Tuesday, October 15, 2013

இலங்கையில் 'தமிழ் பௌத்தம்' - பகுதி - 4

இராஜராஜப் பெரும்பள்ளி

இராஜராஜப் பெரும்பள்ளிக்கு ஆதித்த பேரரையன் கொடுத்த தானம்

திருகோணமலை சோழர் ஆட்சியின் கீழ் வந்த பின்னர் அது பல நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. அதில் ஒரு பெரும் பிரிவு இராஜேந்திரசிங்க வளநாடு. இந்த வளநாட்டில் அடங்கி இருந்த ஊர்களில் ஒன்றே வெல்காமம்.

வெல்காமத்தில் இருந்த தமிழ் பௌத்த விகாரை முதலாம் இராஜராஜனது பெயரால் ராஜராஜப் பெரும்பள்ளி என்றும், வெல்காமத்தில் இருந்ததனால் வெல்காமப் பள்ளி ( இன்றைய வெல்கம் விகாரை )என்றும் அழைக்கப்பட்டது.இங்கு கண்டுபிடிக்கப்பட்ட 16 தமிழ் சாசனங்களில் பெரும்பாலானவை தானசாசனங்கள்.
இச்சாசனங்கள் பெரும்பள்ளிக்கு வழங்கப்பட்ட தானங்கள் பற்றிச் சொல்கிறது. தானகாரர்களின் பெயர்,அவரது ஊர்ப் பெயர் ,பதவி அல்லது விருதுப் பெயர் அவர் வழங்கிய நன்கொடை என்பன அச்சாசனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இச்சாசனங்களில் ஒன்று புதுக்குடி என்ற ஊரைச் சேர்ந்த ஆதித்த பேரரையன் இராஜராஜப் பெரும்பள்ளிக்கு ஒரு விளக்கினையும் ,8 பசுக்களையும் மற்றும் பல பொருட்டகளையும்(சாசன எழுத்துக்கள் தெளிவில்லையாதலால் குறிப்பிட முடியவில்லை) தானமாகக் கொடுத்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கு குறிப்பிடப்படும் ஆதித்தன் என்பது அவனது இயற்பெயர். பேரரையன் என்பது சோழரின் நிர்வாகத்தில் சேவைபுரிந்த பிரதானிகளில் ஒரு வகையினருக்கு வழங்கப்பட்ட பதவிப்பெயர். அவனது ஊர் புதுக்குடி.புதுக்குடி என்னும் பல ஊர்ப்பெயர்கள் இலங்கையில் உள்ளதால் ஆதித்த பேரரையன் சோழரின் நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிந்த இலங்கைத் தமிழனா என்ற சந்தேகத்தைத் தருகிறது.

தமிழ் பௌத்த தேரர்கள்எனவே இன்று இலங்கையில் வடகிழக்குப் பகுதியில் காணப்படும் புராதான பௌத்த விகாரைகள் தொடர்பான புரிதலுக்கு இலங்கையில் 'தமிழ் பௌத்தம்' பற்றிய ஆராய்வு அவசியமாகிறது.

 'தமிழ்த்  தேரர்கள் ஆற்றிய பணிகள்' 
ஆரம்ப நாட்களில் இலங்கையில் பௌத்தம் பரவ தமிழ்த் தேரர்கள் ஆற்றிய பணிகளே குறிப்பிடத்தக்கதாக இருந்தன. அவற்றில் சங்கமித்திரர் இலங்கையில் தமிழ் பௌத்தத்திற்கு ஆற்றிய பணிகளை முன்னைய கட்டுரையில் பார்த்திருந்தோம். இனி

ஆசாரிய புத்ததத்த மகாதேரர்
சோழநாட்டில் பிறந்த தமிழராகிய இவர் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த பௌத்தர்களால் பெரிதும் போற்றப்படுகின்ற பௌத்த சமய ஆசாரியர் ஆவார். அவர் தாம் இயற்றிய நூல்களில் சோழநாட்டையும் , காவிரிப்பூம்பட்டினத்தையும், பூதமங்கலத்தையும் இனிமையாக புகழ்ந்து பாடியிருக்க்கும் இவர் இயற்றிய நூல்கள்.
1.மதுராத்தவிலாசினீ
2.அபிதம்மாவதாரம்
3.வினயவினிச்சயம்
4.உத்தரவினிச்சயம்
5.ரூபாரூபவிபாகம்
6.ஜினாலங்காரம்
சிலகாலம் இலங்கையின் மகாவிகாரையில் தங்கி இருந்த மகாதேரர் இலங்கை அரசன் மகாநாமன் (கி.பி.409-431) காலத்தவர் என மகாவம்சம் பதிவு செய்கிறது.   புத்ததத்தரின் நூல்கள் இன்று இலங்கையின் பௌத்தசங்கத்தினரால் பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

ஆசாரிய தருமபாலர்
காஞ்சிபுரத்தின் பௌத்த மகாவிகாரையின் மகாதேரராக இருந்த ஆசாரிய தருமபாலர் இலங்கைக் வந்து அநுராதபுரம் மகாவிகாரையில் தங்கியிருந்த பொழுதில் சூத்திரபிடகத்தின் சில பகுதிகளுக்கு உரை எழுதியிருக்கிறார். இவ்வுரை பிடக நூல்களுக்குச் சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்த பழைய உரைகளையும் ,தமிழ்நாட்டுப் பௌத்தப் பள்ளிகளில் இருந்த பழைய திராவிட உரைகளையும் கற்று ஆராய்ந்து எழுதப்பட்டதாகும்.

அநுருத்தர்
இவர் பாண்டிய நாட்டைச் சேர்ந்த தமிழ் பௌத்த தேரர். மதுரையிலிருந்த சோம விகாரையின் தலைவராக இருந்தவர். 'அபிதம்மாத்த சங்கிரகம்', 'பரமார்த்த வினிச்சயம்', 'நாமரூபப் பரிச்சேதம்' என்னும் நூல்களை இயற்றியிருக்கின்றார். இவர் எழுதிய அபிதம்மாத்த சங்கிரகம் என்ற பாளி நூல் இலங்கைப் பௌத்த சங்கத்தினராலும், பர்மா பௌத்த சங்கத்தினராலும் படித்துப் பேணப்படும்  பிரபலமான பௌத்த காவியமாகும்.

தம்மகீர்த்தீ
இலங்கையைக் கி.பி. 1236 முதல் 1268 வரையில் அரசாண்ட இரண்டாம் பராக்கிரமபாகு ஆதரித்த தம்மகீர்த்தீ 'தம்பராட்டா' என்னும் பாண்டிய மண்டலத்தைச் சேர்ந்தவர். தாட்டா வம்சம் என்னும் நூலினை பாளி மொழியில் இயற்றிய இவர் காலத்தில் இரண்டாம் பராக்கிரமபாகு சோழநாட்டிலிருந்த பௌத்த பிக்குகளை இலங்கைக்கு வரவழைத்து ஒரு பெரிய பௌத்த மகாநாடு நடத்தினான்.

எனவே மேற்கூறிய எடுத்துக்காட்டுகள் இலங்கையில் பௌத்தமத ஆரம்ப கால வரலாற்றில் தமிழர்களின் பங்களிப்பு கணிசமாக இருந்திருக்கிறது என்பதனை உறுதிப்படுத்துகிறது.

அன்றைய நாட்களில் துறவு பூண்ட தமிழ் அறிஞர்கள் இலங்கைக்கு வந்திருக்காவிட்டால் இன்று சிங்கள பௌத்த சமயத்தை காண வாய்ப்பே இல்லாது போயிருக்கும் 
என்ற சிங்கள வரலாற்றாய்வாளர் திரு.லயனல் சரத் அவர்களின் கூற்று
தமிழர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துகிறது.

தமிழகத்தில் பக்தி இயக்கத்தின் எழுச்சியும், இலங்கையில் வீர சைவமத பிரிவினைச் சேர்ந்த மாகனின் ஆட்சியும் தமிழ் பௌத்தத்தின் சுவடுதெரியாமல்  அழித்த பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால் நாம் நிற்க்கிறோம். எனவே வடகிழக்குப் பகுதியில் காணப்படும் புராதான பௌத்த விகாரைகள் நம் புருவத்தை உயர்த்தச் செய்பவையாக இருக்கின்றன. பௌத்தம் ஒரு குறிப்பிட்ட இனத்தின் அடையாளமாகிப் போனதன் விளைவிது.
                                                                                                                              
இலங்கையில் 'தமிழ் பௌத்தம்' தொடர்பான தேடலின் மிகச்சிறிய பகுதியே இதுவரை நீங்கள் பார்த்தது.  வருங்காலங்களில் இலங்கையில் தமிழர்களின் வரலாறு தொடர்பாக ஆராய்கையில் 'தமிழ் பௌத்தம்' தொடர்பான ஆதாரங்களும் முக்கியத்துவம் பெற்றவையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.                                                                                                       
த.ஜீவராஜ்
முற்றும்.



ஆதாரங்கள்

1. இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பேராசிரியர்.சி.பத்மநாதன்.2006.
2. பௌத்தமும் தமிழும் - மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980)
3. வரலாற்றுத் திருகோணமலை -  திரு.கனகசபாபதி சரவணபவன்



மேலும் வாசிக்க


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. Dear Dr
    I have a doubt. Are you a medical Dr or research specialist? From where do you got all these facts? It is really amazing to read your article. You are writing the truth. We have to bring this into light as book. I am happy to read and wanted to reread these and mahavamsam.
    When are you hope to publish this as book?
    Kernipiththan

    ReplyDelete
  2. Thank you very much for your comments Sir.

    ReplyDelete