சோழர்காலத் திருகோணமலையில் இருந்த வளநாடுகள் பற்றி திருகோணமலையிற் சோழர்கள் - பகுதி - 1 இல் பார்த்திருந்தோம்.
இனி.....
மானங்கேணி என்று அழைக்கப்பட்ட பிரதேசம் இன்று திருகோணமலை நகர மத்தியில் பரபரப்பு நிறைந்த மின்சார நிலைய வீதியில் கட்டடங்கள் நிறைந்த பகுதியாகக் காணப்படுகிறது. இங்கு அமைந்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம் வெள்ளை வில்வபத்திர கோணநாயகர் ஆலயமாகும்.
குளக்கோட்டு மன்னன் திருக்கோணேச்சரத்தில் திருப்பணிகள் செய்தபோது அமைக்கப்பட்ட இக்குளத்தின் பெயரான மானாங்கேணியே அதனைச் சூழ்ந்த பிரதேசத்திற்கும், ஆலயச் சூழலுக்கும் வழங்கி வந்ததை காணக்கூடியதாக உள்ளது.
மேற்படி நிகழ்வினைத் தொடர்ந்து திருகோணமலை மானாங்கேணி என்னுமிடத்தில் ஒரு கல்வெட்டும், புராதன சின்னங்களும் இருப்பதாகவும் அவற்றில் இருக்கும் தகவல்களை வெளிப்படுத்த தொல்லியளாளர்கள் தேவையெனக் குறிப்பிட்டு 01-02-1972 இல் தினகரன் நாளிதழில் ஒரு செய்தி வெளியாகியது. இச்செய்தியினை வழங்கியவர் சாம்பல்தீவு பிரதேச சபைத்தலைவரான திரு.தம்பிராசா அவர்கள். இவரே திருகோணமலையில் காணப்பட்ட பல சோழர்கால தொல்லியல் சின்னங்களையும், கல்வெட்டுக்களையும் தேடி வெளி உலகிற்கு அறியத்தந்த பெருமைக்குரியவர்.
திரு.தம்பிராசா அவர்களின் அழைப்பு பேராசிரியர் செ.குணசிங்கம் அவர்களின் கவனத்தை ஈர்த்தது. அதன்விளைவாக 17-06-1972 இல் சோழ இலங்கேஸ்வரன் தொடர்பான மானாங்கேணி, கந்தளாய் வரலாற்றுக் கட்டுரைகள் ஷதிருகோணமலையில் இரு சோழர்கால கல்வெட்டுக்கள்| என்ற தலைப்பில் வீரகேசரியிலும் சமகாலத்தில் ஈழநாடு, தினகரன் பத்திரிகைகளிலும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
சிதைந்திருந்த நிலையில் கிடைத்தாலும் இச்சாசனம் ஒரு பொக்கிசமாகும். இலங்கையில் சோழ இலங்கேஸ்வரன் தொடர்பான தகவல்களைத் தரும் இரு கல்வெட்டுக்களில் இச்சாசனமும் ஒன்றாகும் என்பதே அதன் முக்கியத்துவத்திற்குக் காரணமாகும்.
திரு செ.குணசிங்கம் அவர்களால் 1974 இல் வெளியிடப்பட்ட மானாங்கேணிச் சாசனத்தின் நிரப்பப்பட்ட மூழுவடிவம்
1. ரான உடையார் ஸ்ரீ சோழ இல(ங்கேஸ்)
2. வரதேவற்கு யான் எ(ட்டாவது)
3. (மும்மு)டி சோழ மண்ட(லத்து)
4. (இராஜே)ந்ர சோழ வள நாட்(டு)
5. சோழவளநாட்(டு) த் திருக்கோ
6. (ண) மலை ஸ்ரீ மந்;ஸ்ய N(கஸ்வ)
7. வரமுடையார் மூலஸ்தானமு(ம்)
8. ஸ்வரமுடையார் கோ(யிலும்)
9. (சோ)ழ மண்டலத்து (இராஜே)
10. (ந்த்ரசி)ங்க வளநாட்டுத்
11. (---நா)ட்டு(க்) க(ஞ்)---ங்
12. வேளாண் கணபதி(எ)
13. (டு)த்த தனிக்-----கு(ம)
14. ---------------------------------
தொடர்ந்து வரும் ஆறு முதல் எட்டுவரையுள்ள வரிகள் திருகோணமலை ஸ்ரீ மத்ஸ்யகேஸ்வரத்தின் மூலஸ்தானம் பற்றியும் ஈஸ்வரமுடையார் கோயில் ஒன்றினைப் பற்றியும் சொல்கிறது. அதன் பின வரும் பகுதி சோழமண்டலத்து இராஜேந்திரசிங்க வளநாட்டு மூவேந்த வேளாண் கணபதி பற்றியதாக அமைந்திருக்கிறது.
த.ஜீவராஜ்
தொடரும்..........
மேலும் வாசிக்க
திருகோணமலையிற் சோழர்கள்
வணக்கம்
ReplyDeleteஐயா.
அறிய முடியாத மிகச் சிறப்பான தகவலை மிகச் சிறப்பாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் இதைப் போன்று இன்னும் வரலாற்றுப்பதிவுகள் மலர ட்டும்...ஐயா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-