ஆரம்பக்கல்வியை தம்பலகாமத்திலும் பின்னர் திருகோணமலை இராமகிருஷ்ண சங்க இந்துக்கல்லூரியிலும் பெற்றுக் கொண்ட இவர் பேராதனைப் பல்கலைக்கழகம் சென்று கலைமானிப்பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். தி/சம்பூர் மகாவித்தியாலயத்தில் முதல் நியமனம் பெற்று தனது ஆசிரியப்பணியை மேற்கொண்ட இவர்
திருகோணமலை விபுலானந்தாக்கல்லூரி,
திருகோணமலை இராமகிருஷ்ண சங்க இந்துக்கல்லூரி,
தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயம்,
கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயம்,
களுவாஞ்சிக்குடி மகாவித்தியாலயம்
ஆகிய பாடசாலைகளில் தனது ஆசிரியப்பணியை மேற்கொண்டார். தொடர்ந்து பெரிய கல்லாறு மகாவித்தியாலயம், துறைநீலாவணை மகாவித்தியாலயம், மகிழூர் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் அதிபராக சிறப்புறக் கடமையாற்றினார்.
மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையில் தமிழ்துறை விரிவுரையாளராகவும், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தேசியகல்வி நிறுவனம் நடாத்திவரும் பட்டப்பின் படிப்பு நிலையங்களில் விரிவுரையாளராகவும் சிறந்த சேவையாற்றி வடக்கக் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சில் பிரதிக்கல்விப்பணிப்பாளராகவும் கடமையாற்றி சேவையினின்றும் ஓய்வு பெற்றார்.
மட்டக்களப்பைச் சேர்ந்த ஜாந்தினி அவர்களை 1970 ஆம் ஆண்டு திருமணம் செய்து இல்லறத்தை நல்லறமாக நடத்தினார். இதன் பயனாக உஷாராணி, சுபாஜினி, சத்தியசந்தர் ஆகிய மூன்று குழந்தைகளுக்குத் தந்தையானார்.
திருகோணமலை கல்விப்புலத்தில் தனக்கெனச் சிறப்பிடமொன்றைப் பெற்றுக்கொண்ட அமரர் முத்துக்குமாரு சிவபாலபிள்ளை அவர்கள் ஓய்வு பெற்ற பின்னர் தனது அனுபவங்களை மையமாக வைத்து வீரகேசரியில் பலரும் பாராட்டும் வகையில் கட்டுரைகளை எழுதி வந்தார். அண்மையில் கூட அவருடைய கட்டுரைகள் வீரகேசரியில் பிரசுரமாகியிருந்தன. இவரது ஆக்கங்கள்பல அவுஸ்திரேலியாவிலும், மலேசியாவிலும் பத்திரிகைகளில் பிரசுரமாகிப் பாராட்டைப் பெற்றுள்ளன.
அவுஸ்திவேலியாவில் இருந்து வெளியாகும் ‘தமிழ் ஓசை’ இதழ் தனது ஓகஸ்ட் 2013 வது இதழில் “தமிழ் ஓசையில் ஆக்க பூர்வமான பல கட்டுரைகளை எழுதியுள்ள திரு.மு.சிவபாலபிள்ளை அவர்களுக்கு உளமார்ந்த அஞ்சலியைச் செலுத்துவதுடன் அவரது ஆன்மா இறைவனடியில் இளைப்பாற தமிழோசை பிராத்திக்கின்றது” என வெளியிட்டுள்ளது.
அவருடைய ஆன்மா இறைவனின் திருவடியில் சாந்திபெற நாமும் பிராத்திப்போம்.
வேலாயுதம் தங்கராசா
No comments:
Post a Comment