குளக்கோட்டன் |
குளக்கோட்டன் காலத்தில் திருகோணமலை மாவட்டம் நாலு பற்றுக்களாக நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது.
1.திருகோணமலைப்பற்று.
2.கட்டுக்குளப்பற்று (நிலாவெளி சார்ந்த பிரதேசம்)
3.கொட்டியாரப்பற்று.(மூதூர் சார்ந்த பிரதேசம்)
4.தம்பலகாமப் பற்று என்பன
இவை தனியான சுயாட்சி அலகுகள் என்பதற்கு அவை கொண்டிருந்த நில, நீதி , தண்டனை தொடர்பான அதிகாரங்களே சான்று பகருகின்றன. இவையனைத்தும் திருக்கோணேஸ்வர ஆலயத்திருப்பணிகள் இடையிறாது நியமப்படி நடைபெற வேண்டும் என்பதையும், அவ்வேளைகளில் ஆலயப் பணியாளர்கள் ,சாதாரண மக்கள் என்பவர்களுக்கிடையில் ஏற்படும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு இந்த அதிகாரங்கள் பயன்பட வேண்டும் என்பதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தன.
வன்னிபங்கள் தொடர்பான வரலாற்றாதாரங்கள்.
1.கோணேசர் கல்வெட்டு - குளக்கோட்டன் தனியுண்ணா பூபால வன்னியனை திருகோணலை நகர அரசினை பரிபாலனம் செய்யப் பணித்தமை பற்றிக் கூறுகிறது.
2 கங்குவேலிக் கல்வெட்டு - திருகோணமலை வன்னியனாரும் ,ஏழு கிராமங்களின் தலைவர்களும் கூடி கோணநாயகர் ஆலயத்திற்கு நிலதானம் செய்தது தொடர்பான விளக்கங்களைச் சொல்கிறது.
3. 2ஆம் பராக்கிரமபாகு ஆட்சிக்காலத்தில் (1236—1271) திருகோணமலையை ஆட்சிசெய்த வன்னியர்கள் குறித்து சூளவம்சம், ராஜாவலி போன்ற நூல்கள் விபரிக்கின்றன.
4. வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய சாசனம் - அவ்வாலயத் திருப்பணி நடைபெற்ற பொழுது கயிலாய வன்னியர் தெற்குப்புற மதிலைக் கட்டியதாகக் கூறுகிறது.
5. யாழ்ப்பாணச் சரித்திரம் - தம்பலகாமத்தில் தனியுண்ணாப் பூபால வன்னிபம் என்பவர் கோணேஸ்வர கோயில் அதிகாரத்தையும், அவ்விடத்திற்கான அதிகாரத்தையும் கொண்டிருந்தது பற்றியும் அவ்வாறே பனங்காமம் ,குமாரபுரம் ,ஓமந்தை முதலான இடங்களுக்கு வன்னியர்கள் அதிகாரம் கொண்டிருந்தது பற்றியும் சொல்கிறது.
6. திருக்கோணாசல வைபவம் - தனியுண்ணாப் பூபால வன்னிபம் கோணேசர் கோயிலின் திரவிய இருப்புக் குறித்து விசாரித்ததைக் கூறுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் கட்டுக்குளப்பற்று வன்னிபம் கனகசுந்தரப் பெருமாளும் கலந்து கொண்டதாகக் குறிப்பிடுகிறது.
7.கோணேசர் கல்வெட்டு - திருகோணமலை வன்னிபங்கள் பூபாலகட்டு என்னும் இடத்தில் உள்ள மாளிகையில் வாழ்ததாகக் கூறுகிறது. அதே வேளை தனியுண்ணாப் பூபால வன்னிபத்தின் பின்னர் தொடர்ச்சியாக ஆட்சிசெய்த 32 வன்னிபங்களின் பெயர் விபரங்களையும் தருகிறது.
8.A True and Exact Description of the Great Island of Ceylon என்னும் நூலில் கண்டி அரசுரிமை தொடர்பாக எழுந்த போரின் போது ஐயவீர பண்டாரனுக்கு ஆதரவாக கொட்டியாரப்பற்று வன்னிபம் போர்வீரர்களையும் யானைகளையும் அனுப்பியதாகக் கூறுகிறது.
9. கி.பி.1611 இல் கண்டியரசன் போத்துக்கீசருக்கு எதிராகப் போர் ஆயத்தங்கள் செய்த பொழுது அது தொடர்பான கூட்டமொன்றில் கொட்டியாரப்பற்று அதிபனாகிய ‘இடலி’ பழுகாமத்துச் செல்லபண்டாரம் மட்டக்களப்பு குமார பண்டாரம் போரதீவு சண்முக சங்கரி முதலான வன்னிபங்கள் கலந்து கொண்டதை மேற்குறிப்பிட்ட நூல் ஆதாரப்படுத்துகிறது.
10. மேற்குறித்த ஆதாரங்களின் அடிப்படையில் கீழ்க்காணும் உயிலின் பிரதியும் முக்கியத்துவம் பெறுகிறது.
05.06.1893 ஆந்திகதியிடப்பட்ட உயிலின் பிரதியில் “இந்தப் பிரகாரம் நான் பூர்வீகம் தொடக்கம் பரம்பரையாக நடந்து வந்த இந்தத் தேச வழக்கப்படி எனக்குள்ள சொந்த உரித்தைக் கொண்டும், மேற் சொல்லிய கோயில் கூட்டத்தில் எனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்டும் இவ் நியமன உறுதியை முடித்துக் கொடுக்கிறேன்” என்று தம்பலகாமம் கோணநாயகர் கோயில் தொழும்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட வாரிசுரிமை தொடர்பான பிரச்சனை ஒன்றைத் தீர்த்து வைத்து அதனைத் தீர்ப்பதற்குரிய அதிகாரத்தை தான் கொண்டிருப்பதையும் உறுதிப்படுத்யுள்ள இவர் கொட்டியாரப்பற்று மேன்காமத்திலிருந்த இருமரபுத் தூய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னியராவார்.
படத்தில் மேல் சுட்டி பெரிதாக்கி பார்க்கவும்
(இவ்வுயிலின் பிரதி கிடைப்பதற்குதவிய எனது ஆரம்பகால ஆங்கில ஆசிரியர் திரு.ம.இந்திரசூரியன் அவர்களுக்கு நன்றி)
த.ஜீவராஜ்
No comments:
Post a Comment