Thursday, August 15, 2013

வரலாற்றில் தம்பலகாமம் - இடப்பெயர் ஆய்வு பகுதி 3

தம்பலகாமம்

தொல்பொருள் சாசனங்களுடன் ஒப்பிடுகையில் இடப்பெயர்கள் பெரும்பாலும் தனித்திறமையோ, நுணுக்கமோ இன்றி பொதுமக்களால் படைக்கப்படுபவை. எனவே அவை மக்களின் மொழிவழி எண்ணங்களை மிகச்சிறப்பாக உணர்த்தி நிற்கின்றது.
இலங்கைத் தமிழர் இடபெயர் பற்றிய ஆய்வில் “காமம்” என்னும் ஈற்றுப்பெயர் கொண்டமைந்த பெயர்கள் அவற்றுக்கேயுரிய தனித்துவ அடையாளப்படுத்தலைக் கொண்டிருந்ததை முன்னைய கட்டுரை விபரித்தது. இனி இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள  தம்பலகாமம் என்னும் விவசாயக் கிராமத்தின் வரலாற்றுச் சுருக்கத்தினைப் பார்ப்போம்.

யாழ்ப்பாண வைபவம்
தம்பலகாமம் தொடர்பான வரலாற்றுத் தேடலில் அதன் தொன்மைபற்றி நமக்குக் கிடைக்கும் முதல் ஆவணம் யாழ்ப்பாண வைபவம் ஆகும். 18 ஆம் நாற்றாண்டுக்குரியதாகக் கருதப்படும் இந்நூல் மாதகல் மயில்வாகனப்புலவர் என்பவரால் கைலாய மாலை, வையாபாடல், பரராசசேகர உலா, இராசமுறை என்பனவற்றை மூலநூல்களாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.

இந்நூலில் குடியேற்றம் தொடர்பாக வரும் பகுதியில் கி.மு 5 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த விஜயன் இலங்கையின் முதல் மன்னனாக முடிசூடிக்கொண்ட பிற்பாடு இங்கிருந்த குடிசனங்களை தன்வசப்படுத்தும் நோக்கிலும், தன்னாட்சிக்கு பாதுகாப்பாகவும் இலங்கையின் நான்கு திசையிலும் நான்கு சிவாலயங்களைக் கட்டுவித்தான் அல்லது அங்கு ஏலவே இருந்தவற்றைப் புனரமைத்தான் என்கிறது. அவை முறையே

கிழக்கில் - தம்பலகாமம்
மேற்கில் - திருக்கேதீச்சரம் (புனரமைப்பு)
தெற்கில் - மாத்துறையில் சந்திரசேகரவீசுரம் (தற்போது அழிந்து போய்விட்டது )
வடக்கில் - திருதம்பலேஸ்வரம் ( இன்றைய நகுலேஸ்வரம்)
என்பனவாகும்.

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் விஜயனின் வருகைக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு நாகரீகம் அடைந்த ஒரு சமூகம் வாழ்ந்ததை அடையாளப்படுத்தி நிற்கிறது. அத்தோடு பெருங்கற்காலக் கலாச்சாரத்துக்குரிய மக்கள் நீர்ப்பாசனம் , மந்தை வளர்ப்பு,பயிர்ச்செய்கை என்னும் ஒரு நிலையான பண்பாட்டினைக் கொண்டிருந்தார்கள் என ஆகழ்வாராச்சிகள் உறுதி செய்கின்றன.

பெருங்கற்காலத்திற்கு உரிய பரந்தளவிலான ஆய்வுகள் திருகோணமலையில் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் தம்பலகாமத்தில் இருந்த ஆதிக்குடிகள் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள முடியாமலுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.


வரலாற்றில் பல தடவைகள் திருகோணமலை மீது தமிழக அரசுகள் நேரடி ஆதிக்கம் செலுத்தி வந்தமையைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்குப் பல காரணங்கள் இருந்தது.

1. இங்கிருந்த ஆதிக்குடிகளின் அரசுகள் சிற்றரசுகளாக் காணப்பட்டதே அன்றி ஒரு இராட்சியமாக உருவாகி இருக்கவில்லை.

2. திருகோணமலைத் துறைமுகம் பண்டைக்காலத்திலேயே புகழ்பெற்றிருந்ததோடு தமிழக வணிகர்களுக்கு பயனுள்ள துறைமுகமாக விளங்கியமை.

3. கடலின் இரு பக்கங்களிலும் ஒரே பண்பாட்டுடைய மக்கள் வாழ்ந்தமை என்பவற்றைக் குறிப்பிடலாம்.

மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் இங்கு பல்லவர், பாண்டியர், சோழர் முதலான தமிழக அரசுகளின் ஆதிக்கம் தொடர்ச்சியாக இடம்பெற்ற வரலாற்றினைப் புரிந்து கொள்ள முடியும். இதில் சோழர்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் திருகோணமலையினை நேரடியாகப் பாதித்திருந்தது.

சோழ மன்னனான முதலாம் இராஜராஜன் கி.பி 993 இல் இலங்கையின் மீது படையெடுத்து ருகுணு இராச்சியம் தவிர்ந்த இலங்கையின் ஏனைய பகுதிகளைக் கைப்பற்றி அதற்கு மும்முடிச் சோழ மண்டலம் எனப் பெயரிடப்பட்டு, தலைநகரான பொலன்னறுவையும் ஜனநாதமங்கலம் எனப் பெயர் மாற்றம் செய்தான். அதனைத்தொடர்ந்து பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த மணிமுடியையும், செங்கோலையும் கைப்பற்றுவதற்காக கி.பி 1017 ஆம் ஆண்டில் முதலாம் இராசேந்திர சோழன் எஞ்சியிருந்த ருகுணு இராச்சியத்தையும் படைகளை அனுப்பிக் கைப்பற்றினான். இதன் மூலம் முழு இலங்கையையும் சோழர் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான்.

சோழப்பிரிநிதியான சோழ இலங்கேஸ்வரனின் ஆதிக்கம் நிலவி வந்த நாட்களில் அவர்களது ஆட்சிமுறை பற்றித் தகவல் தரும் கல்வெட்டுக்களில் தம்பலகாமம் ஐயனார் திடற் கல்வெட்டும் ஒன்றாகும்.
 த.ஜீவராஜ்
தொடரும்.....


மேலும் வாசிக்க



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. நூல் தேடிப் படிக்க இயலாது. இப்படி யாராவது தேடிக் கொடுத்தால் உபயோகமாக இருக்கிறது. தகவல்களுக்கு நன்றி ஜீவன். தொடருங்கள். தொடருவேன். :-)

    ReplyDelete
  2. Dear Dr.
    I am very grateful to you and your father. You are doing very good research on our history. What you have written on this web is true and correct. Our Indian professors failed to do researches on our country. Now our Government is try to hide Tamils' history. Language is differ from religion. Buddha is a Hindu.He found the truth. People called him as a hermit. He preached truth but the world never listened his preaching. Still the monks are enter into politics and become member of parliament. Buddha was a son of an emperor. But he threw away the throne and became a monk. Here in our country Monks try their level best to become M.Ps. and rule the country?Hoe do you think about their behavior.?
    Kernipiththan

    ReplyDelete