இதுவரை குளக்கோட்டன் காலம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட வரலாற்றாசிரியர்கள் பலர் முரண்பாடான கருத்துக்களையே வெளியிட்டுள்ளனர். பேராசிரியர் பரணவிதானையும் அவரது கருத்தை ஏற்கும் ஏனைய வரலாற்றாய்வாளர்களும் குளக்கோட்டன் கி.பி.1223ஆம் ஆண்டு இலங்கை வந்ததாகக் கூறுகின்றனர்.(1) வரலாற்றாய்வாளர் பேராசிரியர் செ.குணசிங்கம் அவர்களும் கி.பி.1223 ஆம் ஆண்டிலேயே குளக்கோட்டன் இலங்கை வந்ததாக தாம் எழுதிய ‘கோணேஸ்வரம்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
1945 ஆம் ஆண்டு இராணுவத்தினர் திருகோணமலைக் கோட்டையில் வடமொழியிலும் கிரந்தத்திலும் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்றைக் கண்டெடுத்தனர். இவற்றோடு திருமால் ,இலக்குமி உருவச்சிலைகளையும் கண்டெடுத்தனர். இவை திருக்கோணேஸ்வரத்தில் குளக்கோட்டனால் அமைக்கப்பட்ட ‘திருமால் கோட்டத்தை’ச் சேர்ந்தவையாகும் என்பது அறிஞர் தம் கருத்தாகும்.(5).இந்தக் கல்வெட்டானது குளக்கோட்டனின் இயற்பெயரையும் அவன் இலங்கைக்கு வருகை தந்த காலத்தையும் தெளிவாக எடுத்துரைப்பதாக இதனை ஆய்வு செய்த வரலாற்றாய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர்.
‘சோடகங்க தேவ’ என்னும் பெயரையுடைய இளவரசன் இலங்கையிலுள்ள திருகோணமலைக்கு வந்திறங்கிய காலத்தை இக்கல்வெட்டு துல்லியமாக எடுத்துரைக்கிறது. இந்தக்கல்வெட்டை முதலில் வாசித்து விளக்கமளித்தவர் பேராசிரியர் சேனக பரணவிதான அவர்கள் ஆகும். கி.பி.1223 ஆம் ஆண்டு அவன் இலங்கையை வந்தடைந்ததாக அவர் கூறுகிறார்.வடமொழியிலுள்ள இந்த கல்வெட்டை அவர் மொழிபெயர்ப்பு செய்யும் போது ஏற்பட்ட தவறால் இவன் இலங்கையை வந்தடைந்த திகதி மாதம் ஆகிய கணிப்புகளில் தவறுகள் ஏற்பட்டுள்ளதாக வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். எனினும் புகழ்பெற்ற சோடகங்க தேவ என்னும் மன்னன் கி;.பி.1223 ஆம் ஆண்டு இலங்கையை வந்தடைந்தான் என்னும் கருத்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. குளக்கோட்டன் தரிசனம் என்ற ஆய்வு நூலில் அதன் ஆசிரியர் சோடகங்கனின் காலம் கி.பி.1223 ஆம் ஆண்டெனவும் அவனே குளக்கோட்டன் எனவும் குறிப்பிடுகிறார்.(6)
குளக்கோட்டன் காலம் பற்றிய ஆய்வுகள் குறித்து வரலாற்றாய்வாளர்களின் கருத்துக்களை மேலே குறிப்பிட்டுள்ளோம். குறிப்பாகச் சொல்லப்போனால் கி.பி.1223 ஆம் ஆண்டே அவனது காலமாகும் என்பது இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டோர் கருத்தாகும். தம்பலகாமத்திலும் குளக்கோட்டனின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்த கொட்டியாரம் , மல்லிகைத்தீவு ,மேன்காமம், சம்பூர் ,நிலாவெளி, கட்டுக்குளப்பற்று போன்ற இடங்களில் வாழும் ஆதி கோணநாயகர் கோயில் தொழும்பாளர்களிடம் இன்றும் இருக்கும் இது தொடர்பான ஓலைச்சுவடிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படின் மேலும் பல விபரங்களை நாம் தெளிவாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் என்பது நமது கருத்தாகும்.
தொடரும்.
உசாத்துணை நூல்கள்.
1. கோணேஸ்வரம். திரு. க.குணராசா.
2. திரிகோணாசலப் புராணம். முத்துக்குமாரசாமிப்பிள்ளை. பதிப்பு அழகக்கோன் 1950.
3. யாழ்ப்பாண வைபவமாலை. மாதகல் மயில்வாகனப் புலவர் பதிப்பு. கலாநிதி .க.குணராசா.
4. யாழ்ப்பாணச் சரித்திரம். செ.இராசநாயகம். புதிப்பு. 1999.
5. வரலாறறுத்திருகோணமலை. கனகசபாபதி சரவணபவன். புதிப்பு.2003.
6. குளக்கோட்டன் தரிசனம். செல்வி க.தங்கேஸ்வரி. பதிப்பு. 1993.
மேலும் வாசிக்க
1. குளக்கோட்டன் என்னும் தர்ம சீலன் - பகுதி 1 @ வரலாற்றில் திருகோணமலை
2 .'முன்னே குளக்கோட்டன் மூட்டிய திருப்பணிகள்....' - வரலாற்றாதாரங்கள் - பகுதி 2 @ கோணேசர் கல்வெட்டு
3. குளக்கோட்டன் அமைத்த ‘கோணநாயகர் திருவுரு' - பகுதி 3 @ திருகோணாசலப் புராணம்
5. திருகோணமலை முதல் திருக்கோயில் வரை நடைபெற்ற குளக்கோட்டனின் திருப்பணிகள் -பகுதி 5
No comments:
Post a Comment