாவணமாகும். சோழ இலங்கேஸ்வரன் என்ற பட்டம் சோழர்கள் தாம் கைப்பற்றி ஆண்ட நாடுகளை எவ்வாறு ஆட்சிபுரிந்தார்களோ அதே முறையில் ஈழமான மும்முடிச் சோழ மண்டலத்தையும் ஆண்டார்கள் என்பதனை ஆதாரப்படுத்தி நிற்கிறது.

சோழமண்டலங்களுக்கு அதிபர்களாக சோழ இளவரசர்களை நியமிக்கும் பழக்கம் முதலாம் இராஜேந்திரன் காலத்தில் ஆரம்பமாகியது. சோழராட்சியில் பாண்டிய நாட்டுக்குரிய இராசப்பிரதிநிதியாக சோழவம்ச இளவரசன் நியமிக்கப்பட்டு அவனுக்கு சோழ பாண்டியன் என்ற பட்டம் வழங்கப்பட்டதையும் அது போலவே கங்போடி இராட்சியத்திற்கு சோழகங்கன் நியமிக்கப்பட்டதையும் குறிப்பிடலாம்.

கி.பி. 1055 ஆண்டளவில் எழுதப்பட்ட இராஜேந்திர சோழனுடைய மெய்க்கீர்த்தியில் சோழபாண்டியன், சோழகங்கன், சோழகேரளன், சோழ அயோத்தியராசன்,  சோழ கனகராசன், சோழகன்னடுச்சயராகன் ,சோழவல்லபன் என்னும் பட்டங்களைப் பெற்றிருந்த சோழர்களைப் பற்றிச் சொல்லப்படுவதைக் காணலாம்.

இலங்கை அரசனை இலங்கேஸ்வரன் என்று குறிப்பிடும் வழக்கம் தமிழர் வரலாற்றில் பண்டைக்காலம் முதல் வழக்கில் இருப்பதாகும். தேவாரப்பாடல்களில் இலங்கை மன்னன் இராவணன் இலங்கேஸ்வரன் என்றழைக்கப்படுவதை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். எனவே இலங்கேஸ்வரன் என்பது இலங்கைக்கான மும்முடிச் சோழ மண்டலத்தை நிர்வகித்த சோழப்பிரத்நிதியின் பட்டப் பெயர் என்பது உறுதியாகிறது.

சோழ இலங்கேஸ்வரனின் ஏழாவது அல்லது எட்டாவது ஆட்சியாண்டில் எழுதப்பட்ட இச்சாசனம் குறிப்பிடும் இன்னொரு செய்தி அக்கால வழக்கில் கோணேஸ்வரம்  மத்ஸ்யகேஸ்வரம் என்றழைக்கப்பட்டது தொடர்பானதாகும்.

koneswaram

மத்ஸ்யகேஸ்வரம் என்னும் மச்சகேஸ்வரம் மகாவிஷ்ணுவின் மச்ச அவதாரம் தொடர்பான ஒரு புராணக்கதையை அடிப்படையாகக் கொண்டதாகும்.

மச்ச அவதாரம்

“ஆயதென் கயிலாயத்தின் றென்புறமணுகி
மாய மச்சமா முடலையக் கடல் வழி வைத்துத்
தூய தன்னுருக்க் கொண்டரன் சந்நிதி துன்னிச்
சேய கங்கணம் முன்வைத்து வணங்கினன் திருமால்”

என்று தஷிணகைலாசப் புராணத்தின் மச்சாவதாரப் படலம் திருமால் மீனாக அவதாரமெடுத்து உலகினைக் காத்தபின் மீண்டும் திருமால் உருவெடுத்து தஷிணகைலாயம் எனப் போற்றப்படும்  மத்ஸ்யகேஸ்வரத்தினை (திருக்கோணேஸ்வரம்) வணங்கிய செய்தியைச் சொல்கிறது.

மச்சகேஸ்வரம்

திருகோணமலை வரலாற்றில் முதன்மையான சாசனமாகக் கருதப்படும் நிலாவெளித் தானசாசனம்  '' ஸ்ரீ கோணபர்வதம் திருகோண மலை  மத்ஸ்யகேஸ்வரமுடைய மஹா தேவற்கு நிச்சலழிவு க்கு நிவந்தமாக.....''  என்று மத்ஸ்யகேஸ்வரத்திற்கு வழங்கப்பட்ட தானம் தொடர்பான  தகவல்களைத் தருவதை இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.

நிலாவெளி தான சாசனம் சொல்லும் வரலாறு
நிலாவெளி தான சாசனம் 

எனவே மானாங்கேணி நிலாவெளிச் சாசனங்கள் எழுதப்பட்ட காலப் பகுதிகளில் திருக்கோணேஸ்வரத்தின் மறுபெயர்களில் ஒன்றான  மத்ஸ்யகேஸ்வரம் என்ற பெயரே மிகுதியாக இப்பிரதேசத்தில் வழக்கில் இருந்திருக்கிறது எனலாம்.

இதன் பின்னர் இம்மானாங்கேணிச் சாசனம் சோழ உயர் அதிகாரிகளில் ஒருவனான மூவேந்த வேளாண் என்னும் பட்டம் பெற்ற இராஜேந்திரசிம்ம வளநாட்டு கணபதி என்பவனால் மத்ஸ்யகேஸ்வரத்து மூலஸ்தானம் தொடர்பாகவும் மற்றுமொரு ஈஸ்வரம் தொடர்பாகவும் செய்யப்பட்ட ஒரு ஏற்பாட்டினைப் பதிவு செய்துள்ளது.

இங்கே முன்னே நாம் பார்த்த மானாங்கேணியில் கிடைத்த புராதானச் சின்னங்களான மகாவிஷ்ணு பார்வதி ஆவுடையார் நந்தி என்பன இச்சாசனத்தில் குறிப்பிடப்படும் ஈஸ்வரமாத்தின் பகுதிகளாகக் கருத இடமுண்டு.


இத்தனை வரலாற்றாதாரங்களைக் கொண்ட மானாங்கேணிக் கல்வெட்டும் புராதானச் சின்னங்களான நந்தியும் ஆவுடையாரும் சுமார் 1000 வருடங்களுக்குப் பிறகும் நாம் இலகுவில் காணக்கூடியதாக திருகோணமலை நகரமத்தியில் அமைந்திருக்கும் வெள்ளை வில்வபத்திர கோணநாயகர் ஆலயத்தில் இன்றும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 த.ஜீவராஜ்

தொடரும் .. . .. . ..

மேலும் வாசிக்க
திருகோணமலையிற் சோழர்கள்  
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment