Wednesday, October 09, 2013

கர்நாடக சங்கீத கலைஞர் திரு.கணபதிப்பிள்ளை மகாலிங்கம்

கணபதிப்பிள்ளை மகாலிங்கம்

தம்பலகாமத்து இரட்டையர்கள் எனச்சிறப்பிக்கப்படும் கலைஞர்களில் ஒருவரான திரு.கணபதிப்பிள்ளை மகாலிங்கம்  தம்பலகாமம் கள்ளிமேட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற சுதேச வைத்தியரும் அண்ணாவியாருமாகிய கந்தப்பர் கணபதிப்பிள்ளையின் இளையமகன். வாய்ப்பாட்டுக் கலைஞர். இவரது தமையனார் கலாபூசணம் கந்தர்வகான இசைமணி திரு.க.சண்முகலிங்கம் அவர்களை முன்னரே நாம் அறிமுகம் செய்துள்ளோம்.

1941 ஆம் ஆண்டு பிறந்த இவர் தம்பலகாமம் மகா வித்தியாலயத்தில் எட்டாந்தரம் வரை கல்வி பயின்றவர். 1967இல் விஐயலட்சுமி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு மகாலெட்சுமி, சுகுமாரன் ,நாகராசன், ராதாலெட்சுமி, சத்தியலெட்சுமி ஆகிய ஐந்து பிள்ளைகள். இவர்களில் திரு.ம.நாகராசன் சிறந்த வாய்ப்பாட்டுக் கலைஞராக மிளிர்வது குறிப்பிடத்தக்கது.
தம்பலகாமம் மகாவித்தியாலயத்தில் 60 பதுகளில் சங்கீதம் கற்றுக்கொடுத்த திருமதி.சுப்பிரமணியம் சீதாலட்சுமி அவர்களிடம் முறையாக கர்நாடகசங்கீதத்தை கற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இது தனக்கு இறைவனால் தரப்பட்ட சந்தர்பம் என கலைஞர் திரு.மகாலிங்கம் அடிக்கடி கூறுவார்.

60 பதுகளில் மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்தியகல்லூரி மாணவர்கள் கல்விச்சுற்றுலா வந்தனர். தம்பலகாமம் மகா வித்தியாலயத்தில் அன்றிரவு தங்கினர். அன்று சினேகித பூர்வமாக நடைபெற்ற கலைநிகழ்சிக்கு தேவாரம் பாடும் வாய்ப்பு நமது கலைஞர் மகாலிங்கத்திற்குக் கிடைத்தது. அடுத்த நாள் பட்டிமேட்டுக்கு தனது மகனுடன் நடந்து சென்று கொண்டிருந்த சீதாலட்சுமியின் கண்களில் தற்செயலாக நமது கலைஞர் மகாலிங்கம் தட்டுப்பட்டார்.

'தம்பி நீங்கள் தானே நேற்று தேவாரம் பாடியது' எனக்கேட்டார்.
துவிச்சக்கர வண்டியில் வந்த நமது கலைஞர் மகாலிங்கம் கீழே இறங்கி 'ஆமாம் ரீச்சர்' என மிகுந்த மரியாதையுடன் கூறினார்.

அவருடைய அடக்கமும் சங்கீதத்திலிருந்த புலமையும் சீதாலட்சுமிக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. இந்தச் சந்திப்பும் உரையாடலும் கலைஞர் மகாலிங்கத்தின் வாழ்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. சங்கீத ஆசிரியை சீதாலட்சுமியிடம் இரண்டு வருடங்களாக கீர்த்தனைகளை முறையாகப் பாடக்கற்றுக் கொண்டார்.

தனது தமையனாராகிய கலாபூசணம் கந்தர்வகான இசைமணி திரு.க.சண்முலிங்கம் அவர்களுடன் இணைந்து மேடையேறிப்பாடத் தொங்கினார். 'தம்பலகாமத்து இரட்டையர்கள்' என்ற பெயரும் இவர்களுக்கு ஏற்பட்டது. இவரது ஆற்றல் மகத்தானது. மீரா படத்தில் வரும் 'காற்றினிலே வரும் கீதம்' சுப்புலட்சுமியின் 'வசந்தமாலை' தண்டபாணி தேசிகரின் 'தாமரை பூத்த தடாகமடி' பட்டம்மாவின் 'தூண்டிற் புழுவினைப் போல்' ஆகிய பாடல்களை அதேபோல பாடும் ஆற்றல் அவரிடமிருந்தது.

தம்பலகாமம் வளர்கலை மன்றம் இவரைப் பாராட்டிக் கௌரவித்தது. தம்பலகாமம் மாரியம்மன் கோயில் அறக்காவல் சபையினர் பொன்னாடை போர்த்து இவரைக் கௌரவித்தனர். மக்கள் இவரது குரல் இனிமையையும் பாடும் ஆற்றலையும் இன்றுவரை பாராட்டியவண்ணமே உள்ளனர்.

நாகராசா
எல்லாவற்றிற்கும் மேலாக இவரது மகன் நாகராசா 'சண் இசைக்குழுவில்' இணைந்து கொண்டு அற்புதமாகப் பாடி அனைவரது மனங்களையும் கவர்ந்து வருகிறார். 

சுருங்கக் கூறினால் தம்பலகாமத்தின் ஈடு இணையற்ற புகழ் புத்த கலைஞராகிய கந்தப்பர் கணபதிபிள்ளை அண்ணாவியாரின் சங்கீத பாரம்பரியத்தின் வித்துக்களாக இவர்கள் விளங்குகிறார்கள் விளங்குவார்கள் எனத் துணிந்து கூறலாம்.


வேலாயுதம் தங்கராசா

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment