தமிழ்க் குடிகள் வாழுகின்ற காரணத்தால்
தம்பலகாமம் என்னும் பெயரைப் பூண்டு எங்கள்
தாயகமாம் உழவர் குலம் தழைத்த நாடு
செம்பவளத் திருமேனி உடையோனான
ஜீவர்களை இரட்சிக்கும் கருணை வள்ளளல்
எம்பெருமான் கோணேசர் கோயில் கொண்டு
இருக்கின்ற திருப்பதியும் இந்த ஊரே.
சிற்றூர்கள் ஓர் வளைவில் திடல் திடலாயத்
தெருக்களாற் தொடர்புற்றுத் தென்னை சூழ்ந்து
சிற்றாறு பலவாறாய்ப் பிரிந்து ஓடிச்
செந்நெல்லுக்கு நீர் பாய்ந்து தேங்கி நிற்கும்
வற்றாத தடாகங்கள் இவைகளிலே
வளர்ந்திருக்கும் தாமரைகள் செங்கழுநீர்
முற்றாகப் பரந்திருக்கும் பசுமைக் காட்சி
முழுவதிலும் மருத நில எழிற்கோலங்கள்
பொங்கிவரும் கந்தளாய் நீர் வயலில் பாயும்
புதுப்புனலால் நிறைகின்ற தடாகங்களில்
சங்கினங்கள் வயிறுளைந்து ஈன்ற முத்து
தாமரையின் இலைகிடக்கக் கண்டன்னங்கள்
தங்களது முட்டை என்று அடை கிடக்கும்
நிலவளமும் நீர்வளமும் நிறைந்த இவ்வூர்
மங்கையரும் ஆடவரும் சேர்ந்துழைத்து
வயல்வெளியில் நெல்விதைத்து மகிழும் நாடு
கோணேசர் கோயில்கொண்டிருப்பதாலே
கோயில் குடியிருப்பு அதற்கு அப்பால்
குணதிசையில் குஞ்சடப்பன் மாக்கைத்திடல்கள்
ஐயனார் நாயன்மார் திடல்களுக்கு
அண்மையில் நடுப்பிரப்பந்திடல் முள்ளியடி
வர்ணமேடு வன்னிச்சியார் கரைச்சைத்திடல்கள்
கண்ணகிக்கு வேள்வி செய்யும் கள்ளிமேடு
கடலோரம் சம்மாந்துறை சிப்பித்திடல்கள்
கூட்டங்கள் கூடியதால் கூட்டாம்புளி
கூட்டமாய்ப் பசு வளர்த்த பட்டிமேடு
காட்டு நிலமாயிருந்து பின் திருத்தி
கனதியாய்க் குடிசனங்கள் நெருங்கி வாழும்
மேடான புதுக்குடியிருப்பு பாலம்போட்டார்
மேற்கிலே குடியேற்றம் கப்பல்துறை
நெடிதகன்று சங்கிலித் தொடர்போலூர்கள்
நிறைந்துள்ள தமிழ்ஊரே தம்பலகாமம்.
கழனி சூழ் தம்பலகாமம் வாழும் மக்கள்
ஆதியிலே இருந்துழவு செய்து நெல்லை
அமோகமாக விளைவிக்கும் அரும்பணியில்
சோதனைகள் அடுத்தடுத்து வந்தபோதும்
துயருற்று வருந்தாமல் தொடர்ந்துழைத்து
சாதனைகள் புரிந்து உலகோர் மெச்ச
தம்பலகாமத்துழவர் வாழ்தல் கண்டோம்.
தம்பலகாமம்.க.வேலாயுதம்
அருமை. ஊர்ப்பெயர்களுக்கான காரணங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.
ReplyDeleteArmaiyana kavi varikal atpotham
ReplyDeleteKernipiththan
Armaiyana kavi varikal atpotham
ReplyDeleteKernipiththan