Wednesday, October 23, 2013

‘வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் காதல்’ தந்த தம்பலகாமத்தின் முதுபெரும் கவிஞன் வீரக்கோன் முதலியார்

வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்  திருவிழா

வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் தம்பலகாமத்தின் முதுபெரும் கவிஞராக விளங்குகிறார் ஸ்ரீ.ஐ.வீரக்கோன் முதலியார் அவர்கள். 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ‘வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் காதல்’ என்னும் பழந் தமிழ் நூல் இவரால் இயற்றப்பட்டது.

சிற்றின்பம், பேரின்பம் கலந்த சிறந்ததொரு காவியமாக இந்நூல் விளங்குகின்றது.  தமிழிலக்கிய வரலாற்றிலே நூல்களின் காலநிர்ணயம் ஒரு பிரச்சினையாகும். அவற்றுக்குப் புறநடையாக இந்நூல் அமைந்துள்ளது.  நூல் ஆசிரியரின் பெயர் , அவர் வாழ்ந்தகாலம், நூல் அரங்கேற்றம் குறித்த குறிப்புகள் போன்ற விடயங்கள் இந்நூலில் விரிவாகக் காணப்படுகின்றன.

வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்  திருவிழா

“பம்பிநிதங் கண்டளை நீர் பாயும்வள மிகுந்த
தம்பலகமத்திற்ற கையுறு வேளாண் மரபில்

ஐம்பெருமானருந்தவத்தில் வந்துதித்தோன்
செய்ய சித்திரவேலன் பொற் சீரடியை யேந்திடுவோன்

செப்பரிய வாய்மைசெறி வீரக்கோன் முதலி
ஒப்புவமையில்லா வொளிபரவு வேலவன் மேற்

சொல்லுமிந்தக் காதறனைத் தொல்லுலகி வெல்லாரும்
நல்லதெனக் கொள்வறென்றே நம்பியியம் பலுற்றேன்

துன்னுமிரு மரபுந் துய்யவிளஞ் சிங்கமெனும்
வன்னிமை பொற்பாதம் வணங்கையினீ சொல்லாதை

வன்னிமை சேசத்தார் மகாநாடுதான் கூடி
மின்னுமெழில் மண்டபத்தில் வீற்றிருக்கும் வேளையிலே

கோதில் புகழ்சேர் வீரக்கோன் முதலிதானியற்றுங்
காதலரங்கேற்றுகையிற் காதறனைச் சொல்லாதை”

என வரும் பாடல் வரிகளால் பல விடயங்களை நாம் அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. நூல் ஆசிரியரின் பெயர்  வீரக்கோன் முதலி என்பதையும் அவர் தம்பலகாமத்தவர் என்பதையும், வேளாண்மரபைச் சேர்ந்தவர் என்பதையும், வெருகல் சித்திரவேலாயுதர் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதையும், நூலின் அரங்கேற்றம் ஒரு பெருவிழாவாக தேசத்தவர் சபையோராக இருக்க இருமரபுத்துய்ய இளஞ்சிங்கம் என்னும் வன்னிமையின் தலைமையில் நடைபெற்றது என்பதையும் தெளிவாக அறியக் கூடியதாக உள்ளது.

17 ஆம் நூற்றாண்டில் கொட்டியாபுரப்பற்றை நிர்வாகஞ்செய்வதற்கு நியமிக்கப்பட்ட வன்னிமையும், வெருகலம் பதியை பரிபாலனஞ் செய்யும் கங்காணம் அடப்பனார் முதலாய தலைமைக் காரரும் ,தேச மக்களும், கல்வி கேள்விகளில் சிறந்த பண்டிதர்களும் ஆலயத்தில் உள்ள அழகிய மண்டபத்தில் மாநாடு கூடினர்  என்ற சமகால விபரங்களை இந்நூல் சிறப்பாக எடுத்துரைக்கிறது.

வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் காதல்

இதே போன்ற நடைமுறை தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்திலும் பழமையில் நடைமுறையில் இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டுதல் அவசியமாகிறது. தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்தில் கங்காணமாக கடமையாற்றிய ஏரம்பு என்பவர் இயற்கையடைய அவரிடத்திற்கு ஒரு கங்காணத்தை நியமிக்கும் நோக்காக தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயமண்டபத்தில் மேன்காமத்தில் வதியும் இருமரபுத் தூய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிமையின்  தலைமையில் தேசத்தவர்களும், கோயில் நிலமை தலைமைகளும், கூடியிருக்க ஒரு கூட்டம் நடைபெற்று ஏரம்புவின் இளையமகன் ஏரம்பு கதிரவேலு கங்காணமாக நியமிக்கப்பட்டதை அக்காலத்தில் எழுதப்பட்ட ஒரு உறுதி மூலமாக நாம் அறியக் கூடியதாக உள்ளது.

திரு.ஐ.வீரக்கோன் முதலி அவர்கள் அக்காலத்தில்  சிறந்த கவிஞராக வாழ்ந்ததோடு, அரசாங்கத்தில் உயர்பதவி வகித்தவராகவும் விளங்கினார். வெருகலம்பதி வேலவனைச் சிறப்பித்துப் பாடவந்த கவிஞர் பிற கோயில்களையும் வழிபாட்டுத்தலங்களையும் ஊர்கள் பல வற்றையும் சிறப்பித்துப் பாடியிருப்பது பாராட்டுதற் குரியது. முக்கியமாக திருக்கோணேஸ்வரம், நீலாப்பளை பத்தினியம்மன் கோயில் ,சம்பூர் பத்தினியம்மன் கோயில் ஆகியன பற்றியும் ‘வெருகல் ஸ்ரீ சித்திர வேலாயுதர் காதலில்’ குறிப்புகள் உண்டு. அக்கால மக்களின் உணர்வுகளை மிகச்சிறப்பாக தமது நூலில் படம்பிடித்துக் காட்டிய பெருமை அவருக்குண்டு.

இவர் காலத்தில் கள்ளிமேட்டில் ‘வாலர்’ என்னும் பெருங்கவிஞர் ஒருவர் வாழ்ந்ததாகவும் அவர் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் மீது பதிகம் பாடியதாகவும் அப்பாடல்களில் சிலவற்றைப் பாடிக்காட்டும் ஆற்றலுள்ள சிலர் வாழ்ந்ததாகவும் அவர்கள் காலத்திற்குப் பிறகு அப்பாடல்கள் அழிந்து விட்டதாகவும் கலாபூசணம் கந்தர்வகான இசைமணி திரு.க.சண்முலிங்கம் அவர்கள் கூறுவதையும் இங்கே குறிப்பிடுவது அவசியமாகிறது.

நம் முன்னோர்களின் கவலையீனத்தால் கிடைத்தற்கரிய பல பொக்கிசங்களை நாம் இழந்துள்ளோம். அவற்றில் குளக்கோட்டு மன்னனின் வரலாற்றம்சங்கள் நிறைந்த ‘பெரிய வளமைப் பத்ததி’ ‘கம்பசாஸ்திரம்’ போன்ற ஏடுகள் முக்கியமானவை. தம்பலகாமம் ஆதி கோணநாயகர் ஆலயத்தில் முக்கிய தொழும்பாற்றும் பலரிடம் இத்தகைய சிறந்த ஏடுகள் இருந்தும் அவற்றைப் பெற்று ஆய்வுக்குட்படுத்தி ஆவணப்படுத்த முடியாத  ‘கையறு நிலையில்’ நாம் வாழ்ந்திருக்கிறோம் என்பதை எண்ணிப்பார்க்கும் பொழுது கவலையாக இருக்கிறது.

கவிஞர் திரு.ஐ.வீரக்கோன் அவர்கள் வாழ்ந்த சமகாலத்தில் வெருகல் போன்ற இடங்களிலும் அவ்விடங்களைச் சார்ந்த கோவில்களிலும் நடைமுறையிலிருந்த தேச வழமைகள் குறித்து விபரமாகத் தெரிவிக்கப்பட்ட நடைமுறைகள் இன்றுவரை அக்கோயில்களில் நடைமுறையில் பேணப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

வேலாயுதம் தங்கராசா

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. Dear Thanka!
    Arumaiyana vilakkam.. eppathan surusruppai seyalatukireer;kal; nalla nalla visayankalai nadariyach saithal namathu kadamai. athnalathan naam uirvalkirom. thodarka paniyai
    Kernipiththan

    ReplyDelete