Friday, November 01, 2013

முள்ளிப்பொத்தானையின் மூத்த பெருங்கலைஞைர் அண்ணாவியார் திரு.வடிவேல் சிவப்பிரகாசம்


வரலாற்றுப் புகழ்மிக்க தம்பலகாமத்தில் கள்ளிமேடு பல சிறப்பம்சங்களைக் கொண்ட திடலாகும். இங்கேதான் குளக்கோட்டனாலும், அவன் காலத்திற்குப் பின்னர் ‘கடல்சூழ் இலங்கை கஜபாகு மன்னனாலும்’ உருவாக்கப்பட்ட தம்பலகாமம் ஆதிகோணநாயகரின் வெளிச்சுற்று வழிபாடுகளில் முக்கியமான ‘கள்ளிமேட்டு ஆலையடி வேள்வி வளாகம்’அமைந்திருக்கிறது.

இதேபோல அண்ணாவிமார்களில் பெருந்தொகையானோர் இத்திடலைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களே. தம்பலகாமத்தைச் சேர்ந்த சிறந்த கல்விமான்களில் ஒருவராகிய பண்டிதர்.ஐ.சரவணமுத்து அவர்களும் இத்திடலைப் பிறப்பிடமாகக் கொண்டவரே. இத்தகைய வரலாற்றுப் புகழ்மிக்க ‘கள்ளிமேட்டில்’ பிறந்தவர்தான் பிற்காலத்தில் முள்ளிப்பொத்தானையின் முதுபெருங் கலைஞராகவும், அண்ணாவியாராகவும், நாடகத் தயாரிப்பாளரும்,  இயக்குனராகவும் மக்களால் பெரிதும் போற்றப்பட்ட நமது பெருமைக்குரிய கலைஞர் அண்ணாவியார் திரு.வடிவேல் சிவப்பிகாசம் அவர்கள்.

1917 ஆம் ஆண்டு பிறந்த இவர் இளமையிலேயே கலைஞானம் மிக்கவராகக் காணப்பட்டார். இனிய குரல்வளமும் நன்றாகப் பாடக்கூடிய ஆற்றலும் இவரிடம் காணப்பட்டன.  கள்ளிமேடு ‘வெள்ளைப்பிள்ளையார் கோயில்’முதற் பூசகராக கடமையாற்றிக் கொண்டிருந்த வேளையில் ‘நாடகங்களைப்’ பழக்கி மேடையேற்றினார். அந்தக் காலத்தில் நாடகங்கள் பெரிதும் கள்ளி மேட்டிலுள்ள  ஆலையடி வேள்வி வளாகத்தில்’ மேடையேற்றப்பட்டன.

மக்கள் இந்நாடகங்களைக் காண ‘வண்டில்’ கட்டி கூட்டங் கூட்டமாக வருவதுடன் அண்ணாவிமார்களுக்கும் நடிகர்களுக்கும் தங்களாலியன்ற பரிசுகளை வழங்கிச் செல்வார்கள். ‘ஆலங்கேணி’போன்ற அயல்கிராமங்களிலிருந்தும் ‘வண்டில்களில்’ நிறைய இரசிகப் பெருமக்கள் வந்து போவதுண்டு என அக்கால விடயங்களை நேரிலே கண்டவர்கள் கூறுவதுண்டு.

நல்ல குரல்வளமுள்ள அண்ணாவியார் திரு.வடிவேலு சிவப்பிரகாசம் அவர்கள் நன்றாகப் பாடுவார். குரல் வளத்துடன் ஓரளவு இசை ஞானமும் அவரிடமிருந்தது. நினைத்தவுடன் விரைந்து ஒரு நாடகத்தை மேடையேற்றக் கூடிய ஆற்றல் அவரிடமிருந்தது. தம்பலகாமத்தில் வன்செயலின்போது தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலய வளாகத்தில் எல்லாமக்களும் முகாங்களில் வாழ்ந்து வந்தனர். வெள்ளிக்கிழமைகளில் ஆதிகோணநாயகர் கோயிலில் பஜனை நடைபேறும். சகல பாடசாலை மாணாக்கர்களும் இதில் கலந்து கொள்வார்கள். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய அண்ணாவியார் சிவப்பிரகாசம் அவர்கள் ஒரு சிறந்த நாடகத்தையே தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய முன்றலில் மேடையேற்றியதுமல்லாமல் மக்களின் ஏகோபித்த பாராட்டுதலையும் பெற்றுக் கொண்டார்.

1944 ஆம் ஆண்டு கட்டைபறிச்சானைச் சேர்ந்த அழகம்மா என்பவரைத்திருமணம்  செய்து கொண்டு இல்லறத்தை நல்லறமாகிக் கொண்ட இக்கலைஞருக்கு பதினொரு பிள்ளைகள். ஏழுபேர் ஆண்கள் , நால்வர் பெண்கள். இவர்களில் ஒருவர் திரு விக்னேஸ்வரன் திருகோணமலையில் கிராமசேவகராகவும், மற்றுமொருவர் தம்பலகாமம் வைத்தியசாலையில் சுகாதாரப் பரிசோதகராகவும் கடமையாற்றுகின்றனர்.

1954 ஆம் ஆண்டு முள்ளிப்பொத்தானைக் குடியேற்றத்திட்டத்திற்கு தனது குடும்பத்தோடு இடம்பெயர்ந்த இக்கலைஞர் அங்கும் நாடகக்கலையை வளர்க்கத் தொடங்கினார். இதிகாச புராண விடயங்களில் ஆழ்ந்த அறிவுமிக்க இவர் முள்ளிப்பொத்தானை சித்திவிநாயகர் ஆலயத்தில் ‘சிவராத்திரி’ தினத்தன்று ‘ஹரிச்சந்ரா’ ‘சந்திரமதி’ போன்ற நாடகங்களை மேடையேற்றினார்.

நாடக இயக்கம், ஒப்பனை போன்ற பொறுப்புகளுடன் தானும் ஒரு பாத்திரமேற்று நடிக்கும் இவர் முள்ளிப்பொத்தானைக்கு இடம் பெயர்ந்த பின்னர் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்திற்கு வந்து பஜனை செய்யத்தவறியதேயில்லை. இவரும் இவரது உதவியாருமாகிய ஆர்மோனிய வித்துவான் திரு.கோணாமலை அவர்களும் உயர்ஸ்தாதியில் பாடும் ஆற்றல் மிக்க  கலைஞர் திரு.பொன்னம்பலம் அவர்களும் ஆர்மோனியப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வயல்களுக் கூடாக கால்நடையாக தம்பலகாமம் வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
இத்தகைய சிறந்த கலைஞர் 1995 ஆம்ஆண்டு ஏழாம் மாதம் பத்தாம் திகதி எம்மை விட்டுப் பிரிந்தார்.

எந்த நேரமும் சுறுசுறுப்புடனும், புன்னகை ததும்பும் முகத்துடனும் இயங்கிய அண்ணாவியார் திரு.வடிவேல் சிவப்பிரகாசம் அவர்களின் மறைவு தம்பலகாமம் கலையுலகுக்கு பேரிழப்பாகும்.

வேலாயுதம் தங்கராசா


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment