திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு வன்னிமைகளும் இவ்வாவண உருவாக்கத்தில் பங்குகொண்ட வேளை தங்கள் பகுதிகளில் நடைமுறையில் இருந்த தேசவழமை குறித்து அறிக்கை சமர்ப்பித்திருந்தார்கள். இதில் தம்பலகாமப்பற்று தலைமையினால் எழுதப்பட்ட அறிக்கையில் இருக்கும் தேசவழமை குறித்த சில முக்கிய அம்சங்கள்.
திருமணம் -
1. திருமணம் செய்ய விரும்புவோர் வன்னிபம் அல்லது முதலியார்க்கு அது தொடர்பில் அறிவித்து அவர்கள் முன்னிலையில் திருமண ஒப்பந்தம் எழுதிக்கொள்ள வேண்டும்.
2. மணமகனோ,மணமகளோ தமது வாக்குறுதியில் தவறினால் குற்றப்பணம் கொடுப்பதற்கும், தண்டனை அனுபவிப்பதற்கும் உரித்தானவர் ஆவார் என்பதனை உத்தரவாதம் செய்தல் வேண்டும்.
3. முறைப்படி நடைபெறும் திருமணத்தில் மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி அணிவிக்கவேண்டும்.
சீதனம் -
பெற்றோர் தாம் தேடிய சொத்துக்களை தங்கள் பிள்ளைகளுக்கு சீதனமாகக் கொடுப்பர்.
சொத்துரிமை -
பெற்றோர் தேடிய சொத்துக்கள் பிள்ளைகளுக்கு கிடைக்கும். பரம்பரைச் சொத்துக்கள் மருமக்களைச் சேரும். இது மருமக்கள் தாயமுறையினை அடிப்படையாகக் கொண்டது. திருகோணமலைப்பற்று யாழ்ப்பாணத்தை ஒத்த தேசவழமை முறையினைக் கொண்டிருக்க கட்டுக்குளப்பற்று, கொட்டியாரப்பற்று, தம்பலகாமப்பற்று என்பன முக்குவரிடம் காணப்பட்ட வழமையை ஒத்த மருமக்கள் தாயமுறையினை தமது தேசவழமையாகக் கொண்டிருந்தமை குறிப்படத்தக்கது.
ஆதனங்கள் -
1. குடிமக்கள் வன்னிபத்திற்கு அறிவித்து , அனுமதி பெற்று காடுகளைத் திருத்தி குடியிருப்பாகவோ , தோட்டமாகவோ பயன்படுத்த முடியும்.
2. அந்நிலங்கள் அவர்களுக்கு உரித்தானவையாகும். அவற்றை அவர்கள் விற்கவோ,ஒற்றியாகக்(அடமானம்) கொடுக்கவோ அல்லது சீதனமாகக் கொடுக்கவோ உரித்துடையவர்கள்.
3. இவற்றில் இருந்து பெறப்படும் வருமானத்தில் 10 வீதம் கோணேசர் கோவிலுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.
கூலி - எவரேனும் ஒருவர் மனிதனொருவரைக் கூலியாளாகக் கொண்டால் அம்மனிதனுக்கு வருடமொன்றிற்கு உணவும், இரண்டு வேட்டிகளும் கொடுக்க வேண்டும்.
கி.பி 1786 இல் திருகோணமலையில் இருந்த வன்னிபங்கள் தொடர்பான விபரங்கள்
கட்டுக்குளப்பற்று - சந்திரசேகர நல்லமாப்பாண வன்னிபம்
கொட்டியாரப்பற்று- இருமரபுத்துய்ய எதிர்வீரசிங்க நல்லமாப்பாண வன்னிபம்
தம்பலகாமப்பற்று - கடகதண்டிகை கனகரட்ணம் முதலியார்
திருகோணமலை மாவட்ட ஒல்லாந்து ஆளுனர் Jacques Fabrice van Senden அவர்களின் திருகோணமலை மாவட்ட சுற்றுப்பயண அறிக்கையில் ( 15.05.1786 - 21.06.1786 ) அவரது தம்பலகாமப்பற்று விஜயத்தின்போது தம்பலகாமப்பற்று வன்னிபம் கடகதண்டிகை கனகரட்ணம் முதலியார் அவர்களால் முள்ளியடியில் வைத்து வரவேற்பளிக்கப்பட்டதாக குறிப்பிருக்கிறது.
Jacques Fabrice van Senden இன் மேற்குறித்த சுற்றுப்பயண அறிக்கையில் தம்பலகாமப்பற்று கீழ்வருமாறு விபரிக்கப்பட்டுள்ளது.
''தாழ்ந்த நிலப்பகுதியில் குறுந்தூர இடைவெளிகளில் தீவுத் திடல்களாகக் காட்சிளிக்கும் கிராமங்களைச் சூழ்ந்து பரந்து அழகாகக் காட்சியளிக்கும் நெல்வயல்கள், காற்றில் அலை அலையாக ஆடும் நெற்கதிர்கள், இந்த அழகிற்கு மகுடமளிப்பது போன்று ஒவ்வோரு மேட்டிலும் காணப்படும் தென்னைமரம்,அது இன்னும் அறுவடை செய்யப்படாத இளம் பச்சை நிற வயல்களுக்கு நிழலூட்டுகின்றது. அறுவடை முடிந்த வைக்கோல் குவியலும்,கரும்பச்சை மரங்களும் இணைந்து எங்கும் அழகாக காட்சியளிக்கின்றது.''
(மூலம் டச்சு மொழி - தமிழாக்கம் திரு.கனகசபாபதி சரவணபவன்- காலனித்துவ திருகோணமலை )
05.06.1786 இல் எழுதப்பட்டிருக்கும் மேற்படி விபரிப்பு காலனித்துவ ஆட்சி, இனவன்முறை, இயற்கை அனர்த்தங்கள் தாண்டி இன்றுவரை நிலைத்திருப்பதற்கு தம்பலகாமப்பற்று கொண்டிருக்கும் வற்றாத இயற்கைவளமே காரணமெனலாம்.
முன்னர் சுதந்திரச் சிற்றரசாக இருந்த தம்பலகாமப்பற்றின் மேற்குறிப்பிட்ட வளங்கள் காலனித்துவ ஆட்சி மூலம் வரியாக சூறையாடப்பட்டன. மக்கள் ஆண்டுதோறும் ஒரு கொம்பன் யானை அல்லது இரண்டு கொம்பில்லாத யானைகளைப் பிடித்துக் கொடுப்பதோடு, தானிய விளைச்சலில் பத்திலொரு பாகத்தை வரியாகக் கொடுக்கவேண்டி இருந்தது. இதில் ஒரு யானை 1000 பறை நெல்லுக்குச் சமமாகக் கணிக்கப்பட்டது.
மக்கள் அதிக கடன் சுமையாலும் ,அதிக தண்டப்பணம் ,அம்மைநோய், காப்பிரிகளின் கலகம் ,கொள்ளை என்பனவற்றால் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டனர். சிலர் கிராமத்தை விட்டு வெளியேறினர்.ஒல்லாந்தரின் அக்கறையற்ற போக்கினால் தம்பலகாமப்பற்று வளர்ச்சி குன்றிக் காணப்பட்டது. இது பின்வந்த பிரித்தானியர் ஆட்சியிலும் தொடர்ந்தது.
கட்டுக்குளப்பற்று - இராசையா
கொட்டியாரப்பற்று - சங்கரப்பிள்ளை
தம்பலகாமப்பற்று - கனகசிங்கம்
திருகோணமலைப்பற்று - சரவணமுத்து
தம்பலகாமப்பற்று வன்னிமையாகிய அரச பரம்பரை காலப்போக்கில் அருகிக் குறைந்தது. இந்த அரச மரபினரில் சிலர், பிற்காலம் தம்பலகாமம் தெற்கில் வர்ணமேட்டுக்கு அருகில் உள்ள பகுதியில் வாழ்ந்து வந்தனர். அந்த இடம் இன்னும் வன்னிச்சியார் திடல் என்றே அழைக்கப்பட்டு வருகிறது.
த.ஜீவராஜ்
தொடரும்.....
1. வன்னியர் - பேராசிரியர்.சி.பத்மநாதன்
2. காலனித்துவ திருகோணமலை - கனகசபாபதி சரவணபவன் 2003
3. திருகோணமலையை ஆண்ட வன்னிபங்கள் பற்றிய வரலாற்றாதாரங்கள் - த.ஜீவராஜ்
4. இலங்கைத் தமிழர் தேசவழமைகளும் சமூக வழமைகளும். - பேராசிரியர்.சி.பத்மநாதன்
மேலும் வாசிக்க
Dear Dr
ReplyDeleteI have read the contents earlir and have heard about These, Still there are more valuable and interesting details about our region. I am proud of your efforts. A Dr is more interested in research in our heritage. Very prtoud to read about our motherland legend. Proceed and one day you will be fame in our literery world.
Kernipiththan