பழமையில் ‘உன்னரசுகிரி’ என வழங்கப்பட்ட பிரதேசத்தை ஆட்சிசெய்த மனுநேய கயபாகு என்பான் கடலில் அடைந்து வந்த பேழை ஒன்றில் காணப்பட்ட பெண் குழந்தை ஒன்றை எடுத்து வளர்த்து ‘ஆடகசவுந்தரி’ எனப்பெயருமிட்டு தனக்குப்பிறகு ஆட்சி உரிமையை வழங்கினான் என ‘கோணேசர் கல்வெட்டுக்’ கூறுகிறது.
குளக்கோட்டன் செய்யும் திருப்பணியை அழித்தொழித்து ,அவனையும் அவன் படைகளையும் கப்பலில் ஏற்றி அனுப்பி வைக்குமாறு தனது முதன் மந்திரிக்கு ஆணையிட்டு ஆடகசவுந்தரி அனுப்பி வைக்க அவர்களது முயற்சியை தனது மதியூகத்தால் வெற்றி கொண்ட குளக்கோட்டன் ஆடகசவுந்தரியை மணந்து தனது ஆட்சி அதிகாரத்தை திருகோணமலையிலிருந்து திருக்கோயில் வரை வளர்த்துக் கொண்டான் என ‘கோணேசர் கல்வெட்டு’ மூலம் அறியக் கூடியதாக உள்ளது.
மட்டக்களப்பு மான்மியத்தில் இவ்விபரங்கள் குறிப்பிடப்படுகின்ற போதும் குளக்கோட்டன் என்ற பெயருக்குப் பதிலாக ‘மகாசேனன்’ என்ற பெயர் கூறப்பட்டுள்ளது. இங்கு “ஏர் பெருகு பருதிகுலராசன் குளக்கோட்டன்”என திருக்கோயில் திருப்பணிபற்றிய கல்வெட்டுப்பாடல் ஒன்றை கவனத்திற்கெடுப்பது இன்றியமையாதது.
திருகோணமலைக்கும் திருக்கோயிலுக்கும் இடையில் அமைந்துள்ள ‘வெருகலம்பதி’ ‘கொக்கட்டிச்சோலை’ ‘மாமாங்கேஸ்வரம்’ ‘உகந்தை’ போன்ற பதிகளிலும் குளக்கோட்டனின் திருப்பணிகள் இடம் பெற்றுள்ளன என வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். திருக்கோணேஸ்வரம் ,திருக்கோயில் ஆலயங்களின் கட்டிட அமைப்பிலுள்ள ஒற்றுமை கல்வெட்டு வாசகங்களில் உள்ள ஒற்றுமை, ஆலய நிர்வகிப்பிலுள்ள ஒற்றுமை ஆகியன திருகோணமலை முதல் திருக்கோயில் வரை குளக்கோட்டன் திருப்பணிகள் செய்தான் என்பதற்கு ஆதாரங்களாகின்றன என செல்வி.க.தங்கேஸ்வரி அவர்கள் தமது ‘குளக்கோட்டன் தரிசனம்’ என்ற வரலாற்று ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.
சொல்லரிய விளக்கேற்றல், பூவெடுத்தல், தூசகற்றல், சாணமிடல் ,அணி விளக்கல், நல்லமலர் மாலை கட்டல், மேளம் மீட்டல், நற்சந்தண மரைத்திடுதல் ,நெல்லுக்குற்றல் ,துல்லியமாய் வளர்ச்சி வகை ஏந்திச் செல்லல்,தானிகட்டல், அமுது வைத்தல், முதன்மைப் பார்ப்பான், வல்லபதம் நீர் வார்த்தல், அகத்தில் தொண்டு புரியுமென்று மாகோனும் வகுத்துப் பின்னும்”; எனப்பாடல் தொடர்கிறது.
இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள படியே இன்றும் திருக்கோயில் பகுதியில் கோயில் நிர்வாகம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கோணேசர் கல்வெட்டு உரைநடைப்பகுதியில் வரும்
தொழும்பாளர்களுக்கான தொழும்பு பற்றிய விபரங்களும் மேற்காட்டிய பாடலிலுள்ள தொழும்பு முறைகளும் ஒரேவகையில் அமைந்துள்ளமை இங்கே ஆய்வுக்குரிய விடயங்களாக அமைகின்றன. குளக்கோட்டனால் செப்பேடுகளில் பொறிக்கப்பட்ட ‘பெரியவளமைப்பத்ததி’ நமக்குக் கிடைத்திருக்குமாயின் இவை தொடர்பான பல வினாக்களுக்கு உரிய பதில் கிடைத்திருக்கும்.
கிழக்கு இலங்கையை ஆண்ட அரசர்களுள் தன்னிகரற்றவனாக மக்களால் குளக்கோட்டன் இற்றைவரை நேசிக்கப்படுவதற்கு அவன் தன்னாட்சிக்காலத்தில் ஆற்றிய தெய்வீகப் பணிகளே காரணங்களாக அமைந்துள்ளன என்பதை எவரும் ஆட்சேபிக்க முடியாது.
தொடரும்.
வே.தங்கராசாமேலும் வாசிக்க
1. குளக்கோட்டன் என்னும் தர்ம சீலன் - பகுதி 1 @ வரலாற்றில் திருகோணமலை
2 .'முன்னே குளக்கோட்டன் மூட்டிய திருப்பணிகள்....' - வரலாற்றாதாரங்கள் - பகுதி 2 @ கோணேசர் கல்வெட்டு
3. குளக்கோட்டன் அமைத்த ‘கோணநாயகர் திருவுரு' - பகுதி 3 @ திருகோணாசலப் புராணம்
Dear Dr
ReplyDeleteIt is really wonderful to bring our historical fame into light. Thanks to appah. Please get the photos of our Thamil Sangam cultural program and publish in Jeevanathy
S.Arulanantham
இன்னும் ஆழமான ஆராய்ச்சி வேண்டும். உன்னரசிகிரியே உன்னிச்சையாக மருவியுமிருக்கலாம்.தம்பலகாமத்தின் பெயரை
ReplyDeleteபொருட்படுத்தும் போது தம்முடையு பல கமங்கள் என எண்ணி தம்பலகமமே தம்பலகாமம்
ஆகிற்று என்போர் முன் தம்பலம்-தாம்பூலம்- வெற்றிலைக்கு இன்னொரு பெயர் அது விளைவித்து கோணேசர் கோவிலுக்கு அனுப்பியதால் காரணப்பெயராகவும், மல்லிகைத்தீவு, திரியாய் போன்று மல்லிகைப்பூ விளக்குத்திரி(தாமரைத்தண்டில் திரித்தது) போன்றவை அனுப்பி வைத்ததால் வந்த பெயராகவும் இருக்க வாய்ப்புண்டு.